செவ்வாய், 12 டிசம்பர், 2023

பழந்தமிழர் வாழ்வியலும் பன்முக ஆளுமையும் - முனைவர் ஆ.மணவழகன்

 



நூல் : பழந்தமிழர் வாழ்வியலும் பன்முக ஆளுமையும்

ஆசிரியர் : முனைவர் ஆ.மணவழகன்

அய்யனார் பதிப்பகம், சென்னை - 600 088

9789016815 / 9080986069


நூல் அறிமுகம்

          தமிழின வரலாற்றை அறிய இலக்கியப் பதிவுகளே முதன்மைச் சான்றுகள். அதேவேளையில், அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் இலக்கியச் சான்றுகளுக்கு வலுசேர்ப்பதோடு, அவற்றிற்கு நாம் வழங்கியிருக்கிற தொன்மையை மேலும் பின்னோக்கி நகர்த்தி, காலத்தை அதிகப்படுத்துவனாகவும் உள்ளன.

          உலகின் மிகத் தொன்மையான மனிதகுல நாகரிகங்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்ட வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர் தாயின்பி (யி.கி.ஜிஷீஹ்ஸீதீமீமீ) தனது ஆய்வு முடிவாக, ‘பண்டை உலகப் பழம்பெரும் நாகரிக நாடுகளுள் தமிழகமும் ஒன்று. உலகில், இதுவரை இருபத்து மூன்று நாகரிகங்கள் அரும்பி, மலர்ந்து மணம் பரப்பியுள்ளன. அவற்றுள் இருபத்தொரு நாகரிகங்கள் காலத்தின் கொடுமையால் வாடி, வதங்கி, உலர்ந்து உதிர்ந்துவிட்டன. ஆனால், இரண்டே இரண்டு நாகரிகங்கள் இன்றும் நின்று, நிலவி வருகின்றன. அவை சீன நாகரிகமும், தமிழ் நாகரிகமுமேயாகும்என்கிறார். அதேபோல, ‘பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பதினோறு இடங்களில் வேளாண்மை தொடங்கியது. அவற்றுள் தமிழகமும் ஒன்றுஎன்கிறது உலக வேளாண்மை வரலாறு.

          எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம், அத்திரப்பாக்கம் பகுதியில் கிடைத்துள்ள ஆதிகால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகள் பெருவியப்பை ஏற்படுத்தியுள்ளன. அவை சுமார் 3,85,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது உறுதியாகியுள்ளது. கற்கருவிகளைப் பயன்படுத்தும் நுட்பம் சுமார் 90,000 ஆண்டுகளிலிருந்து 1,40,000 ஆண்டுகளுக்குள் இருந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், அத்திரப்பாக்கத்தில் கிடைத்திருக்கும் கற்கருவிகள் மனிதகுல வரலாற்று ஆய்வுப் போக்கை மாற்றியுள்ளன. இது, மனித இனப் பரவல் குறித்த ஆய்வில் புதிய கோணத்தைக் கொடுத்துள்ளன. மனித இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியதாக நம்பப்பட்டுவந்த நிலையில், அதற்கு சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கிருந்து இடப்பெயர்வு தொடங்கியிருக்க வாய்ப்புள்ளதை இக்கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது. இவையனைத்தும் தொல்தமிழரின் வாழ்வியல் குறித்த இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்துகின்றன.

          எனவே, தமிழின விழுமியங்கள் குறித்த இலக்கியச் சான்றுகளை வெறும் புனைவுகள் என்று புறந்தள்ளிப் போகமுடியாத நிலை இன்று உருவாகியுள்ளது. ஆகவே, இலக்கியச் சான்றுகளின் வழி தமிழினத்தின் தொன்மை, நாகரிகம், பண்பாடு, விழுமியம், மரபு அறிவியல், மேலாண்மை போன்றவற்றை அணுகும் ஆய்வாளர்களுக்குத் தங்கள் ஆய்வுகளை மேலும் ஆழப்படுத்த, விரிவாக்க, கட்புலச் சான்றுகளோடு உறுதிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

அந்த அடிப்படையில், ‘பழந்தமிழர் வாழ்வியலும் பன்முக ஆளுமையும்எனும் இந்நூல், பழந்தமிழரின் வாழ்வியல் விழுமியங்கள், மரபு அறிவியல், பல்துறை ஆளுமை போன்றவற்றை இலக்கியம், தொல்லியல், மானுடவியல் சான்றுகளோடு முன்வைக்கிறது. நூலாக்கத்திற்கு, செவ்விலக்கியச் சான்றுகளோடு தமிழகத்தின் மலைப் பகுதிகள், கடற் பகுதிகள், நிலப்பகுதிகள் எனப் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுத் தரவுகளும் அடிப்படையாக அமைகின்றன.

 

பொருளடக்கம்

1. உலக நாகரிகத்தின் முன்னோடி தமிழன்  

2. உலகப் பொதுமை நோக்கில் தமிழர் வகுத்த  நிலமும் பொழுதும்       

3. தமிழர் வேளாண் மேலாண்மையும் வேளாண் தொழில்நுட்பமும்        

4. பழந்தமிழர் உடை மேலாண்மையும் நெசவுத் தொழில்நுட்பமும்        

5. பழந்தமிழர் கட்டடக்கலை மேலாண்மை   

6. பழந்தமிழர் மருத்துவ மேலாண்மை 

7. பழந்தமிழர் நீர் மேலாண்மை  

8. பழந்தமிழர் ஆட்சித்திறன்     

9. பழந்தமிழர் போரியல்    

10.  தமிழர் மரபுக் கலைகள்       

11.  இணைப்பு - கள ஆய்வு நிழற்படங்கள்    

 

நூல் பெற: முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600113.

அலைபேசி: 9789016815


தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடும் புழங்குபொருள்களும்

 



நூல்: தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடும் புழங்குபொருள்களும்

ஆசிரியர் : முனைவர் ஆ.மணவழகன்

 

நூல் அறிமுகம்

          பழந்தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்கள் குறித்தும் தொழிற்குடியினர் குறித்தும் சங்க இலக்கியங்கள் முதலான செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தொன்மையும் தனித்தன்மையும் கொண்டுள்ள தமிழ்ச் சமூகத்தில் தொழிற் குடிகளின் சமூகப் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததென்பதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.

          உழவுக் குடி, நெசவுக் குடி, தச்சர் குடி, கொல்லர் குடி, குயவர் குடி எனத் தொழில்முறையால் அடையாளப்படும் இவர்களின் வாழ்வியல், சமூக ஓட்டத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. இவர்களின் வாழ்வியலும் தொழிலும் தமிழ்ச் சமூக மரபின் தொடர்ச்சியாகவும் அதேவேளையில், புதுமைகளின் புகலிடமாகவும் திகழ்கின்றன. இக்குடிகளின் பண்டைக் காலப் புழங்குபொருள்களே தமிழர்களின் தொன்மை நாகரிகத்தையும் பண்பாட்டையும் இன்றும் அடையாளப்படுத்துவனவாக விளங்குகின்றன. ஆயினும், இன்றையச் சூழலில், இவர்களின் தொழில்களில் புகுத்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்களால் தொழில்சார் புழங்கு பொருள்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றன.

          தொழிற்குடிகள், நவீனத்தின் தாக்குதலால் தங்களின் பல்வேறு அடையாளங்களை இழந்து காணப்பட்டாலும், தொழில்முறைச் சடங்குகளை நம்பிக்கையின் அடிப்படையில் இன்றும் மேற்கொண்டு வருவதைக் காணமுடிகிறது. நாளுக்குநாள் அழிந்தும் மாற்றம்கண்டும் வரும் தமிழக மரபுத் தொழில்களின் எச்சங்களாகவே தொழில்சார் புழங்குபொருள்களும் அவைசார்ந்த சடங்குகளும் இன்று காணப்படுகின்றன. இன்று காணப்படுபவை நாளை இல்லைஎன்ற சூழலில் தொழிற்குடிகளின் தொழிற்சார் புழங்குபொருள்களையும் சடங்குகளையும் உரிய முறையில் அடையாளம் காண்பதும் ஆவணப்படுத்துவதும் தேவையாகிறது.

          அவ்வகையில், ‘தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடும் புழங்குபொருள்களும்என்ற இந்நூய்வு நூல், தமிழரின் மரபுத் தொழில்களாக அடையாளப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மேற்கொள்ளப்படும் தொழில்களின் தொன்மைச் சிறப்புகள், தொழில்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிவது, தொழில்சார் புழங்குபொருள்களை ஆவணப்படுத்துவது, தொழில்சார் சடங்கியல்களையும் பண்பாடுகளையும் வெளிக்கொணர்வது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது.

          அந்த வகையில், பழங்காலந்தொட்டு இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் தொழில்களான வேளாண்மை, நெசவு, மீன்பிடி, தச்சு, கொல்லு, குயவு, சுடுமண் அட்டிகை (செங்கற் சூளை), உப்பளத் தொழில் ஆகிய தொழில்களும் தொழில்நிலைகளும் இந்நூலிற்குக் களங்களாக அமைகின்றன.

பொருளடக்கம்

1. வேளாண்மைத் தொழில்

          (தொன்மை - நுட்பங்கள் - சடங்குகள் - புழங்குபொருள்கள்)     

 

2. மீன்பிடித் தொழில்      

           (தொழில்நிலை - சடங்குகள் - புழங்குபொருள்கள்)

 

3. மட்பாண்டத் தொழில்  

          (தொன்மை - தொழில்நிலை - புழங்குபொருள்கள்)

 

4. நெசவுத் தொழில்        

           (தொன்மை - தொழில்நுட்பம் - புழங்குபொருள்கள்)

 

5. கொல்லுத் தொழில்     

          (தொன்மை - தொழில்நிலை - புழங்குபொருள்கள்)

 

6. தச்சுத் தொழில்           

          (தொன்மை - தொழில்நிலை - புழங்குபொருள்கள்)

 

7. சுடுமண் அட்டிகைத் தொழில் (செங்கற்சூளை)  

          (தொன்மை - தொழில்நுட்பம் - சடங்குகள் -  புழங்குபொருள்கள்)

 

8. உப்பளத் தொழில்       

          (தொன்மை - தொழில்நிலை  - புழங்குபொருள்கள்)

 

நூல் பெற: முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600113.

அலைபேசி: 9789016815

 


பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்

 

 




நூல்கள் பெற - 9789016815

பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்

 

 அணிந்துரை


            சங்க இலக்கியங்கள், தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு,  வாழ்வியல் போன்றவற்றை உலகிற்கு உணர்த்துகின்றன.   தமிழ்ச் சமூகம்  அறிந்து வைத்திருந்த பல்வேறு அறிவு நுட்பங்களுக்கும் இவ்விலக்கியங்களே முதன்மைச் சான்றுகளாகவும் விளங்குகின்றன.   இவ்வுண்மைகளை, இலக்கியங்கள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன. 

             அவ்வகையில், சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ள கீழ்க்கணக்கு தொடர்பான ஆய்வு நூலாக ‘பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்என்ற இந்நூல் அமைந்துள்ளது. உலகப் பொதுமறையாம் திருக்குறள் தவிர்த்து, ஏனைய கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் அறக்கோட்பாட்டு நோக்கிலேயே அணுகப்பட்டுள்ளன. இச்சூழலில் இந்நூல், சங்கம் மருவிய கால நூல்களில் காணப்படுகிற பழந்தமிழரின் மரபு அறிவுப் பதிவுகளை  மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.

             இந்நூலில், வேளாண் அறிவும் மரபு நுட்பங்களும், மருத்துவ நுட்பங்களும் உடல்நல மேலாண்மையும், வானியல் அறிவும் நீர் மேலாண்மையும், கட்டடக்கலை நுட்பங்களும் பயன்பாட்டுப் பொருள்களும், உயிரியல் அறிவும் சூழலியல் மேலாண்மையும்,  உலோகவியல் நுட்பங்களும் கருவிகளும், அரசியல் மேலாண்மையும் ஆளுமைப் பண்பும், சட்டவியல் அணுகுமுறைகள் என்ற பெருந்தலைப்புகளில் தமிழர் அறிந்திருந்த பல்வேறு துறைகளும் மரபு நுட்பங்களும் தக்க சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன.   இதன்வழி,  சங்கம் மருவிய காலத்தில் பல்வேறு அறிவுத் துறைகள் சிறந்திருந்ததையும், அத்துறைகளில் பல்வேறு நுட்பங்கள் கையாளப்பட்டதையும் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.   தமிழர்களின் மரபு நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்ய சிறந்த தரவு நூலாக இது அமைவதோடு, ‘சங்கம் மருவிய காலம் இருண்ட காலம்என்ற பொதுவான கூற்றையும் உடைக்கிறது.

             நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் அணுகுவதோடு,  அக்காலச் சமூகத்தின் மரபு நுட்பங்களையும் மேலாண்மைச் சிந்தனைகளையும் வெளிக்கொண்டுவரும் அரிய முயற்சியில்   தொடர்ந்து  ஈடுபட்டு வருபவர். அந்த வகையில், ‘பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்எனும் தலைப்பில் ஆய்வுத் திட்டம் மேற்கொண்டு, அதனை நூலாக வடித்துள்ள  முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு  எனது பாராட்டுகள்.

             தமிழ்நாடும் தமிழ் மொழியும் தழைத்திடப் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிற  மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

             தமிழ் வளர்ச்சிக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளர்ச்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதோடு, தம் தனிப்பட்ட அக்கறையைக் காட்டிவரும்பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமாகிய  மாண்புமிகு கே.சி. வீரமணி அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சியில் எங்களை வழிநடத்திவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர்  மூ. இராசாராம்  இ.ஆ.ப. அவர்களுக்கும் எம் இனிய நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

             நூல் வடிவமைப்பு செய்த திருமதி சௌசல்யா அவர்களுக்கும் நூலினை அச்சிட்டுத் தந்த ஏ.கே.எல். அச்சகத்தாருக்கும் எனது பாராட்டுகள்.

                                                                                    முனைவர் கோ.விசயராகவன்,
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-600113

 

  

 

பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்

 

புகுமுன்

 

            பிறப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றாயினும், மரபுச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றாதல் இல்லை. மனித இனத்தில் இவ்வகை மரபுச் சிறப்புகளையும் வரலாற்றுப் பெருமைகளையும் கொண்ட இனமாகத் தமிழினம் திகழ்கிறது.  வெற்றுப் பெருமை என்று இதனைப் புறந்தள்ளிவிட இயலாது.  மேலைநாட்டார், ஐம்பது ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடங்களையெல்லாம்  மரபுச் சின்னங்களாகப் போற்றுகிறபோது, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழஞ்சிறப்புகளைக்கூட நாம் எண்ணிப் பார்ப்பதில்லை; போற்றுவதில்லை; பாதுகாப்பதில்லை. பழமையைப் போற்றுபவர்களாக, அவற்றிலிருந்து பாடம் கற்பவர்களாக, மரபு நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்து இயற்கையைக் காப்பவர்களாக, இளைய சமூகத்திற்கு அவற்றைக் கற்றுக்கொடுப்பவர்களாக  இருந்திருந்தால் ‘வெற்றுப் பெருமை பேசுபவர்கள்என்ற வீண் தூற்றல் நம்மீது விழுந்திருக்காது.

             பழந்தமிழர்களின் இயற்கையோடு இயைந்த அறிவியலையும், மரபு நுட்பங்களையும் வெளிக்கொணர்ந்து அடையாளப்படுத்தும்,  மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியின் சிறுகூறே  இந்நூல். பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள வேளாண்மை, வானியல், நீர் மேலாண்மை, தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், மருத்துவம், உடல்நலமேலாண்மை, கட்டடவியல், உலோகவியல், அரசியல், சட்டவியல் எனப் பல அறிவுத் துறைகளையும் அவற்றில் பொதிந்துள்ள பல்வேறு மரபு நுட்பங்களையும் சான்றுகளோடு இந்நூல்   விளக்கிச் செல்கிறது.

             அறச் செய்திகளே  அதிகம் என்ற பொதுக்கருத்தால் அடையாளப்படுத்தப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களில், சங்க இலக்கியங்களுக்கு இணையாக அறிவுசார் கருத்துகளும் மரபு நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன என்ற கருதுகோளை முன்வைத்து, அதன் மெய்ம்மைத் தன்மையை விளக்கமுறை அணுகுமுறையில் இந்நூல் நிறுவுகிறது.   எளிமையும் தேவையும்  கருதி, பாடலடிகள் சில இடங்களில் பதம் பிரித்தும் சில இடங்களில் பதம் பிரிக்காமலும் கொடுக்கப்பட்டுள்ளன.

              ‘பழந்தமிழர் தொழில்நுட்பம்என்ற என்னுடைய முந்தைய நூல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுவரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் பொருண்மைகளுக்கும் காட்சிகளுக்கும் தரவு நூலாக அமைந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. அந்நூலுக்குச் சங்க இலக்கியங்களே ஆய்வுக் களமாக  அமைந்த நிலையில், தற்போது வெளிவரும் இந்நூலுக்குப் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் முழுவதும் ஆய்வுக் களமாக  அமைகின்றன. இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் மற்றும் மரபு நுட்பச் செய்திகளை ஒருங்கிணைத்து, முறைப்படுத்தினால் பழந்தமிழரின் அறிவுசார் வாழ்வியல் சிறப்புகளை முழுமையாக அடையாளப்படுத்த  முடியும்.

             ஆய்வுப் பணிகளிலும் அலுவல் பணிகளிலும் ஊக்கமூட்டி, அன்புடன் ஆற்றுப்படுத்தும்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆற்றல்சால் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன்  அவர்களுக்கு எனது நன்றி.  என் தமிழ்ப் பணிகளுக்கு ஊக்கமூட்டி அவ்வப்போது சிறப்புசெய்து பெருமைபடுத்தும் தமிழ்வளர்ச்சித் துறையின்  இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்களுக்கு எனது நன்றி. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சியில் முனைப்பு செலுத்தி,  பல்வேறு திட்டங்களை வழங்கி நெறிப்படுத்தி வருகின்ற  உயர்திரு அரசு செயலர் முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப. அவர்களுக்கு எனது நன்றி.

             அட்டை வடிவமைப்பு செய்த நண்பர் ஜெபா  அவர்களுக்கும் நூல் வடிவமைப்பு செய்த திருமதி கௌசல்யா அவர்களுக்கும் எனது நன்றி. என் படைப்புகளிலும் ஆய்வுகளிலும் காணப்படும் நிறை-குறைகளைச் சுட்டி, எப்போதும் ஊக்கப்படுத்தும் ஜெயந்திக்கும் அன்பு நண்பர்களுக்கும் நன்றி.

 

அன்புடன்

ஆ.மணவழகன்

9789016815

தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்

 


தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்

வெளியீடு – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

அணிந்துரை

 

            பழந்தமிழ்ச் சமூகம் அறிவை உடைமையாகக் கொண்டது. அது தம் தேடல்களை அரசியல், சமூகவியல், பொருளாதாரம், அறிவியல், அறவியல், கலைகள் என நாள்தோறும் விரிவுபடுத்தியது. தேடலின் முடிவுகளைப் பொதுமன்றங்களில் வைத்து முறைப்படி பதிவு செய்தது. அப்பதிவுகள் பழந்தமிழ் இலக்கியங்களாக நம்முன் ஒளிர்கின்றன. இன்றைக்கும் உலகம் வியந்து போற்றுகிற கருத்துக் கருவூலமாக அவை திகழ்கின்றன. அதனாலேயே பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகள் இன்றும் பல்வேறு கோணங்களில், புதுப்புது ஆய்வுப் பொருண்மைகளோடு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

             அவ்வகையில், பழந்தமிழ் இலக்கிய ஆய்வு குறித்த பொருண்மைகளான இயற்கை, வருணனை, உவமை, தலைவன், தலைவி, தோழி, காதல், நட்பு என்பனவற்றிலிருந்து விலகி சமூகம், தொழில்கள், மேலாண்மை, மனிதவளம், தொழில்நுட்பம், எதிர்காலவியல், தொலைநோக்கு என இன்று நவீனத் தேடல்களோடு புதிய தடங்களில் ஆய்வுகள் வளர்ந்திருப்பது சிறப்பு. அவ்வகையில், எவ்வகைப் பொருண்மைக்கும் தேடலுக்கும் ஆய்வுக் களத்தை அமைத்துக் கொடுக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள் என்றும் வியப்பிற்குரியனவே.

             நூலாசிரியரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் இணைப்பேராசிரியருமான முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களை நவீனப் பொருண்மைகளோடு அணுகுபவர். செவ்வியல் இலக்கிய ஆய்வுகளுக்காகக் குடியரசுத் தலைவரின் ‘இளம் ஆய்வு அறிஞர்விருதினைப் பெற்றவர். பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, சங்க இலக்கியத்தில் மேலாண்மை, பழந்தமிழர் தொழில்நுட்பம், தொலைநோக்கு போன்ற இவரின் முந்தைய நூல்களும் நூற்பொருண்மைகளும் பழந்தமிழ் இலக்கியங்களை நவீனப் பார்வையில் அணுகும் ஆய்வுமுறைக்குச் சான்றுகள். அவ்வகையில், இந்நூலும் பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வுக் களமாகக் கொண்டு புதிய ஆய்வுப் பொருண்மைகளோடு எழுதப்பட்டுள்ளது சிறப்பு.

             மகளிர் தொழில்முனைவோர், திணைசார் வாழ்வியல், பொறியியல் நுட்பம், மனிதவள மேம்பாடு, ஆளுமைத்திறன், மருத்துவம், உடல்நல மேலாண்மை, பல்துறை நுட்பம், சமூக மதிப்பீடு, சமயநிலை, அறம், மரபு அறிவு எனப் பன்முகத் தன்மைகளோடு ஆராயப்பட்ட கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களைக் களமாகக் கொண்டு ஆய்வினை மேற்கொள்ள விழையும் ஆய்வாளர்களுக்கு இப்பொருண்மைகள் மேலாய்வுக் களங்களாகத் திகழும். அவ்வகையில், பழந்தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள பல்வேறு நுண்கருத்துகளை நுணுகி ஆய்ந்து கொடுத்துள்ள நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

             மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழ் மீதும், தமிழர் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் கொண்டுள்ள அன்பும் கருணையும் அளப்பரியன. தமிழின் மேம்பாட்டுக்கெனப் பல திட்டங்களை மேற்கொண்டு செயலாற்றி வருகின்றார்கள். ஒல்லும் வகையெல்லாம் தமிழ் வளர்த்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நன்றியினைப் பதிவு செய்கின்றேன்.

