கவிஞர் ஆ.மணவழகனின் கூடாகும் சுள்ளிகள் – கவிதைத் தொகுப்பு
- பொன். குமார்
புதிய கோடாங்கி ஆகஸ்ட் 2011
“ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு படைப்பாளர் இருக்கிறான். வெளிப்படுவதற்கான வாய்ப்புகளே குறைவு. குழ்நிலையே, வாழ்நிலையே மனிதனை படைப்பாளியாக உருவெடுக்கச் செய்கிறது. பரிமாணிக்க வைக்கிறது. ஆ.மணவழகன் கவிதை உலகில் தொடர்ந்து இயங்கி வந்தாலும் அவரின் முதல் தொகுப்பு தற்போதே வெளியாகியுள்ளது. ‘கூடாகும் சுள்ளிகள்' என்னும் தலைப்பே கவனத்தை ஈர்த்துள்ளது. இலக்கிய மனம் வீசுகிறது” என பேரா. ஆர்.பி.சத்தியநாராயணன் வாழ்த்துரையில் கூறியுள்ளார்.
இல்லாதது இல்லை, சொல்லாதது இல்லை என திருக்குறளுக்குப் பெருமையுண்டு. வாழ்க்கையின் வழிக்காட்டி என்னும் பெயருமுண்டு, வள்ளுவரையும் பொய்யா மொழிப் புலவர் என அழைப்பதுமுண்டு. சிறப்புகள் பல கொண்டதால் தேசிய மயமாக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் மலிவு விலையில் திருக்குறள் அச்சிடப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டும் வருகிறது. தொடர்வண்டியில் சிறுவன் மலிவு விலையில் விற்றுச் செல்கிறான். திருக்குறளோடு "வாழ்க்கை" யும் மதிப்புமிக்க திருக்குறளை மலிவாக்கி விற்பனைச் செய்வதற்காக வருந்தியுள்ளார். திருக்குறள் மட்டுமல்ல வாழ்க்கையும் விலை போகிறது என்று குறிப்பிட்டுள்ளார். திருக்குறள் மீது கவிஞர் கொண்டுள்ள 'மதிப்பு' வெளிப்பட்டுள்ளது.
நாகரீகம் வளர்கிறது. நகரியம் பெருகுகிறது.வாழ்க்கைச் சூழல் மாறினாலும் கிராமிய நினைவுகள் மாறாது. மாறாக நெஞ்சம் இனிக்கும். "பச்சைக் கம்பு" சாப்பிடும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கிராமத்தவர்களுக்கே வாய்ப்பு மிகுதி. "பச்சைக் கம்பு" சாப்பிட்ட அனுபவத்தை "நாகரியம்" கவிதையில் இனிமையாக வெளிப்படுத்தியுள்ளார். பச்சைச்கம்புக்கு ஈடிணை இல்லை என்கிறார். "இக்கரைக்கு அக்கரை" யிலும் கிராமத்து உணவைப் பற்றியே பேசியுள்ளார். கேழ்வரகு, சோளம், கம்பு ஆகியவற்றின்' சுவை' யை விவரித்துள்ளார்.
புள்ளைங்க வந்தா மட்டுந்தான்
நல்ல சோறு சாப்பிட முடியுது
அப்பா சான்றிதழ் தருவார்
என்னும் வரி வறுமையைக் காட்டுகிறது. அரிசிச் சோறு சாப்பிடுவதே அதிசயம். திருவிழா போலிருக்கும்.
நல்லவனாக வாழ், நல்லவனாக இரு என்று பாடம் கற்பிக்கிறது. சமூகம் போதிக்கிறது. ஆனால் நல்லவனாக வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் அரிது. வாய்ப்புகள் குறைவு. பீடி, புகையிலை, கள், பீர், வெண் சுருட்டு, கஞ்சா, ரம், சாராயம், பான் பராக் என ஒவ்வொன்றையும் பழக்கப்படுத்த நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். போதைப் பொருள்களினால் பயன் இல்லை என்கிறார். போதைப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். மனைவி, மக்களை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார். முடிவில் போதைப்பொருள்களை விற்பனைச் செய்யும், விற்பனைச் செய்ய உதவும் அரசைக் குற்றம் சாட்டியுள்ளார். அரசுக்கு மக்கள் மீது கவலை இல்லை என்கிறார்.
'ஏதிலிகளின் வலி' யை உறைக்கச் செய்துள்ளது' வீடு சுமந்து அலைபவன்".
இருந்தது இல்லாமல் போகும்போதும்
இருப்பு இடம் மாறிப் போகும் போதும்தான்
உறைக்கிறது
ஏதிலிகளின் வலி
என்கிறார். உடைமைகள் இழந்தும் உரிமைகள் மறந்தும் புலம் பெயர்ந்தும் வாழ்பவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.
இந்தியா ஒரு நாடெனினும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து கிடக்கிறது. மனிதர்களும் பிரிந்து உள்ளனர். மொழியின் அடிப்படையிலேயே முக்கிய முடிவுகள்
எடுக்கப்படுகின்றன. ’தட்டுங்கள் திறக்கப்படும்’ என்பது பைபிள் மொழி. தட்டியும் திறக்காததால் தகர்க்க வேண்டும் என்கிறார். தவறுகளை மன்னிக்கும் கிருத்துவ மதம் மீறலையும் மன்னிக்க வேண்டும் என்கிறார். 'ஆமென்' தலைப்பிலான இக்கவிதைத் தொன்மத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.
வானுயர்ந்த கோபுரங்கள். வாசலில்
பிச்சைக்காரர்கள்
'வேற்றுமையில் ஒற்றுமை'யில் அத்தகைய அவலத்தைப் படம் பிடித்துக்காட்டியுள்ளார். ’வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது இந்தியக் கொள்கை. இது கோயிலின் முன்பே கடைப்பிடிக்கப் படுகிறது என்கிறார்.
’முரண்’ நன்று. பொம்மை ஆடையோடு இருக்கிறது. குழந்தை அம்மணமாக உள்ளது. இதுவே இந்தியா என்கிறார். இந்தியர் என்று மார் தட்டிக் கொள்ளும் ஒவ்வொருவரையும் அவமானப்படச் செய்கிறது.
உருவத்தில் மனிதர்' போலி' ருப்பர். உள்ளத்தில் வேறாக இருப்பர். அன்பாக இருப்பது போலிருப்பர். பழகிப் பார்த்தாலே தெரியும். 'மனிதப் போலி'களை அடையாளம் காட்டியுள்ளார். உண்மை மனிதர்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
'பத்தில்
ஒன்பது பதர்களே'
என்றுரைத்துள்ளார்.
சிறுகவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சிறுகவிதைகளில் ஒன்று 'சிறுமை'..
பிழைப்பில் கூடியது எறும்பு
இறப்பில் கூடியது மனிதம்
ஆறறிவுச் சிறுமை
ஆறறிவு இருந்தும் எறும்பை விட கீழானவனாக மனிதன் உள்ளான் என்று சாடியுள்ளார். தலைப்பு இல்லையெனில் ஒரு ஹைக்கூவாகி இருக்கும். ஹைக்கூவிற்கான அம்சங்கள் அடங்கியுள்ளது.
உலகம் வியத்தகு வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. அழிவும் ஏற்படுகிறது. எல்லா மாற்றத்துக்கும் காரணம் மனிதனே. மாற்றங்கள் நிகழ்ந்தாலும் நிகழ்த்தப்பட்டாலும் மனிதன்' மனிதனாக' மாறுவதில்லை. 'எதை நோக்கி' யில் மனிதராக மாறாத மனிதர்களைச் சாடியுள்ளார். மாற்றம் என்பதே நிரந்தரம் என்னும் மார்க்சிய கோட்பாட்டை மனிதர்கள் பொய்யாக்கியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
'?' என்னும் கவிதை சிந்திக்கச் செய்கிறது. நம் விருப்பப் படி எதுவும் நடப்பதில்லை. நாம் எதிர்பார்க்காததும் நடைபெறாமல் இருப்பது இல்லை. இடையில், நாம் என்பது யார்?
ஒவ்வொரு செயலையும் செய்து முடிக்கும் போது மக்கள் சொல்வது அப்படிச் செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கலாம் என்பதாகும். முடிந்த பிறகு அவ்வாறு பேசுவது சரியல்ல. இவ்வாறு எதை வேண்டுமானாலும் பேசலாம். முற்றுப்பெறாத 'லாம்கள்' மூலம் ஏராளமான 'லாம்' களை எடுத்துக்காட்டியுள்ளார்.
ஒற்றை மதிப்பெண்ணால்
கிட்டாது போன முதலிடம்
இன்னும் கூட முயன்றிருக்கலாம்
என்பது ஒரு ' லாம்'.
ஒவ்வொரு பத்தியும் ஒரே மாதிரி முடிந்துள்ளது. இன்னும் கூட முயன்றிருக்க'லாம்' என்று எழுத வைக்கிறது. ' லாம்' கள் எப்போதும் முற்றுப் பெறாது.
மாதா, பிதா குரு தெய்வம் என்பர் . மாதா பிதாவிற்குப் பின் குருவே தெய்வம் என்பதே மெய். குரு பக்திக்கு ஏராள சான்றுகள் உண்டு. ஏகலைவனுடையது குருட்டு பத்தியாகும். கவிஞரின் குரு பக்திக்கு எடுத்துக்காட்டாக உள்ளது இழப்பு. ஓவிய ஆசிரியர் ஒரு விபத்தில் விரல்களை இழக்கிறார்.
தமிழ்த்தாய்
தன் தூரிகையில் ஒன்றை
இழந்திருந்தாள்
என வருத்தப்படுகிறார். குருவான ஓவியரின் விரல்களின் மதிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஈடு செய்ய முடியாதது இழப்பு.
ஊருக்கு ஒரு தோட்டி இருப்பார். அதே போல் ஓர் ஐயரும் இருப்பார். சமீபத்திய கவிதைகளில் ஐயரின் மீதான விமர்சனம் மிகுதியாகவே இருந்து வருகிறது. பார்ப்பனிய எதிர்ப்பு உணர்வுகள் அதிகம் காணப்பட்டன. எல்லாவற்றுக்கும் மாறாக ஓர் ஐயரைக் காட்டியுள்ளார். அவரைக் கண்முன் கொண்டு நிறுத்துகிறது கவிதை. ஊரையும் ஊராரையும் அடையாளப்படுத்தும் ஐயரை அடையாளப்படுத்தியுள்ளார். ஆனால் ஐயரின் மகன் குடிகாரனாகிவிட்டான் என்கிறார். இதை 'தலைமுறை இடைவெளி " என்கிறார். அரசே மதுக்கடைகளை திறந்து வைத்து அனைவரையும் 'குடிமகன்' ஆக்கி வருகிறது. இதில் ஐயர் என்ன? அடுத்தவர் என்ன? எல்லாம் ஒன்றே.
உண்மை வரலாறு வேறாக இருக்கும். படிக்கும் வரலாறு வேறாக இருக்கும். தற்போது வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. முருகன் சுப்ரமணியன் ஆக்கப்பட்டதும் திரித்தல் மூலமே நிகழ்ந்தது. கொல்லிமலையில் உள்ள ' கொல்லிப் பாவை' யும்
'ஆரியதேவி' யாக 'திரிதல்' செய்யக்கூடும் என்று ஐயமுறுகிறார். எச்சரிக்கிறார். தமிழ்ர்கள் கவனமுடன் இல்லை என்றால் ' திரிதல்' நிகழ்த்தப்பட்டு விடும்.
மனிதர்கள் அதிகரிக்க
மாசும் அதிகரிக்கும்
என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. மாசு படலிலிருந்து மலைகள் காக்கப்பட
வேண்டும் என்கிறார்.
'கூடாகும் சுள்ளிகள்' கவிஞர் ஆ. மணவழகனின் முதல் முயற்சி. ஒரு கவிஞராக அனைத்து நிலைகளிலும் எழுதியுள்ளார். பல்வேறுபாடு பொருள்களில் பாடியுள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார். தமிழ்ப்பற்றும் வெளிப்பட்டுள்ளது. புறத்தை எழுதியதுடன் அகத்தை எழுதியுள்ளார். மனிதர்களைக் கவிதையில் மையப்படுத்தியுள்ளார். எளிமையான மொழி. இயல்பான நடை. கவிஞரிடம் கவிபுனையும் ஆற்றல் நிரம்பவே உள்ளது என்பதற்கு 'கூடாகும் சுள்ளிகள்' சான்றாக உள்ளது. வெளிப்பாட்டில் வித்தியாசத்தைக் கையாளும் போதே கவிதை உலகில் கவிஞர் வெற்றிப் பெற முடியும். தொடரமுடியும்.
'அகப்பயணம்' கவிதையில்,
கடல் நிறைவில்
கடுவளவு சேகரித்ததில்
தெரிந்தது
என் முகவரிக்கான
முதல் எழுத்து
என்கிறார் முதல் எழுத்து ஆக, வெளிவந்துள்ள 'கூடாகும் சுள்ளிகள்' முகவரி பெற்றுத்தரும். 'கூடாகும் சுள்ளிகள்' தொகுப்பில் கவிதையாகியுள்ளன சொற்கள்.
வெளியீடு
அய்யனார் பதிப்பகம்
சென்னை - 600088
9789016815 / 9080986069