வெள்ளி, 9 செப்டம்பர், 2011

நற்றிணை - அறிமுகம்



 நற்றிணை - அறிமுகம்

முனைவர் ஆ.மணவழகன்
செப்டம்பர் 07, 2011
  
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை. ‘நல் என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது.

நூல் அமைப்பு
      
       நற்றிணையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை 400. பாடல்கள் 9 அடிகள்  முதல்  முதல் 12 அடிகள் வரை. இந்நானூறு பாடல்களையும் 175 புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டிய அரசன் மாறன்வழுதி என்பவனால் இந்நூல் தொகுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொகுத்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நற்றிணை ஆசிரியர்கள் சிலரின் இயற்பெயர் தெரியவில்லை. அதனால் அவர்கள் பாடல்களில் இடம்பெற்றுள்ள அடிகளால் பெயர் பெற்றுள்ளனர். (எ.கா. தேய்புரி பழங்கயிற்றனார், தனிமகனார்).

சிறப்புகள்

       நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன. பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கத்தையும், பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் கால்பந்து இடம்பெற்றிருந்தது  போன்ற செய்திகளையும் நற்றிணையில் அறியலாம்.

       நீரின்றமையாவுலகு, ‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர், விருந்தோம்பல் போன்ற குறள் கருத்துகள் பலவற்றிற்கு மூலம் நற்றிணையே. அதோடு, உவமைத்திறம், உள்ளுறை, இறைச்சிப் பொருள்களின் அமைப்பு என இலக்கியச் சுவையும்  மிகுந்ததாக நற்றிணைப் பாடல்கள் திகழ்கின்றன.

சுவைக்க சில செய்திகள்

மரங்களையும் உடன்பிறந்தோராக எண்ணுதல்

      தாவரங்களுக்கு ஓர் அறிவாகிய ‘தொடு உணர்வு உண்டு என்பது தொல்காப்பியர் கூற்று. ஆனால் அதற்கு மேலேயும், பேச்சுகளை உணரும் தன்மையும், சூழலை உணரும் தன்மையும், செயல்களை உணரும் தன்மையும் அவைகளுக்கு உண்டு என்கிறது நற்றிணை. அதனாலேயே நற்றிணைப் பெண் ஒருத்தி தாவரத்தைத் தன்னுடைய மூத்த சகோதரி என்கிறாள். உடன்பிறந்தோரையே உதறித்தள்ளும் இன்றையக் காலச்சூழலில், தன் தாய் வளர்த்த புன்னை மரத்தைத்கூடத் தன் 'உடன்பிறந்தோராக எண்ணும் உயரிய பண்பினை நற்றிணைக் காட்டுகிறது.
      
       தன் காதலனோடு புன்னை மரத்தின்கீழ் நின்று பேசிக்கொண்டிருக்கும் பெண் ஒருத்தி, திடீரென இந்த மரத்தின் கீழ் நின்று பேச வேண்டாம், நாம் வேறு இடத்திற்குச் செல்வோம் என்கிறாள். காரணம் கேட்கும் காதலனிடம், ‘நான் பிறப்பதற்கு முன்பாகவே விதை ஊன்றி பாசத்தோடு வளர்க்கப்பட்டது இப்புன்னை மரம் என்றும்,  இது என்னை விடச் சிறந்ததென்றும், என் மூத்த சகோதரி என்றும் என் அம்மா கூறியிருக்கிறாள் அதனால் இதன் கீழ் நின்று உன்னோடு பேச எனக்கு நாணமாக இருக்கிறது என்கிறாள்.  இதனை,
             
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
------------- ------------  ----------
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே

என்கிறது நற்றிணை. பழந்தமிழரின் இயற்கையோடு ஒன்றிய வாழ்வினையும், மரம் போன்று அஃறிணை உயிர்களிடத்தும் அன்புகொண்டு தம் பிள்ளைகளைவிட மேலானதாகப் போற்றிய உயிர் இரக்கத்தையும் இதில் அறிய முடிகிறது. இதுபோன்று, மரத்தைக்கூட சகோதரியாக எண்ணும் உயர் பண்பையும், தான் காதலிப்பதை மரம்கூட அறிந்துவிடக்கூடாதே என்றெண்ணி நாணும் பண்பட்ட நாகரிகத்தையும் உலகின் வேறு இலக்கியங்கள் காட்டுகிறதா என்பது கேள்விக்குறியே.