             இந்நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் தொழிற்கல்வி, உயர்கல்வி, பள்ளிக்கல்வி, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமாகிய மாண்புமிகு பி. பழனியப்பன் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சியில் எங்களை வழிநடத்திவரும் தமிழ் வளர்ச்சி, மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் 

             மூ. இராசாராம்  இ.ஆ.ப. அவர்களுக்கும் என் இனிய நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.  இந்நூலை வடிவமைப்பு செய்த திருமதி இலட்சுமி மற்றும் செல்வி தீபிகா ஆகியோருக்கும் இந்நூலை அழகுற அச்சிட்டுத் தந்த ஸ்ரீ சரவணா அச்சகத்தாருக்கும் என் பாராட்டுகள்.

முனைவர் கோ. விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை 600113

 

 

தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்

 

 புகுமுன்

            பழந்தமிழ் இலக்கியங்கள் பரந்து விரிந்த ஆழ்கடலாக நம்முன் காட்சியளிக்கின்றன. அக்கடல் சிலரை அன்போடு அரவணைக்கிறது;  சிலரைப் பயமுறுத்துகிறது. அது எப்போதும் வியப்பிற்குரியதாகவே  இருக்கிறது.

             அந்த ஆழ்கடலுள்  விலைமதிப்பற்ற பலவித நன்மணிகள் புதைந்து கிடக்கின்றன. ஆர்வமும் விருப்பமும் கொண்டோர் அவற்றைத் தேடி காலந்தோறும் அக்கடலில் நீந்திக்கொண்டே இருக்கின்றனர்; மூழ்கிமூழ்கி முயற்சித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களின் முயற்சிக்கேற்ப அறிவுச் செல்வங்களோடு கரை சேர்க்கிறது அலை. ஆழம் கண்டு அஞ்சுவோர் சிலர், ‘என்ன இருக்கிறது இதில்? என்று குறைகூறி, கடலையும் நீந்துபவரையும் வெறுப்போடு பார்த்துச் செல்கின்றனர். இலக்கியக் கடல், அவர்களுக்கும் சேர்த்தே கருத்து மணிகளை விதைத்து வைத்திருக்கிறது.

             கடலில் நீந்தவில்லை என்றாலும் கால்களை நனைத்துப் பார்த்தவன் என்கிற மகிழ்ச்சி எனக்குள் எப்போதும் உண்டு. கடலையும் அதன் அருமையையும் எனக்கு அறிமுகப் படுத்தியவர்களே அந்தப் பெருமையை எனக்கு வழங்கியோர். அவர்கள் எப்போதும் என் நன்றிக்கு உரியோர்.

             பழந்தமிழ் இலக்கியத்தில் இது எனது நான்காவது நூல். இந்நூல், செவ்வியல் இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பழந்தமிழ் நூல்களை ஆய்வுக் களமாகக் கொண்ட பத்து ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்புநூல். அறம், அறிவியல், சமூகம், சமயம், மருத்துவம், மனிதவளம், ஆளுமைத் திறன்  எனப் பலவித நுண்பொருண்மைகளைக் கொண்டது. இக் கட்டுரைகள் முடிவைச் சுட்டுவன அல்ல. மேலும் ஆய்விற்கு வித்திடுவன.

             சிலரால்தான் சில நற்செயல்கள் நடந்தேறும். அந்தவகையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அண்மைகாலச் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள். ஆராய்ச்சிப் பணி, அலுவலகப் பணி, மேம்பாட்டுப் பணி என அனைத்திலும் ஒருங்கே கவனம் செலுத்துகிற பன்முக ஆளுமைக்குச் சொந்தக்காரர். இந்நூல் அவரால்தான் வெளிவருகிறது. அவருக்கு என் நன்றியை நவில்கிறேன்.

             என் ஆய்வுப் பணிகளைப் பாராட்டியும் ஊக்கப்படுத்தியும் பல்வேறு தமிழியல் பணிகளில் ஆற்றுப்படுத்தியும் வருகிற உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநரும் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநருமான முனைவர் கா.மு. சேகர் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

             ‘மாதத்திற்கு ஓர் ஆய்வுக் கட்டுரை; ஆண்டிற்கு ஓர் ஆய்வு நூல். இதனை எப்போதும் மனத்தில் வைத்து ஆய்வு செய்யவேண்டும்என்று காணுந்தோறும் அறிவுரை கூறுவார் முதுபெரும் தமிழறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள்.  அவரின் சிந்தனையை முறையாகச் செயல்படுத்த முடியவில்லை என்றாலும், என்  நூல் வெளிவருகிற போதெல்லாம் அவரின் அறிவுறுத்தலை எண்ணுகிறேன். அதேபோல், பேசுகிற போதெல்லாம் என் ஆய்வுப் பணிகள் குறித்து கேட்டறிந்து, விரைந்து செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தி வருகிற என்னுடைய பேராசிரியர் முனைவர் அன்னிதாமசு அவர்களையும் நன்றியோடு நினைக்கிறேன்.

             இந்த ஆய்வுப் பொருண்மைகளில் பொழிவுகள் மற்றும் கட்டுரைகள் வழங்க வாய்ப்பளித்த பொறுப்பாளர்களுக்கு என் நன்றி. நூலினைச் செப்பம் செய்ய உதவிய முனைவர் க.ஜெயந்தி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஆகியோர்க்கும்  நூல் வடிவமைப்புச் செய்த  திருமதி லட்சுமி மற்றும் செல்வி தீபிகா ஆகியோர்க்கும், அட்டை வடிவமைப்புச் செய்த நண்பர் திரு. இரவிசந்திரஹாசன் அவர்களுக்கும் என் நன்றி.

 

அன்புடன்
ஆ. மணவழகன்
9789016815
 

         

 


பழந்தமிழர் தொழில்நுட்பம் - ஆய்வு நூல்

 




பழந்தமிழர் தொழில்நுட்பம்

பதிப்புரை

 

நூற்றாண்டு போராட்டத்திற்குப் பிறகு ‘செம்மொழிஎன்ற ஏற்புரிமையைத் தமிழ் பெற்றுள்ளது. இந்த ஏற்புரிமையைப் பெறுதற்குத் தக்கச் சான்றுகளாய் நின்றவை பழந்தமிழ் இலக்கிய-இலக்கணங்கள். தோண்டத் தோண்டப் புதுமையும் வளமையும் நிறைந்தோங்கி நிற்கும் இவை என்றைக்கும் தேவையான கருத்துப் பெட்டகமாக, கேட்பதைக் கொடுக்கும் கற்பகத் தருவாகத் திகழ்கின்றன. அவ்வகையில், பழந்தமிழ் இலக்கியங்களுள் பொதிந்துகிடக்கும் பழந்தமிழர் தொழில்நுட்பத் திறனை, தொழில்துறை வளர்ச்சியை, பல்துறை அறிவை வெளிக்கொணர்கிறது ‘பழந்தமிழர் தொழில்நுட்பம்என்ற இந்நூல்.

 நூலாசிரியர், பழந்தமிழ் நூல்களைக் களமாகக் கொண்டு ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை, ‘தொலைநோக்குஎன்ற மூன்று ஆய்வு நூல்களை முன்பே வெளியிட்டுள்ளார்.  அவ்வகையில், பழந்தமிழ் நூல்களைக் களமாகக் கொண்ட நான்காவது நூல் இது.

             சேலம் மாவட்டம் கெங்கவல்லியைப் பிறப்பிடமாகக் கொண்ட முனைவர் ஆ. மணவழகன், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் திருச்சி தேசியக் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்-கணினி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி தமிழ் மொழிக்கையேடு, படவிளக்க அகராதி, சங்கத் தமிழர்களின் அகப்-புற வாழ்வியல், தமிழர் பழக்க வழக்கங்களில் அறிவியல் கூறுகள் போன்ற பல்வேறு கணினி-தமிழ் பல்லூடகத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். தொடர்ந்தும் அப்பணியில் ஈடுபட்டு வருபவர். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.  தற்பொழுது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.  செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் அறிஞர்விருதினைப் பெற்றவர்.   அய்யனார் பதிப்பகத்தின்வழி வெளிவரும் இவரது இரண்டாவது நூல் இது. தமிழினத்தின் அழிந்துவரும் அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்ய முயலும் இந்நூலினை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறோம்.

 அய்யனார் பதிப்பகம்

2010

9789016815


பழந்தமிழர் தொழில்நுட்பம்

முன்னுரை

             தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஒட்டியே மனித சமூகத்தின் வளர்ச்சி பயணிக்கிறது. தொழில்நுட்பத்தைப் பழகாத அல்லது பயன்படுத்தாத எந்த ஒரு சமூகமும் தன் தேவையை எளிதில் நிறைவுசெய்து கொள்வதில்லை. அதற்காக தன்¢ அதிகப்படியான உழைப்பையும், காலத்தையும் இழக்கிறது. அதேவேளை பல்துறை அறிவு, தொழில்துறை வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்ற எவையும் தீடீரென முளைத்தெழுந்த ஒன்றாக இல்லாமல், அது ஆதி மனிதனின் அறிவில் முளைத்தெழுந்து, சிறுகச் சிறுக பட்டை தீட்டப்பட்டுக்கொண்டே வந்த ஒன்றாகவே விளங்குகிறது. இந்நிலையில், மனிதத் தேவைகளுக்கென கண்டறியப்பட்ட அதிநவீன தொழில்நுட்பக் கூறுகள் பலவும் இன்றைய நிலையில் மனித குலத்திற்கு எதிராகவே மாறிவருவதைக் காணமுடிகிறது, எனவை, பல துறைகளிலும் பலரும்  மரபுசார் தொழில்நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்பதையே அறிவுறுத்துகின்றனர். அவ்வகையில், பழந்தமிழரின் பல்துறை அறிவினை வெளிக்கொணர்வதாக, மரபுசார் தொழில்நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்வதாக இந்நூல் அமைகிறது.

                       பழந்தமிழர் தொழில்நுட்பம் என்னும் இந்நூல் பழந்தமிழரின் பல்துறை அறிவு, தொழில்துறை வளர்ச்சி, தொழில்நுட்பம் என்ற மூன்று பெரும் பகுதிகளைக் கொண்டமைகிறது. இந்த நூலுக்கு ஆய்வு களங்களாக இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூலான திருக்குறள், காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை அமைகின்றன.

             முதல் பகுதியான பல்துறை அறிவு என்பது  ஐம்பூதங்கள், உலகத்தின் தோற்றம், வானியல், கோள்நிலை,  இயற்கை நிகழ்வுகள், நாள்மீன் - கோள்மீன், காற்று வழங்கா வெளி, புவியியல், வரலாறு, உயிரியல், மருத்துவம், பொறியியல், உலோகவியல், கட்டடக் கலையியல், நுண்கலையியல், எண்ணியல், அழகுக் கலை, மனித ஆற்றலுக்குக் கட்டுப்படாதவை என பழந்தமிழர் அறிந்திருந்த பல்துறைகளை விளக்குகிறது.

             இரண்டாவது பகுதியான தொழில்துறை வளர்ச்சி என்பது, பழங்காலத் தொழில்பிரிவுகள், பொருளாதாரம் சார்ந்த தொழில்கள், தொழிலாளர் குடியிருப்பு, வணிக வளாகம், வணிக வாகனம், உள்நாட்டு - வெளிநாட்டு வாணிகம், கால்நடை வளர்ப்பு, கடல்சார் தொழில்கள், காடுசார் தொழில்கள், கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி, தச்சுத் தொழில், மண்பாண்டத் தொழில், கொல்லர் தொழில், அட்டில் தொழில், பிறதொழில்கள், தொழில்துறையில் மகளிர் செயல்பாடு, தொழில்துறை வளர்ச்சியில் தடைகள் போன்ற உட்பிரிகளைக் கொண்டுள்ளது.

             தொழில்நுட்பம் என்பது நூலின் முதன்மைப் பகுதியாக அமைகிறது. இப்பகுதி வேளாண்மைத் தொழில்நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், கட்டுமானத் தொழில்நுட்பம், உலோகத் தொழில்நுட்பம், எந்திரத் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம், கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம், பிற தொழில்நுட்பங்கள் என்ற பெரும்பகுப்புகளையும், அவற்றுள் பல உட்பகுப்புகளையும் கொண்டு, பழந்தமிழர் தொழில்நுட்பங்களை விளக்குகிறது. இந்நூளுள் அமையும் மூன்று பெரும்பகுதிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், ஒரே வகையான சில எடுத்துக்காட்டுகள் தேவை கருதி சில இடங்களில் குறிப்புகாளவும் சில இடங்களில் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைகூறியது கூறலாகக் கொள்ளற்க.

             ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை  (காவ்யா பதிப்பகம், சென்னை. 2005) ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை(காவ்யா பதிப்பகம், சென்னை. 2007) ‘தொலைநோக்கு(அய்யனார் பதிப்பகம், சென்னை. 2010) என்ற என் முந்தைய ஆய்வு நூல்களைத் தொடர்ந்து,  ‘பழந்தமிழர் தொழில்நுட்பம்என்ற இந்நூல் வெளிவருவதில் மகிழ்ச்சி. 

             என் நெறியாளர் பேராசிரியர் முனைவர் அன்னி தாமசு அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன். இந்நூல் வெளிவரக் காரணமானவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.பி. சத்தியநாராயணன் அவர்கள். அவர்களுக்கு என் நன்றி. நூல் வடிவமைப்பில் உதவிய நண்பர் ரவி அவர்களுக்கும் பதிப்பகத்தார்க்கும் நன்றி

நட்புடன்

ஆ. மணவழகன்

9789016815


தொலைநோக்கு - ஆய்வு நூல்

 


அய்யனார் பதிப்பகம், எண் 32, இராமகிருஷ்ணாபுரம், 2வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை 600 088. 2010. கைபேசி 9789016815

பதிப்புரை

 

            நேற்றைய பட்டறிவை அடித்தளமாகக் கொண்டு, இன்றைய தொழில்நுட்ப-மனித வளத்தின் திறத்தால் நாளைய சமூக நலனுக்குத் தேவையானவற்றைச் சிந்தித்தலும், அவற்றை முன்னெடுத்துச் செயலாக்கம் செய்ய முனைதலும் தொலைநோக்காகிறது. இவ்வகைச் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கொண்ட சமூகமே தன் தேவைகளை நிறைவுசெய்து கொள்வதோடு, பிற சமூகத்திற்கும் வழிகாட்டி, தலைமை ஏற்கும் தன்மையைப் பெறுகிறது.

 

            2020-இல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு சமூக ஆர்வலர்களால் இன்று பரவலாக முன்மொழியப்படும் சொல்லே ‘தொலைநோக்குஎன்பது. இச்சொல்லே இந்நூலிற்கு வேராக அமைந்திருக்கிறது. அவ்வகையில் தொலைநோக்கு என்ற சொல்லிற்கான முழு வரையறையைக் கொடுத்து, இச்சிந்தனையை ஒரு இயக்கமாக மாற்ற முனைந்திருக்கிறார் ஆசிரியர்.

 

            இன்றைய-நாளைய சமூக நலனிற்கு முன்மொழியப்படும் தொலைநோக்குத் திட்டங்கள் முன்னைச் சமூகத்தின் தொலைநோக்குச் சிந்தனைகளிலிருந்து பெற்றவையே என்பதை மீள்பார்வை பார்த்தலும், மீட்டுருவாக்கம் செய்தலும் இந்நூலின் நோக்கமாக அமைந்துள்ளது. ‘தொலைநோக்குஎன்ற கலைச்சொல் புதியதாக இருக்கலாம், ஆனால், தொலைநோக்குச் சிந்தனை பழந்தமிழரிடத்து மிகுந்திருந்ததென்பதைப் பழந்தமிழ் இலக்கிய-இலக்கணச் சான்றுகளின் வழி நிறுவியிருப்பது சிறப்பு. கருத்துருவாக்கத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் இக்கால நடப்பியல் வரையிலாக முன்வைக்கப்பட்டுள்ள சான்றுகள் ஆசிரியரின் வாசிப்பனுபவத்திற்கும், தேடலுக்கும் சான்று பகர்கின்றன.

