செவ்வாய், 12 டிசம்பர், 2023

பழந்தமிழர் தொழில்நுட்பம் - முனைவர் ஆ.மணவழகன்

 



பழந்தமிழர் தொழில்நுட்பம்

ஆசிரியர் : முனைவர் ஆ.மணவழகன்

அய்யனார் பதிப்பகம், சென்னை - 600 088.

விலை ரூ.120

9789016815 / 9080986069


பதிப்புரை

 நூற்றாண்டு போராட்டத்திற்குப் பிறகு ‘செம்மொழிஎன்ற ஏற்புரிமையைத் தமிழ் பெற்றுள்ளது. இந்த ஏற்புரிமையைப் பெறுதற்குத் தக்கச் சான்றுகளாய் நின்றவை பழந்தமிழ் இலக்கிய-இலக்கணங்கள். தோண்டத் தோண்டப் புதுமையும் வளமையும் நிறைந்தோங்கி நிற்கும் இவை என்றைக்கும் தேவையான கருத்துப் பெட்டகமாக, கேட்பதைக் கொடுக்கும் கற்பகத் தருவாகத் திகழ்கின்றன. அவ்வகையில், பழந்தமிழ் இலக்கியங்களுள் பொதிந்துகிடக்கும் பழந்தமிழர் தொழில்நுட்பத் திறனை, தொழில்துறை வளர்ச்சியை, பல்துறை அறிவை வெளிக்கொணர்கிறது ‘பழந்தமிழர் தொழில்நுட்பம்என்ற இந்நூல்.

 நூலாசிரியர், பழந்தமிழ் நூல்களைக் களமாகக் கொண்டு ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை, ‘தொலைநோக்குஎன்ற மூன்று ஆய்வு நூல்களை முன்பே வெளியிட்டுள்ளார்.  அவ்வகையில், பழந்தமிழ் நூல்களைக் களமாகக் கொண்ட நான்காவது நூல் இது.

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியைப் பிறப்பிடமாகக் கொண்ட முனைவர் ஆ. மணவழகன், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் திருச்சி தேசியக் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்-கணினி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி தமிழ் மொழிக்கையேடு, படவிளக்க அகராதி, சங்கத் தமிழர்களின் அகப்-புற வாழ்வியல், தமிழர் பழக்க வழக்கங்களில் அறிவியல் கூறுகள் போன்ற பல்வேறு கணினி-தமிழ் பல்லூடகத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். தொடர்ந்தும் அப்பணியில் ஈடுபட்டு வருபவர். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.  தற்பொழுது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.  செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் அறிஞர்விருதினைப் பெற்றவர்.   அய்யனார் பதிப்பகத்தின்வழி வெளிவரும் இவரது இரண்டாவது நூல் இது. தமிழினத்தின் அழிந்துவரும் அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்ய முயலும் இந்நூலினை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறோம்.

 அய்யனார் பதிப்பகம்

2010


பழந்தமிழர் தொழில்நுட்பம்

முன்னுரை

             தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஒட்டியே மனித சமூகத்தின் வளர்ச்சி பயணிக்கிறது. தொழில்நுட்பத்தைப் பழகாத அல்லது பயன்படுத்தாத எந்த ஒரு சமூகமும் தன் தேவையை எளிதில் நிறைவுசெய்து கொள்வதில்லை. அதற்காக தன்¢ அதிகப்படியான உழைப்பையும், காலத்தையும் இழக்கிறது. அதேவேளை பல்துறை அறிவு, தொழில்துறை வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்ற எவையும் தீடீரென முளைத்தெழுந்த ஒன்றாக இல்லாமல், அது ஆதி மனிதனின் அறிவில் முளைத்தெழுந்து, சிறுகச் சிறுக பட்டை தீட்டப்பட்டுக்கொண்டே வந்த ஒன்றாகவே விளங்குகிறது. இந்நிலையில், மனிதத் தேவைகளுக்கென கண்டறியப்பட்ட அதிநவீன தொழில்நுட்பக் கூறுகள் பலவும் இன்றைய நிலையில் மனித குலத்திற்கு எதிராகவே மாறிவருவதைக் காணமுடிகிறது, எனவை, பல துறைகளிலும் பலரும்  மரபுசார் தொழில்நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்பதையே அறிவுறுத்துகின்றனர். அவ்வகையில், பழந்தமிழரின் பல்துறை அறிவினை வெளிக்கொணர்வதாக, மரபுசார் தொழில்நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்வதாக இந்நூல் அமைகிறது.

                       பழந்தமிழர் தொழில்நுட்பம் என்னும் இந்நூல் பழந்தமிழரின் பல்துறை அறிவு, தொழில்துறை வளர்ச்சி, தொழில்நுட்பம் என்ற மூன்று பெரும் பகுதிகளைக் கொண்டமைகிறது. இந்த நூலுக்கு ஆய்வு களங்களாக இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூலான திருக்குறள், காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை அமைகின்றன.

             முதல் பகுதியான பல்துறை அறிவு என்பது  ஐம்பூதங்கள், உலகத்தின் தோற்றம், வானியல், கோள்நிலை,  இயற்கை நிகழ்வுகள், நாள்மீன் - கோள்மீன், காற்று வழங்கா வெளி, புவியியல், வரலாறு, உயிரியல், மருத்துவம், பொறியியல், உலோகவியல், கட்டடக் கலையியல், நுண்கலையியல், எண்ணியல், அழகுக் கலை, மனித ஆற்றலுக்குக் கட்டுப்படாதவை என பழந்தமிழர் அறிந்திருந்த பல்துறைகளை விளக்குகிறது.

             இரண்டாவது பகுதியான தொழில்துறை வளர்ச்சி என்பது, பழங்காலத் தொழில்பிரிவுகள், பொருளாதாரம் சார்ந்த தொழில்கள், தொழிலாளர் குடியிருப்பு, வணிக வளாகம், வணிக வாகனம், உள்நாட்டு - வெளிநாட்டு வாணிகம், கால்நடை வளர்ப்பு, கடல்சார் தொழில்கள், காடுசார் தொழில்கள், கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி, தச்சுத் தொழில், மண்பாண்டத் தொழில், கொல்லர் தொழில், அட்டில் தொழில், பிறதொழில்கள், தொழில்துறையில் மகளிர் செயல்பாடு, தொழில்துறை வளர்ச்சியில் தடைகள் போன்ற உட்பிரிகளைக் கொண்டுள்ளது.

             தொழில்நுட்பம் என்பது நூலின் முதன்மைப் பகுதியாக அமைகிறது. இப்பகுதி வேளாண்மைத் தொழில்நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், கட்டுமானத் தொழில்நுட்பம், உலோகத் தொழில்நுட்பம், எந்திரத் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம், கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம், பிற தொழில்நுட்பங்கள் என்ற பெரும்பகுப்புகளையும், அவற்றுள் பல உட்பகுப்புகளையும் கொண்டு, பழந்தமிழர் தொழில்நுட்பங்களை விளக்குகிறது. இந்நூளுள் அமையும் மூன்று பெரும்பகுதிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், ஒரே வகையான சில எடுத்துக்காட்டுகள் தேவை கருதி சில இடங்களில் குறிப்புகாளவும் சில இடங்களில் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைகூறியது கூறலாகக் கொள்ளற்க.

             ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை  (காவ்யா பதிப்பகம், சென்னை. 2005) ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை(காவ்யா பதிப்பகம், சென்னை. 2007) ‘தொலைநோக்கு(அய்யனார் பதிப்பகம், சென்னை. 2010) என்ற என் முந்தைய ஆய்வு நூல்களைத் தொடர்ந்து,  ‘பழந்தமிழர் தொழில்நுட்பம்என்ற இந்நூல் வெளிவருவதில் மகிழ்ச்சி. 

             என் நெறியாளர் பேராசிரியர் முனைவர் அன்னி தாமசு அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன். இந்நூல் வெளிவரக் காரணமானவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.பி. சத்தியநாராயணன் அவர்கள். அவர்களுக்கு என் நன்றி. நூல் வடிவமைப்பில் உதவிய நண்பர் ரவி அவர்களுக்கும் பதிப்பகத்தார்க்கும் நன்றி

நட்புடன்

ஆ. மணவழகன்

நூல் பெற: 

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600113.

அலைபேசி: 9789016815 / 9080986069