புதன், 30 ஜூன், 2010

செம்மொழி மாநாடு : யானைப் பசிக்குச் சோளப்பொறி

நடந்தே முடிந்துவிட்டது... வரும் ஆனால் வராது என்ற திரைப்பட நகைச்சுவையைப் போல... நடக்கும் ஆனால் நடக்காது என்று பலரின் எதிர்ப்பிற்கும் ஆளான உலகத் தமிழ் மாநாடு ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ என்ற பெயரோடு. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஐந்து நாட்கள் கோவை மாநகரைக் கலகலப்பாக்கிய மாநாடு கலைஞரின் உள்ளம் குளிர இனிதே முடிந்திருக்கிறது. செம்மொழி மாநாட்டோடு இணையத் தமிழ் மாநாடும் இணைந்தது மாநாட்டிற்குக் கூடுதல் பலம். ஜூன் 23இல் மாநாடு தொடக்க விழாவும், ஜூன் 24இல் ஆய்வரங்கத் தொடக்க விழாவும் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மொழி மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட இணையத் தமிழ் மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பு என தொடர்ந்து ஆய்வரங்கங்கள் ஒருபுறமும், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், விவாதங்கள், கருத்துரைகள், கவியரங்கங்கள் என மறுபுறமும் தமிழுக்கு வலு சேர்த்தன; உலகத் தமிழர்களை ஊன்றிக் கவனிக்க வைத்தன.

மாநாட்டின் முத்தாய்ப்பாய் அமைந்தது கலைஞர் தலைமையில் நிகழ்ந்த ‘எங்கும் தமிழ்’ என்ற தலைப்பிலான சிறப்பு விவாதம். இதில், தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்குகொண்டு தமிழின் இன்றைய நிலை குறித்தும் தமிழை வளர்க்க செய்யவேண்டுவன குறித்தும் கருத்துரைகளை வழங்கினர். நிகழ்வின் முடிவாய் பேசிய கலைஞர் அவர்கள், மாநாட்டு நிறைவு விழாவில் தமிழின் வளர்ச்சிக்கு ‘பட்ஜெட்’ போல பல தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறேன், நிறைய பேச இருக்கிறேன்’ என்று கூறியது அனைவரின் எதிர்ப்பார்பையும், கவனத்தையும் நிறைவுவிழாவை நோக்கித் திருப்பியது.

ஜூன் 23இல் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட செம்மொழி மாநாடு, ஜூன் 27 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களின் தலைமையிலும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் முன்னிலையிலும் நிறைவு விழாவினைக் கண்டது.

பல எதிர்ப்புகளுக்கு இடையில் நடைபெற்ற மாநாடு என்பதாலும் பட்ஜெட் போல பல தீர்மானங்களை அறிவிக்க இருக்கிறேன் என்ற முதல்வரின் உறுதிமொழியாலும் மாநாட்டுத் தீர்மானத்தை எதிர்நோக்கி உலகத்தமிழர்களின் உள்ளங்கள் காத்திருந்தன. முதல்வரும் தாம் கூறியதுபோலவே நிறைவுவிழாவில் தீர்மானங்கள் சிலவற்றை மத்திய அமைச்சர்களின் முன்னிலையில் வாசித்தார்.

1. ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் அமைக்கப்படும்

2. இலங்கை தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண்பதற்கு ஏற்ப முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்திட வேண்டும்

3. தமிழ் மொழியை மத்திய ஆட்சிமொழியாக்க வேண்டும்

4. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாடு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

5. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு வழங்கப்படும் மத்திய அரசின் நிதி உதவியைப் போன்று தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் வழங்கப்படவேண்டும்.

6. இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டும்.

7. கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்திடல் வேண்டும்.

8. தமிழகத்தில் ஆட்சிமொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும். அதற்கு அலுவலர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

9. தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்றப்படும்.

10. சிறந்த தமிழ் மென்பொருள் ஒன்றுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படும்.

11. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வி ஆண்டு முதல் இடம்பெற ஆவண செய்யப்படும்

12. ‘தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம்’ மதுரையில் தொடங்கப்படும். (இச்சங்கம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தொடர்ந்து நடத்துவதோடு, பல தமிழ்ப்பணிகளையும் செய்யும்)

13. தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாக தமிழக அரசின் சார்பில் நூறு கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்.