 

            முனைவர் ஆ. மணவழகன் சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தவர். சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ் ஆராய்ச்சியாளராகப்  பணியாற்றியவர். படவிளக்க அகராதி, தமிழ்மொழிக் கையேடு,  உயிரோவியம் - சங்க இலக்கியத்தில் தமிழர், தமிழ் மின் அகராதி, தமிழர் பழக்க வழக்கங்களில் அறிவியல் சிந்தனைகள் போன்ற  கணினித் தமிழ் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் தமிழ் அறிஞர்விருதினைப் பெற்றவர். தற்பொழுது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மைஎன்ற இரண்டும் இவரின் முந்தைய ஆய்வு நூல்கள். அவ்வகையில், இக்கால சமூகத் தொலைநோக்கின் தேவை, நிறைவு-நிறைவின்மையையும் பழந்தமிழர் சமூகத் தொலைநோக்குச் சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டு விளக்கும் ‘தொலைநோக்குஎன்ற இந்த ஆய்வு நூலை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறோம்.                                                                          

அய்யனார் பதிப்பகம்

 

                                                         

                                                          முன்னுரை

  

            ஒரு சமூகம் அதற்கேயுரிய பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாகரிகக் கூறுகள் போன்றவற்றால் பிற சமூகங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இவ்வகை பிரித்தறியும் நோக்கிற்கு அச்சமூகத்தின் பழம் பண்பாடு, பழக்கவழக்கம், நாகரிகம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பழம்பெரும் இலக்கியங்கள் அளவுகோல்களாக அமைகின்றன. மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, சமூக வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பற்றவையோ, அல்லது  திடீரென முளைத்தெழுந்தவையோ அல்ல. இவற்றின் பெருக்கத்திற்கான, வளர்ச்சிக்கான கூறுகளை மொழியும், அதைச் சார்ந்த இலக்கியங்களும் தம்முள் கொண்டுள்ளன. அவ்வகையில், பழந்தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கும் கலைப் பெட்டகங்களாக விளங்குபவை பழந்தமிழ் நூல்களாகும். இவை, பழந்தமிழரின் பல்வகைக் கூறுகளைத் தம்முள் அடைகாப்பது போலவே, அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைகளையும் தம்முள் கொண்டுள்ளன.

             மேலும், வரலாற்று ஆய்விற்கும், சமூக ஆய்விற்குமான தேடலில், இலக்கியப் பதிவுகள் என்பதும் முதன்மைச் சான்றுகளாக அமைக¤ன்றன. இலக்கியம் காலத்தின் பதிவாகவும்  கண்ணாடியாகவும் சுட்டப்படுகின்றது. அவ்வகையில், பழந்தமிழர் இலக்கியப் பதிவுகளைக் கொண்டு, அக்காலச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தொலைநோக்குச் சிந்தனைகள் வெளிக் கொணரப்படுவதை முதன்மை நோக்காகவும், இன்றைக்கும் நாளைக்குமான தொலைநோக்குத் திட்ட வரையறையை மதிப்பீடு செய்வதை துணைமை நோக்காகவும் கொண்டு இந்நூலுள் அமைகிறது.

         இன்றைக்கும் எதிர்காலத்துக்குமான சமூக நலனிற்கு முன்மொழியப்படும் தொலைநோக்குத் திட்டங்களுக்கான அடிப்படை  முன்னைச் சமூகத்தின் தொலைநோக்குத் திட்டங்களும், செயல்பாடுகளுமே என்பதை மீள்பார்வை பார்த்தலும், மீட்டுருவாக்கம் செய்தலும் காலத்தின் தேவையாகிறது.

             காட்டாற்றுக் கூழாங்கற்கள், கூழாங் கற்களாகவே பிறப்பதில்லை. அவ்வடிவத்தைப் பெற அவை கடந்துவந்த பாதைகளும், காலமும் பலவாகும். கற்களின் சிதைவுகள் காலத்தின் பதிவுகளாகின்றன. சமூகத்தின் இன்றைய ஒழுங்குமுறை கட்டமைப்பும், ஓட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட கூழாங்கற்களைப் போன்றதே. எனவே, சமூகத்தைத் தொலைநோக்குத் திட்டம் கொண்டு முன்னெடுத்துச் செல்ல, அது கடந்து வந்த பாதையை, தம் வளர்ச்சியில் அவ்வப்போது ஏற்றுக்கொண்ட மாற்றங்களை, மீள் ஆய்விற்கு உட்படுத்தி, ஏற்புடையனவற்றைக் கொள்ளலும், அல்லாதனவற்றைத் தள்ளலும்  இன்றியமையாததாகிறது. திட்டச் செயலாக்கத்தில் இடைப்படும் தடைகளை எதிர்கொள்ள, எளிதில் அத் தடைகளிலிருந்து விடுபட, இவ்வணுகுமுறைத் தேவையாகிறது. ஒரே வகையிலான வழக்கில் முன்னைத் தீர்ப்புகளைப் புரட்டிப் பார்த்தலும், ஒரே தன்மையிலான நோய்க்கு முன்பு வழங்கப்பட்ட மருந்து முறைகளை  ஆய்வதும் போன்றதாகும் இது.

             மேலும், ஒரு சமூகம் தன்னிறைவு பெற்ற, பலம் பொருந்திய சமூகம்  என்ற நிலையை அடைவதென்பது அது தனக்கு ஏற்பட்ட இடையூறுகளையும், எதிர்கொண்ட சவால்களையும் அடித்தளமாகக் கொண்டு முன்னேறுவதைப் பொறுத்தே அமைகிறது. அவ்வகையில், 2020ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தொலைநோக்குத் திட்ட கருத்துருவாக்கம் பரவலாக்கப்பட்டுவரும் இன்றைய சூழல் இப்பார்வையின் தேவையை வலுவாக்குகிறது.

             இலக்கண நூலான தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களும், பதினெண்கீழ்க்கணக்கு  நூலான திருக்குறளும், இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவையும் இந்த நூலிற்கு ஆய்வுக் களங்களாக அமைகின்றன. ‘பண்டைத்தமிழரின் தொலைநோக்குப் பார்வை (2005), ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை (2007) என்ற என் முந்தைய நூல்களை வரவேற்று,  நிறை-குறைகளைச் சுட்டி என்னை ஆற்றுப்படுத்திய தமிழ்ச்சான்றோர்கள், தமிழன்பர்கள் இந்நூலினையும் ஏற்பார்களென நம்புகிறேன்.                                     

                                                                                                                                     நட்புடன்

 ஆ. மணவழகன்

நூல்கள் பெற

9789016815