அரசிற்கு அறிவுறுத்தல்

அரசிற்குப் பொருள் ஈட்டும் வழிகளில் ஒன்று 'வரிவிதித்தல்' என்பது. இந்த வரிவிதித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தினைக் கருத்தில்கொண்டு அமைய வேண்டுமே அன்றி, அரசிற்கு வரும் வருவாயின் அளவைக் கணக்கில்  கொண்டு அமைந்து விடுதல் கூடாது. வருவாய் ஒன்றையே நோக்கமாகக் கொண்டால் அவ்வரசு நல்லரசாக  அமையாது. மக்களும் நல்வாழ்வு வாழ முடியாது.  இக்கருத்தை, ‘மூலிகை மருத்துவத்தை மேற்கொள்ளும் மக்கள் மூலிகையைப் பறிக்கும்பொழுது மரமே இறந்துவிடும்படி வேரோடு பறிக்க மாட்டார்; தவம் மேற்கொள்ளும் மக்கள் உயர்தவமே ஆயினும் தம் வலிமை முழுதும் கெட்டு உயிர் போகும் அளவிற்கு அதனை மேற்கொள்ள மாட்டார்; அதுபோல, நல்லாட்சி செய்யும் மன்னர் குடிமக்கள் வளம் கெட்டு வருந்தும்படி வரி வாங்க மாட்டார் என்கிறது நற்றிணை.

மரம்சா மருந்தும் கொள்ளார்  மாந்தர்;
உரம் சாச் செய்யார் உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர்' ( நற். 226:1-3)

உண்மைச் செல்வம்

       ஒருவரது உண்மையானச் செல்வம் எது என்பதை நற்றிணைப் பாடல் ஒன்று உலகிற்கு அழகாக உணர்த்துகிறது. செல்வம் என்பது, ஒருவன் சேர்த்து வைத்திருக்கும் பொன்னையோ, பொருளையோ, இனிதாகப் பயணம் செய்ய வைத்திருக்கும் ஊர்திகளையோ, இனியவை செய்யக் காத்திருக்கும் வேலையாட்களையோ  பொறுத்து  அமைவதல்லை; நல்லவர்களின் செல்வம் என்பது, அவரைச் சேர்ந்தோரின் துன்பங்களைக் கண்டு அவற்றைப் போக்கும் உயர்ந்த பண்பேயாகும் என்கிறது.
      
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
                   செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே,
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே (நற்.210:5-9)


உயிர் இரக்கம்

     மரங்களையும், விலங்குகளையும் உடன் பிறந்தோராகவும், பிள்ளைகளாகவும்  எண்ணிப் போற்றிய காரணத்தால்தான், தென்னை மரத்திற்குத் ‘தென்னம்பிள்ளை என்றும் அணிலுக்கு ‘அணிற்பிள்ளைஎன்றும் கீரிக்குக் ‘கீரிப்பிள்ளை என்றும் பெயர்களை வைத்தனர் தமிழர். மேலும், உயிரிரக்கம் என்பது அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் கொள்வதுதானே. அதனால்தான் பழந்தமிழர் பறவைகளிடத்தும் இரக்கம் கொண்டிருந்தனர். பறவைகளுக்கும் கருணை காட்டினர். இதனை நற்றிணைப் பாடல்களில் அறியலாம். நிலத்தில் விளைந்த விளைச்சலை வீட்டில் சேர்க்கும் காலம் வந்தது. நல்ல வெண்ணெல் விளைந்திருந்தது. அதனை அரிந்து எடுக்க எண்ணிய உழவர்கள் 'தண்ணுமை' என்னும் கருவியை முழக்கி இசையை எழுப்பினர். இதனை,

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழனப் பல் புள்இரிய (நற். 350: 1-2)

எனக் காட்டுகிறது பாடல். இசை முழங்கி நெற் அரிதல் ஒரு சடங்கு போல தோன்றினாலும் இதில் புதைந்திருக்கும் உண்மை வேறானது. நெற்பயிரில் சிறு குருவிகள் கூடுகட்டி வாழ்ந்திருக்கும். நெல்லை அரிந்தெடுக்கும் போது அக்குருவிகளுக்குத் தீங்கு நேரிடலாம். இசையை முழங்கி ஆராவாரம் செய்தால், அக்குருவிகள் தங்கள் கூட்டத்தோடு வேற்றிடம் பெயரும், தீங்கு நேராது என்ற உயிரிரக்கம் இதில் புலனாகிறது.

