ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113. ஆகஸ்ட் 02, 2012.
எட்டுத்தொகை அக நூல்களுள் ஒன்று கலித்தொகை. இந்நூல், கலிப்பாவல் இயன்ற பாடல்களைக் கொண்டதும், துள்ளல் ஓசையால் பாடப்பெற்று பாவகையால் பெயர் பெற்றதுமாகும். கலித்தொகை காலத்தால் பிந்தியது என்பர். இந்நூலிலுள்ள ஐந்திணைகளைச் சார்ந்த 149 பாடல்களையும் ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர். நல்லந்துவனார் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியுள்ளார். புலவர்களின் பெயர்களும் பாடிய திணைகளும் பின்வருமாறு.
பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
மருதனிள
நாகன் மருதம், - அருஞ்சோழன்
நல்லுருத்திரன் முல்லை, நல்லந்துவன் நெய்தல்
கல்விவலார்
கண்ட கலி.
குறிஞ்சித் திணைப் பாடல்கள் – கபிலர்
முல்லைத் திணைப் பாடல்கள் – சோழன் நல்லுருத்திரன்
மருதத் திணைப் பாடல்கள் – மதுரை மருதனிளநாகனார்
நெய்தல் திணைப் பாடல்கள் - நல்லந்துவனார்
பாலைத் திணைப் பாடல்கள் - பெருங்கடுங்கோன்
திணைக்குரிய பாடல்களின் எண்ணிக்கை
குறிஞ்சிக்கலி -
30 பாடல்கள்
முல்லைக்கலி
- 16 பாடல்கள்
மருதக்கலி
- 35 படல்கள்
நெய்தற்கலி -
33 பாடல்கள்
பாலைக்கலி - 35 பாடல்கள்
கலித்தொகை முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். கலித்தொகையின் ஒவ்வொரு பாடலின் கீழும் அவ்வப் பாடலுக்குரிய கூற்று விளக்கம் பற்றிய பழைய குறிப்பு உள்ளது. மற்ற தொகை நூல்கள் அன்பின் ஐந்திணையை மட்டுமே பாடுகின்றன. அன்பின் ஐந்திணையுடன் கைக்கிளையையும் பெருந்திணையையும் பாடும் நூல் கலித்தொகை மட்டுமே. கலித்தொகையின் பாடல்கள் இருவர் உரையாடுவதைப் போன்ற நாடகத் தன்மையைப் பெற்றும், கதை சொல்லும் பாங்கிலும் அமைந்தவை. வழக்குச் சொற்கள் பலவற்றையும் இதனுள் காணலாம். இத்தொகை நூலில் நகைச்சுவைக் காட்சிகள் பல இடம்பெற்றுள்ளன.
தமிழரின் வீர விளையாட்டான ஏறு தழுவுதலை அழகான காட்சிகளாகக் கலித்தொகையின் முல்லைக்கலி பாடல்கள் படம் பிடிக்கின்றன. இந்நூலில் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்புகள் மிகுதியும் காணப்படுகின்றன. மகாபாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றுதல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தல் போன்ற பல செய்திகள் கலித்தொகையில் இடம்பெற்றுள்ளன. ‘காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது. இது பிற தொகைநூல்களில் இல்லாத ஒன்று. முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
பாடல் சிறப்புகள்
தலைவனுடன் உடம்போக்குச் சென்ற தலைவியைத் தேடி செவிலித்தாய் செல்கிறாள். எங்கு தேடியும் தலைவியைக் காணாமல் அலைந்து சோர்ந்து வழியில் வந்த சான்றோர்களை நோக்கி, எம்மகளைக் கண்டீர்களா எனக் கேட்டுப் புலம்புகிறாள். அப்பெரியோர்களோ ஓர் வீட்டில் பிறந்த பெண் வேறொரு வீட்டில் சென்று வாழும் உலக இயல்பையும், காதல் வாழ்வின் எதார்த்த நிலையையும் பின்வருமாறு உணர்த்துகின்றனர்.
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம்
என்செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்
ஆங்கனையளே
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதான்
என்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதான்
என்செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே
மலையிலே பிறக்கிறது சந்தனம். அச் சந்தனத்தால் மலைக்கு என்ன பயன்? அதைப் பூசிகொள்வோர்க்கு அல்லவா பயனைத் தருகிறது! கடலிலே பிறக்கிறது முத்து. அம்முத்தால் அக்கடலுக்கு என்ன பயன்? அது அணிபவர்க்கு அல்லவா அழகு தருகிறது! யாழிலே பிறக்கிறது இசை; அந்த இசையால் யாழுக்கு என்ன பயன்? அது கேட்பவர்க்கு அல்லவா இன்பத்தைத் தருகிறது! என்ற உலக உண்மையைக் காட்டி, தலைவியும் பருவம் அடைந்ததும் பிறத்த வீட்டைப் பிறிந்து வேறோர் இடத்தில் வாழ்க்கைப் படுவதே இயல்பு என்பதை அறிவுறுத்துகின்றனர்.
அதேபோல, ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் கலித்தொகையில், மனித வாழ்க்கையின் உயர் விழுமியங்களாகக் கருதப்படும் ஆற்றுதல், போற்றுதல், அன்பு, பண்பு, அறிவு, செறிவு, நிறைவு, முறை, பொறை என்பனவற்றிக்கு அழகான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.
ஆற்றுதல்
என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல்
என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்
படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப்
படுவது தன்கிளை செறாஅமை
அறிவெனப்
படுவது பேதையர் சொல்நோன்றல்
செறிவெனப்
படுவது கூறியது மறாஅமை
நிறையெனப்
படுவது மறைபிறர் அறியாமை
முறை
எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை
எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
பதிப்புகள்
எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதல்
பதிப்பிக்கப் பெற்ற நூல் கலித்தொகையேயாகும். சி. வை.தாமோதரனார் பதிப்பித்த
இந்நூலில் நச்சினார்க்கினியர் உரையும் உள்ளது. இதைத்தொடர்ந்து இ.வை. அனந்தராமையரவருடைய பதிப்பு மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளது (1925). முதல் தொகுதியில் பாலைக்கலியும்,
குறிஞ்சிக்கலியும் (1925) இரண்டாம்
தொகுதியில் மருதக்கலியும், முல்லைக்கலியும் (1925)
வெளியிடப்பட்டுள்ளன. நெய்தற்கலியை
மட்டும் 1931 இல் தனியாகப் பதிப்பித்து வெளியிட்டார். இவரே 1930இல் மூலத்தையும்
பதிப்பித்துள்ளார். இவருடைய பதிப்பினைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1984இல் வெளியிட்டுள்ளது. காழி. சிவ. கண்ணுசாமி, தமிழ்மலை இளவழகனாரின்
முதற்பதிப்பு 1938இல் பாகனேரி காசி விசுவநாதன் செட்டியார் வெளியீடாக
வந்துள்ளது. இவருடைய மறுபதிப்புகள் 1943,
1949, 1955, 1958, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில்
வெளிவந்துள்ளன. 1937-இல் கை.ஆ.கனகசபாபதி முதலியார் அவர்கள் பாலைக்கலியினை
வெளியிட்டுள்ளார். 1958இல் “கலித்தொகை மூலமும் விளக்கமும்”
சக்திதாசன் அவர்களால்
வெளியிடப்பட்டது. சைவசித்தாந்தக் கழக வெளியீட்டில் பொ.வே.சோமசுந்தரனாரின் உரை 1969 மற்றும் 1970இல் வெளிவந்துள்ளது. தற்போது மலிவு விலை பதிப்புகள் பல
வெளிவந்துள்ளன.