போன்ற தமிழ் மொழி, தமிழ் மரபு தொடர்பான அறிவிப்புகளும் மாநாட்டின் நினைவாக கோவைக்கான சிறப்பு நிதிநிலை அறிக்கையும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

தமிழ்ப் பாதுகாப்பு, வளர்ச்சி தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், இவை ‘யானை பசிக்குச் சோளப்பொறி’ என்ற அளவிலேயே அமைந்திருந்ததை உணர முடிகிறது. அவ்வகையில் மாநாட்டுத் தீர்மானங்கள் சில ஏமாற்றங்களை நம்முன் வைக்கின்றன.

1. தமிழ் மாநாட்டுச் செலவிற்காக ஒதுக்கிய தொகை 300 கோடிக்கு மேல். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படவிருக்கிற தொகையோ வெறும் 100 கோடி மட்டுந்தானா?

2. இதற்கு முன்பு நடைபெற்ற மாநாடுகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றவற்றைத் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தந்தன. இம்மாநாடு அப்படி ஒன்றை உருவாக்க வில்லையே! மேலும், மதுரையில் அமைய இருக்கும் தமிழ்ச் சங்கம் கூட, உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரிலிருந்து விலகி ‘செம்மொழி மாநாடு’ என்ற பெயரோடு நடைபெற்ற இம்மாநாடு தொடர்ந்து நடைபெற வேண்டும், அதுவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தில் உள்ள மேலைநாட்டு உறுப்பினர்களின் தயவு இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதைத்தானே முதன்மை நோக்காக கொண்டிருக்கிறது!

3. முந்தைய உலகத் தமிழ் மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இடிந்துவிழும் நிலையிலும், ஆராய்ச்சியாளர்கள் இன்மையால் இழுத்து மூடும் நிலையிலும் இருப்பதை பல ஊடகங்களும் சுட்டிக்காட்டியும், நிறுவனத்தை மேம்படுத்த யாதொரு சிறப்புத் திட்டமும் மாநாட்டில் முன்மொழியப்படவில்லையே!

4. தமிழ் வழியில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற தீர்மானம் வரவேற்கத்தக்க முக்கியான ஒன்று. ஆனால், தமிழையே பாடமாக படித்தோர்க்கு?

5. மாநாட்டில், தமிழை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது அச்சு ஊடகமா? சின்னத் திரையா? வெள்ளித்திரையா? என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. ஆனால், அதன் தொடர்ச்சியாக இந்த மூன்று ஊடகங்களிலும் நடைபெறும் தமிழ்க் கொலையை, தமிழ்ப் பண்பாட்டுக் கொலைகள் போன்றவற்றைத் தடுப்பதற்கும், தமிழை வளர்க்கும், தமிழ்ப் மரபிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களுக்கு ஊக்கப் படுத்துவதற்கும் தீர்மானம் ஏதும் இல்லையே!

6. செம்மொழி உயராய்வு நிறுவனத்திற்கு ஜார்ஜ் கோட்டையை வழங்கியிருப்பது பாராட்டிற்குரியது. அதே வேளையில் அந்நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளர்கள் என்று எவரும் இல்லாதிருப்பது வருத்தத்திற்குரியது. அதைப்பற்றிய அறிவிப்பும் தீர்மானமாக இடம்பெற்றிருக்கலாமே!

7. முனைவர் அனந்த கிருஷ்ணன் இணையத் தமிழை வளர்க்க 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தாரே? அதைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லையே.

8. பன்னாட்டுத் தமிழர்கள் குறிப்பாக மொரீசியல், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து தமிழ் அந்நியப்பட்டுக்கொண்டே போகிறதே! அவர்களிடம் தமிழார்வத்தை ஊட்ட, அவர்களின் வாரிசுகளுக்குத் தமிழ் கற்பிக்க, தமிழ் உள்ளடக்கங்கள் அவர்களை எளிதில் எட்டச் செய்ய இம்மாநாடு என்ன வழி சொல்கிறது?

