புதன், 7 மார்ச், 2018

வயநாரம் - வாதநாரம் - வாதநாராயணம் மரம் - ஆ.மணவழகன்


வயநாரம் - வாதநாரம் - வாதநாராயணன் மரம்

வீட்டுக்குப் பின்புறம் வரிசைகட்டி நிற்கும்!
ஊஞ்சல் கட்டி ஆடவும் உச்சியேறி ஒலி எழுப்பவும்
கிளைகள் பரப்பி காத்திருக்கும்!
ஏறவும் இறங்கவும் தொங்கவும் குதிக்கவுமாக
எங்களுக்கு அது ஒரு விளையாட்டுப் பூங்கா!
கொடாப்பில் குடியிருக்கும் குட்டிகளுக்கும்
பட்டியில் கட்டியிருக்கும் ஆடுகளுக்கும்
இதன் தழையே பிடித்தமான தீனி!
சூட்டுக் கடுப்பிற்கும் நகச் சுத்திக்கும்
பெயர்சொல்லா இதன் இலையே நன் மருத்து!
நாற்றங்காலுக்கும் நடவு வயலுக்கும்
நல்ல தழையுரம் வேம்பும் இதுவுமே!
ஒன்னா மண்ணா கிடந்து
ஒதுங்கிப்போன உறவுகளுள் இதுவும் ஒன்று!
வெங்கடேசன் அருளால் கொண்டுவந்து நட்டாயிற்று
உறவுகள் ஒதுக்கினாலும்
ஒதுங்க நிழல் கொடுக்கும் வாதநாரம் !

(மருந்திற்காகப் பல நாட்களாகச் சென்னை முழுவதும் தேடியும் கிடைக்காமல் போன வாதநார மரத்தை, கிராமத்தில் கண்டறிந்து அதன் கிளைகளோடு வந்த தலைமைச் செயலகச் சுற்றுலாத் துறை நண்பர் திரு. வெங்கடேசன் அவர்கள் என்னிடத்திலும் ஒன்றைக் கொடுத்தார். அது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடப்பட்டது(7.2.18). நன்றி - விநாயகம், விசயன்.) - முனைவர் ஆ.மணவழகன் (Dr.A.Manavazhahan)