உயிர் இரக்கம் என்பது, பிறர்க்குச் சிறுதுன்பம்  நேர்ந்தபோதும், தன் நலனைக் கருதாது விரைந்து சென்று, அத்துன்பத்தைப் போக்க முயல்வதாகும். அதைத்தான், கண்ணிற்கு ஏதாவது துன்பம் என்றால், கை யோசிப்பதில்லை, விரைந்து சென்று துயர் நீக்கும். அதுபோலத்தான் நல்லவர்களின் மனம் உயிரிரக்கம் கொண்டாக இருக்கும் என்கிறது நற்றிணை.

கண்ணுறு விழுமம் கைபோல் உதவி (நற்.216:3)

உயர் பண்பு

விருந்தோம்பல் என்பது தமிழர்களின் உயர் பண்பு. விருந்தினர் என்பவர் இன்று வழங்கப்படுவதுபோல தெரிந்தவர்களோ உறவினர்களோ அல்ல; முன்பின் தெரியாதவர்கள்தான் விருந்தினர் என்பவர். முன்பின் தெரியாதவர்களையும் அன்போடு வரவேற்று, உபசரித்து, அவர்களுக்கு வேண்டும் உணவளித்து பசிபோக்குவதுதான் விருந்தோம்பல். அவ்வகையில், நடு இரவில் விருந்தினர் வந்தாலும்கூட அவர்களையும் அன்போடு வரவேற்று, இன்முகத்தோடு விருந்து உபசரிக்கும் இல்லத் தலைவியை,

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
முல்லைசான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் (நற்.142: 1)

என்று காட்டுகிறது நற்றிணை. மேலும் இதில், கற்பு என்பது இல்லத்திலிருந்து விருந்து உபசரிக்கும் நற்குணமே என்பதையும் அறியலாம்.
மருத்துவன் இயல்பு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பிற துறைகள் போலவே மருத்துவத்துறையும் வளர்ச்சியுற்று விளங்கியதற்கு நற்றிணைப் பாடல்கள் சான்றுகளாக உள்ளன. மருத்துவத் துறையைக் குறிப்பிடும் இடத்து மருத்துவனின் இயல்பு சுட்டப்படுகிறது.  மருத்துவன் என்பவன், நோயாளிகள் விரும்பி கேட்கும் அனைத்தையும் கொடுக்காமல், நோயின் தன்மை அறிந்து, அந்த நோய் தீர்வதற்கான மருந்துகள் எவையோ அவைகளை மட்டும் ஆராய்ந்து கொடுத்து, நோயினைக் குணப்படுத்துவான் என்கிறது.

அரும்பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல ( நற். 136: 2-3)

இவைபோல இன்னும் ஏராளமான செய்திகளைக் கொண்டுள்ள நற்றிணையை முழுமையாகச் சுவைத்து இன்புறுங்கள். தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை உணருங்கள்.

***** 


ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தொல்காப்பியம் - தமிழர் மரபுச் செல்வம்


தொல்காப்பியம் - தமிழர் மரபுச் செல்வம்

முனைவர் ஆ.மணவழகன்
ஜூலை 15. 2011.

       தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். இது, தமிழில் கிடைத்த நூல்களுள் முதலாவதாகவும், முதன்மையானதாகவும் திகழ்கிறது. தொல்காப்பியத்திற்கு முன்பே பல நூல்கள் தோன்றியிருப்பினும் அவையாவும் நமக்குக் கிடைக்கவில்லை. தமிழில் நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய இலக்கண நூல்களான நன்னூல், இலக்கண விளக்கம், நேமிநாதம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள் போன்ற அனைத்து நூல்களுக்கும் தாய் நூல் தொல்காப்பியமே.

தொல்காப்பியர்

                தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர். இவர் தொன்மையான காப்பியக் குடியில் தோன்றியவர்(தொன்மை-பழமை). நூலை எழுதியவர் பெயரையே நூலுக்கு வைக்கும் மரபின் அடிப்படையில் இந்நூல் தொல்காப்பியம்என்று பெயர்பெற்றுள்ளது. தொல்காப்பியரை அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவருள் ஒருவர் என்பர்.