இன்னும் இன்னும் எத்தனையோ விடைதெரியா கேள்விகள்.. ஐயங்கள்.. விடை மட்டும் ஈழத் தமிழரின் விடுதலையைப் போல.... எது எப்படியோ, தமிழ் வளர்ச்சிக்கென்று ஒதுக்கவிருக்கும் நூறு கோடி ரூபாயையாவது சிறந்த திட்டமிடலோடு, தமிழை வளர்க்க, தமிழ் மரபுகளைக் காக்க, பண்பாட்டுக் கலைப் பெட்டகங்களைப் பேண முறையாக செலவிட்டால் குறைந்தபட்ச பலனையாவது எதிர்பார்க்கலாம்.



- அய்யனார் சாமி

திங்கள், 22 மார்ச், 2010

குரலற்றவனின் குரல் - ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலம்


ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலம்

- முனைவர் ஆ. மணவழகன்

கதைச்சொல்லி பரம்பரை நம்முடையது. தாத்தா-பாட்டிகளின் வாயிலாக, நாம் நம் முன்னோர்களின் வரலாறுகளைக் கதைகளாக அறிந்தோம். குறைந்தபட்சம் அவரவர் பரம்பரை பெருமைகளையாவது கதைகளாக நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். அடுத்த தலைமுறைக்கு இது வாய்க்குமோ என்னவோ! நமக்கு ஓரளவிற்கு வாய்த்திருந்தது. ஆனால், ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தாத்தாவோ பாட்டியோ தன் பேரப்பிள்ளைகளுக்கு, தான் சாதி ரீதியாக அனுபவித்த கொடுமைகளைக் கதைகளாகவேனும் சொல்லியிருப்பார்களா? இது நkfமக்கு மூத்த தலைமுறை வரையிலாக தொக்கி நின்ற கேள்வி. துன்பத்தைக் கதைகளாகக்கூட வெளிப்படுத்த முடியாத சூழலைத்தான் அற்றைச்சமூகம் அவர்களுக்கு வழங்கியிருந்தது. ஆயினும், தற்போது பெருகி வருகிற தலித்திய படைப்புகளும், சிந்தனைகளும் அன்றைய தாத்தாக்களின் நிலை இன்றைய பேரர்களுக்கு இல்லை என்பதை ஓரளவிற்கு உணர்த்துகின்றன.

கேள்வி அனுபவத்திலிருந்து எழுதுகிறேன் என்றில்லாமல், பட்ட பாடத்திலிருந்து படைப்புகள் உருவாகின்றன என்ற தலித்திய எழுத்தாளர்களின் இன்றைக்குமான வாக்குமூலங்கள் நாகரிக சமூகத்தின்(!) முகத்தில் உமிழ்வதாகத்தான் இருக்கிறது. பட்டனுபவம் நல்லவற்றிற்கு இருக்கலாம், சமூக அவலங்களுக்கு இருக்கக்கூடாது. ஆனாலும், ஒடுக்கப்பட்டவர்கள் வாய்மொழியாகக்கூட பேசப்பட முடியாத தங்கள் முன்னோர்களின் அவலங்களை, நிகழ்கால நடப்புகளை, பதிவுகளாக்கி படைப்புகளாகத் தரும் தற்காலச் சூழல் தலித்திய மdudறுமலர்ச்சியாகவே தோன்றுகிறது.

தலித்தியம் சார்ந்த சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளன. தலித்திய ஆய்வுகளும் தம் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளன. என்.டி.ராஜ்குமார், அழகிய பெரியவன், விழி.ப. இதயவேந்தன், ரவிக்குமார், சிவகாமி போன்ற பலர் தங்கள் படைப்புகளில் தலித்தியத்தை ஆழமாகவே பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், தலித்திய படைப்புகள் ஏதேனும் ஒரு பொருண்மையில் தொகுப்பாக வெளிவந்ததாக அறியப்படவில்லை. குறிப்பாக சிறுகதைகள். இச்சூழலில், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சிறந்த தலித்திய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார் யாழினி முனுசாமி. ‘குரலற்றவனின் குரல்’ தேவையான, வரவேற்கத்தக்க சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 31 சிறுகதைகள் 31 எழுத்தாளர்களால் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்டு, பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை. கவிதைகளையோ சிறுகதைகளையோ தொகுப்பவர்கள் தங்களுகென்று ஓர் அரசியலைக் கொண்டிருப்பர். ஆனால், ‘சிறந்த தலித்திய சிறுகதைகள்’ என்ற அரசியலை மட்டுமே கையாண்டு இத்தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் தொகுப்பாசிரியர். படைப்பாளர்களுள் பலரை முன்பின் அறியாவிட்டாலும், கதைகளின் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொகுக்கப்பட்டிருப்பது தொகுப்பின் பலம். தமிழக எழுத்தாளர்கள் மட்டுமன்றி, இலங்கை, டென்மார்க், மலேசியா, ஜெர்மனி, மும்பை என நாட்டின், உலகின் பல பகுதிகளிலிருந்தும் இயங்கும் எழுத்தாளர்களின் தலித்தியம் சார்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தொகுப்பின் பரந்த நோக்கினைக் காட்டுகிறது. கதைகளைப் படிக்கும்போது, உலகெங்கிலும் எது இருக்கிறதோ இல்லையோ சாதியக் கொடுமை என்ற அவலம் இருப்பதை வேதனையோடு உணர முடிகிறது.

