நடந்தே முடிந்துவிட்டது... வரும் ஆனால் வராது என்ற திரைப்பட நகைச்சுவையைப் போல... நடக்கும் ஆனால் நடக்காது என்று பலரின் எதிர்ப்பிற்கும் ஆளான உலகத் தமிழ் மாநாடு ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ என்ற பெயரோடு. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஐந்து நாட்கள் கோவை மாநகரைக் கலகலப்பாக்கிய மாநாடு கலைஞரின் உள்ளம் குளிர இனிதே முடிந்திருக்கிறது. செம்மொழி மாநாட்டோடு இணையத் தமிழ் மாநாடும் இணைந்தது மாநாட்டிற்குக் கூடுதல் பலம். ஜூன் 23இல் மாநாடு தொடக்க விழாவும், ஜூன் 24இல் ஆய்வரங்கத் தொடக்க விழாவும் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மொழி மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட இணையத் தமிழ் மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பு என தொடர்ந்து ஆய்வரங்கங்கள் ஒருபுறமும், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், விவாதங்கள், கருத்துரைகள், கவியரங்கங்கள் என மறுபுறமும் தமிழுக்கு வலு சேர்த்தன; உலகத் தமிழர்களை ஊன்றிக் கவனிக்க வைத்தன.
மாநாட்டின் முத்தாய்ப்பாய் அமைந்தது கலைஞர் தலைமையில் நிகழ்ந்த ‘எங்கும் தமிழ்’ என்ற தலைப்பிலான சிறப்பு விவாதம். இதில், தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்குகொண்டு தமிழின் இன்றைய நிலை குறித்தும் தமிழை வளர்க்க செய்யவேண்டுவன குறித்தும் கருத்துரைகளை வழங்கினர். நிகழ்வின் முடிவாய் பேசிய கலைஞர் அவர்கள், மாநாட்டு நிறைவு விழாவில் தமிழின் வளர்ச்சிக்கு ‘பட்ஜெட்’ போல பல தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறேன், நிறைய பேச இருக்கிறேன்’ என்று கூறியது அனைவரின் எதிர்ப்பார்பையும், கவனத்தையும் நிறைவுவிழாவை நோக்கித் திருப்பியது.
ஜூன் 23இல் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட செம்மொழி மாநாடு, ஜூன் 27 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களின் தலைமையிலும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் முன்னிலையிலும் நிறைவு விழாவினைக் கண்டது.
பல எதிர்ப்புகளுக்கு இடையில் நடைபெற்ற மாநாடு என்பதாலும் பட்ஜெட் போல பல தீர்மானங்களை அறிவிக்க இருக்கிறேன் என்ற முதல்வரின் உறுதிமொழியாலும் மாநாட்டுத் தீர்மானத்தை எதிர்நோக்கி உலகத்தமிழர்களின் உள்ளங்கள் காத்திருந்தன. முதல்வரும் தாம் கூறியதுபோலவே நிறைவுவிழாவில் தீர்மானங்கள் சிலவற்றை மத்திய அமைச்சர்களின் முன்னிலையில் வாசித்தார்.
1. ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் அமைக்கப்படும்
2. இலங்கை தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண்பதற்கு ஏற்ப முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்திட வேண்டும்
3. தமிழ் மொழியை மத்திய ஆட்சிமொழியாக்க வேண்டும்
4. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாடு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
5. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு வழங்கப்படும் மத்திய அரசின் நிதி உதவியைப் போன்று தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் வழங்கப்படவேண்டும்.
6. இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டும்.
7. கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்திடல் வேண்டும்.
8. தமிழகத்தில் ஆட்சிமொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும். அதற்கு அலுவலர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
9. தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்றப்படும்.
10. சிறந்த தமிழ் மென்பொருள் ஒன்றுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படும்.
11. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வி ஆண்டு முதல் இடம்பெற ஆவண செய்யப்படும்
12. ‘தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம்’ மதுரையில் தொடங்கப்படும். (இச்சங்கம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தொடர்ந்து நடத்துவதோடு, பல தமிழ்ப்பணிகளையும் செய்யும்)
13. தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாக தமிழக அரசின் சார்பில் நூறு கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்.
