ஆ. மணவழகன், உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113. பிப்ரவரி 20, 2012.
சங்க இலக்கிய நூற்தொகுப்பான எட்டுத்தொகையின்
புறம் சார்ந்த நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து. இது சேர அரசர்களைப் பற்றி மட்டுமே
பாடக்கூடிய சிறப்பினைக் கொண்டது. இதில், பத்து சேர அரசர்களைப் பற்றிப் பத்துப்
பத்துப் பாடல்களாக நூறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்தின் கடின நடை
காரணமாக இலக்கிய ஆசிரியர்கள் இதனை ‘இரும்புக்கோட்டை’ என்று வழங்குவர்.
அமைப்பு முறை
பத்து சேர மன்னர்களைப் பற்றிப்
பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பத்துப் பாக்களின் தொகுப்பு
‘பதிற்றுப்பத்து’ எனப்படுகிறது (பத்துப்பத்து=பதிற்றுப்பத்து). இதிலுள்ள ஒவ்வொரு
பத்தும் முதல் பத்து, இரண்டாம் பத்து என எண்ணால் பெயரிட்டு வழங்கப்படுகிறது.
பத்துப் பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ள இவற்றில் முதல் பத்தும் இறுதிப் பத்தும்
கிடைக்கவில்லை. எனவே எண்பது பாடல்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளன. இரண்டாம்
பத்து முதல் ஒன்பதாம் பத்து வரை பாடிய புலரும், பாடப்பட்ட மன்னனும் பின் வருமாறு:
பத்து |
பாடிய புலவர் |
பாடப்பட்ட மன்னன் |
2 |
குமட்டூர்
கண்ணனார் |
இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன் |
3 |
பாலைக்
கௌதமனார் |
பல்யானைச்
செல்கெழுகுட்டுவன் |
4 |
காப்பியாற்றுக்
காப்பியனார் |
களங்காய்க்
கண்ணி நார்முடிச்சேரல் |
5 |
பரணர் |
கடல்
பிறக்கோட்டிய செங்குட்டுவன் |
6 |
காக்கைப் பாடினியார் |
ஆடுகோட்பாட்டுச்
சேரலாதன் |
7 |
கபிலர் |
செல்வக்கடுங்கோ
வாழியாதன் |
8 |
அரிசில்கிழால் |
தகடூர்
எறிந்த பெருஞ்சேரலாதன் |
9 |
பெருங்குன்றூர்க்கிழார் |
இளஞ்சேரலிரும்பொறை |
நூல் சிறப்புகள்
சங்க இலக்கிய எட்டுத்தொகையுள்
புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து இரண்டும் புறநூல்களாக இருந்தாலும் சேர அரச
பரம்பரையை மட்டுமே பாடும் புறநூல் பதிற்றுப்பத்து மட்டுமே. சங்க இலக்கியத்தில்
வேறு எந்த நூலும் இதுபோல் ஒரு அரச பரம்பரையைக் கால முறைப்படி பாடவில்லை. எனவே
பதிற்றுப்பத்து ஒரு வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கிறது.
ஒவ்வொரு பாட்டிற்கும்
அப்பாட்டில் அமைந்த சிறந்த தொடர் ஒன்றே
தலைப்பாக அமைந்துள்ளது. எ.கா. தசும்புதுளங்கு இருக்கை,
சுடர்வீ வேங்கை, ஏறா ஏணி, நோய்தபு நோன்றொடை என்பன.
ஒவ்வொரு பத்தின் இறுதியிலும்
ஆசிரியர் பெயர், பாட்டுடைத் தலைவன், பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள், பாடல்
ஆசிரியருக்கு மன்னன் வழங்கிய பரிசில்கள்,
செய்வித்த சிறப்புகள் போன்ற வரலாற்றுச் செய்திகளைச் சொல்லக்கூடிய
‘பதிகம்’ இடம்பெற்றுள்ளது.
புலவர்களுக்குச்
செய்யப்பட்ட சிறப்புகளும் வழங்கப்பட்ட பரிசில்களும்
பதிற்றுப்பத்து
பாடிய புலவர்கள்களுக்குச் செய்யப்பட்ட சிறப்புகள் வியப்பில் ஆழ்த்துவன. சங்க இலக்கியத்தில்
பதிற்றுப்பத்து தவிர வேறு எவ்விலக்கியம் பாடிய
புலவருக்கும் இத்தகைய உயர் சிறப்பு செய்யப்பட்டதை அறிய
முடியவில்லை.
இரண்டாம் பத்து பாடிய குமட்டூர் கண்ணனாருக்கு, உம்பர் காட்டு ஐந்நூறு ஊர்களையும், முப்பத்தெட்டு ஆண்டுகள் தென்னாட்டு வருவாயில் பாதியையும் பரிசிலாக வழங்கியிருக்கிறான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். மூன்றாம் பத்து பாடிய பாலைக் கௌதமனாருக்கு, அவர் விரும்பிய வண்ணம் பத்துப் பெருவேள்விகள் செய்து அவர்தம் மனைவியுடன் விண்ணுலகம் புக வழி செய்திருக்கிறான் பல்யானைச் செல்கெழுகுட்டுவன். நான்காம் பத்து பாடிய காப்பியாற்றுக் காப்பியனாருக்கு, நாற்பது நூறாயிரம் பொன், மற்றும் ஆளுவதில் பாதியையும் கொடுத்திருக்கிறான் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். ஐந்தாம் பத்து பாடிய பரணருக்கு, உம்பற்காட்டு வருவாயோடு தன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாக வழங்கியிருக்கிறான் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன். ஆறாம் பத்து பாடிய காக்கைப்பாடினியாருக்கு. ஒன்பது துலாம் பொன் மற்றும் நூறாயிரம் பொற்காசுகளைப் பரிசாக வழங்கியிருக்கிறான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். ஏழாம் பத்து பாடிய கபிலருக்கு, நூறாயிரம் பொற்காசுகள் மற்றும் நன்றா என்னும் குன்றில் நின்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறான் செல்வக் கடுங்கோவாழியாதன். எட்டாம் பத்து பாடிய அரிசில்கிழாருக்கு, ஒன்பது நூறாயிரம் பொன்னும் அரசு கட்டிலும் வழங்கியிருக்கிறான் தகடூரெறிந்த பெருச்சேலரிரும்பொறை. ஒன்பதாம் பத்து பாடிய பெருங்குன்றூர் கிழாருக்கு 32,000 பொற்காசுகள், ஊரும் மனையும் ஏரும் பிறவும், அருங்கலன்கள் பன்னூறாராயிருமும் வழங்கியிருக்கிறான் இளங்சேரல் இரும்பொறை.
பாடல்
பதிற்றுப்பத்தின் பாடல் சிறப்புகளுக்குக் கபிலரின் பாடல் ஒன்று இங்கு எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்படுகிறது. தன் நண்பனான பாரி இறந்தபின்னர் சேர அரசனைக் காண அவனுடைய பாசறைக்குச் செல்கிறார் கபிலர். அங்கு அவனைக் கண்டு பாடிய பாடல்கள் பதிற்றுப்பத்தின் ஏழாம்பத்தாக இடம்பெற்றுள்ளன.
கபிலர், பெரு வேந்தனைக் காணச்
செல்லும் போதும் சிற்றரசனான தன் நண்பனின் வீரம், கொடைதன்மை போன்ற சிறப்புகளையும்
அவன் நாட்டின் வளத்தையும் பெருமைபட பேசுகிறார். மேலும், ‘என் அரசன் இறந்துவிட்டான்
அதனால் என்னைக் காப்பாயாக என்று இரந்து நிற்க உன்னிடத்தில் வரவில்லை, பரிசில்
பெறுவதற்காக உன் புகழை மிகைப்படுத்தியோ குறைத்தோ கூற மாட்டேன்’ என்றும்
கூறுகிறார். கபிலர் பேரரசனின் முன்னால் இப்படிக் கூறுவது அவர் உள்ளத்தின்
தன்மையையும், புலவர்களின் சிறப்பையும்
உணர்த்துவதாக உள்ளது. புலாம் அம் பாசறை (புலால் நாற்றும் வீசும் பாசறை) எனும்
தலைப்பில் அமைந்த அப்பாடல் வருமாறு.
பலாம்அம் பழுத்த பசும்புண் அரியல்
வாடைதூக்கு
நாடுகெழு பெருவிறல்
ஓவத்தன்ன
வினைபுனை நல்லில்
பாவை
அன்ன நல்லோள் கணவன்
பொன்னின்
அன்ன பூவிற் சிறியிலைப்
புன்கால்
உன்னத்துப் பகைவன் எங்கோ
புலர்ந்த
சாந்தின் புலரா ஈகை
மலர்ந்த
மார்பின் மாவண்பாரி
முழவுமண்
புலரஇரவலர் இனைய
வாராச்
சேட்புலம் படர்ந்தோன் அளிக்கென
இரக்கு
வாரேன் எஞ்சிக் கூறேன்
ஈத்ததிரங்கான்
ஈத்தொறு மகிழான்
ஈத்தொறு
மாவள்ளியன் என நுவலுநின்
நல்லிசை
தரவந்திசினே - ஔ¢வாள்
உரவுக்களிற்றுப்
புலாஅம் பாசறை
நிலவின்
அன்னவௌ¢
வேல்பாடினி
முழவில்
போக்கிய வெண் கை
விழவின்
அன்னநின் கலிமகிழானே
-ஏழாம்
பத்து, கபிலர்
பொருள்
பலா
மரத்திலே பழுத்து வெடித்த பழத்தின் வெடிப்பிலிருந்து ஒழுகும் சாற்றை வாடைக்காற்று
எடுத்து எங்கும் தூற்றும் பறம்பு நாடு. அந்நாட்டில் தொன்றியவன் ஆற்றல் படைத்தவன்.
அவன் ஓவியத்தில் வரையப்பட்டதுபோன்ற அழகும் நல்ல இல்லில் இருக்கும் பாவை போன்ற
நலமும் உடையவளின் கணவன். பொன்னிற மலரையும் சிறிய இலைகளையும் அழகற்ற அடியையும் உடைய
உன்ன மரத்துக்குப் பகைவன். அவன் எம் மன்னன் பாரி. பூசி உலர்ந்த சந்தனத்தை அணித்த
மார்பையும் ஈகையால் பெரிய வள்ளல் தன்மையையும் உடையவன். முழவில் (இசைக்கருவி) பூசிய
மண் உலர்ந்து போகவும்,
ஈபவர் இல்லாமையால் இரவலர் வருந்தவும், மீண்டு
வரவியலாத மேல் உலகத்துக்குச் சென்றான் அவன் (இறந்துவிட்டான்).
ஒளியுடைய
வாளையும் வலிமையுடைய களிறுகளையும் உடைய புலால் நாற்றம் வீசும் பாசறை. அதில், நிலவின் ஒளியைப் போன்று வெண்மையான ஒளியை வீசும் வேல்படையைப் புகழ்ந்து தாளத்திற்கேற்ப
பாடுவாள் பாடினி. அதனால் விழாக்கோலம் போல் காணப்படும் அந்நாளில், ‘எம்மைப் போற்றிக் காத்துவந்த பாரிவள்ளல் இறந்தான், ஆதலால்
எம்மை ஆதரிப்பாயாக’ என்று யாசிப்பை மேற்கொண்டு உன்னிடத்தில்
நான் வரவில்லை. நின் புகழைக் குறைவாகவும் மிகுதியாகவும் கூறமாட்டேன். ‘செல்வக் கடுங்கோ வாழியாதன் ஈவதால் ஏற்படும் பொருள் செலவு குறித்து உள்ளம்
வருந்தமாட்டான்; இடைவிடாமல் ஈவதால் வரும் புகழ் குறித்து மகிழவும் மாட்டான்; ஈயும்
போதெல்லாம் பெரிய வள்ளன்மை உடையவன்’ என்று உலகோர் கூறும்
நின் நல்ல புகழ் எம்மை நின்னிடம் ஈர்த்தது. அதனால் உன்னைக் காணவே வந்தேன்.
பதிற்றுப்பத்து உரைகள்
பதிற்றுப்பத்தைப் பழைய உரையோடு சேர்த்து முதன்முதலாக உ.வே.சா. அவர்கள் 1920இல் பதிப்பித்து வெளியிட்டார். இதன் மறு பதிப்புகள் பல வந்துள்ளன. உ.வே.சா.வை அடுத்து ஔவை சு.துரைசாமிப் பிள்ளை 1950இல் பதிப்பித்தார். இவ் உரையும் பல பதிப்புகள் வெளிவந்துள்ளது. உரை இன்றி மூலத்தை மட்டும் 1957இல் மர்ரே பதிப்பகத்தார் வெளியிட்டனர். ஈழத்துப் புலவர் அருளம்பலனாரின் ஆராய்ச்சி உரையுடன் கூடிய பதிப்பு 1960இல் ஈழத்தில் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் 1963இல் வெளியிடப்பட்டது. புலியூர்க் கேசிகனின் தெளிவுரை 1974இல் வெளிவந்தது. இதுவும் பல பதிப்புகள் கண்டது. அதன் பின்னர் இன்றளவும் எண்ணற்ற உரைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.