புதன், 28 ஜூன், 2017

பழந்தமிழர் நீதி

நீதி வேண்டுவோர், தன் வயது குறைவு காரணமாக தான் வழங்கும் நீதியைக் குறைவாக எண்ணிவிடக் கூடதென்று ‘முதியவர் வேடமணிந்து’ நீதி வழங்கிய கரிகாலன்!


தன் மகன் அறியாது செய்த பிழைக்காக அவனைத் ‘தேர்க்காலிலிட்ட’ மனுநீதிச் சோழன்!


நீதிமுறைமை மாறிவிடக் கூடாதென்பதற்காக அறியாது செய்த சிறு பிழைக்கும் ‘தன் கையையே வெட்டிக்கொண்ட’ பொற்கைப் பாண்டியன்!


அடைக்கலம் வந்த புறாவிற்காக ‘தன் தசையையே அறுத்துக்கொடுத்த’ சிபி!


- இவை வரலாறோ, புனைவோ எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இவர்களின் செயல்கள் உலகிற்கு உணர்த்துவது இதைத்தான்: நீதிக்காக உணர்வு, உறுப்பு, உடல், உறவு, உயிர் அனைத்தையும் இழக்கலாம். ஆனால் நீதியை மட்டும் எதன்பொருட்டும் இழக்கக் கூடாது.
-முனைவர் ஆ.மணவழகன்



முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குக் கவிச்செல்வர் விருது


தமிழ்நாடு திருவள்ளுவர் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் சார்பில், 25.06.2017 அன்று முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குக் கவிச்செல்வர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

செவ்வாய், 27 ஜூன், 2017

வஞ்சினம் மொழிதல் தமிழர் பண்பாடு





"வஞ்சினம் மொழிதல் தமிழர் பண்பாடு"

*********************************************** 


தமிழர் பண்பாட்டில் ‘வஞ்சினம் மொழிதல்’ என்பது தொன்றுதொட்டு வரும் மரபு. வீரயுகப் பண்பாட்டின் அடையாளமாக இது விளங்குகிறது. குறிப்பாக, அரசியல் வாழ்வில் போர்ச்சூழலை மையமிட்டதாக வஞ்சின உரைகள் அமைகின்றன. 


‘நான் எண்ணியதை எண்ணியவாறு செய்துமுடிக்கவில்லை எனில், என் நிலை இன்னதாக ஆகட்டும்’ (தகுநிலை குறைதல்) என உரைப்பது வஞ்சினம் அதாவது சத்தியம் இதுபற்றி, 


‘இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் 

துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்’ என்கிறார் தொல்காப்பியர்.


  சங்க இலக்கியங்களில் வஞ்சினம் உரைத்தல் பல காணப்பட்டாலும், புறநானூற்றில் பாண்டியன் நெடுஞ்செழியன் உரைக்கும் வஞ்சின வார்த்தைகள் ஆள்வோர்க்கும் ஆள நினைப்போர்க்கும் பாடமாகும். வயதில் இளையவனான நெடுஞ்செழியன், தன்னை எதிர்த்துவரும் இருபெரும் வேந்தர்களையும் அவர்களுக்குத் துணைநிற்கும் வேளிர்களையும் பார்த்து இவ்வாறு வஞ்சினம் உரைக்கிறான். 

     “இளையவன் இவனெனப் போர்தொடுத்து வருகிறீர். நீங்கள் நகைப்பிற்குரியவர்கள். இப்போரிலே நான் தோற்றால், என் குடிமக்கள் நல்லாட்சி நிழல் காணாமல் ‘என் அரசன் கொடியன்’ எனப் பழி தூற்றும் நிலையினேன் ஆகுக; மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் அவை என்னைப் பாடாமல் போகட்டும்; பாதுகாப்போர் துன்புறும்போது, என்னிடம் வந்து இரப்போருக்குக் கொடுக்க இயலா வறுமையில் நான் வாடுவேன் ஆகுக! (புறம். 72).


  ஆம், குடிகளால் கொடியது எனத் தூற்றப்படுவதும், புலவர்களால் புறக்கணிக்கப்படுவதும், இரப்போர்க்கு ஈவதற்குப் பொருளற்றுப் போகும் வறுமை நிலையினை எய்துவதும் நல்லரசுக்கு அழகல்ல.





x