முனைவர் ஆ.மணவழகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
ஆகஸ்டு -2, 2011.
பழந்தமிழர் எழுதிய பாடல்களில் காலத்தால் மறைந்ததும் மறைக்கப்பட்டதும் போக, எஞ்சிய, கிடைத்த பாடல்கள் தேவையுணர்ந்த சிலரால் தேடித் தொகுக்கப்பட்டன. அவ்வாறு தொகுக்கப்பட்ட பாடல்களின் தன்மையும் பண்பும் சிறப்பும் கருதி தொகுப்பு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே பெயர்கள் வைக்கப்பட்டன. இவை பொதுவாக, ‘பாட்டும் தொகையும்’ என்று வழங்கப்படுகின்றன. பாட்டு என்பது ‘பத்துப்பாட்டு’ நூல்களையும், தொகை என்பது ‘எட்டுத்தொகை’ நூல்களையும் குறிக்கும். அதாவது, பல பாடல்களின் தொகுப்பாக அமைந்திருப்பது ‘தொகை’; தனியொரு பாடலே ஒரு நூலாக அமைந்திருப்பது ‘பாட்டு’. எட்டுத்தொகை நூல்கள் ஒவ்வொன்றிற்கும் பலர் பாடலாசிரியர்களாக இருப்பர்; பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவரே ஆசிரியர். இச்சிறு அறிமுகத்தோடு, வைப்பு முறையின் அடிப்படையில் இங்கு எட்டுத்தொகை நூல்கள் குறித்து முதலில் காண்போம்.
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு
என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்களைக் குறித்த பட்டியலை,
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை
என்ற வெண்பா தருகிறது. இப்பாடலில் சில நூல்களுக்கு அதன் சிறப்பை உணர்த்தும் வகையில் நல்ல, ஒத்த, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும் போன்ற அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வெட்டு நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றிய நூல்கள். புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறப்பொருள் பற்றிய நூல்கள். பரிபாடல் அகம் புறம் இரண்டும் கலந்த நூல். அதாவது, பரிபாடலில் கிடைக்கப்பெற்ற 22 பாடல்களில் 8 பாடல்கள் அகம் சார்ந்தவை மற்றவை புறம் சார்ந்தவை.
இத்தொகைநூல்களில் இடம்பெற்றுள்ள 2352 பாடல்களைச் சுமார் 700 புலவர்கள் பாடியுள்ளனர். இப்புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்தவர்கள். பல்வேறு தொழில்களைச் செய்தவர்கள். இவர்களுள் 25 பேர் அரச புலவர்களாகவும் 30 பேர் பெண்பாற் புலவர்களாகவும் அடையாளம் காணப்படுகின்றனர். ஆயினும், சுமார் 102 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர்கள் தெரிவில்லை. பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு ஊர்களில், பல்வேறு தொழில்களில் இருந்தவர்களின் பாடல்கள் இவை என்பதால் அக்காலச் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுவனவாக இப்பாடல்கள் உள்ளன. இவைக் கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவை என்பர். சங்கத்தில் அரங்கேற்றப்பட்டதால் இவை ‘சங்க இலக்கியங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
இந்த எட்டு நூல்களுள் அகப்பொருள் பற்றிய ஐந்து நூல்களும் சிதைவில்லாமல் தொகுக்கப்பட்ட காலத்தில் இருந்ததைப் போலவே கிடைத்துள்ளன. ஆனால், புறப்பாடல்களில் சிலப் பாடல்கள் சிதைந்தும், அழிந்தும், பாடபேதங்கள் மிகுந்தும் (பதிப்புகளுக்கிடையேயான வேறுபாடு) காணப்படுகின்றன.
எட்டுத்தொகை நூல்கள் அக்கால மக்களின் அக-புற வாழ்க்கை முறைகள், சடங்குகள், விழாக்கள், பண்பு நலன்கள், அரசியல், அரசு, கல்வி, போர், பல்துறை அறிவு, தொழில்கள், தொழில்நுட்பங்கள், உலகலாவிய சிந்தனைகள் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளன. எனவே, பழந்தமிழ்ச் சமூகத்தை இவ்வுலகிற்கு முழுமையாக அடையாளப்படுத்துபவையாக இவைத் திகழ்கின்றன. மேலும், தமிழைச் ‘செம்மொழி’ என்னும் அரியணைக்கு இட்டுச்சென்ற பெருமை சங்க இலக்கியங்களையே சாரும்.
*****