மேல்நிலையாக்கத்தால் தன் அடையாளத்தை இழந்து உருமாறிப்போன சிறுதெய்வங்கள் பற்றிய பதிவை ‘அடையாளம்’ சிறுகதை காட்டுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மேல்நிலையாக்கம் என்பது தாழ்த்தப் பட்டவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினமும் சந்தித்த/ சந்திக்கிற அடையாள அழிப்பு என்பதை உணர வேண்டும். இதேபோல, தேனீர் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கென இருந்த தனிக் குவளை முறை, அதை எதிர்த்து நடந்த போராட்டம், பாரதி விரும்பிய சாதி ரீதியிலான சுதந்திரம், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் படிப்பைத் தொலைக்கும் பழங்குடியின மாணவர்கள், பல இன்னல்களுக்கு இடையில் பள்ளியில் சேர்ந்து படித்தாலும், பள்ளிக்கூடத்தில் சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டு, படிப்பைப் பாதியில் இழக்கும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள், தேர்தல் கால சிக்கல்கள், உறவுநிலைச் சிக்கல்கள் போன்ற பல சமூக அவலங்களைத் தொகுப்பின் சிறுகதைகள் படம்பிடிக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையும் ஒரு குறும்படத்திற்கான கூறுகளோடு அமைந்துள்ளது சிறப்பு. ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலத்தை அவனுடைய குரலிலேயே அச்சுபிசகாமல் பதிவு செய்திருக்கும் ‘குரலற்றவனின் குரல்’ பல்கலைக்கழகங்களுக்குப் பாடமாக வைக்கும் எல்லா தகுதிகளோடும் வெளிவந்திருக்கிறது. சமூகச் சிந்தனையாளர்களும், தலித்திய ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் வாங்கிப் படிக்கவேண்டிய, குறிப்பு நூலாகப் பாதுகாக்க வேண்டிய நல்ல தொகுப்பு.

நூல் - குரலற்றவனின் குரல் (தலித் பண்பாட்டு அரசியல் சிறுகதைகள்)

தொகுப்பாசிரியர் - யாழினி முனுசாமி,
இருவாட்சி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை -11.
முதல் பதிப்பு நவம்பர் 2009, விலை ரூ. 150.

செவ்வாய், 2 செப்டம்பர், 2008

பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து



பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை - ஆய்வு நூல்
ஆசிரியர் - ஆ.மணவழகன்
காவ்யா பதிப்பகம், சென்னை. மு.ப.2005.

பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து...
கவிஞர் இரா. பச்சியப்பன்.
நந்தனம் அரசு கல்லூரி  

    அடர்ந்த வனம்போல் நம்முன் சங்க இலக்கியம் தன் பிரமாண்டத்தை வளர்த்தபடியே இருக்கிறது. சிலர் மரம் கடத்துகிறார்கள். சிலர் வேட்டை ஆடுகிறார்கள்.சிலர் சுற்றுலா போகிறார்கள்.இவ்வகைச் செயல்பாடுகளுக்கிடையே சிலர் மட்டுமே அதன் தன்மைகளை ‘ஜியோக்ரஃபிக்’ சேனல் போல படம் பிடிக்கிறார்கள்.  ஒரு சிறு சலனமும் ஏற்படுத்தாது, குறைந்தபட்சம் தொட்டால் சிணுங்கிகூட திடுக்கிட்டுத் தன்னைச் சுருக்கிக் கொள்ளாதவாறு, அங்கேயே கிடந்து கிடந்து காட்டின் அசலான வாழ்வைச் சொல்வதுபோல சிலர் மட்டுமே சங்க இலக்கியம் ஆய்கிறார்கள். அந்த வரிசையில் ‘பண்டைத்தமிழரின் தொலைநோக்குப் பார்வை’ என்கிற முனைவர் ஆ. மணவழகனின் நூல் காவ்யா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