தொல்காப்பியத்தின் காலம்

              தொல்காப்பியம் தோன்றிய காலம் குறித்து பலரும் பலவித கருத்துகளை முன்வைக்கின்றனர். இன்றுள்ள நான்கு வேதங்களுக்கும் முற்பட்டது தொல்காப்பியம் என்பது தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கருத்து. மூன்று சங்கங்களின் வரலாறு குறித்துக் கூறும் இறையனார் அகப்பொருள் உரையிலே தொல்காப்பியம் இடைச்சங்க காலத்தில் தோன்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் சங்கங்கள் தொடர்ந்து நடைபெற்ற ஆண்டுகளைக் கணக்கிட்டு, தொல்காப்பிய காலம் 7300 ஆண்டுகளுக்கு முந்தியது என்பது அறிஞர் பலரின் கருத்து. எப்படி இருப்பினும் தொல்காப்பியம் குறைந்தது 5000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு.

தொல்காப்பியத்தின் அமைப்பு முறை

தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிற்கால இலக்கண நூல்கள் யாவும் இம்முறையைப் பின்பற்றியே தோன்றியுள்ளன. ஆனால், தொல்காப்பியர் இலக்கணத்தை மூன்று பிரிவுகளுக்குள்ளேயே அமைத்துள்ளார். அவை, எழுத்து, சொல், பொருள் என்பன. மொழிக்கு அடிப்படையாக அமைகிற எழுத்துகளைப் பற்றிக் கூறுவது எழுத்திலக்கணம், எழுத்துகளால் உருவாகும் சொற்களைப் பற்றிக் கூறுவது சொல்லிலக்கணம். சொற்களில் அடங்கியுள்ள பொருள்கள் பற்றியும், வாழ்க்கை முறைகளைப் (வாழ்க்கையின் பொருள்) பற்றியும் கூறுவது பொருளிலக்கணம். பொருளிலக்கணம் என்பதிலேயே செய்யுள் இலக்கணமும், அணியிலக்கணமும் அடங்கியிருக்கின்றன. பிற்காலத்தில் இவை தனித்தனியே விரித்து உரைக்கப்பட்டு தமிழ் ஐந்திலக்கணத்தைக் கொண்டதாக  மொழியப்பட்டது.

தொல்காப்பியப் பெரும்பகுப்புகளான எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்றும் சிறு பகுப்புகளாகத் தங்களுக்குள் ஒன்பது ஒன்பது இயல்களைக்(3X9=27) கொண்டுள்ளன. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள மொத்த நூற்பாக்கள் எண்ணிக்கை 1610.

எழுத்ததிகாரம்
1. நூல் மரபு
2.மொழி மரபு
3.பிறப்பியல்
4.புணரியல்
5.தொகை மரபு
6. உருபியல்
7. உயிர் மயங்கியல்
8. புள்ளி மயங்கியல்
9. குற்றியலுகரப் புணரியல்


சொல்லதிகாரம்


1. கிளவியாக்கம்
2.வேற்றுமையியல்
3.வேற்றுமை மயங்கியல்
4. விளிமரபு
5.பெயரியல்
6. உருபியல்
7. இடையியல்
8. உரியியல்
9. எச்சவியல்


பொருளதிகாரம்

1. அகத்திணையியல்
2.புறத்திணையியல்
3. களவியல்
4. கற்பியல்
5. பொருளியல்
6. மெய்ப்பாட்டியல்
7. உவமவியல்
8. செய்யுளியல்
9. மரபியல்


தொல்காப்பியத்தின் சிறப்புகள்

தொல்காப்பியம் தமிழின் இலக்கணத்தைச் சொல்வதோடு தமிழரின் வாழ்க்கை முறைகளையும் உலகிற்கு உணர்த்தும் ஒப்பற்ற நூலாகத் திகழ்கிறது. பண்டைத் தமிழர் நாகரிகத்தை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டு விழுமியங்களைத் தெரிந்துகொள்ள தொல்காப்பியமே முதல் ஆதாரமாகும். தொல்காப்பியம் என்ற சொல், நூலைக் குறிக்கும் போது ஒரே சொல்லாகவும், பொருளை விளக்கும் போது அது தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரிந்து பொருள் தருவதாகவும் கூறுவர். தமிழரின் தொன்மையைக் காத்து இயம்பும் நூல் என்பது பொருள். இந்நூல், எண்ணிலடங்கா சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் ஒருசிலவற்றை மட்டும் இங்குக் காண்போம்.

