நாட்டில் குடிமக்களை வருத்தி வரி வசூலித்தல்
செங்கோன்மையன்று. அவ்வகை அரசு கொடுங்கோன்மை அரசாக அக்காலத்தில் ஒதுக்கப்பட்டது.
அதனால்தான் சிலப்பதிகாரத்தில், மாடலமறையோனின் அறிவுரையால் இனி, ‘குடிமக்களிடம் வரிவசூலிக்க வேண்டாம், நம்
எல்லைக்கு உட்பட்டிருக்கும் சிற்றரசுகளும் நமக்குத் ’திறை’ எதுவும் செலுத்த வேண்டாம், இதை
இன்றே எல்லோருக்கும் தெரிவியுங்கள்’ என்று சிலம்பில் சேரன் செங்குட்டுவன்
உத்தரவிடுகிறான். வரையறையின்றிப் பெறப்படும் வரியால், அரசின் கையிருப்பு உயருமே அன்றி, மக்களின் வளம் பெருகாது என்பது தொன்மைச் சான்றோரின் தொலைநோக்கு.
வரிவிதிப்பு மக்களின்
வருவாய்க்கு உட்பட்டதாக அமைதல் வேண்டுமே தவிர, குடிமக்களைத்
துன்புறுத்தி மிகுதியும் பெறுவதாக இருத்தல் கூடாது. வலிந்து பெறும் வரி அரசுக்குத்
தீராத பகையாக முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது(புறம்.75).
மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சாச் செய்யார்
உயர்தவம் வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர்
(நற். 226:1-3)
என்பார் கணிபுன்குன்றனார். இதில், மருந்துமரம் என்பதற்காக வேரோடு பிடுங்கி பயன்படுத்துதலும், வரம் கிடைக்க உயிர் நீங்கமட்டும் தவம் செய்தலும் எப்படித்
தீதாகுமோ அதைப்போல, மக்களின் வளம் கெட அவர்களை வருத்தி வரிவசூல் செய்தலும் மிகுந்து துன்பத்தைத் தரும் என்கிறார். அதேபோல, சிறப்புக்குரிய அரசுரிமையை அடைந்துவிட்டோம்
என எண்ணிக்கொண்டு, தம் குடிமக்களிடம் வரியை வேண்டி இரக்கும் அரசன் சுமக்க இயலாத துன்பத்திற்கு
ஆளாவான் என்றும், அப்படிப்பட்டவன் ‘கூரில் ஆண்மை சிறியோன்’(புறம்.75) என்றும்
சோழன் நலங்கிள்ளி சினம்கொள்கிறான்.
முறையற்ற வரிவசூல் செய்யும் அரசை எச்சரிக்கும்
புலவர் பிசிராந்தையாரோ, ஒரு மா என்னும் அளவைவிடக் குறைந்த நிலமேயாயினும், விளைந்த நெல்லைக்
கொண்டுவந்து கவளமாக்கி யானைக்குக் கொடுத்தால் அது பலநாட்களுக்கு உணவாகும். நூறு செய்
அளவுடைய பெரிய நிலமாயினும் அதனுள் யானை தானே தனியாகப் புகுந்து உண்ணத் தொடங்கினால்,
யானையின் வாயினுள் புகும் நெல்லைக் காட்டிலும் கால்களில் மிதிப்பட்டு அழிவது மிகுதியாகும்.
அதுபோல, அறிவுடைய மன்னன் ஒருவன் குடிமக்களிடமிருந்து வரி வாங்கும்
நெறியை அறிந்து வாங்குவானானால், அவனது நாட்டில் வாழும்
குடிமக்கள் அவனுக்கு மிகுதியும் பொருளைத் தந்து தாங்களும்
தழைப்பர். மன்னன் அந்நெறியை அறியும் அறிவற்றவனாகி, குடிகளைத் துன்புருத்தி வரிவசூல்
செய்வானாயின் அந்த யானை புகுந்த விளைநிலம்போல, தானும் உண்ணப் பெறான்; உலகும் அழியும்
(புறம்.184) என்று எச்சரிக்கிறார்.
அதனால்தான், ‘உலகம்
கொள்ளும் அளவிற்குச் செல்வம் கிடைக்கப்பெறினும் பழியோடு வரும் செல்வம் வேண்டாமென’ விலக்கப்பட்டது. ஆம். பேரரசு,
சிற்றரசு என்பதெல்லாம் மக்கள் விரும்பும் நல்லரசு என்பதிலேயே அளவிடப்படுகிறது.
-
குறிப்பு
நூல்: தொலைநோக்கு, முனைவர் ஆ.மணவழகன்.