வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பழமலய் கவிதைகளில் மண்சார்ந்த விழுமியங்கள்

 முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600 113.

(புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள் - கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – ஐவனம் தமிழியல் ஆய்வு நடுவம், சென்னை. திசம்பர் 18, 2019)


            உலகின் மிகப் பழமையான இனக்குழுக்கள், தம்மைச் செழுமை படுத்திக்கொள்ள காலந்தோறும் பலவிதக் கற்பிதங்களை உருவாக்கியுள்ளன.  அவை நெறிப்படுத்துதல், தற்காத்துக்கொள்ளுதல், தக்கவைத்துக் கொள்ளுதல், தனித்துக்காட்டல் போன்ற விளைவுகளை எதிர்நோக்கியவையாகும். சமகால தேவையின் அடிப்படையில் உருவாக்கப்படும் இவ்விதக் கற்பிதங்கள் கால ஓட்டத்தில் எதிர்நிலை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால், யுகங்கள் பல கடந்தும் மனித  வாழ்வியலைச் செழுமைபடுத்தும் சிந்தனைகள் விழுமியங்களாக எஞ்சி நிற்கின்றன. காலத்திற்கும், பட்டறிவிற்கும் ஏற்ப இவை கோட்பாடுகளாகவும், வரையறைகளாகவும் உருவம்பெறுகின்றன. சுருங்கக் கூறின், ஒரு பண்பட்ட, தொன்மையான இனக்குழு எவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று போராடுகிறதோ, எவற்றை இழந்துவிட்டதாக வருந்துகிறதோ அவ்வகை நடத்தைகள் அல்லது கற்பிதங்களே விழுமியங்களாகின்றன. 

        சமூக நடத்தையியலில் உயவு எண்ணையாக இருப்பவை விழுமிய கற்பிதங்கள். இனக்குழுக்களை நடத்தையியல் சார்ந்து ஒழுங்குபடுத்துவதற்கு விழுமிய முன்னெடுப்புகள் காலந்தோறும் தேவையாக இருக்கின்றன. காரணம், உலகின் எந்த ஒரு பழமையான சமூகமும் தொடர்ச்சியான சமூக வரலாற்றைக் கொண்டதாக இல்லாதிருப்பதே. அனைத்துச் சமூகமும் பிற அரசியல், பண்பாட்டுப்  படையெடுப்புகளுக்கு ஆளாகியே வந்துள்ளன. தமிழ்ச் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ்ச் சமூகத்தின் தொடக்ககால வரலாற்றை உரைக்கும் சங்க இலக்கியங்கள் தொடங்கி, இக்கால இலக்கியங்கள் வரை இவ்வகை விழுமிய கற்பிதங்களை அடையாளங்காண முடியும். மிகவும் நேர்த்தியான இலக்கிய வடிவமான கவிதைகள் இவ்விதச் சிந்தனைகளுக்கு அதிக இடமளிக்கின்றன. இக்கட்டுரை, மக்கள் கவிஞர் பழமலய் அவர்களின் கவிதைப் படைப்புகளைக் களமாகக் கொண்டு, மண்சார்ந்த விழுமியங்களை அடையாளப்படுத்துவதாக அமைகிறது. 

     ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதின இலக்கியங்களிலும், ஒரு நூற்றாண்டு கால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதுக்கவிதை, சிறுகதை இலக்கிய வடிவங்களிலும் கண்டறியமுடியும் என்கிற கருதுகோள்களை முன்வைத்தே இக்கருத்தரங்க அறிவிப்பு செய்யப்பெற்றது. வந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் கருதுகோள்களை மெய்ப்பித்திருக்கின்றன. இன்னும் ஆழமாகவம், விரிவாகம் இவற்றை அணுகமுடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 

கவிஞர் த. பழமலய்

பாடைப்பாளியும் பின்புலமும்

      ‘நான் அனுபவங்கள் சிலவற்றையும் ஆள்கள் சிலரையும் வரைந்துள்ளேன். அனுபவங்களைக் கவிதைகளாக உணர்கிற நான், ஆள்களையும் கவிதைகளாகவே உணர்கிறேன். எனக்கு ஆள்களும் அனுபவங்களாகவே உள்ளார்கள்’(ச.க.,ப.10) என்று தன் எழுத்துக்கு முகவுரை வழங்குகிறார் கவிஞர் பழமலய். தமிழகத்தின் இடை நிலமாக விளங்கும் விழுப்புரமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் இவருடைய கவிதையின் களமாக அமைகின்றன. ஆய்வாளர், பேராசிரியர், பொதுவுடைமைச் சிந்தனையாளர், சமூகச் செயற்பாட்டாளர் என்ற பன்முகத் தன்மை இவருக்குண்டு.  

     இவருடைய கவிதை குறித்து கூறும்போது, ‘உழைக்கும் விவசாய மக்களின் வறுமையையும் மீறி, உயர்ந்து நிற்கும் அவர்களது ஆளுமையின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறது. மேலும், சாதாரண மக்களின் பேச்சு நடையையும், உரைநடையையும் கவிதைக்கான கருவிகளாக்குகிறது’ என்கிறார் திறனாய்வாளர் இந்திரன் (ச.க., அணிந்துரை). இவருடைய கவிதைகள், கிராமத்து மண்ணாலும் மக்களாலும் உயிர்களாலும் பிணைக்கப்பட்டவை. அவர்களின் வாழ்வியலை, விழுமியங்களை அவர்களுக்கும் உலகிற்கும் அரிதாரம் பூசாமல் காட்டுபவை. 

உயிரிரக்கம்

     இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்குமானது. இதனை மனிதன் உணர்ந்தால் மட்டுமே மனிதநேயமும் உயிரிரக்கமும் மலரும். உயிரினச் சமநிலை ஏற்படும். இந்த மண் புல்லுக்கும் இடமானது என்பதை,

            எதையும் நான் ஒதுக்க முடியாது / உரிய இடத்தை ஒதுக்க வேண்டும் /                                   அரைமனதுடன்தான் களையையும் எடுக்கிறேன் / புல்லுக்கும் / உரிமை இந்த மண்                     (கு.கொ.நே., ப.18)

என்கிறார் கவிஞர். அதேபோல,

கருங்கல் வாங்கியும் செங்கல் வாங்கியும் /கட்டி முடிக்காத வீட்டு வாயிலுக்கு - அருகால், சன்னல், அது, இதற்கு எல்லாம் / வேம்பை அறுத்துக்கொள்ளலாம் என்பார் / எனக்குப் பதறும்           (ச.க., ப.17)

என்பதில் மரத்திற்கும் வருந்தும் தமிழ் மனத்தை வெளிப்படுத்துகிறார். 

     தனக்குச் சோறு இருக்கிறதோ இல்லையோ தாம் வளர்க்கும் விலங்குகளுக்கு உணவளிக்கத் தவறாது கிராமத்து உழுகுடி. தன்னைச் சுற்றி இருக்கும் மரம், செடி, கொடி, விலங்குகளையும் உறவுகளாகவே பார்ப்பது அதன் உயர் பண்பு. முருங்கை மரத்தையும் பிள்ளையாகப் பார்க்கும் மண்ணின் மனம் குறித்து,

            ஒரு புயலில் சாய்ந்தது முருங்கை /   வெறவுக்கு ஆவும் என்றேன்/ புள்ளயாட்டம்,           அடுப்பிலியா வைக்கிறது/ மலடிதான் அத்தை / என்றாலும், முருங்கையும் ஒரு பிள்ளை அவளுக்கு  (ச.க., ப.45)

என்றும்,

            கிளிசோசியம் பார்ப்பார்கள்/ எட்டிப்பார்க்கும் அம்மா/

          கிளிக்குப் பாவம் பார்ப்பாள். (வே.ஒ.சு., ப.30)

என்றும் பதிவு செய்கிறார். 

       தமிழ்ச் சமூகம் மரங்களைத் தெய்வங்களாகவும் உறவுகளாகவும் போற்றிய சமூகம். நற்றிணைத் தலைவி மரத்தைச் சகோதரி என்கிறாள். பழமலய் புளிய மரத்தை கன்னி என்றும் தாய் என்றும் பதிவுசெய்கிறார். பழங்களும் பரந்து விரிந்த நிழலும் கொடுத்து, பல்லாண்டுகளால் மக்களோடு மக்களாய் வீற்றிருந்த புளிய மரத்தை யோரோ வெட்டிவிட, 

            நான் பார்க்கச் சுமைதாங்கி இருந்தது / இடை விட்டுப் புளியமரங்கள் இருந்தன

          ஓடிப் பொறுக்கப் பழங்கள் கிடக்கும் /….. /கோலம் போட்டதாய்ப் பரந்திரந்த

          நிழலெல்லாம் எங்கே /நிழலின் திருடர்கள் யார்?  (ச.கதை, ப.55)

என்றும்,

            திருட்டு மரம் வெட்னவம் /  அதிலியே எரிஞ்சான் என்றார்கள் /

          நான் நம்ப   முடியாது / நிழல்தான் கொடுத்திருக்கும் /    

          கன்னியாகத் தோற்றம் காட்டித்/ தாயாக நின்ற மரம். (ச.க., ப.62) 

என்றும் பதிவுசெய்கிறார். மரம் கிராமத்து மண்ணின் மக்களால் உயிருள்ள உறவாகப் போற்றப்படுவதும், மரத்தைத் திருட்டுத்தனமாக வெட்டி விற்றால் அந்த விறகாலேயே வெந்துபோவார்கள் என்ற நம்பிக்கையும் இதில் பதிவுசெய்யப்படுகிறது. சில நம்பிக்கைகள் மக்களை அச்சுறுத்தி, நன்மை செய்ய வைப்பவை என்பதையும் உணர்தல் வேண்டும். 

            தனது வாழ்வில் இன்ப துன்பங்களை அஃறிணை உயிர்களிடத்துச் சொல்லிப் புலம்பும் மக்களின் இயல்பை கிராமங்களில் இன்றும் காணலாம். இது, ஆற்றாமையின் வெளிப்பாடு மட்டுமன்று, எளியோரின் மனத்துன்பத்தைப் போக்கும் உளவியல் மருத்துவமாகவும் செயல்படுகிறது.  தான் வளர்க்கும் உயிரினங்கள் தன் குறைகளைக் கேட்கும், தீர்க்கும் என அவர்கள் நம்புகிறார்கள். அதேபோல, தாம் வளர்க்கும் மரங்களுக்காகவும் விலங்குகளுக்காகவும் கண்ணீரும் வடிக்கிறார்கள்.

தோட்டத்துத் தனிமையில் / உன் குறைகளைக் கேட்கும் / தங்க அரளி தங்கத்தை உதிர்க்கும் / முற்றத்துப் பவழமல்லி / நீ மறந்தும் நினைத்து அழும்

காட்டிலும் கிடந்து தான் சீரழிவதை / வேம்பிடம் அழுது / மூக்கைச் சிந்துவாள்        (ச.கதை, ப,18)

என்பன போன்ற பதிவுகள் கிராமத்து மக்களுக்கும் அஃறிணை உயிர்களுக்குமான பிணைப்பைக் காட்டுகின்றன. 

பிறருக்காக அழும் மனம்

      தனக்கென வாழாமல் பிறருக்கென வாழும் சான்றோர்களாலேயே இந்த உலகம் நிலைத்திருக்கிறது என்கிறான் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. பிறருக்காக அழும் மனம் வாய்க்கப்பெற்ற மனிதநேயர்களைக் கிராமங்கள் இன்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளன.     

            முற்றத்துப் பவழமல்லி / நீ மறந்தும் நினைத்து அழும் /அன்னை உன் தாலாட்டும் /          அழுகையில் முடியும். /ஊரில் இழவு என்றால் ஒப்பாரி வைக்க   ஓடுவாய்.  (ச.க., ப.15)

என்பதில், தன் துன்பம் தன்னோடு இருந்தாலும், ஊரில் இழவு என்றால் ஓடோடி செல்லும் மண்ணின் மனம் காட்டப்படுகிறது. மனிதம் உயிர்த்திருப்பது இவர்களைப் போன்றோரால்தான். 

உறவுகளின் மேன்மை

          உறவுகளின் வலிமையே உயிர்களின் வலிமை. உறவுகளின் தேவைகள் இழப்புகளிலும்  துன்பங்களிலுமே தெரியவருகின்றன. தமிழ்ச் சமூகம் உறவுகளின் மேன்மையை விழுமியமாக முன்னிறுத்துகிறது. அதனாலேயே உறவுப் பெயர்கள் தமிழில் அதிகமாக உள்ளன. பழமலய் அவர்கள் தன்னுடைய திட்டக்குடி தாத்தா பற்றிக் பதிவுசெய்யும்போது, 

            எலும்பைப் பிள்ளைகளுக்குத் தருவார் / அக்காள் மகனுக்குக் கறியைக்         கொடுப்பார் / தொண்டைக்கு இந்தண்டை இருந்துவிட்டால் /      அப்பாவுக்குத்தானாம்   (ச.க., ப.26)

என்கிறார். தன்பிள்ளையைவிட தன் சகோதரியின் பிள்ளை மீது அன்பைக் காட்டி வளர்க்கும் மாமன் உறவு இதில் பதிவுசெய்யப்படுகிறது கிராமத்து மண் சார்ந்த வாழ்வியலும் உறவுகளின் பிணைப்புமே இதனைச் சாத்தியமாக்குகிறது. 

            உறவுகளைப் பிரிந்திருப்போர்க்கே அதன் அருமை புரியும். குறிப்பாக, தன்னுடைய இன்பதுன்பங்களை மறந்து குடும்பத்திற்காகவும், உறவுகளுக்காகவும் உழைக்க வேற்று ஊர் செல்வோரின் மனம் ஊரையும் உறவுகளையுமே சுற்றிச் சுற்றி வரும். எத்தனையோ இன்னல்கள் இருந்தாலும் உறவுகளைக் கண்டதும் மலரும் முகத்தினை,

            இருள் கவிந்த முகங்கள் / விளக்காலும் விலக்கமுடியாத இருள் /         வேண்டியவர்களைக் கண்டதும் / விலகி ஓடிவிடுவது எப்படி?(ச.க., ப.82)

என்கிறார் கவிஞர். 

ஈதல் அறம் – விருந்தோம்பல்

            அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் தலைவியைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. விருந்தோம்பல் தமிழர் விழுமியங்களில் தலையாய இடத்தினைப் பெற்றது. ஆனால், இன்றைய வாழ்வியல் அதற்கு இடமளிக்கவில்லை. நகரங்களில் மறைந்துபோன பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகவே விருந்தோம்பல் இன்று மாறிவிட்டது. கிராமத்திலும்கூட மிகவும் அரிதாக இன்று காணப்படுகிறது. 

            வழிபோற யாராச்சும் / வந்து நம்ம திண்ணயிலே /வழிபாத்து நீராரம் /         வேணுமுன்னு  கேக்கையிலே / கூழுருண்ட நாபோட்டுக் / கொடுப்பேனே இன்னக்கி / வாழுறேனே கூழுக்கும் / வக்கத்துப் பேனேன. (ச.க., ப.30) 

என்ற பதிவு, நீராகாரம் கேட்போரின் பசிபோக்க கூழினைக் கரைத்துக்கொடுக்கும் கிராமத்து விருந்தோம்பல் பண்பைச் சுட்டுவதோடு, உயர்பண்பிற்குரிய அம்மக்கள் இன்று வாழ்விழந்து நிற்கும் அவலத்தையும் படம்பிடிக்கிறது. 

இயற்கையோடு இயைந்த வாழ்வு வேண்டும்

          ஒவ்வொரு திணைக்கும் கருப்பொருள்களை வகுத்து, இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவன் தமிழன். அவன் வகுத்தளித்த வனங்களும், நிலங்களும், நீர் நிலைகளும் இன்று தொகுப்பு வீடுகளாகவும், தொழிற்சாலைகளுமாக மாறிப்போயின. முரண்களரி அமைத்து தற்காப்புக் கலை வளர்த்த தமிழன் இன்று முடங்குவதற்கும் இடமின்றி தவிக்கிறான். இந்நிலையில் கவிஞர், 

            கும்மி அடிக்கவும், சடுகுடு ஆடவும்/ எங்கள் ஊர் இலுப்பைத் தோப்புப் போல

          ஊர் ஊருக்கும் வேண்டும். / மனம் சலித்து நடந்து போனால் /இருந்து திரும்ப         நிழல்           இருக்கணும் / ஊருக்கு அருகில். (ச.க., ப.61)

என்று, ஒவ்வொரு ஊருக்கும் தோப்பு வேண்டும் என்றும், மரங்கள் வேண்டும் என்றும், தமிழர்களின் பண்பாட்டுப் பண்டிகைகளையும் அதுசார்ந்து விளையாட்டுகளையும் முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். மேலும், இருந்த வளங்கள் இல்லாது போனதுபற்றிக் கூறுமிடத்து, 

            ஊரில் / எட்டித் தொடும்படி நிறைந்திருந்த கிணறுகள் / பார்த்திருக்கிறேன் /         நீருக்கு மேல் வந்து / நுரைவிடும் வரால்கள் / மிதந்து அசையும் தவளைகள்.

          வீட்டு முருங்கையிலோ வயல் வன்னியிலோ / வந்து அமரும் நீலநிற மீன்கொத்தி/ காத்திருக்கத் தேவை இல்லாத காலமாய் இருந்தது அது (கு.கொ.நே., ப.163)

என்று பதிவுசெய்கிறார். 

உழைப்பவன் வலி – கருவிகளுக்கும் உண்டு

            கழுவாமலோ சுரண்டாமலோ / வெட்டியாப் போட்டுவைத்தால் /        ஒட்டியிருக்கும் மண் சுமையால் / உடல் வலிக்கும் மண்வெட்டிக்கு / உடையவனுக்கும் வலிக்கும் இரவில்.... /   ’வலி உணரும் மனிதர்கள்’ /      வலிகள்       பற்றி...  - ச.க., ப.85

என்ற கவிதை உழைப்பாளிகளின் நுட்பமான வாழ்வியலைப் பதிவுசெய்கிறது.. தன் உழைப்பால் வாழாத ஆடவனை ’கூரில் ஆண்மையாளன்’ என்கிறது சங்கப் பனுவல். இங்குக் காட்டும் மண்சார்ந்த மக்களோ உழைக்காமல் இருந்தால் கருவிக்கும் உடையவனுக்கும் உடல் வலிக்கம் என்று கற்பிக்கின்றனர். 

பழமலயின் கவிமொழி வழி

            ‘இந்தக் கவிதைகள் என்னை எனக்கும், என் மக்களை அவர்களுக்கும் உணர்த்துபவை. நம் இழிவுகளுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்கவும் போராடவும் உந்துபவை. இந்தச் சமூக அவசியங்கள்தாம் இவற்றை வெளியிடும் துணிவை எனக்குத் தருபவை’(ச.க., ப.12) என்பது தன் படைப்புகள் குறித்தப் பழமலயின் வாக்குமூலமாக இருக்கிறது. மக்களை, அவர்களின் வாழ்பனுபவங்களை, நம்பிக்கைகளை, விழுமியங்களை, மக்களின் மொழியிலேயே கவிதைகளாக முதன்முதலில் பதிவுசெய்த சிறப்பு கவிஞர் பழமலய்க்கு உண்டு. எண்பதுகளில் வெளிவந்த இவருடைய ‘சனங்களின் கதை’ கவிதைத் தொகுப்பு குறித்துக் குறிப்பிடும்பொழுது ‘தமிழகத்தில் ஒரு கல் மழை பொழிந்ததைப் போல சனங்களின் கதை கவிதைத் தொகுப்பு வெளிவந்து, அதுவரை கவிதை குறித்து இருந்த அத்துனை கற்பிதங்களையும் உடைத்தெரிந்தது’ என்கிறார் எழுத்தாளர் கி.ரா. அவர்கள்.           

   உலகின் தொன்மையான இனக்குழுவான தமிழினம் தனக்கான தனித்த அடையாளங்களுள் சிலவற்றையேனும் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்றால் அது மாண்சார்ந்த கிராமத்து வாழ்வியலில்தான் என்பதை இவரின் கவிமொழிகொண்டு அறியமுடிகிறது. தமிழகத்து மண்ணின் வாழ்வியலை அச்சுஅசலாகப் பதிவு செய்திருக்கும் இவருடைய படைப்புகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த வாழ்வியலை அறிந்துகொள்ளும் ‘மாதிரி’ வடிவங்களாகத் திகழ்கின்றன. மண்சார்ந்த, உழுகுடி சார்ந்த வாழ்வியலை, விழுமியங்களை அந்தந்த வட்டார மொழிகளில் பதிவுசெய்யும் படைப்பாளர்கள் பலர் உருவானதற்கும் பல படைப்புகள் வெளிவந்துகொண்டிருப்பதற்கும் இவரின் படைப்புகளே முதற்புள்ளி.   

பயன் நூல்கள்

1.பழமலய், சனங்களின் கதை (1988) 

2.பழமலய், குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்(1991)

 3.பழமலய், இவர்கள் வாழ்ந்தது(1994) 

4.பழமலய், இன்றும் என்றும்(1998) 

5. பழமலய், புறநகர் வீடு(2000) 

6. பழமலய், இரவுகள் அழகு(2001)

7.பழமலய், வேறு ஒரு சூரியன்

 8.பழமலய், பழமலய் கவிதைகள்(2009)         

***** 

Dr. A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

தமிழியல்

www.thamizhiyal.com