வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பழந்தமிழர் நெசவுத் தொழில்நுட்பம்

 பழந்தமிழர் உடை மேலாண்மையும் நெசவுத் தொழில்நுட்பமும்

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 600 113.

(அரிமா நோக்கு, பன்னாட்டு ஆய்விதழ், சனவரி, 2019)

 

உணவிற்கு அடுத்த நிலையிலான அடிப்படைத் தேவையாக மட்டுமன்றி, ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் தொழில்நுட்பத் திறத்தையும் அடையாளப்படுத்துவதாகவும் உடை பண்பாடு அமைகிறது.  உடை பற்றிய பண்டைய இலக்கியக் குறிப்புகளிலிருந்து பழந்தமிழர்களின் நாகரிக வளர்ச்சி நிலைகளையும் உடை மேலாண்மையையும் நெசவுத் தொழில்நுட்பத் திறத்தையும் அடையாளப்படுத்த முடிகிறது. ‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’, ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பன போன்ற தமிழர்தம் பழமொழிகள், அவர்கள் உடைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. 

எத்தகைய நிலையிலிருப்போர்க்கும் உணவும் உடையும் இன்றியமையாதன என்பதால், இவ்வுலகத்தை ஒரு குடைக்கீழ் ஆளும் மன்னனாயினும், காட்டில் வேட்டையாடிப் பிழைப்பவனாயினும் ஒவ்வொருவனுக்கும் உண்பதற்கு நாழி உணவும் உடுப்பதற்கு இரண்டு உடைகளும் இன்றியமையாத பொதுமைகளாக வலியுறுத்தப்பட்டன (புறம்.189:1-5). உடையின் இன்றியமையாமையைக் குறிப்பிடும் இடத்து, ‘உடுக்கை இழந்தவன் கைபோல’(குறள்.788) என உவமையாக்குவார் வள்ளுவர்.

அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்

புறத்தால் பொலிவுறல் வேண்டும் எனைத்தும்

படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை

உண்டி வினவுவார் இல்        (பழமொழி.329)

என்று, உடுத்தும் உடையே ஒருவரின் நிலையை வெளிக்காட்டும் அளவீடாகுமென உடையின் தேவையை அறிவுறுத்தும் பழமொழி நானூறும். இவ்வாறு, வாழ்வியல் பண்பாட்டோடு ஒன்றிய உடையின் தேவையை நிறைவு செய்ய பழந்தமிழர் எவ்வகையானச் செயல்பாடுகளைக் கடைபிடித்தனர் என்பதையும், பலவகையான தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, இன்றைய உடை உற்பத்திக்கும் ஆடை வடிவமைப்புக்கும் மேலாண்மைக்கும் முன்னோடியாக எவ்வாறு திகழ்ந்தனர் என்பதையும் பதிவு செய்வதை இக்கட்டுரை நோக்கமாகக் கொள்கிறது. 

ஆதி கால ஆடைப் பயன்பாடு

வேட்டைச் சமூகத்தில் இயற்கைச் சக்திகளால் தனது உடலுக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதற்காக உடையணிய வேண்டிய தேவை மனிதனுக்கு எற்பட்டது.  மழையாலும் வெயிலாலும் பனியாலும் ஏற்பட்ட துன்பத்தைப் போக்க, தான் உணவிற்காக வேட்டையாடிய மிருகங்களின் தோலையே தனக்கேற்ற உடையாகப் பயன்படுத்தத் தொடங்கினான். தோல் கிடைக்காதவிடத்து மரப்பட்டைகளையும், மர நார்களையும் மரத் தழைகளையும் உடையாக வடிவமைத்தான். அதன் படிநிலைவளர்ச்சியாக, நூலாடையையும் பட்டாடையையும் உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தன்னை உயர்த்திக்கொண்டான்.  

வெப்பமான காலத்திலே மரத் தழைகளை உடுத்தலால் குளுமையாக உடலை வைத்திருக்க முடிந்தது. தழையுடுத்தும் இப்பண்பாடு மக்களிடையே நிலவி வந்ததைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. பெரும்பாலும், தழை பெண்களுக்குரிய உடையாகவே காட்டப்படுகிறது (புறம்.61:1; 248; 340:1; 341:2,3; அகம்.7:2; 20:9,10; 59:4-6; 156:9-11; 176:13-15; குறு.293:5-7; 342:4,5; நற்.96:7-9;  ஐங்குறு.15:1,2; 191:3; 256:2; கலி.102:4-8;125:12-15). தலைவிக்குத் தலைவன் தழையும் தாரும் பரிசளித்தான் (நற்.80:5). அவ்வகைத் தழையுடைக்கு மகளிர் நெய்தற்பூக்கள் போன்றவற்றால் அணிசெய்தனர்(அகம்.70:11,12; 201:6,7; 275:16-19; 320:3; குறு.125:3; 159;1).

அரிதாக, ஆடவரும் தழையணி அணிந்த செய்தியை, ‘தளிரால் ஆகிய தழையை உடுத்தி நுந்தையின் தினைப் புனத்தின் கண்ணே ஞாயிறு மறையும் பொழுதில் வரவோ’ (நற்.204:1,2) என்ற தலைவன் மொழிகொண்டு அறிய முடிகிறது. ‘சங்க இலக்கியங்களில் ‘தழை’ என்னும் சொல்லே பல பாடல்களில் பயின்று வந்துள்ளது. 

உடை உற்பத்தி மேலாண்மை

உடை உற்பத்தியில் நிறைவினை எட்ட பழந்தமிழர் பலவகைத் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தினர். உடை உற்பத்தி மற்றும் மேலாண்மையில் உடை உற்பத்திக்கு மூலப்பொருளாகிய பருத்தியினை உள்நாட்டிலேயே உற்பத்திசெய்தல், நெசவுத்தொழிலை மக்கள் தொழிலாக/சிறுதொழிலாக மாற்றி, பெண்கள் உட்பட அனைவரும் அத்தொழிலில் ஈடுபடல், வறியவர்க்கும், இரவலர்க்கும், இயலாதோர்க்கும் உடைகளை வழங்கல், உடை உற்பத்தியில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உழைப்பினை எளிதாக்குவதோடு, அதிக உற்பத்தியாலும், சிறந்த வேலைப்பாடுகளாலும் ஏற்றுமதிக்கும் உட்படுத்தி வணிகத்தைப் பெருக்குதல் என பல்வேறு செயலாக்கங்களைக் கண்டறியமுடிகிறது. 

மூலப்பொருள் உற்பத்தி

ஒரு தொழிலின் தடையற்ற வளர்ச்சிக்கு, அத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தல் அடிப்படையாகிறது.  உடைகளின் உற்பத்திக்கு மூலப்பொருளான பருத்தியை உள்நாட்டிலேயே விளைவித்த செய்தியினை சங்க இலக்கியம் காட்டுகிறது. பருத்தி மிகுதியாகப் பயிரிடப்பட்டு, ஊரைச் சுற்றி வேலிபோல காட்சியளித்ததை, ‘பருத்தி வேலிச் சீறூர்’(புறம். 299:1) என்பதில் அறியமுடிகிறது. 

நெசவுச் சிறுதொழில்

பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில் சிறுதொழிலாக இல்லங்கள்தோறும் கைக்கொள்ளப்பட்டது. உடையின் தேவை என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவானதொன்று என்பதால், அதனைத் தேவையான அளவில் உற்பத்தி செய்வது இன்றியமையாததாகியது. அதற்கானத் தீர்வாக, அத்தொழில் எளிய மக்களின் தொழிலாக பரவலாக்கப்பட்டது. பருத்திப் பயிரை விளைவித்து, அதிலிருந்து பஞ்சினை எடுத்துவந்து, அதிலுள்ள தூசுகளையும், செற்றைகளையும் நீக்கி உலர்த்தினர். பின்னர் கொட்டை நீக்கி, நூலாக நூற்றனர். பழந்தமிழர் இல்லங்களின் முற்றங்களில் பஞ்சு உலர்த்தப்பட்டிருந்தது.

            பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கட்’ (புறம். 166:5) 

உடை உற்பத்தியில் மகளிர்

உடை உற்பத்திக்கானத் தொழில்நுட்பத்தினைப் பெண்கள் கற்றிருந்தனர்.  நெசவுத்தொழிலில் ஈடுபட்ட பெண்கள் ‘பருத்திப் பெண்டிர்’ என வழங்கப்படுகின்றனர். இவ்வகைப் பருத்திப் பெண்டிர் செய்த நூலாலான பனுவலை,

            ‘பருத்திப் பெண்டின் பனுவ லன்ன’ (புறம். 125: 1)

என்று உவமையாக்குகிறது இலக்கியம். பருத்தியை எடுத்துவந்து, அதிலிருக்கும் தூசு, செற்றை ஆகியவற்றை நீக்கும் பணியில், இரவிலும் விளக்கொளியில் ஈடுபட்டிருந்த பருத்திப் பெண்டிரை,

                        சிறையும் செற்றையும் புடையுந ளெழுந்த

                     பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து    (புறம்.326:4-5)

என்ற பாடலடிகள் காட்டுகின்றன. ஆண் துணை இல்லாத பெண்கள் சிறுதொழிலாக, இல்லத்திலேயே இந்நெசவுத் தொழிலைச் செய்தனர்.  இவ்வகைப் பெண்கள் தம் முயற்சியில் செய்த நுணங்கிய நுண்ணிய பனுவலை,

                        ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த

                      நுணங்கு நுண் பனுவல் போல          (நற்.353:1-2)

என்பதில் காணலாம். 

நெசவுத் தொழில்நுட்பம்

மூலப்பொருள்களை உற்பத்தி செய்து (பருத்தி, பட்டுக்கூடு) அவற்றிலிருந்து இரண்டாம் நிலை பொருள்களை (நூல், பட்டு இழை) உருவாக்கி, மூன்றாம் நிலை உற்பத்திப் பொருளாகிய துணியை நெய்து, பின்னர் பயன்பாட்டுக்கு ஏற்ப பல வடிவங்களிலும், வண்ணங்களிலும், அலங்கார வடிவமைப்புடனும் கூடிய ஆடைகளை நெய்யத் தொடங்கிய நிலை தொழில்நுட்பத்தின் உயர்நிலையாக அறியப்படுகிறது.  இவ்வகை படிநிலை நுட்பங்களைச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. 

          வேறுபட்ட உடைகள்

தன்னை நாடி வரும் வறியவர்க்கும் பாணர்க்கும், அவர்களின் நைந்துபோன, பழைய, கிழிசல் உடைகளைக் களைந்து, புத்தாடைகளை உடுக்கச்செய்யும் பழந்தமிழ் அரசர்களின் செயல்களைப் பல்வேறு இலக்கியக் குறிப்புகள் காண்ட்டுகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட உடைகள் பலவகை நுண்வேலைப்பாடுகளைக் கொண்டவையாகவும், பல்வகைத் தொழில் நுட்பங்களின் வெளிப்பாடாகவும் விளங்கின. அரசர், பாம்பின் தோல் போன்ற பளபளப்புத் தன்மையுடையனவாகவும், மூங்கிலின் உட்பக்கத்தில் உள்ள தோலைப் போன்ற மென்மையுடையனவாகவும், நெய்யப்பட்ட நூல் இழைகளின் வரிசை அறிய முடியாத, பூ வேலைப்பாடுகளுடன் கூடியனவுமாகிய பல்வகைத் தொழில்நுட்பம்கொண்ட உடைகளை வறியவர்க்குக் கொடுத்து உடுக்கச் செய்தனர்(புறம். 383:9-11). இரவலரின் பழைய, பாசி போன்ற கந்தல் உடைகளைக் களையச்செய்து, மென்மையான மேகம் போன்ற உடையை உடுக்கச்செய்தனர்(பெரும்பாண். 468-469).

மேலும் உடைகள், பின்னப்பட்ட நூலிழைகளின் இடைவெளியை அறிய முடியா தன்மையிலும், பூ வேலைப்பாட்டுடனும், பாம்பின் மேல்தோல்(சட்டம்) போன்ற தன்மை வாய்ந்ததாகவும்  நுண்ணிய தொழில்நுட்பத்தோடு பின்னப்பட்டிருந்தன.

                        நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்த

                     அரவுரி அன்ன அறுவை நல்கி   (பொருநர். 82-83) 

          நுண் வேலைப்பாடுகள்

பல்வகைத் தன்மைகளோடு கூடிய உடைகளை உற்பத்தி செய்ததோடு, அவற்றில் வண்ணம் ஏற்றுதல், உடைகளில் பூவேலைப்பாடுகள் செய்தல் முதலிய பல்வேறு நுட்பங்களையும் பழந்தமிழர் கையாண்டனர். இது அச் சமூகத்தின் தொழில்நுட்ப அறிவோடு முருகியல் உணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.  நெய்யப்பட்ட உடையில் கலைப்படைப்புகளை பலவகை ஓவியங்களாக பூ வேலைப்பாடுகளில் வெளிப்படுத்தினர். அவ்விதம் பின்னப்பட்ட பூக்களைப் பல வண்ணங்களில் அழகூட்டினர். நீல நிற உடையில் பல வண்ணப் பூக்கள் பின்னப்பட்டதை,

            ‘நீலக் கச்சைப் பூவா ராடை’ (புறம். 274:1) என்பதிலும்

                       ‘பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்’ (சிறுபாண். 239) என்பதிலும்

அறிய முடிகிறது.       