    மொத்தம் பத்துக் கட்டுரைகள் அடங்கிய நூல். ஒன்பது கட்டுரைகள் பல்வேறு ஆய்வரங்கங்களில் வாசிக்கப்பட்டிருக்கின்றன. பத்தாவது கட்டுரையான ‘தமிழ்-செம்மொழிச் செயலாக்கத்திற்குச் செய்யவேண்டியன’ என்பது நூலாசிரியரின் வேண்டுகோலாக வைக்கப்பட்டிருக்கிறது.

    தொலைநோக்குப் பார்வை, மனித நேயம் என்ற இருபெரும் பிரிவுக்குள் தன்னை இருத்திக்கொண்டு சங்க இலக்கியங்களைத் தொகுப்பு வாரியாகப் பார்த்திருக்கிறார் நூலாசிரியர். உதாரணத்திற்கு ‘பதிற்றுப்பத்தில் பழந்தமிழர் தொலைநோக்கு’, ‘நற்றிணையில் மனித நேயச் சிந்தனை’ இப்படி. புறநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகிய எட்டுத்தொகை நூல்களும், தொல்காப்பிய இலக்கண நூலும், சிலப்பதிகாரக் காப்பியமும் ஆய்வுக் களமாகக் கொண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து வாசித்திருக்கும் இவர் அவை தொடர்பான ஆய்வு நூல்களையும் கவனத்துடன் படித்திருக்கிறார் என்பதை நூல்வழி அறிகிறோம்.

    மிகுந்த மேற்கோள்களும், அர்த்தமற்ற, நீர்த்துப்போன இணைப்பு வார்த்தைகளும், எந்தவித தருக்கமும் எழுப்பாமல், முடிவை வலிந்து திணிக்கும் மனோபாவமும் இல்லாமல், தான் சொல்ல வந்த கருத்திற்கு வெளியே செல்லாமல் மூல நூல்களையும், தேவையெனில் சில இடங்களில் மட்டுமே முன்னர் கண்ட ஆய்வு முடிவுகளையும் பலமெனக் கொண்டு, தனது தெளிந்த நடை என்கிற அடிப்படை ஆற்றல் துணைசெய்ய கட்டுரைகள் எழுதியிருபது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

     பழந்தமிழர் தொழில்நுட்பங்களை பல்வேறு நிலைகளில் எவ்விதம் பயன்படுத்தினர் என்பதற்கான தகவல்களைத் தேடித்தேடித் தந்திருக்கிறார். ‘இரும்புக்கடல்’ என வருணிக்கப்படும் பதிற்றுப்பத்திலும் இவர் தேடியிருப்பது இவரின் துணிச்சலையும் ஆர்வத்தினையும் புதியதைத் தேடிக் கண்டடையவேண்டும் என்கிற அவாவினையும் நமக்குச் சொல்கிறது. உறுதியான கட்டிடத்திற்கு ‘அரைமண்’ பயன்படுத்தியிருப்பது, அறுவை சிகிச்சையினை அறிந்திருந்திருப்பது, அணைகளின் தேவையறிந்து எழுப்பியிருக்கும் வேளாண்தொழில்நுட்பம் எனப் பதிற்றுப்பத்தினைக் கடைந்தெடுத்திருப்பது வியப்பளிக்கிறது.

