செவ்வாய், 12 டிசம்பர், 2023

தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்

 


தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்

வெளியீடு – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

அணிந்துரை

 

            பழந்தமிழ்ச் சமூகம் அறிவை உடைமையாகக் கொண்டது. அது தம் தேடல்களை அரசியல், சமூகவியல், பொருளாதாரம், அறிவியல், அறவியல், கலைகள் என நாள்தோறும் விரிவுபடுத்தியது. தேடலின் முடிவுகளைப் பொதுமன்றங்களில் வைத்து முறைப்படி பதிவு செய்தது. அப்பதிவுகள் பழந்தமிழ் இலக்கியங்களாக நம்முன் ஒளிர்கின்றன. இன்றைக்கும் உலகம் வியந்து போற்றுகிற கருத்துக் கருவூலமாக அவை திகழ்கின்றன. அதனாலேயே பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகள் இன்றும் பல்வேறு கோணங்களில், புதுப்புது ஆய்வுப் பொருண்மைகளோடு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

             அவ்வகையில், பழந்தமிழ் இலக்கிய ஆய்வு குறித்த பொருண்மைகளான இயற்கை, வருணனை, உவமை, தலைவன், தலைவி, தோழி, காதல், நட்பு என்பனவற்றிலிருந்து விலகி சமூகம், தொழில்கள், மேலாண்மை, மனிதவளம், தொழில்நுட்பம், எதிர்காலவியல், தொலைநோக்கு என இன்று நவீனத் தேடல்களோடு புதிய தடங்களில் ஆய்வுகள் வளர்ந்திருப்பது சிறப்பு. அவ்வகையில், எவ்வகைப் பொருண்மைக்கும் தேடலுக்கும் ஆய்வுக் களத்தை அமைத்துக் கொடுக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள் என்றும் வியப்பிற்குரியனவே.

             நூலாசிரியரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் இணைப்பேராசிரியருமான முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களை நவீனப் பொருண்மைகளோடு அணுகுபவர். செவ்வியல் இலக்கிய ஆய்வுகளுக்காகக் குடியரசுத் தலைவரின் ‘இளம் ஆய்வு அறிஞர்விருதினைப் பெற்றவர். பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, சங்க இலக்கியத்தில் மேலாண்மை, பழந்தமிழர் தொழில்நுட்பம், தொலைநோக்கு போன்ற இவரின் முந்தைய நூல்களும் நூற்பொருண்மைகளும் பழந்தமிழ் இலக்கியங்களை நவீனப் பார்வையில் அணுகும் ஆய்வுமுறைக்குச் சான்றுகள். அவ்வகையில், இந்நூலும் பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வுக் களமாகக் கொண்டு புதிய ஆய்வுப் பொருண்மைகளோடு எழுதப்பட்டுள்ளது சிறப்பு.

             மகளிர் தொழில்முனைவோர், திணைசார் வாழ்வியல், பொறியியல் நுட்பம், மனிதவள மேம்பாடு, ஆளுமைத்திறன், மருத்துவம், உடல்நல மேலாண்மை, பல்துறை நுட்பம், சமூக மதிப்பீடு, சமயநிலை, அறம், மரபு அறிவு எனப் பன்முகத் தன்மைகளோடு ஆராயப்பட்ட கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களைக் களமாகக் கொண்டு ஆய்வினை மேற்கொள்ள விழையும் ஆய்வாளர்களுக்கு இப்பொருண்மைகள் மேலாய்வுக் களங்களாகத் திகழும். அவ்வகையில், பழந்தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள பல்வேறு நுண்கருத்துகளை நுணுகி ஆய்ந்து கொடுத்துள்ள நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

             மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழ் மீதும், தமிழர் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் கொண்டுள்ள அன்பும் கருணையும் அளப்பரியன. தமிழின் மேம்பாட்டுக்கெனப் பல திட்டங்களை மேற்கொண்டு செயலாற்றி வருகின்றார்கள். ஒல்லும் வகையெல்லாம் தமிழ் வளர்த்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நன்றியினைப் பதிவு செய்கின்றேன்.

             இந்நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் தொழிற்கல்வி, உயர்கல்வி, பள்ளிக்கல்வி, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமாகிய மாண்புமிகு பி. பழனியப்பன் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சியில் எங்களை வழிநடத்திவரும் தமிழ் வளர்ச்சி, மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் 

             மூ. இராசாராம்  இ.ஆ.ப. அவர்களுக்கும் என் இனிய நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.  இந்நூலை வடிவமைப்பு செய்த திருமதி இலட்சுமி மற்றும் செல்வி தீபிகா ஆகியோருக்கும் இந்நூலை அழகுற அச்சிட்டுத் தந்த ஸ்ரீ சரவணா அச்சகத்தாருக்கும் என் பாராட்டுகள்.

முனைவர் கோ. விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை 600113

 

 

தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்

 

 புகுமுன்

            பழந்தமிழ் இலக்கியங்கள் பரந்து விரிந்த ஆழ்கடலாக நம்முன் காட்சியளிக்கின்றன. அக்கடல் சிலரை அன்போடு அரவணைக்கிறது;  சிலரைப் பயமுறுத்துகிறது. அது எப்போதும் வியப்பிற்குரியதாகவே  இருக்கிறது.

             அந்த ஆழ்கடலுள்  விலைமதிப்பற்ற பலவித நன்மணிகள் புதைந்து கிடக்கின்றன. ஆர்வமும் விருப்பமும் கொண்டோர் அவற்றைத் தேடி காலந்தோறும் அக்கடலில் நீந்திக்கொண்டே இருக்கின்றனர்; மூழ்கிமூழ்கி முயற்சித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களின் முயற்சிக்கேற்ப அறிவுச் செல்வங்களோடு கரை சேர்க்கிறது அலை. ஆழம் கண்டு அஞ்சுவோர் சிலர், ‘என்ன இருக்கிறது இதில்? என்று குறைகூறி, கடலையும் நீந்துபவரையும் வெறுப்போடு பார்த்துச் செல்கின்றனர். இலக்கியக் கடல், அவர்களுக்கும் சேர்த்தே கருத்து மணிகளை விதைத்து வைத்திருக்கிறது.

             கடலில் நீந்தவில்லை என்றாலும் கால்களை நனைத்துப் பார்த்தவன் என்கிற மகிழ்ச்சி எனக்குள் எப்போதும் உண்டு. கடலையும் அதன் அருமையையும் எனக்கு அறிமுகப் படுத்தியவர்களே அந்தப் பெருமையை எனக்கு வழங்கியோர். அவர்கள் எப்போதும் என் நன்றிக்கு உரியோர்.

             பழந்தமிழ் இலக்கியத்தில் இது எனது நான்காவது நூல். இந்நூல், செவ்வியல் இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பழந்தமிழ் நூல்களை ஆய்வுக் களமாகக் கொண்ட பத்து ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்புநூல். அறம், அறிவியல், சமூகம், சமயம், மருத்துவம், மனிதவளம், ஆளுமைத் திறன்  எனப் பலவித நுண்பொருண்மைகளைக் கொண்டது. இக் கட்டுரைகள் முடிவைச் சுட்டுவன அல்ல. மேலும் ஆய்விற்கு வித்திடுவன.

             சிலரால்தான் சில நற்செயல்கள் நடந்தேறும். அந்தவகையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அண்மைகாலச் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள். ஆராய்ச்சிப் பணி, அலுவலகப் பணி, மேம்பாட்டுப் பணி என அனைத்திலும் ஒருங்கே கவனம் செலுத்துகிற பன்முக ஆளுமைக்குச் சொந்தக்காரர். இந்நூல் அவரால்தான் வெளிவருகிறது. அவருக்கு என் நன்றியை நவில்கிறேன்.

             என் ஆய்வுப் பணிகளைப் பாராட்டியும் ஊக்கப்படுத்தியும் பல்வேறு தமிழியல் பணிகளில் ஆற்றுப்படுத்தியும் வருகிற உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநரும் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநருமான முனைவர் கா.மு. சேகர் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

             ‘மாதத்திற்கு ஓர் ஆய்வுக் கட்டுரை; ஆண்டிற்கு ஓர் ஆய்வு நூல். இதனை எப்போதும் மனத்தில் வைத்து ஆய்வு செய்யவேண்டும்என்று காணுந்தோறும் அறிவுரை கூறுவார் முதுபெரும் தமிழறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள்.  அவரின் சிந்தனையை முறையாகச் செயல்படுத்த முடியவில்லை என்றாலும், என்  நூல் வெளிவருகிற போதெல்லாம் அவரின் அறிவுறுத்தலை எண்ணுகிறேன். அதேபோல், பேசுகிற போதெல்லாம் என் ஆய்வுப் பணிகள் குறித்து கேட்டறிந்து, விரைந்து செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தி வருகிற என்னுடைய பேராசிரியர் முனைவர் அன்னிதாமசு அவர்களையும் நன்றியோடு நினைக்கிறேன்.

             இந்த ஆய்வுப் பொருண்மைகளில் பொழிவுகள் மற்றும் கட்டுரைகள் வழங்க வாய்ப்பளித்த பொறுப்பாளர்களுக்கு என் நன்றி. நூலினைச் செப்பம் செய்ய உதவிய முனைவர் க.ஜெயந்தி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஆகியோர்க்கும்  நூல் வடிவமைப்புச் செய்த  திருமதி லட்சுமி மற்றும் செல்வி தீபிகா ஆகியோர்க்கும், அட்டை வடிவமைப்புச் செய்த நண்பர் திரு. இரவிசந்திரஹாசன் அவர்களுக்கும் என் நன்றி.

 

அன்புடன்
ஆ. மணவழகன்
9789016815