உலகத் தோற்றம்

உலகம் மாயை அல்ல; அது கடவுளால் படைக்கப்பட்டதும் அல்ல; இயற்கையின் நிகழ்வால் அது தானே உருவான ஒன்று; மண், தண்ணீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து இயற்கைப் பொருள்களும் கலந்து உருவாகியிருப்பதே இவ்வுலம் என்பது தொல்காப்பியரின் உலகத் தோற்றம் பற்றிய சிந்தனை(தொல்.பொரு.மர.86). உலகத் தோற்றம் பற்றிய எத்தனையோ மூட நம்பிக்கைகள் இன்றும் உலவுகின்ற சூழலில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு தெளிவான அறிவியல் உண்மையை முன்வைத்திருப்பது தொல்காப்பியரின் பரந்துபட்ட அறிவைக் காட்டுகிறது. இவரின் உலகத் தோற்றம் பற்றிய இக்கருத்தை இன்றைய அறிஞர்களும் ஏற்கின்றனர் என்பதே தொல்காப்பியத்தின் சிறப்பு.  

உயிர்ப்பாகுபாடு

                தொல்காப்பியத்தின் உயிர்ப்பாகுபாடு உலகினர் வியக்கும் நுட்பம் கொண்டது. உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள்; உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவு உயிர்கள்; உடம்பு, நா, மூக்கு ஆகிய மூன்றாலும் அறிவன மூன்று அறிவு உயிர்கள்; இவை மூன்றோடு கண்ணாலும் அறிவன நான்கு அறிவு உயிர்கள்; இந்நான்கோடு காதோடும் அறிவன ஐந்து அறிவு உயிர்கள்; இந்த ஐந்து உறுப்புகள் அன்றி, கண்ணுக்குப் புலனாகாத மனத்தைப் பெற்று, அவற்றின் வழிப் பகுத்தறியும் ஆற்றல் பெற்றவை ஆறு அறிவு பெற்ற உயிர்கள் என்கிறது தொல்காப்பியம்(தொல்.பொரு.மர.27). ஆறறிவு என்பது மனிதர்களுக்கு உரியது என்கிறது.  மேற்சொல்லிய ஐந்து உறுப்புகளையும் பெற்றிருந்தாலும் மனத்தால் நன்மை தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றல் அற்ற மனிதரும் ஐந்தறிவிலேயே வைக்கப்படுவர் என்பது தொல்காப்பியத்தின் கருத்து.

வாழ்வியல் முறைகள்

எழுத்துக்கும் சொல்லுக்குமான இலக்கணங்கள் உலகில் பல மொழிகளிலும் தோன்றியுள்ளன. ஆனால், மானுட வாழ்வியல் நெறிமுறைகளையும் இலக்கணமாக வகுத்துத் தந்திருப்பது தொல்காப்பியமே. இந்நூல், வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாகப் பகுத்துள்ளது. ஆணும் பெண்ணும் அன்போடு ஒன்றுபட்டுக் கூடி வாழும் காதல் வாழ்வு அகவாழ்வு (அகத்திணை). அரசாட்சி, தொழில்கள், வாணிபம், வீரம், கொடை, கல்வி, போர் போன்ற புறச் செயல்பாடுகள் அனைத்தையும் கூறுவது புறவாழ்வு(புறத்திணை). தொல்காப்பியத்தின் இப்பிரிப்புமுறை தமிழினத்திற்கு மட்டுமல்ல, உலகின் அனைத்து மனித இனத்துக்கும் பொருந்தும். 

பழந்தமிழரின் திருமண முறை களவு, கற்பு என்ற இரு நிலைகளைக் கொண்டது. களவு என்பது திருமணத்திற்கு முன்பு, பிறருக்குத் தெரியாமல் மேற்கொள்ளும் காதல் வாழ்க்கை. கற்பு என்பது திருமணம் முடித்து வாழும் இல்லற வாழ்க்கை. மேற்சொன்ன களவு வாழ்வில் பொய்களும், வழுக்களும் தோன்றியதால் ஊர்ப்பெரியவர்களின் முன்னிலையில் திருமணம் என்கிற ஒப்பந்தச் சடங்கை நிகழ்த்தும் சூழல் உருவானது என்கிறது தொல்காப்பியம்(தொல்.பொரு.கற்.40).

காலப் பகுப்பு

                தமிழின் முதல் மாதம் எது என்பதில் இன்றும் தெளிவின்மையே காணப்படுகிறது. தொல்காப்பியர், தமிழ்நாட்டின் பருவ காலத்தை ஆறாக வகுத்துக் கூறியுள்ளார். அவை, கார்காலம்(ஆவணி, புரட்டாசி), கூதிர் காலம்(ஐப்பசி, கார்த்திகை), முன்பனிக்காலம்(மார்கழி, தை), பின்பனிக்காலம்(மாசி, பங்குனி), இளவெளிற்காலம்(சித்திரை, வைகாசி), முதுவேனிற் காலம்(ஆனி, ஆடி). பழந்தமிழர், ஆண்டை ஆறு பெரும்பகுதிகளாகப் பகுத்தது போல ஒரு நாளையும், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறு பகுப்புகளாகப் பிரித்திருந்ததைத் தொல்காப்பியம் வழி அறியமுடிகிறது.

நிலப் பகுப்பு

                குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்கள் ஐவகை என்கிறது  தொல்காப்பியம். நிலத்தை நிலம் என்று கூறாமல் திணை என்கிறது நூல். திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். ஒவ்வொரு நிலத்திற்குமான மக்கள் வாழ்வியலை, ஒழுக்கங்களைப் பற்றியும், அவர்களுக்கான உரிப்பொருள், கருப்பொருள், முதல்பொருளாகிய நிலம், காலம் குறித்தும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகமே முப்பொருளில்தான் உள்ளது. ‘time, space and action’ என்று கூறுவர். அம் முப்பொருளும் தொல்காப்பியத்தின் முதல், கரு, உரிப்பொருள்கள் என்பதில் அடங்குவதைக் காணமுடியும்.

மேலும், இத்திணைப் பகுப்புமுறை தமிழ்நாட்டிற்கு உரிய நிலப்பகுதிகளை மட்டும் கொள்ளாது, உலக நிலத்தன்மைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பிரித்துள்ளது தெளிவாகிறது. காரணம், பாலைத்திணைக்கான தன்மைகளைத் தமிழ்நாட்டில் காணமுடியாது.  உலகம் முழுமைக்கும் இந்த ஐந்து நிலங்களின் தன்மைதான் பொதுப்பண்பு என்பதை தொல்காப்பியமும் பதிவுசெய்துள்ளது(தொல்.பொரு.அக.948).

மெய்ப்பாடு

                மெய்ப்பாடுகள் (மெய்-உடல்; மெய்ப்பாடு-உடலில் தோன்றும் உணர்வுகள்) ஒன்பது என்பர்; அவற்றை ஒன்பான் சுவைஎன்றும் நவரசம்என்றும் வழங்குவர். ஆனால் தமிழர்தம் கோட்பாட்டின்படி மெய்ப்பாடுகள் எட்டே என்கிறது தொல்காப்பியம். இதனை,

                                       நகையே அழுகை இளிவரல் மருட்கை
                                       அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
                                       அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப (தொல்.பொரு.மெய்ப்.03)

என்கிறது நூற்பா. சிரிப்பு, அவலம், இழிபு, வியப்பு, பயம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என்ற இந்த எட்டு வகை உணர்வுகளும் தமிழருக்கு மட்டும் உரியதன்று. உலக மாந்தர் யாவருக்கும் பொது. முழு மனிதர் யாவரிடத்தும் தோன்றுவது. அத்தோடு இந்த எட்டு வகை மெய்ப்பாடுகள் தோன்றக் காரணமான காரணிகளும் இவ்வண்ணமே அமைகின்றன. காட்டாக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் ‘பெருமிதம்என்ற உணர்விற்கான காரணங்களாகக்  கற்ற கல்வி, எதற்கும் அஞ்சாத பண்பாகிய தறுகண், எல்லா நிலைகளாலும் வருகின்ற புகழ், கொடுத்தலாகிய கொடைத் தன்மை என்ற நான்கினைச் சுட்டுகிறது தொல்காப்பியம். இத்தன்மை மனித சமூகம் அனைத்திற்கும் பொதுதானே.

பண்புகள்
               
அறம் பொருள் இன்பங்களில் வழுவாமல் வாழும் உயர் நெறியே இல்லற நெறி. அந்த இல்லற நெறி எல்லோராலும் போற்றப்படும் செம்மை நெறியாக, குற்றமற்ற நெறியாக, நல்வாழ்விற்கு வழிகாட்டும் நெறியாக அமைய, தலைமக்களிடையே இருக்க வேண்டிய பண்புகள் இவை இவை எனப் பட்டியலிடுகிறது தொல்காப்பியம்.

                                                பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
                                                உருவு நிறுத்த காம வாயில்
                                                நிறையே அருளே உணர்வொடு திருஎன
                                                முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல்.பொரு.மெய்ப்.25)

தோன்றிய குடி நிலை(நல்ல நெறியில் வாழும் குடும்பம்), குடிக்குத் தக ஒழுகும் ஒழுக்கம்(குடும்பத்தின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்காமை), வினை ஆளும் தன்மை(செயலாற்றல்), வயது, வடிவம், நிலைத்த காதல், மன அடக்கம், உயிரிரக்கம், அறிவு, செல்வம் ஆகிய இவையே மேற்சுட்டியுள்ள பத்துப் பண்புகள். இந்தப் பத்துப் பண்புகளே திருமணத்தின்போது பத்துப் பொருத்தங்களாகப் பண்டைத் தமிழகத்தில் பார்க்கப்பட்டன. இவை பொருந்தி இருத்தல் தமிழ்நாட்டுத் தலைவன் தலைவிக்கு மட்டுமல்ல, உலக மாந்தர் அனைவருக்கும் அமைய வேண்டிய பண்புகளாகும். நாள், கோள், சாதி போன்ற பொருத்தங்கள் மணமக்களுக்கு அமையவேண்டும் எனக் கூறாமல், இத்தகைய பத்து ஒப்புமைகளைக் கூறுவது பண்டைத் தமிழரின் பண்பட்ட வாழ்க்கையை  வெளிக்காட்டுவதாக உள்ளது.
               
                இல்வாழ்க்கையின் தன்மையே ஒருவரை சமுதாயத்தில் இனங்காண வைக்கிறது.  மனங்கள் ஒத்து வாழ்வதற்குத் தேவையான குணங்களைச் சொல்வதோடு, வேண்டாத குணங்களையும் சுட்டுகிறது. இவற்றை,  பொறாமை, கேடு சூழ நினைக்கும் தீயுள்ளம், தன்னை வியத்தல், புறங்கூறுதல், வருத்தமூட்டும் கடுஞ்சொல், மறதி, சோம்பல், தன் குடியுயர்வை எண்ணி மகிழ்தல், ஒப்பிட்டு நோக்கல் எனப் பட்டியலிடுகிறது தொல்காப்பியம்(தொல்.பொரு.மெய்ப்.26) மனிதநேயம் போற்றும் எச்சமுதாயத்திற்கும் இத்தன்மை ஏற்புடையதாவது இயற்கைதானே.
               
உயிர்களின் இன்பம்

                உயிர்களின் இன்பம் பற்றிக் கூறுமிடத்து, உலகப் பொதுவானதொரு சிந்தனையை முன்வைக்கிறது தொல்காப்பியம். மனதின் தன்மையைப் பொறுத்தே, இன்பத்தின் தன்மையும் அமையும் என்கிறது(தொல்.பொரு.பொருளி.29). மனதே இன்பத்தின் அளவைத் தீர்மானிக்கிறதே தவிர செயல்களின் விளைவுகள் அல்ல என்பது இதன்வழி தெளிவு.

முதுமையில் கடமை

                இல்லற வாழ்க்கையில் இன்பத்திற்கும், பொது வாழ்க்கையில் புகழுக்கும், தனிமனித ஒழுக்கத்துக்கும், தலைமைக்குத் தேவையான தன்மைக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியம், அதற்கெல்லாம் மேலே சென்று, இவ்வகையான வாழ்க்கை முறையினை வாழ்ந்து முடித்து, முதுமையினை எய்தியோருக்கும் நெறிமுறைகளை வகுக்கிறது. இதனை,

காமம் சான்ற கடைக் கோட் காலை
                                                ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
                                                அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
                                                சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே(தொல்.பொரு.கற்.51)

என்பதில் காணலாம். அதாவது, தலைவனுக்கும் தலைவிக்கும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பயனாக அமைவது எது என்றால், இல்லற வாழ்க்கையின் இறுதி காலத்தில், பெருமை பொருந்திய மக்களுடன் நிறைந்து, அறத்தினைப் புரிகின்ற சுற்றத்தோடு மகிழ்ந்து, தாங்கள் பெற்ற சிறந்ததாகிய வாழ்க்கை முறையினை, நன்னெறியினைச் சமூகத்திற்குப் பயிற்றுவித்தலே ஆகும் என்று உணர்த்துகிறது. மக்களின் இறுதி காலத்தில் துறவறத்தை வலியுறுத்தும் வடநெறிக்கு மாறாக, இல்லறத்தில் இருந்து சமூகக் கடனாற்ற வலியுறுத்தும் பண்டைத் தமிழர்நெறி இங்கு எண்ணத்தக்கது.


பழைய உரையாசிரியர்கள்


தொல்காப்பியத்திற்கு, 
       1. இளம்பூரணர்    
           2. பேராசிரியர்
           3. சேனாவரையர்
           4. நச்சினார்க்கினியர்
           5. தெய்வச்சிலையார்
          
           6. கல்லாடர் 
ஆகியோர் பண்டை உரையாசிரியர்கள். இவர்களே தொல்காப்பியத்தின் உயரத்தை உலகிற்கு உணர்த்தியவர்கள். தற்காலத்தில் அனைவரும் உணரும் வகையில் எளிய உரைகள் பல வெளிவந்துள்ளன. 


தமிழ்ச் செவ்வியல் நூல்கள் - அறிமுகம்





தமிழ்ச் செவ்வியல் நூல்கள் 

முனைவர் ஆ.மணவழகன்
ஜூலை 15.2011 

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றையும் தனித்தன்மைகளையும்  கொண்டவை பழந்தமிழ் நூல்கள். அதனாலேயே, தமிழ் இனத்தில் பண்பாடு, அரசியல், நாகரிகம், பழக்க-வழக்கம், தொலைநோக்குச் சிந்தனைகள் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் காரணிகளுள் முதன்மையானவையாகப் பழந்தமிழ் நூல்கள் திகழ்கின்றன.

பண்டைத் தமிழ் இலக்கியங்களுள், சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலத்தில் தோன்றிவை ‘சங்க இலக்கியங்கள் (மேல்கணக்கு நூல்கள்) என்றும், களப்பிரர் காலத்தில் தோன்றியவை ‘சங்கம் மருவிய கால இலக்கியங்கள் (கீழ்க்கணக்கு நூல்கள்) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு 2007ஆம் ஆண்டு ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மத்திய அரசு சென்னையில் நிறுவியது. கி.பி. 600க்கும் முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்தும் வகையில் இது நிறுவப்பட்டது. இந்நிறுவனம், கி.பி.6ஆம் நூற்றாண்டுக்கு முந்திய சங்க இலக்கியங்கள், சங்க மருவிய கால இலக்கியங்கள், காப்பியங்கள் என 41 நூல்களை இனங்கண்டு ‘செவ்வியல் நூல்கள் எனப் பட்டியலிட்டுள்ளது.  இந்த 41 நூல்கள் குறித்த அறிமுகத்தையும், தனித்தன்மைகளையும், சிறப்புகள் சிலவற்றையும் இப்பகுதியில் தொடர்ந்து காண்போம்.

செவ்வியல் நூல்கள்

                1. தொல்காப்பியம்
                  எட்டுத்தொகை நூல்கள்

                     2. நற்றிணை
                     3. குறுந்தொகை
                     4. ஐங்குறுநூறு
                     5. பதிற்றுப்பத்து
                     6. பரிபாடல்
                     7. கலித்தொகை
                     8. அகநானூறு
                     9. புறநானூறு

              பத்துப்பாட்டு

                     10. திருமுருகாற்றுப்படை
                     11. பொருநராற்றுப்படை
12. சிறுபாணாற்றுப்படை
                     13. பெரும்பாணாற்றுப்படை
                     14. முல்லைப்பாட்டு
                     15. மதுரைக்காஞ்சி
16. நெடுநல்வாடை
                     17. குறிஞ்சிப்பாட்டு
                     18. பட்டினப்பாலை
                     19. மலைபடுகடாம்

              பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

                     20. நாலடியார்
                     21. நான்மணிக்கடிகை
                     22. இன்னாநாற்பது
                     23. இனியவைநாற்பது
                     24. கார்நாற்பது
                     25. களவழிநாற்பது
26. ஐந்திணை ஐம்பது
                     27. திணைமொழி ஐம்பது
                     28. ஐந்திணை எழுபது
                     29. திணைமாலை நூற்றைம்பது
                     30. பழமொழி
31. சிறுபஞ்சமூலம்
32. திருக்குறள்
                     33. திரிகடுகம்
                     34. ஆசாரக்கோவை               
                     35. முதுமொழிக்காஞ்சி
                     36. ஏலாதி
                     37. கைந்நிலை

              காப்பியங்கள்
                    
                     38. சிலப்பதிகாரம்
                     39. மணிமேகலை

              40. முத்தொள்ளாயிரம்

41. இறையனார் களவியல் உரை