            மேலும், பலவகைத் தன்மைகளும், வடிவங்களும் அமைந்த உடைகளுள், இருபுறமும் குறுகியதும், நீளமானதுமான உடையை,

                        தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பகல்

                      குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து             (மதுரைக். 519-520)

என்பதிலும், இருபுறமும் தொங்கவிடும்படி நீளமாக வடிவமைக் கப்பட்ட உடையை,

                        ‘இருகோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர’ (நெடுநல். 35)

என்பதிலும் காணலாம்.

            அதேபோல, பின்புறம் நிலம்தோயும் வண்ணம் நீளமாகத் தொங்கவிடப்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட உடையை, 

                        ‘புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ’ (நெடுநல்.181) என்றும், 

விரிந்த நூலான் இயன்ற, தரையில் புரளும் உடையினை,

                        இருநிலந் தோயும் விரிநூல் அறுவையர்’ (பதி.34:3)

என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

            வண்ணம் ஏற்றுதல், பூ வரைதல் போன்ற நுண்வேலைப்பாடமைந்த கச்சையை,                             ‘நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி’ (குறிஞ்சி.125)

என்ற பாடலடியும், கடல் அலைபோன்ற தன்மைகொண்ட மென்மையான உடையை,

                        ‘கோட்டங் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்’(புறம். 275:1)

என்ற அடியும் சுட்டி நிற்கின்றன. அதேபோல, இரு ஓரங்களிலும் நூல்களின் வெட்டுவாயினை அறிய முடியாத, அடர்த்தியான நூல் இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட உயர்தர உடையை உற்பத்தி செய்யும் நுட்பத்தினை,

                         ‘இழைமருங்கு அறியா நுழைநூல் கலிங்கம் (மலைபடு.561)

என்பதிலும் அறியமுடிகிறது. 

            வண்ணம் ஏற்றுதல்

உடைகளுக்கு வண்ணம் ஏற்றும் தொழில்நுட்பத்தினைப் பழந்தமிழர் கைவரப்பெற்றனர்.  ஒருசேர நெய்யப்பட்ட உடையில் நீலநிற வண்ணம் ஏற்றியிருந்ததை,

            ‘இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்’ (கலி.72:1)

என்பதில் அறியமுடிகிறது. மேலும், சிவப்பு நிற வண்ணம் ஏற்றப்பட்ட உடையை,

                        வெயிற் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்றுச்

                      செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்

                      கண் பொருபு உகூஉம் ஒண் பூங் கலிங்கம்   (மதுரைக். 431-433)

என்பதிலும், ‘கோபத் தன்ன தோயாப் பூந்துகில்’ (திருமுருகு.15) என்பதிலும் அறிய முடிகிறது. பூந்துகிலை, ‘அற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில்’ (மணி.3:139) என்றும் இலக்கியம் காட்டுகிறது. 

நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட தறியும், அதில் பல்வகை நூலிழைகளைக் கொண்டு பரப்பி, உடைகளை உற்பத்திச் செய்த தொழில்நுட்பமும் ‘பாவிரித்தன்ன’ (அகம்.293) என்று உவமையாக அமைவதைக் காணமுடிகிறது. 

பலவகையான உடைகள்

            துகில்

உடை வகைகளுள் மென்மைத் தன்மை வாய்ந்ததாகத் துகில் காணப்படுகிறது. அதன் நிறம் மிகவும் வெண்மையானதாகக் கூறப்பட்டுள்ளது. இது பருத்தியினால் ஆக்கப்பட்டதாகும். உருவத்தை மறையாது காட்டுகின்ற மென்மைத் தன்மை இத்துகிலுக்கு உண்டு.

                        முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்

                       நுணுங்கு துகில் நுடக்கம் போல         (நற்.15:1,2)

என்றும்,          ‘துகில் விரித்தன்ன வெயிலவர் உருப்பின்’ (நற்.43:1)

என்றும் துகில் குறிப்பிடப்படுகிறது. 

போர்வை

போர்வை தமிழர்களது உடை வகைகளில் ஒன்றாகும். உடல் மறைக்க உடைகளை உருவாக்கியதோடு, குளிருக்கும், இரவில் போர்த்தவும், விரிப்பிற்கும், உடைகளை விடவும் தடிமனாக நெய்யப்பட்ட போர்வைகளை உற்பத்தி செய்யும் நுட்பத்தினைக் கைக்கொண்டிருந்தனர்.

தலைவனைக் காண்பதற்குத் தலைவி குறியிடத்திலே போர்வையை அணிந்து நின்ற செய்தியை,

மன்பதை எல்லாம் மடிந்த இருங்கல்குல்

          அம் துகில் போர்வை அணி பெறத் தைஇ நம்

          இன்சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக   (கலி.65:3-5)

என்ற பாடலடிகள் காட்டுகின்றன.           

பல வண்ணங்கள் ஊட்டப்பட்ட பல மயிர்களை உள்ளே வைத்துத் தைத்து , அரிமா வேட்டை ஆடுதல் போன்ற உருப்பொறித்து, அகன்ற இடத்தையுடைய காட்டில் பூத்த முல்லை முதலான பல வகையான மலர்களின் உருவங்களையும் நிரம்பப் பொறித்து, மென்மையாகப் போர்த்த போர்வையை,

                        ஊட்டுறு பல் மயிர் விரைஇ வய மான்

வேட்டம் பொறித்து வியன் கட் கானத்து

முல்லைப் பல் போது உறழ பூ நிரைத்து

மெல்லிதின் விரித்த சேக்கை               (நெடுநல்.128-131)

என்பதில் காணமுடிகிறது.

பட்டாடை

உடை உற்பத்தியில் பருத்தியை மட்டும் பயன்படுத்தாமல், பட்டு இழைகளையும் பயன்படுத்திய நுட்பத்தையும் இலக்கியங்கள் காட்டுகின்றன.

பாசி வேரின் மாசொடு குறைந்த

துன்னற் சிதாஅர் நீக்கித் தூய

கொட்டைக் கரைய பட்டுடை நல்கி                     (பொருநர்.153-155)

என்பதில் கரை வைத்து நெய்யப்பட்ட பட்டாடையும்,

            அணிகிளர் சாந்தின் அம்பட்டிமைப்பக்

          கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை     (அகம்.236)

என்பதில், ஒளிரும் பட்டாடையும் சுட்டப்படுகிறது. 

கம்பளம்

உடைகளிலிருந்தும் போர்வைகளிலிருந்தும் வடிவமைப்பிலும், தன்மையிலும், வேறுபட்ட கம்பளம் தயாரிப்பு நுட்பத்தினையும் பழந்தமிழர் கொண்டிருந்தனர். பசுமையான கம்பளத்தில்   இரும்பால் செய்த ஊசி எளிதில் தைத்தயிடம் தெரியாது மறைவதை,

                        பொன்னின் ஊசி பசுங்கம்பளத்துத்

                      துன்னிய தென்னத் தொடுகடல் உழந்துழி         

என்ற பாடலடிகள் உவமையாக்குகின்றன.

 

   மேற்கண்ட சான்றுகளின்வழி, பழந்தமிழர் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானதான உடையின் உற்பத்திக்கும் பரவலாக்கத்திற்கும் தொழில்முறை செயல்பாடுகள் மற்றும் பண்பாட்டு நெறி என இருவகை செயல்பாடுகளைக் கொண்டிருந்தது தெரியவருகிறது.

    பண்பாட்டு அடிப்படையிலான செயல்பாட்டில் வறியவர்களுக்கு உணவோடு உடையையும் வழங்கி அதனை அறமாகப் போற்றினர் என்பதும், உடை உற்பத்தியின் நிறைவிற்குத் தொழில்முறையிலான செயல்பாடுகளில் மேலாண்மையைக் கொண்டிருந்தனர் என்பதும் பெறப்படுகிறது. உடை உற்பத்தியில் பெண்களும் ஈடுபட்டனர் என்பதும், வெறுமனே உடுத்துதற்கு உடை என்ற நிலையோடு நில்லாமல், அதில் பலவகையான கலை வேலைப்பாடுகளை மேற்கொண்டனர் என்பதும், வயதுக்கும் காலத்துக்கும் ஏற்ற உடைகளை உற்பத்தி செய்ததோடு உடைகளில் பலவகை வண்ணங்களை ஏற்றும் நுட்பத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் அறியப்படுகிறது.

 ***** 

Dr. A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

தமிழியல்

www.thamizhiyal.com