    அதேபோல, தொல்காப்பியத்தினைக் களமாகக் கொண்டு ஆக்கியிருக்கும் கட்டுரையினைச் சொல்லலாம். இயற்கையைத் தமிழன் நேசித்ததன் அடையாளம், இலக்கியத்தில் இயற்கையைக் கருப்பொருளாகக் கொண்டிருந்ததாக இவர் கொள்ளும் முடிவுக்கு யாரும் மறுப்பு கூற இயலாது. கரு சிதையின் வாழ்வு சிதையும். கருப்பொருள் இன்றி உரிப்பொருள் ஏது? தமிழன் மானுடத்திற்கே பொதுவான கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் அதே வேளையில் தனக்கானத் தனித்துவத்தையும் எவ்வாறு கொண்டிருந் திருக்கிறான் என இந்தக் கட்டுரை வாசிக்கிறபோது நமக்கு வியப்பளிக்கிறது. 

    மிகச் சிறப்பான கட்டுரைகளில் மற்றொன்று ‘சிலம்பு காட்டும் சமூகத் தொலைநோக்கு’. கானல் வரியில் மாதவியின் பாடலை நாம் ‘குத்திக்காட்டுவதற்காக மாதவி பாடினாள் என்பதாக புரிந்து கொண்ட பாடல்’ என்று விளங்கியிருப்போம். ஆனால் இவரோ, காவிரியைப் பெண்ணாக உருவகித்து, அந்தப் பெண் மகிழ்ந்து துள்ளித்திரிந்து இன்பமுற்றிருக்கக் காரணம் மன்னனின் ஆட்சிச் சிறப்பே என்று அதன் எல்லையை விரிவுபடுத்தி விளக்குகிறார். அரிய வலிமையுடைய அரசர் செங்கோல் முறைப்படி ஆட்சி செய்தாலன்றி பெரும்புகழ் மகளிர்க்கு கற்பு நிலை சிறப்புறாது என்கிறார். இப்படி இலக்கியத்தை இவரின் தலைப்பிற்கேற்ப வாசித்திருப்பது பல இடங்களில் வெளிப்படுகிறது.

    கொடை, விருந்தோம்பல், பிறர் துன்பம் கண்டு இரங்கல், முதியோரைக் காத்தல் என்கிற மனிதருக்குள் நிகழும் நேயச் சிந்தனைகளை ஆய்ந்திருக்கும் அதே வேளையில் பிற உயிர்களிடத்துக்காட்டும் உயிர் நேயச் சிந்தனைகளையும் பல இடங்களில் சுட்டியிருக்கிறார்.

    ஓர் இனம் தன் வரலாற்றைச் சரியாக விளங்கிக் கொள்ளுமானால்; தனது அனைத்து வளத்தையும் புரிந்து கொள்ளுமானால்; தனது மரபை உணர்ந்துகொள்ளுமானால் விடுதலை உணர்வு கொள்ளும். விடுதலை உணர்வு வளர்ச்சியைச் சிந்திக்கும். தமிழினம் தன்னை உணர்ந்துகொள்ள இது ஒரு ஆதார நூலாகக் கொள்ளலாம். பத்தாவது கட்டுரை இந்த இனம் செல்லவேண்டிய பாதையைச் சுட்டிக்காட்டுகிறது. படைப்பாளன், ஆய்வாளன் தனக்கான பொறுப்பையும் உணர்கிற இடம் இது. தீர்வு சொல்வதுதான் படைப்பின் நோக்கம் என்றில்லை.அதற்கான கதவுகளை அது உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் நூலாசிரியர் ஆ. மணவழகன் தன் பொறுப்பை உணர்ந்த இடம் பத்தாவது கட்டுரையாகும். 

    அட்டைப்பட வடிவமைப்பும்,நூலாக்கமும் இத்தலைப்புக்கான கம்பீரத்திற்கு ஈடுகொடுக்கிறது. பேராசிரியர் வ. ஜெயதேவன் அழகான சுருக்கமான முன்னுரை வழங்கியிருக்கிறார். இளைய ஆய்வாளர் முனைவர் ஆ. மணவழகன் மிகுந்த வாசிப்பு அனுபவத்தோடும், தமிழின அரசியல் புரிதலோடும் ஆய்வுலகத்திற்கு வந்திருக்கிறார். ஆய்வாளர்களுக்கும், தமிழின மரபை உணர்ந்துகொள்ளத் துடிப்பவர்க்கும் மிகுதியான தரவுகளை உள்ளடக்கிய நூல் இது.

நூல் - பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை
ஆசிரியர் - ஆ. மணவழகன்
வெளியீடு - காவ்யா பதிப்பகம், சென்னை,
ஆண்டு - 2005