போன்ற தமிழ் மொழி, தமிழ் மரபு தொடர்பான அறிவிப்புகளும் மாநாட்டின் நினைவாக கோவைக்கான சிறப்பு நிதிநிலை அறிக்கையும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
தமிழ்ப் பாதுகாப்பு, வளர்ச்சி தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், இவை ‘யானை பசிக்குச் சோளப்பொறி’ என்ற அளவிலேயே அமைந்திருந்ததை உணர முடிகிறது. அவ்வகையில் மாநாட்டுத் தீர்மானங்கள் சில ஏமாற்றங்களை நம்முன் வைக்கின்றன.
1. தமிழ் மாநாட்டுச் செலவிற்காக ஒதுக்கிய தொகை 300 கோடிக்கு மேல். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படவிருக்கிற தொகையோ வெறும் 100 கோடி மட்டுந்தானா?
2. இதற்கு முன்பு நடைபெற்ற மாநாடுகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றவற்றைத் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தந்தன. இம்மாநாடு அப்படி ஒன்றை உருவாக்க வில்லையே! மேலும், மதுரையில் அமைய இருக்கும் தமிழ்ச் சங்கம் கூட, உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரிலிருந்து விலகி ‘செம்மொழி மாநாடு’ என்ற பெயரோடு நடைபெற்ற இம்மாநாடு தொடர்ந்து நடைபெற வேண்டும், அதுவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தில் உள்ள மேலைநாட்டு உறுப்பினர்களின் தயவு இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதைத்தானே முதன்மை நோக்காக கொண்டிருக்கிறது!
3. முந்தைய உலகத் தமிழ் மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இடிந்துவிழும் நிலையிலும், ஆராய்ச்சியாளர்கள் இன்மையால் இழுத்து மூடும் நிலையிலும் இருப்பதை பல ஊடகங்களும் சுட்டிக்காட்டியும், நிறுவனத்தை மேம்படுத்த யாதொரு சிறப்புத் திட்டமும் மாநாட்டில் முன்மொழியப்படவில்லையே!
4. தமிழ் வழியில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற தீர்மானம் வரவேற்கத்தக்க முக்கியான ஒன்று. ஆனால், தமிழையே பாடமாக படித்தோர்க்கு?
5. மாநாட்டில், தமிழை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது அச்சு ஊடகமா? சின்னத் திரையா? வெள்ளித்திரையா? என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. ஆனால், அதன் தொடர்ச்சியாக இந்த மூன்று ஊடகங்களிலும் நடைபெறும் தமிழ்க் கொலையை, தமிழ்ப் பண்பாட்டுக் கொலைகள் போன்றவற்றைத் தடுப்பதற்கும், தமிழை வளர்க்கும், தமிழ்ப் மரபிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களுக்கு ஊக்கப் படுத்துவதற்கும் தீர்மானம் ஏதும் இல்லையே!
6. செம்மொழி உயராய்வு நிறுவனத்திற்கு ஜார்ஜ் கோட்டையை வழங்கியிருப்பது பாராட்டிற்குரியது. அதே வேளையில் அந்நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளர்கள் என்று எவரும் இல்லாதிருப்பது வருத்தத்திற்குரியது. அதைப்பற்றிய அறிவிப்பும் தீர்மானமாக இடம்பெற்றிருக்கலாமே!
7. முனைவர் அனந்த கிருஷ்ணன் இணையத் தமிழை வளர்க்க 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தாரே? அதைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லையே.
8. பன்னாட்டுத் தமிழர்கள் குறிப்பாக மொரீசியல், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து தமிழ் அந்நியப்பட்டுக்கொண்டே போகிறதே! அவர்களிடம் தமிழார்வத்தை ஊட்ட, அவர்களின் வாரிசுகளுக்குத் தமிழ் கற்பிக்க, தமிழ் உள்ளடக்கங்கள் அவர்களை எளிதில் எட்டச் செய்ய இம்மாநாடு என்ன வழி சொல்கிறது?
இன்னும் இன்னும் எத்தனையோ விடைதெரியா கேள்விகள்.. ஐயங்கள்.. விடை மட்டும் ஈழத் தமிழரின் விடுதலையைப் போல.... எது எப்படியோ, தமிழ் வளர்ச்சிக்கென்று ஒதுக்கவிருக்கும் நூறு கோடி ரூபாயையாவது சிறந்த திட்டமிடலோடு, தமிழை வளர்க்க, தமிழ் மரபுகளைக் காக்க, பண்பாட்டுக் கலைப் பெட்டகங்களைப் பேண முறையாக செலவிட்டால் குறைந்தபட்ச பலனையாவது எதிர்பார்க்கலாம்.
- அய்யனார் சாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக