செவ்வாய், 2 செப்டம்பர், 2008

பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து



பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை - ஆய்வு நூல்
ஆசிரியர் - ஆ.மணவழகன்
காவ்யா பதிப்பகம், சென்னை. மு.ப.2005.

பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து...
கவிஞர் இரா. பச்சியப்பன்.
நந்தனம் அரசு கல்லூரி  

    அடர்ந்த வனம்போல் நம்முன் சங்க இலக்கியம் தன் பிரமாண்டத்தை வளர்த்தபடியே இருக்கிறது. சிலர் மரம் கடத்துகிறார்கள். சிலர் வேட்டை ஆடுகிறார்கள்.சிலர் சுற்றுலா போகிறார்கள்.இவ்வகைச் செயல்பாடுகளுக்கிடையே சிலர் மட்டுமே அதன் தன்மைகளை ‘ஜியோக்ரஃபிக்’ சேனல் போல படம் பிடிக்கிறார்கள்.  ஒரு சிறு சலனமும் ஏற்படுத்தாது, குறைந்தபட்சம் தொட்டால் சிணுங்கிகூட திடுக்கிட்டுத் தன்னைச் சுருக்கிக் கொள்ளாதவாறு, அங்கேயே கிடந்து கிடந்து காட்டின் அசலான வாழ்வைச் சொல்வதுபோல சிலர் மட்டுமே சங்க இலக்கியம் ஆய்கிறார்கள். அந்த வரிசையில் ‘பண்டைத்தமிழரின் தொலைநோக்குப் பார்வை’ என்கிற முனைவர் ஆ. மணவழகனின் நூல் காவ்யா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

    மொத்தம் பத்துக் கட்டுரைகள் அடங்கிய நூல். ஒன்பது கட்டுரைகள் பல்வேறு ஆய்வரங்கங்களில் வாசிக்கப்பட்டிருக்கின்றன. பத்தாவது கட்டுரையான ‘தமிழ்-செம்மொழிச் செயலாக்கத்திற்குச் செய்யவேண்டியன’ என்பது நூலாசிரியரின் வேண்டுகோலாக வைக்கப்பட்டிருக்கிறது.

    தொலைநோக்குப் பார்வை, மனித நேயம் என்ற இருபெரும் பிரிவுக்குள் தன்னை இருத்திக்கொண்டு சங்க இலக்கியங்களைத் தொகுப்பு வாரியாகப் பார்த்திருக்கிறார் நூலாசிரியர். உதாரணத்திற்கு ‘பதிற்றுப்பத்தில் பழந்தமிழர் தொலைநோக்கு’, ‘நற்றிணையில் மனித நேயச் சிந்தனை’ இப்படி. புறநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகிய எட்டுத்தொகை நூல்களும், தொல்காப்பிய இலக்கண நூலும், சிலப்பதிகாரக் காப்பியமும் ஆய்வுக் களமாகக் கொண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து வாசித்திருக்கும் இவர் அவை தொடர்பான ஆய்வு நூல்களையும் கவனத்துடன் படித்திருக்கிறார் என்பதை நூல்வழி அறிகிறோம்.

    மிகுந்த மேற்கோள்களும், அர்த்தமற்ற, நீர்த்துப்போன இணைப்பு வார்த்தைகளும், எந்தவித தருக்கமும் எழுப்பாமல், முடிவை வலிந்து திணிக்கும் மனோபாவமும் இல்லாமல், தான் சொல்ல வந்த கருத்திற்கு வெளியே செல்லாமல் மூல நூல்களையும், தேவையெனில் சில இடங்களில் மட்டுமே முன்னர் கண்ட ஆய்வு முடிவுகளையும் பலமெனக் கொண்டு, தனது தெளிந்த நடை என்கிற அடிப்படை ஆற்றல் துணைசெய்ய கட்டுரைகள் எழுதியிருபது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

     பழந்தமிழர் தொழில்நுட்பங்களை பல்வேறு நிலைகளில் எவ்விதம் பயன்படுத்தினர் என்பதற்கான தகவல்களைத் தேடித்தேடித் தந்திருக்கிறார். ‘இரும்புக்கடல்’ என வருணிக்கப்படும் பதிற்றுப்பத்திலும் இவர் தேடியிருப்பது இவரின் துணிச்சலையும் ஆர்வத்தினையும் புதியதைத் தேடிக் கண்டடையவேண்டும் என்கிற அவாவினையும் நமக்குச் சொல்கிறது. உறுதியான கட்டிடத்திற்கு ‘அரைமண்’ பயன்படுத்தியிருப்பது, அறுவை சிகிச்சையினை அறிந்திருந்திருப்பது, அணைகளின் தேவையறிந்து எழுப்பியிருக்கும் வேளாண்தொழில்நுட்பம் எனப் பதிற்றுப்பத்தினைக் கடைந்தெடுத்திருப்பது வியப்பளிக்கிறது.

    அதேபோல, தொல்காப்பியத்தினைக் களமாகக் கொண்டு ஆக்கியிருக்கும் கட்டுரையினைச் சொல்லலாம். இயற்கையைத் தமிழன் நேசித்ததன் அடையாளம், இலக்கியத்தில் இயற்கையைக் கருப்பொருளாகக் கொண்டிருந்ததாக இவர் கொள்ளும் முடிவுக்கு யாரும் மறுப்பு கூற இயலாது. கரு சிதையின் வாழ்வு சிதையும். கருப்பொருள் இன்றி உரிப்பொருள் ஏது? தமிழன் மானுடத்திற்கே பொதுவான கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் அதே வேளையில் தனக்கானத் தனித்துவத்தையும் எவ்வாறு கொண்டிருந் திருக்கிறான் என இந்தக் கட்டுரை வாசிக்கிறபோது நமக்கு வியப்பளிக்கிறது. 

    மிகச் சிறப்பான கட்டுரைகளில் மற்றொன்று ‘சிலம்பு காட்டும் சமூகத் தொலைநோக்கு’. கானல் வரியில் மாதவியின் பாடலை நாம் ‘குத்திக்காட்டுவதற்காக மாதவி பாடினாள் என்பதாக புரிந்து கொண்ட பாடல்’ என்று விளங்கியிருப்போம். ஆனால் இவரோ, காவிரியைப் பெண்ணாக உருவகித்து, அந்தப் பெண் மகிழ்ந்து துள்ளித்திரிந்து இன்பமுற்றிருக்கக் காரணம் மன்னனின் ஆட்சிச் சிறப்பே என்று அதன் எல்லையை விரிவுபடுத்தி விளக்குகிறார். அரிய வலிமையுடைய அரசர் செங்கோல் முறைப்படி ஆட்சி செய்தாலன்றி பெரும்புகழ் மகளிர்க்கு கற்பு நிலை சிறப்புறாது என்கிறார். இப்படி இலக்கியத்தை இவரின் தலைப்பிற்கேற்ப வாசித்திருப்பது பல இடங்களில் வெளிப்படுகிறது.

    கொடை, விருந்தோம்பல், பிறர் துன்பம் கண்டு இரங்கல், முதியோரைக் காத்தல் என்கிற மனிதருக்குள் நிகழும் நேயச் சிந்தனைகளை ஆய்ந்திருக்கும் அதே வேளையில் பிற உயிர்களிடத்துக்காட்டும் உயிர் நேயச் சிந்தனைகளையும் பல இடங்களில் சுட்டியிருக்கிறார்.

    ஓர் இனம் தன் வரலாற்றைச் சரியாக விளங்கிக் கொள்ளுமானால்; தனது அனைத்து வளத்தையும் புரிந்து கொள்ளுமானால்; தனது மரபை உணர்ந்துகொள்ளுமானால் விடுதலை உணர்வு கொள்ளும். விடுதலை உணர்வு வளர்ச்சியைச் சிந்திக்கும். தமிழினம் தன்னை உணர்ந்துகொள்ள இது ஒரு ஆதார நூலாகக் கொள்ளலாம். பத்தாவது கட்டுரை இந்த இனம் செல்லவேண்டிய பாதையைச் சுட்டிக்காட்டுகிறது. படைப்பாளன், ஆய்வாளன் தனக்கான பொறுப்பையும் உணர்கிற இடம் இது. தீர்வு சொல்வதுதான் படைப்பின் நோக்கம் என்றில்லை.அதற்கான கதவுகளை அது உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் நூலாசிரியர் ஆ. மணவழகன் தன் பொறுப்பை உணர்ந்த இடம் பத்தாவது கட்டுரையாகும். 

    அட்டைப்பட வடிவமைப்பும்,நூலாக்கமும் இத்தலைப்புக்கான கம்பீரத்திற்கு ஈடுகொடுக்கிறது. பேராசிரியர் வ. ஜெயதேவன் அழகான சுருக்கமான முன்னுரை வழங்கியிருக்கிறார். இளைய ஆய்வாளர் முனைவர் ஆ. மணவழகன் மிகுந்த வாசிப்பு அனுபவத்தோடும், தமிழின அரசியல் புரிதலோடும் ஆய்வுலகத்திற்கு வந்திருக்கிறார். ஆய்வாளர்களுக்கும், தமிழின மரபை உணர்ந்துகொள்ளத் துடிப்பவர்க்கும் மிகுதியான தரவுகளை உள்ளடக்கிய நூல் இது.

நூல் - பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை
ஆசிரியர் - ஆ. மணவழகன்
வெளியீடு - காவ்யா பதிப்பகம், சென்னை,
ஆண்டு - 2005

கருத்துகள் இல்லை: