வியாழன், 20 ஆகஸ்ட், 2020

தமிழிய நோக்கில் சான்றோர் போற்றும் கலித்தொகை

 முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். நவம்பர் 12, 2018

 

தொன்மையான ஒரு இனத்தின் நாகரிக வளர்ச்சியை, பண்பாட்டு ஒழுங்கமைவை, சமூகக் கட்டமைப்பைத் தெரிந்துகொள்வதற்கு அச்சமூகம் பதிவுசெய்து காத்துள்ள இலக்கியக் குறிப்புகள் துணைபுரிகின்றன. தமிழ்ச் சமூகத்திற்கு ஏனைய வரலாற்று மூலங்களைக் காட்டிலும் சங்க இலக்கியங்களே இவ்வகையில் முதன்மை பெறுகின்றன. குறிப்பாக, தமிழிய விழுமியங்களைப் பெரிதும் தன்னகத்தே கொண்டிருக்கக் கூடிய சங்கத் தொகை நூலான கலித்தொகை கருத்தில் கொள்ளத்தக்க ஒன்றாகத் திகழ்கிறது. அவ்வகையில், ‘கற்றிந்தார் ஏத்தும் கலி’ என்ற சிறப்புப் பெற்ற இக்கலித்தொகையைத் ‘தமிழிய நோக்கில்’ அணுகுவது இக்கட்டுரையின் நோக்கம். 

தமிழிய நோக்கு என்பதை, தமிழர்களுக்கே உரிய பண்பு நலன்கள், வாழ்வியல் விழுமியங்கள், சமூக ஒழுங்கமைவு, நாகரிகக் கட்டமைப்பு, அறக்கோட்பாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சிறப்புப் பார்வை எனலாம். ‘அகச்சுவை நூலேயாயினும் கலித்தொகை பண்டைத் தமிழர் நாகரிகத்தின் செம்மையினையும் சமுதாயப் பழக்க வழக்கங்களையும் அறிய விரும்புவோர்க்கு ஒரு புதையலே போன்றது’ என்ற இ.வை.அனந்தராமையர் கருத்து இங்கு நோக்கத்தக்கது. 

கலித்தொகை பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற திணைப் பகுப்புகளையும் அவற்றுள் 150 பாடல்களையும் கொண்ட நூல். இதன் திணை, பாடியோர், பாடல் எண்ணிக்கை பின்வருமாறு அமைகின்றன.

பாலை            -           சேரமான் பெருங்கடுங்கோ            - 35

குறிஞ்சி          -           கபிலர்                                            - 29

மருதம்            -           இளநாகனார்                                 - 35

முல்லை          -           நல்லுருத்திரன்                               - 17

நெய்தல்          -           நல்லந்துவன்                                 - 33

கலித்தொகைக்கு, குறுங்கலித்தொகை, கலி, நூற்றைம்பது கலி எனப் பலப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. கலித்தொகைக்குக் கலித்தொகையே ஒப்பாதலன்றித் திருக்குறளேயாக ஏனைய நற்றிணை முதலிய தொகை நூல்களாக ஈடாதல் எங்ஙனம்?’ என்பது கலித்தொகை குறித்துப் பொ.பெ.சோமசுந்தரனாரின் பாராட்டுரை. 

கலித்தொகை காட்டும் மாந்தர்

            கலித்தொகை பழந்தமிழகத்தின் ஐந்நில மக்களையும், பல்வேறு தொழில்நிலை மாந்தர்களையும், ஏவலர்களையும் காட்டுகிறது. அவ்வகையில், மறவர், வேடர், குறவர், கொடிச்சியர, கோவலர், புல்லினத்தாயர், கோவினத்தார், குடஞ் சுட்டவர், ஆய்த்தியர், பரதவர், ஆன்றோர், சான்றோர், புலவர், அந்தணர், ஐயர், கணி, ஊர்க்காவலர், குதிரைப் பாகன், யானைப் பாகன், சேவகன், ஆடை வெளுக்கும் புலைத்தி, புட்டில் புனையும் புலைத்தி, பித்தேறினார், கூனி, குறளன், கள்வர், புலையர், வலையர், விறலி, தொடிமகள், தேர்ப்பாகன், தலைமகன் புகழ்பாடும் பாணன், காமக் கிழத்தி, பரத்தையர் என பல்வேறு நில மக்களும் பாத்திரங்களும் கலித்தொகையில் இடம்பெறுகின்றனர். 

பாடுபொருள்கள்

கலித்தொகைப் பாடல்களனைத்தும் அகவாழ்வை அடிப்படையாகக் கொண்ட பதிவுகளாகும். களவு, கற்பு என்ற இரண்டு நிலைகளிலும் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. எனினும் களவுக் கால வாழ்வு அதிகமாகப் பாடப்பட்டுள்ளது. நெறிமுறைக்குட்பட்ட வாழ்க்கை, நெறிமுறைக்குட்படாத வாழ்க்கை என சமூக நிகழ்வுகளைக் கலித்தொகைப் பாடல்கள் தம்முள் அடக்கியுள்ளன. இதனடிப்படையில் சூழல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் மரபின் அடிப்படையில் முதல்-கரு-உரி பொருள்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க அகத்திணை நூல்கள் பாடாத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் பாடுபொருள்களாகின்றன.

 

          கைக்கிளை

                                    காமஞ் சாலா இளமை யோள்வயின்

                                    ----------------------------------------------

                                    புல்லித் தோற்றுங் கைக்கிளைக் குறிப்பே (தொல்.அக.50)

 

என்ற தொல்காப்பிய கைகிளை குறித்த நூற்பாவிற்கு எடுத்துக்காட்டாக,

 

                                    நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப்

                                    போதர விட்ட நுமருந் தவறிலர்

                                    நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குக்

                                    பறையறைந் தல்லது செல்லற்க வென்னா

                                    இறையே தவறுடை யான் (56)

 

என்ற முல்லைக்கலியின் பாடல் அமைவதைக் காணமுடிகிறது.

          பெருந்திணை

                                    ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்

                                    தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

                                    மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

                                    செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே (தொல்.அக.51)

 

            என்பது பெருந்திணை குறித்த தொல்காப்பியர் கூற்று.              தொல்காப்பியர் கூற்றுக்கிணங்க,

                        மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி

                        நிறுக்குவென் போல்வல்யான் நீபடு பழியே (கலி.58;22-23)

 

என்கிறான் கலித்தொகை தலைவன். மேலும், மடலேறும் ஆண், ஊரின் சான்றோர்களை அழைத்து நீதி கேட்கிறான். தனது உயர்ந்த குடியின் சிறப்பையும், மடலூர்ந்து நிற்கக் காரணமான நிலையையும் தன்னைச் சுற்றி நிற்போரிடம் கூறி, தான் விரும்பியவளை அவர்களுக்குத் தெளிவுபடச் சுட்டிக்காட்டி, தன் துயரைத் தீர்க்க வேண்டுகிறான்(கலி.138, 139, 140, 141). மடலேறுவேன் என்று தலைவியன் பெயரைச் சொல்லி ஆடவன் மிரட்டியதால் பெண்வீட்டார் மானத்திற்குப் பயந்து திருமணம் செய்து வைக்கின்றனர்(கலி.141;22-25). 

            மோர் விற்கச் செல்பவளை மறித்து காதல் மொழி பேசுதல், பந்து விளையாடும் விவரமறியாச் சிறுமியிடம் காதல் வார்த்தைகள் பேசி நிற்கும் ஆண்களைக் குறிஞ்சிக் கலி காட்டுகிறது(கலி.56,57,58). மேலும், முல்லை நிலத்து ஆயர் புனத்தில் புகாவுய்த்துக் கொடுப்பதற்கும், கலத்தொடு செல்வதற்கும், திணைக்காலுள் கன்று மேய்ப்பதற்கும் ஏவலாட்களை அமர்த்திக்கொள்வர்(கலி 108). அவர்களைத் தலைமக்களாகக் கொண்டு வரும் முல்லைக் கலிப்பாடல்கள் பெருந்திணைக் காதலைக் கூறுவதாக அமைகின்றன. நெய்தற் கலியில் தலைமகன் மடலேறுதலைப் பற்றிய நான்கு பாடல்களும் (கலி. 138,139,140,141), தலைமகள் பெருங்காமத்தை ஊரறிய உரைத்தலைப் பற்றிய ஆறு பாடல்கள்(கலி.142-147) பெருந்திணைக் காதலைக் கூறுகின்றன.

 ஏறு தழுவுதல்

திருமணத்திற்காக ஏழு தழுவும் வழக்கம் இருந்ததைக் கலித்தொகை காட்டுகிறது. ஏறு தழுவும் விழாவில் ஆண்கள் விரும்பிப் பங்கேற்றனர். தான் விரும்பிய பெண்ணை மணந்து கொள்ளவும், தன் வீரத்தை வெளிப்படுத்திக் காட்டவும், புகழ்பெறவும் தனக்குக் கிட்டிய ஓர் அரிய வாய்ப்பாக ஏறுதழுவும் விழாவைக் கருதினர். எனவே உயிர் இழப்பது குறித்தும் அவர்கள் கவலைகொள்ளவில்லை. பெண்கள் ஏறு தழுவாதவனை மணக்க மாட்டார்கள்(கலி. 101;36-38) என்பதால் ஆயர்கள் ஏறு தழுவுதலில் கட்டாயமாக ஈடுபடவேண்டிய நிலை இருந்தது. எனவே தன் மனதிற்கு உகந்தவளைப் பார்த்தவுடன் ஏறு தழுவ தனக்குச் சம்மதம்(கலி.102) என்பதை அவளின் உறவினரிடம் கூறுமாறு தனது தமரிடம் கூறுகிறான் ஆயமகன். தேர்ந்தெடுத்த பெண்ணை அவன் மணப்பதற்குச் சான்றோர்களும் பெண்கேட்டுச் செல்கின்றனர் (கலி.39;46-50). 

மரபும் பழக்க வழக்கங்களும்

     கலித்தொகையில் பழந்தமிழர் பழக்க வழக்கங்கள் குறித்த செய்திகள் ஏராளமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தந்தையார் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டும் மரபு(கலி.75:24-25), ஏனாதி என்னும் பட்டம் வழங்கப்பட்டது(கலி.81:1-17), தேற்றாங்கொட்டையால் கலங்கிய நீரைத் தெளிவித்தல் (கலி.142:64-66), காவடி எடுத்தல் (கலி.142:5-58),          கடன் வாங்குதலும் கொடுத்தலும்(கலி.22:1-3), கடன்கொடுத்தவர் கடன் வாங்கினவருடைய பொருள்களை உசாவுதல்(கலி.108:22-24), நோய்தீர்க்கும் மருந்தும் மருந்தை ஊட்டும் மருத்துவனும் இருந்தது(கலி.17:19-20), பாலைத் தயிராகத் தோய்த்தல் முதலியன இன்றியே மருந்திட்டு அதிலிருந்து நெய் கடைந்தெடுத்தல்(கலி.110:16-18), ‘தேள் மருந்துவம் (கலி.110:2-3) போன்ற பழந்தமிழரின் பலவித பழக்க வழக்கங்களைக் கலித்தொகை காட்டுகிறது.

மேலும், கள்ளையும் நறவையும் ஆண்கள் உண்டது(கலி.147:2), பறையறைந்து யானை நீர்க்கு விடப்பட்டது (கலி.56:32-34), யானை வெகுள மருந்திட்டுப் புகைத்தது (கலி.104:43-44),            பகைவயிற் பிரிந்து சென்றவர் செய்வினை முடித்து அவர் மண்ணைக் கொண்டு வருவது (கலி.148:22-24),       அறங்கூறும் ‘நல்லவை’ அமைந்திருந்தது (கலி.144:70-72), அவையத்தார் ஓலைக்கு முத்திரையிட்டு வைப்பது (கலி.94:42-44), நீருண்ணப் பனங்குடையும் (கலி.23:9) பொற்சிரகமும்(கலி51:7) பயன்படுத்தியது, விக்கல் எடுத்தால் புறம் பழித்து நீவிவிடுவது(கலி.51:13-14), தாம்பூலத்தை கொடுக்காமல் ‘எடுத்துக் கொள்க’ என்று பாக்குப் பையையே நீட்டுதல்(கலி65:13-14) என சமூக அமைப்பும் பழக்கங்களும் கலித்தொகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.    

வில்லையும் கவண் கயிற்றையும் ஏந்தி இரவில் தினைப் புனத்தைக் காவல் காத்தல், விலங்குகள் வரும்போது அவற்றின் ஓசை வழியே பரணில் ஏறி கவண்கல் எறிதல்(கலி.41:8-10), பரணில் அகிற் கட்டை எரித்தல்(கலி.39:7-8); கண் ஏணியை அமைத்து ஏறித் தேன் கூடுகளை அழித்துத் தேன் எடுத்தல்(கலி.39:9-10), இரும்புலியை வலைகட்டிக் பிடித்தல்(கலி.65:23-24), குதிரை பூட்டிய தேரில் செல்லுதல் (கலி.121:22-23, 33:31), முத்து வடத்தோடு பூமாலை அணிதல்(கலி.135:17-18), கோதை புணைந்து மகளிர்க்குத் தருதல் (கலி.144:30-31), பகைப் புலத்திலிருந்து செருமேம் பட்ட வெற்றிச் செய்தியை தூது மூலம் தெரிவித்தல்(கலி.26:24-25) போன்ற ஆடவரின் செயல்கள் கலித்தொகையில் காட்டப்பட்டுள்ளது.             

       அதேபோல, பெண்களுக்கு இருந்த உரிமை வாழ்வைக் கலித்தொகை காட்டுகிறது. ஆண்களைப் போலவே பெண்களும் கடற்கரைச் சோலைகளுக்கும் ஆற்றின் எக்கருக்கும் சென்று விளையாட உரிமை பெற்றிருந்தனர். பிரிந்திருந்த கணவரை நோக்கி ‘எமக்கு நீ யாரை’?, ‘அடியரோ நாங்கள்’(கலி.88;1-4) என்று கேட்கும் தன்னுணர்ச்சி சுட்டத்தக்கது. முன்னோர் ஈட்டிய செல்வப் பெருக்கால் முயன்று பொருளீட்ட முனையாதவரை அவர்கள் விரும்பவில்லை(கலி.111;10-11). முல்லைநில பெண்கள், கொல்லேற்றின் கோடஞ்சாது, அதனைத் தழுவி அடக்கும் வீரமுள்ள ஆடவனையே மணக்க விரும்பி ஏறுதழுவலைப் பரண்மீதிருந்து காண்பர்(103;6-9),            விரும்பிய காதலனைத் தம்மை ஈன்றவரின் இசைவோடு மணப்பர் (115;17-18), இருமணங் கூடார் (114;19-21) என்பன போன்ற செய்திகள், இல்லறவாழ்வை தீரமானிக்க பெண்களுக்கிருந்த உரிமையையும், தெளிவையும் காட்டுகின்றன. 

            மேலும், திருமணமான மகளிர் கணவனைத் தொழுதெழுதல்(கலி.39;1-18), குறமகளிர் பாறை உரலிலும் சந்தன உரலிலும் யானை மருப்பினாலான உலக்கையால் தினை, மூங்கில் நெல், ஐவன வெண்ணெல் ஆகியவற்றைக் குற்றும்போது வள்ளைப் பாட்டுப் பாடுதல்(41;1-3, 40;3-7), சந்தன மரத்தாலான உலக்கையை பயன்படுத்துதல்(43;3), சேம்பின் இலையைச் சுளகாகக் கொள்ளுதல்(41), திருமணம் கூடின் வரையுறை தெய்வத்திற்கு பலியிடுதல்(46;16), தாம் மணக்க விரும்பிய காதலன் தந்த மாலையைக் கூந்தலுக்கும் மறைவாகச் சூடுதல்(115;4-6), கூந்தலில் வெண்ணெய் தேய்த்துக் கொள்வது(115;7-8), தெய்வங்களுக்குப் பால் மடை கொடுத்தல் (109;19-20), மாலை நேரத்தில் விளக்கேற்றுதல்(119;12-13), கணவர் பிரிந்திருக்குங்கால் அவர் வருகையை அறிய விரும்பி சிற்றிலுள்ளே கூடற் சுழி இழைத்தல்(142;24-25), உதவிக்குக் கைமாறாகப் பாட்டு பாடுதல்(144;49-50) போன்ற பழக்கங்களையும் காணமுடிகிறது. மேலும், வேது கொள்ளும் வழக்கம் இருந்ததும் (145;25-26), காலைக் கட்டிக்கொண்டிருத்தல்(147;59-60), நெஞ்சில அடித்துக் கொண்டு அழுதல்(145;60-61), பலரறியப் பூசலிடுதல்(147;50-52) போன்ற பழக்கங்களையும் அறியமுடிகிறது. 

            பெண்களின் தொழில் செயல்பாடுகளாக, தயிர் கடைதல் (106;37), ஆயமகளிர் புனத்தில் கன்றுகளை மேய்த்துக் கட்டுதல்(111;1-2), புனத்தில் ஆநிரை மேய்க்கும் தந்தைக்கும் தமர்க்கும் உணவும் கலமும் கொண்டு செல்லுதல்(108;30-33), சிற்றூரிலும் பேரூரிலும் மோர்(108;5’), வெண்ணெய்(110;6) விற்றல், வயலில் பறித்த மலரைக் கூறாகப் பகுத்து விலை கூறுதல்(66;1) போன்றவற்றைக் காணமுடிகிறது. 

திருமண முறைகள்

            பிற சங்க இலக்கியங்களில் காணப்படாத தமிழர் திருமண முறைகள் கலித்தொகையில் இடம்பெறுகின்றன. திருமணக் காலம், நேரம், இடம், திருமணத்தை உறுதிசெய்வோர் போன்ற பல செய்திகளைக் கலித்தொகையில் இருந்து பெற முடிகிறது.

            காலம் – நேரம் - இடம்

            வேங்கை மலரும் பருவமே திருமணத்திற்குரிய காலமாகக் கொள்ளப்பட்டது(கலி.38;25-26). வேங்கை மர நிழலில் தந்தை தலைமகனுக்கு மணஞ்செய்ய இசைவைத் தெரிவிப்பான்(கலி.41;40-41). சுற்றத்தாரும் தலைமகனுக்குத் தலை மகளைக் கொடுப்பதை உறுதி செய்வர்(கலி.45;22-24). திருமணத்திற்கு ஏற்ற நாளும் (கலி.75;10-11), நேரமும்(கலி.93;11-13) பார்க்கப்பட்டன. அதன் அடிப்படையில், வேங்கை மர நிழலில், ‘புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றிலில்’(கலி.39;31-34), வைகறையில்(கலி. 52;22-23) திருமணம் நடைபெற்றதாகக் கலித்தொகை குறிப்பிடுகிறது. 

            திருமணச் சடங்குகள்

            திருமண ஒப்பனைக்குப் பிறகு(கலி.98;2-3) திருமணச் சடங்காகிய எரிவலஞ்செய்தல் நடைபெறுகிறது. 

                        காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய     

                        மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக

                        ஓதுஊ அந்தணன் எரி வலம் செய்வான் போல் (கலி.69;3-5) 

 இந்த எரிவலஞ்செய்தலை பற்றி இரண்டு விதமான கருத்துகள் உள்ளன.

            1. அந்தணன் எரிவலஞ் செய்விக்கத் திருமண மக்கள் தீவலஞ் செய்த வரலாற்றுச் செய்தி தெரிவிக்கப்படுவதால் இந்தத் திருமணம் ‘பழந்தமிழ் முறையைச் சார்ந்தது’ – கு.இராசவேலு (கலி.,ஆழ்வாய்வு, ப.55). 

            2. வேள்வியாசான் காட்டிய முறையே  அங்குச் சான்றாகக் காட்டிய சடங்கு முறை. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கூறப்படாமையால் ஆரியர் மேற்கொண்ட அத்திருமண முறைக்கும் தமிழர் கொண்டொழுகிய திருமணச் சடங்கு முறைக்கும் பெரிதும் வேறுபாடு உண்டெனத் தெளியலாம். கலித்தொகையில் வேதியரது வேள்விச் சடங்கு உவமையாக எடுதுரைக்கப்பட்டுகின்றது. பாடலின் பொருளை ஊன்றி நோக்குங்கால் எரிவலம் வருதல் ஓத்துடை யந்தணரா லன்றி ஏனைய தமிழ் மக்களால் மேற்கொள்ளப் பெறாத சடங்கென்பது நன்கு புலனாகும்.   -வெள்ளைவாரணன் (தொல்காப்பியம், ப.136) ப.132).

             முல்லை நில வரைவு முறை

       காளையை அடக்கிய காதலனின் கைப்பிடிக்கும் ஆய மகளின் திருமணம் கலித்தொகையில் மட்டுமே காணும் தனிச் சிறப்பாகும். ஏற்றினைத் தழுவிய ஆடவனுக்கே தலைமகளைத் தமர் கொடை நேர்வர்(கலி.104;73-76). மணத்தைக் கூட்டுவிப்பது தெய்வம் என்று கருதப்பட்டது(கலி.107;33). பூவலூட்டிய இல்லின் முற்றத்தில் திரையிட்டு(கலி.115;19-20), தருமணல் தாழப் பெய்து, எருமைப்பேட்டின் கோடு நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெறும். 

                                    தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி

                                    எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும்

                                    பெரு மணம்                   (கலி.114;12-14) 

பெண்ணின் பெயரைச் சொல்லி திருமணம் செய்யப்பெறும்(கலி.114;3-4). கொலையேற்றின் கோட்டிற்கு அஞ்சாத வீரர்களிடத்தில் முலைவிலை வேண்டார் ஆய மகளிர் (கலி.103;71-73). 

நம்பிக்கைகள்

      கலித்தொகையில் காணப்படும் நம்பிக்கைகளைத் தனிமனித நம்பிக்கை, சமூக நம்பிக்கை, அறம்சார் நம்பிக்கை எனப் பாகுப்படுத்த முடிகிறது. மகளிர்க்கு இடக்கண்ணும் தோளும் துடித்தல் நன்னிமித்தமாகக் கொள்ளப் பெற்றது. பல்லி ஒலித்தல்(50:13-14), இடக்கண் துடித்தல்(11:22), நெஞ்சு நடுக்குறக் கேட்டது அணங்காதல்(24:1-3) போன்ற தனிமனித நம்பிக்கைகள் நிலவி வந்தன. 

அதைப் போலவே ஏறுதழுவலைப் பரண்மீதிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஆயமகளின் கூந்தலில் வந்து விழுந்த கண்ணியைத் தெய்வத்தால் காட்டப்பட்டது என்று நம்பப் பெற்றது (107:31:33). சிற்றிலில் தாம் இழைக்கும் கூடற்சுழி கூடினாற் பிரிந்திருக்குந் தங்கணவர் விரைவில் வருவார் என்ற நம்பிக்கை மகளிடையே இருந்தது.

            கோடுவாய்க் கூடாப் பிறையை பிறிது ஒன்று

            நாடுவேன் கண்டனென்                 (கலி.142;24-25) 

சமூக நம்பிக்கைகளாக, நாள் கோண்மீன் பார்த்தல்(5:9), ஆயர் ஊதும் குழலோசை தலைவனை வரவைக் கூறும் நன்னிமித்தமாகக் கொள்ளல்(101:34-35), கணவன் மேலுள்ள காதலோடே இறக்கும் மாண்ட மனம் பெற்ற மகளிர் மாசில் துறக்கத்து வேண்டிய வேண்டியாங்கு எய்துவர் என நம்பியது(143:45-47), சுவர்கத்தைப் போலவே முற்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைத்தது(149:4-5, 8-9), பேய் கோயிலில் வாழும்(94:38-39) என்றும் பிசாசு பலி பெறும்(65:16-18) என்றும் நம்பியது போன்றவை காணப்படுகின்றன. 

சூளுறைத்தல் குறித்துக் கலித்தொகை விரிவாகக் கூறுகின்றது. மெய் தொட்டும் (63:12-13, 95:23-24); அரசனடி தொட்டும்(94:35-36), திருமாலடி தொட்டும்(108:55-56); தெய்வத்தினாலும்(98:31-32); கடல்நீர் நோக்கியும்(134:1-3) சூளுறை செய்யப் பெற்றது. தேரொடும் யாழோடும் சூளறவு செய்தலும் உண்டு(71:9-10, 13:-14). மனத்தில் நினைத்தது நனவில் நடப்பதும்(49:3-4), நெஞ்சத்து நீள் வேட்கை(92:21-22) கனவாகும் என்ற நம்பிக்கையும் காணப்படுகிறது. 

அறம்சார் நம்பிக்கைகளாக, கரி பொய்த்தான்(பொய்சாட்சி) கீழிருந்த மரம் கவின் வாடும்(34:10), அறமல்லன புரிந்து ஒழுகினால் ‘வள்ளி கீழ் வீழா’, வரை மிசைத் தேன் தொடா, கொல்லை குரல் வாங்கி ஈனா’ ‘குறவர் மடமகளிர் தம் கேள்வர்த் தொழு தெழார் தம்மையருந் தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்’(39:12-14, 17-18) என்பன காணப்படுகின்றன.  மேலும், கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகிர்ந்துண்ணான் செல்வமும், கேளிர்கள் நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வமும் தானாகத் தேயும்(149:4-5, 8-9), செய்ந்நன்றிக் கேடு எச்சத்துள் ஆயினும் எறியாது விடாது(149:6-7), சூள் பொய்த்தல் சுவர்க்கத்துள் ஆயினும் எறியாது விடாது(149:10-11), அருந்தவம் ஆற்றியோர் குறைவற நுகர்ச்சிகளை நுகர்வதோடு, உடம்பொழித்துச் சுவர்க்கம் பெறுவர்(30:1-3, 138:30-31) போன்ற நம்பிக்கைகளும் காணப்படுகின்றன. 

            அதேபோல, படைத்தலும் அழித்தலும், முழுமுதற் கடவுள் ஒருவனின் செயல் என்பதும், அவன் உலகுக்குத் தலைவன் என்பதும் கலித்தொகை குறிக்கும் கடவுள் பற்றிய நம்பிக்கையாகும் (120:1-3). 

உடைகள் – அணிகலன்கள் - ஒப்பணைகள்

கலித்தொகையில் உடைகள் குறித்த ஆடை, கலிங்கம், துகில், துவராடை, நீலவாடை, காழகம், உத்தரியம், தழை, தானை, கூறாடை போன்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன. 

                        பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரும் (கலி.111;3)

                        பூங்கரை நீலந் தழிஈத் தளர்போல்கி (கலி.115;14)

போன்ற அடிகள் வண்ணமேற்றிய, வேலைபாடமைந்த ஆடைகளைக் காட்டுகின்றன.           

            அணிகலன்கள்

கலித்தொகையில் ஆயிழை, எல்லிழை, ஒள்ளிழை, ஒளியிழை, சுடரிழை, திருந்திழை, தெரியிழை, நேரிழை, புனையிழை, மாணிழை, முற்றிழை, வயங்கிழை, வாலிழை, விளங்கிழை, விறலிழை, வீங்கிழை என பல்வேறு வகையான இழையணிகளும் அரிக்குழை, அவிர்குழை, ஒண்குழை, கணங்குழை, கனங்குழை, கொடுங்குழை, பூக்குழை, பொலங்குழை, வடிவார் குழை, வரிக்குழை எனப் பல்வேறு வகையான குழையணிகளும் இடம்பெறுகின்றன. மேலும், தலையில் அணிகிற அணிகள், கழுத்தணிகள், மார்பணிகள், கையணிகள், விரலணிகள், போன்றவையும் குதிரை, யானை போன்ற விலங்குகளுக்குப் பூணப்படும் அணிகள் பற்றி குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. 

            ஒப்பணை

            மகளிர், மயிர்ச்சாந்து, புழுகு போன்ற நறுமணப் பொருள்களைச் சேர்த்து கூந்தலுக்கு நாளணி செய்வதும், நெய்தடவி கூந்தலைப் போற்றியதும் தெரியவருகிறது. மேலும், மகளிர் நுனி மயிர் கத்தரிக்கும் வழக்கம் இருந்தது(32;1), குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை ஆகிய ஐந்து பகுதிகளாகக் கூந்தலைப் பின்னிப் பலவகை அணிகளை அணிந்தது (கலி 32;2-3) கலித்தொகையில் பெறப்படுகிறது. 

அதோடு, பொன்னாற் செய்த பலவகைப் பூக்களைக் கூந்தலில் அணிந்தனர் என்பதும், ஞாழற் பூவையும் முல்லை மலரையும் முடித்தனர் என்பதும், அவர்கள் கூந்தலில் எப்போதும் மலர் மணம் வீசிக்கொண்டிருக்கும் என்பதும் அறியப்படுகிறது.  சுண்ணப்பொடியைப் பரத்தையர் பயன்படுத்தினர்(கலி.97;10) என்பதும், ஆடவர் மார்பிற் சந்தனத்தையும், மலர் மாலையையும் அணிந்துகொள்வர் என்பதும் சுட்டப்படுகிறது.  

தொழில்கள்

உழவு, வேட்டையாடுதல், பகைவரை ஒடுக்கவும் நாடு காக்கவும் போருக்குச் செல்லுதல், மாடுகளைப் பேணுதல் முதலியவை கலித்தொகை காட்டும் தலையாய தொழில்களாக இருக்கின்றன. இவற்றோடு, தினைப்புனம் காத்தல், வள்ளிக் கிழங்கெடுத்தல், தேனெடுத்தல், தினை அறுத்தல், மகளிர் கிளியோட்டுதல், ஆநிரை மேய்த்தல், மோர் விற்றல், வெண்ணெய் விற்றல், புகாவுய்த்துக் கொடுத்தல்(உணவு கொண்டு செல்லுதல்), கலத்தொடு செல்லுதல், கன்று மேய்த்தல் போன்றவையும், பனங்குருத்தால் பெட்டி புனைதல், பொன்னிலே மணி பதித்தல் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. 

கோயில் மற்றும் விழா

       கோயில்களைப் பற்றியும் (கலி.94;39), கோயில்களில் வலம் வருதலைப் பற்றியும் (கலி.84;6-7) கலித்தொகை குறிப்பிடுகின்றது. கோயில் (கலி.94;39), கடவுட் கடிநகர் (கலி.84;6), புத்தேளிர் கோட்டம் (கலி.82;4) என்று தெய்வம் உறையும் இடங்கள்  அழைக்கப்படுகின்றன.       

    ஆலர் செல்வன் அணிசால் மகனான முருகன் திருவிழாவுக்குக் கால்கோள் செய்யப்பெற்ற செய்தி காணப்படுகின்றது(கலி.83;14-15). இளவேனிற் காலத்தில் நடைபெறும் காமன் விழாவில் ஆயமகளிர் பால்மடை கொடுப்பர் (கலி.108;58-59). இவ்விழா கலித்தொகையில் மட்டுமே காணப்படும் சிறப்பு பெற்றது. மேலும், வரையுறை தெய்வத்திற்குக் குறவர் மகளிர் கடம்பூணுதல் (கலி.46;1-17), கடவுளுக்குப் பூப்பலி இடுதல்(கலி.93;24), சூர்கொன்ற செல்வேலானைப் பாடிக் கெடாத விரதம் இருத்தல் (கலி.93;25-26), தெய்வம் உரையும் மரத்திற்கு அணி செய்யப்பெறுதல்(கலி.106;28-29) போன்ற செய்திகளும் காணப்படுகின்றன. 

கலைகள்

இசைக்கலை

            கலித்தொகையில், குழல் (101:35), யாழ் (2:27), இயன் (வாச்சியங்கள்) (36:5), முழவு (70:10), தண்ணுமை(102:34) , தாளம் (102:35), பறை (92:21), துடி (11:8) போன்ற இசைக்கருவிகள் குறிப்பிடப்படுகின்றன. 

குரவை

            குரவையாடுதலும் துணங்கையாடுதலும் விரிவாகக் குறிக்கப்படுகின்றன. இதில், ஏறுதழுவல் முடிந்த பிறகு மாதர் மகளிரும் மைந்தரும் தாதெரு மன்றத்தில் குரவை அயர்வர் (103:61-62), பொதுவனையும் ஆயமகளையும் பாராட்டி குரவையில் பாடுவர் (102:37-39), ஆய்ச்சியர் அன்புறு காதலர் கை பிணைத்து இன்புறுவர் (106:31-33),  பாண்டியர் மரபுளி பாடித் தெய்வம் பரவுவர்(103:75-76) என்பன போன்ற செய்திகள் பெறப்படுகின்றன.   

மேலும், திருமணம் உறுதியானவுடன் வரையுறை தெய்வம் உவப்பக் குன்றக் குறவர் உவந்து குரவையாடுதல்(39:26-28) காட்டப்படுகிறது. 

            துணங்கை

            துணங்கை என்பது, ‘பழுப்புடை யிருகை முடக்கியடிக்கத் துடக்கிய நடையது’ என்றும் ‘சிங்கிக் கூத்தென்றும் இஃதழைக்கப்படும்’ என்கிறார் நச்சினார்க்கினியர் (67:17-18 நச்.உரை). மேலும், மகளிர் மகிழ்ச்சியால் கைகொட்டிக் கொண்டு நுடங்கியாடுங் கூத்தென்றும், தற்காலக் ‘கும்மி’ போன்றது என்கிறார் இளவழகன் (கலித்தொகை உரைவிளக்கம், பக்.54).

 கலித்தொகையில் காணப்படும் துணைங்கைக் கூத்து செய்திகளின் வழி, துணங்கைக் கூத்தில் மகளிர்க்குப் பாடல் உண்டு(70:14), முழவு முதலிய வாச்சியங்களும் உண்டு (அகம்.326;16), துணங்கை யாடலில் மகளிர்க்கு ஆடவர் தலைக்கை தருவர் (73;17), துணங்கை ஆடும் போது ஆடை கிழிதலும் உண்டு (73;17) போன்றவை பெறப்படுகின்றன. 

பொழுதுபோக்கு

மகளிர்தம் ஆயமோடு நகர் விளையாட்டிலும், மலை விளையாட்டிலும் துறை விளையாட்டிலும் ஆண்கள் ஈடுபட்டனர்(கலி.27;11-20). மேலும், மகளிரோடு புனலாடுதல் (கலி.98;11-12), மணல் பரப்பிலும், தாழை முடுக்கருள்ளும், புன்னை வனச் சோலையிலும் தலைமகளுடன் ஆடி மணப்பது (கலி.136;5,9,13), குறும்பூழ்ப் போர் காண்பது (கலி.95;5-7), யானை(கலி.97), குதிரை(கலி.96) ஏறுதல் போன்ற ஆடவரின் பொழுதுபோக்குகள் கலித்தொகையில் காட்டப்பட்டுள்ளன.   

            சூதாட்டம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சூதாடுகின்ற இடம் கழகம் எனப்பட்டது. கவனு, முன் ஆயம், வித்தம், மறுவித்தம், சிறுவித்தம், உடைப்பொதி போன்ற சூதாட்டக் கலைச்சொற்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றன(கலி.136;3-16). சூதாட்டத்தில் பொருளை இழந்து தோற்றவன் வருத்தமுற்றுச் செல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளது(கலி.13;11-12).           

            பெண்கள், வரிப்பந்தாடுதல்(கலி.57;7), வண்டற்பாவை இழைத்தல்(கலி.29;5), மரத்தாற் செய்த பாவையும் பானையும் கொண்டும், கோரைப்புற் பாவை கொண்டும் விளையாடுதல்(கலி.59;5,76;7), மடக்குறு மாக்கோடு சேர்ந்து ஓரை அயர்தல்(கலி.82;9), சிறுமியர் தெருவில் மணல்வீடு கட்டி விளையாடுதல்(கலி.51;1-3, 111;8-9). இளமகளிர் காதலனுடன் புனலாடுதல்(கலி.39;1), ஊசல் ஊர்ந்தாடல் (கலி.37;13-14; 131;6-11) போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டனர்.           

   மேலும், தழையுங் கோதையும் இழையும் என்று பல்வேறு மாலைகள் கட்டி மகிழ்தல்(கலி.102;4-7),             பகற்பொழுது போய் இராப்பொழுது வரும் வரையில் கான் யாற்று மணல் தண்பொழிலில் ஆயமொடு விளையாடுதல்(கலி.113;23-26), மரப்பாவை நோன்பெடுத்துச் சிறுசோறு சமைத்து ஆயத்தார்க்குக் கொடுத்து மகிழ்தல்(கலி.59;20-21) போன்ற நிகழ்வுகளும் காட்டப்படுகின்றன. 

கலித்தொகை காட்டும் அறநெறிகள்

அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம்,  வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள். சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெருவழக்காக வழங்கப்பட்டு வருகின்றன(திருக்குறள் நீதி இலக்கியம், ப.48). ‘அறம் என்பது மனிதவாழ்வின் உயர் மதிப்பீடான விழுமியங்களை உருவாக்குவதாக அமைகிறது. அது மரபினருக்குத் தொடர்ந்து வழிவழி கற்பிக்கப்படுகிறது. அறத்தை மீறுவது சமூகக் குற்றமாக, தெய்வக் குற்றமாக கருதும் சூழல் உருவான நிலையில் ‘சட்டம்’ என்ற ஒன்று உருவானது’ (தமிழ்ச்செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம், ப.93). 

கலித்தொகையில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மை அறக்கருத்துகள் இயற்கையோடு இயந்து அறிவுறுத்தப்படுவனவாக உள்ளன. மரம் தழைத்தல், வாடுதல், மரத்தின் கிளைகளில் தோன்றும் அரும்புகள், மலர்கள் ஆகியவற்றை வருணிக்கும்போது உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஆகிய மக்களியல்புகளை உணர்த்தும் அறக்கருத்துகள் கூறப்பெறுகின்றன.

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்

சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி

யார்கண்ணும் இகழ்ந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல்

வேரோடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின்

அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக்

கொலையஞ்சா வினைவரால் கோல்கோடி அவன் நிழல்

உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம் (பாலைக்கலி, 10;1-7)

 

இளமையில் வறுமையால் உழன்றவன் வாடியிருப்பதுபோல மரங்களின் தளிர்கள் வதங்கித் தோற்றமளிக்கின்றன. பிறர்க்குதவும் பெருந்தன்மை இல்லாத  சிறியவனின் செல்வம் தன்னைச் சேர்ந்தவரைப் பாதுகாவாததைப் போல மரங்களிருந்தும் நிழலில்லை. எவரிடமும் வரம்புமீறி வம்பு செய்பவன் தனக்கு மட்டுமின்றித் தன்புகழுக்கும் கேடுசூழ்ந்து கொள்வதுபோல, வெப்பத்தின் கொடுமையால் மரக்கிளைகள் மட்டுமல்லாது வேர்களும் வெம்பி நிற்கின்றன. இவ்வாறு பொழிவிழந்த மரங்கள் பல சேர்ந்த காடோ, கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில் மக்கள் எவ்வாறு பொலிவிழந்து தென்படுவரோ அத்தகைய சோர்ந்த தோற்றத்தைத் தந்தது என்று வருணிக்கப்படுகிறது.

 

            அதேபோல, உடன் போகிய மகளைத் தேடும் செவிலித்தாயின் வினாவிற்கு,  மலையுளே பிறப்பினும் பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கே பயன்படும்; நீருளே பிறப்பினும் சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கே அழகூட்டும்; யாழுளே பிறப்பினும் ஏழ்புணரின்னிசை முரல்பவர்க்கே பயன்படும். அதுபோலவே நின் மகளும் (கலி.9;12-20) என்கின்றனர் சான்றோர். 

கலித்தொகை அறக்கருத்துகள் தனிநிலை, குடும்பம், சமூகம் என்ற நிலைகளில் விரிந்துள்ளதைக் காணமுடிகிறது. தாம்வளம்பட வாழ்தலும், தம் கேளிரைத் தாங்குதலும், இரந்தோர்க்கு இல்லையென்னாது ஈதலும் ஆகிய இம்மூன்றினையும் உயிரினும் மேலாகக் கொள்ளுதல் வேண்டும்(2:11, 15,19). தீதிலான் செல்வமும்(27:2) மடியிலான் செல்வமும்(35:1) தழைத்துப் பெருகும். நிலையாமையை உணர்ந்தவருடைய கொடை எல்லோருக்கும் பயன்படும்(32:11). கிளையழிய வாழ்பவன் ஆக்கம் பொலிவு பெறாது(34:18). பொருளில்லான் இளமையும்(38:15) அறஞ்சாரான் மூப்பும்(38:19) பொலிவழியும், அருள்வல்லான் ஆக்கமும்(38:16), திறஞ்சேர்ந்தான் ஆக்கமும்(38:20) பொலிவு பெறும். சான்றோர் தம்புகழ்களைக் கேட்டுத் தலைசாய்வர்(119:6) என்கிறது கலித்தொகை. 

அதேபோல, போர்க்களத்தில் வீழ்ந்தவன் மேல் செல்வது வீரமன்று(38:16), வேந்தன் செம்மையால் மாரி சுரக்கும்(99-6-7) என அரசியல் அறத்தையும் வலியுறுத்துகிறது.

 

          உயிரினங்கள் வழி அன்பு நெறி

            தாவரங்கள், மாந்தர்களின் உடல் உறுப்புகள் போன்றவற்றின் செயல்பாடுகள், தன்மைகளை ஒப்பிட்டு அறங்கள் வலியுறுத்தப்படுவதைப் போன்று விலங்குகளின் தன்மைகள் மற்றும்  செயல்பாடுகளைக் காட்டி இல்வாழ்வின் அன்பு நெறிகள் அறங்களாகச் சுட்டப்படுவதையும் காணமுடிகிறது.  

 

                                    துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

                                    பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு (கலி.11;8-9)

 

                                    அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை

                                    மென் சிறகால் ஆற்றும் புறவு (கலி.11;12-13)

 

                                    இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்

                                    தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை (கலி.11;1-17)

           

ஆகிய அடிகளில், யானைக் கன்றுகள் கலக்கிய சிறிதளவு நீரைத் தான் உண்ணாமல் பெண் யானைக்கு ஊட்டி, பின்னுண்ணும் களிறு; பெண்புறவு வெம்மைக்கு ஆற்றாது வருந்திய வருத்தத்தை தன்னுடைய மென்சிறகால் ஆற்றும் ஆண்புறவு; இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலை ஆகியவை காட்டப்படுகின்றன. இல்வாழ்வில் கணவன்-மனைவிக்கு இடையேயான அன்புநெறிகள் இதன்வழி வலியுறுத்தப்படுகின்றன. 

உலகிற்கு உணர்த்தும் நெறிகள்

அறவுரைகளை, கீழ்க்கணக்கு நூல்களைப் போன்று முதன்மையாக வலியுறுத்தாமல் பாடல் ஓட்டத்தில் இயைந்த அறிவுறுத்தலாக வழங்கும் பொதுப் பாங்கு சங்க இலக்கியங்களுக்குரியது. இதற்கு மாறாக, கீழ்க்கணக்குப் அறப் பாடல்களைப் போன்று, அறவுரைகளை நிரல்பட தொகுத்து வழங்கி, கீழ்க்கணக்கிற்கு வழி அமைத்துக்கொடுத்திருக்கும் நல்லந்துவனாரின் நெய்தற்கலி பாடல் இங்கு குறிப்பிடத்தக்கது.

                        ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

                        போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

                        பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

                        அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

                        அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

                        செறிவு எனப்படுவது கூறியது மாறாஅமை

                        நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

                        முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்

                        பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் (133:6-14)

 

சான்றுகள் வழிப் பெறுவன

Ø  சங்க அக மரபுகளைப் பின்பற்றி முதல்-கரு-உரி பொருள்கள் கலித்தொகை பாடல்களில் அமைக்கப்பட்டுள்ளன.

Ø  எருமைப் பேடையின் கொம்பு நட்டுச் செய்யும் முல்லை நிலத்துத் திருமண முறை கலித்தொகை தவிர வேறெந்த நூல்களிலும் காணப்படாதது குறிப்பிடத் தக்கது.

Ø  தமிழரின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள் போன்றவற்றைக் கலித்தொகை பல இடங்களில் பதிவு செய்துள்ளது.

Ø  பிற அகத்துறை நூல்களில் காணப்படாத காமன் வழிபாடு பற்றிய குறிப்பு கலித்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

Ø  கொல்லேறு தழுவுஞ் செய்தியைக் கலித்தொகை போல் வேறு நூல்கள் காட்டவில்லை.

Ø  சங்க அகத்திணை நூல்கள் பாடாத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் பாடுபொருள்களாகின்றன.

Ø  குறிஞ்சிக் கலியில் ‘மிக்க காமத்து மிடல்’ என்னும் துறையின் கீழும், நெய்தற்கலியில், ‘ஏறிய மடற்றிறம்’, ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்’ ஆகிய துறைகளின் கீழும் வந்த பெருந்திணைக் காதல் இடம் பெற்றுள்ளது. மருதக் கலியிலும் வினைவல பாங்கரின் பெருந்திணைக் காதல் குறிக்கப்படுகிறது.

Ø  குரவைக் கூத்தும் துணங்கைக் கூத்தும் வேறு வேறு சூழலில் நிகழ்த்தப் படுகின்றன.

Ø  பிற்கால அற நூல்களுக்கு முன்னோடியாக கலித்தொகை தனிமனித-இல்லற-சமூக அறக்கருத்துகளைப் பெரிதும் பேசுகிறது.

Ø  கலித்தொகை குறிப்பிடும் பிறர் அறியாமல் கள்ளுண்ணும் பண்பு திருக்குறள் போன்ற நூல்களின் கள்ளுண்ணாமை கருத்தோடு ஒப்பு நோக்கத்தக்கது

Ø  மூவேந்தர்களில் பாண்டிய மன்னனின் கூடல் மாநகர், தமிழ் அவையம், வைகை நதி பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. மற்ற தொகை நூல்களைவிட கலித்தொகையில் தொன்மச் செய்திகள் அதிகம் காணப்படுகின்றன.

***** 

Dr. A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

தமிழியல்

www.thamizhiyal.com  


பழமலய் கவிதைகளில் மண்சார்ந்த விழுமியங்கள்

 முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600 113.

(புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள் - கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – ஐவனம் தமிழியல் ஆய்வு நடுவம், சென்னை. திசம்பர் 18, 2019)


            உலகின் மிகப் பழமையான இனக்குழுக்கள், தம்மைச் செழுமை படுத்திக்கொள்ள காலந்தோறும் பலவிதக் கற்பிதங்களை உருவாக்கியுள்ளன.  அவை நெறிப்படுத்துதல், தற்காத்துக்கொள்ளுதல், தக்கவைத்துக் கொள்ளுதல், தனித்துக்காட்டல் போன்ற விளைவுகளை எதிர்நோக்கியவையாகும். சமகால தேவையின் அடிப்படையில் உருவாக்கப்படும் இவ்விதக் கற்பிதங்கள் கால ஓட்டத்தில் எதிர்நிலை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால், யுகங்கள் பல கடந்தும் மனித  வாழ்வியலைச் செழுமைபடுத்தும் சிந்தனைகள் விழுமியங்களாக எஞ்சி நிற்கின்றன. காலத்திற்கும், பட்டறிவிற்கும் ஏற்ப இவை கோட்பாடுகளாகவும், வரையறைகளாகவும் உருவம்பெறுகின்றன. சுருங்கக் கூறின், ஒரு பண்பட்ட, தொன்மையான இனக்குழு எவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று போராடுகிறதோ, எவற்றை இழந்துவிட்டதாக வருந்துகிறதோ அவ்வகை நடத்தைகள் அல்லது கற்பிதங்களே விழுமியங்களாகின்றன. 

        சமூக நடத்தையியலில் உயவு எண்ணையாக இருப்பவை விழுமிய கற்பிதங்கள். இனக்குழுக்களை நடத்தையியல் சார்ந்து ஒழுங்குபடுத்துவதற்கு விழுமிய முன்னெடுப்புகள் காலந்தோறும் தேவையாக இருக்கின்றன. காரணம், உலகின் எந்த ஒரு பழமையான சமூகமும் தொடர்ச்சியான சமூக வரலாற்றைக் கொண்டதாக இல்லாதிருப்பதே. அனைத்துச் சமூகமும் பிற அரசியல், பண்பாட்டுப்  படையெடுப்புகளுக்கு ஆளாகியே வந்துள்ளன. தமிழ்ச் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ்ச் சமூகத்தின் தொடக்ககால வரலாற்றை உரைக்கும் சங்க இலக்கியங்கள் தொடங்கி, இக்கால இலக்கியங்கள் வரை இவ்வகை விழுமிய கற்பிதங்களை அடையாளங்காண முடியும். மிகவும் நேர்த்தியான இலக்கிய வடிவமான கவிதைகள் இவ்விதச் சிந்தனைகளுக்கு அதிக இடமளிக்கின்றன. இக்கட்டுரை, மக்கள் கவிஞர் பழமலய் அவர்களின் கவிதைப் படைப்புகளைக் களமாகக் கொண்டு, மண்சார்ந்த விழுமியங்களை அடையாளப்படுத்துவதாக அமைகிறது. 

     ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதின இலக்கியங்களிலும், ஒரு நூற்றாண்டு கால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதுக்கவிதை, சிறுகதை இலக்கிய வடிவங்களிலும் கண்டறியமுடியும் என்கிற கருதுகோள்களை முன்வைத்தே இக்கருத்தரங்க அறிவிப்பு செய்யப்பெற்றது. வந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் கருதுகோள்களை மெய்ப்பித்திருக்கின்றன. இன்னும் ஆழமாகவம், விரிவாகம் இவற்றை அணுகமுடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 

கவிஞர் த. பழமலய்

பாடைப்பாளியும் பின்புலமும்

      ‘நான் அனுபவங்கள் சிலவற்றையும் ஆள்கள் சிலரையும் வரைந்துள்ளேன். அனுபவங்களைக் கவிதைகளாக உணர்கிற நான், ஆள்களையும் கவிதைகளாகவே உணர்கிறேன். எனக்கு ஆள்களும் அனுபவங்களாகவே உள்ளார்கள்’(ச.க.,ப.10) என்று தன் எழுத்துக்கு முகவுரை வழங்குகிறார் கவிஞர் பழமலய். தமிழகத்தின் இடை நிலமாக விளங்கும் விழுப்புரமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் இவருடைய கவிதையின் களமாக அமைகின்றன. ஆய்வாளர், பேராசிரியர், பொதுவுடைமைச் சிந்தனையாளர், சமூகச் செயற்பாட்டாளர் என்ற பன்முகத் தன்மை இவருக்குண்டு.  

     இவருடைய கவிதை குறித்து கூறும்போது, ‘உழைக்கும் விவசாய மக்களின் வறுமையையும் மீறி, உயர்ந்து நிற்கும் அவர்களது ஆளுமையின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறது. மேலும், சாதாரண மக்களின் பேச்சு நடையையும், உரைநடையையும் கவிதைக்கான கருவிகளாக்குகிறது’ என்கிறார் திறனாய்வாளர் இந்திரன் (ச.க., அணிந்துரை). இவருடைய கவிதைகள், கிராமத்து மண்ணாலும் மக்களாலும் உயிர்களாலும் பிணைக்கப்பட்டவை. அவர்களின் வாழ்வியலை, விழுமியங்களை அவர்களுக்கும் உலகிற்கும் அரிதாரம் பூசாமல் காட்டுபவை. 

உயிரிரக்கம்

     இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்குமானது. இதனை மனிதன் உணர்ந்தால் மட்டுமே மனிதநேயமும் உயிரிரக்கமும் மலரும். உயிரினச் சமநிலை ஏற்படும். இந்த மண் புல்லுக்கும் இடமானது என்பதை,

            எதையும் நான் ஒதுக்க முடியாது / உரிய இடத்தை ஒதுக்க வேண்டும் /                                   அரைமனதுடன்தான் களையையும் எடுக்கிறேன் / புல்லுக்கும் / உரிமை இந்த மண்                     (கு.கொ.நே., ப.18)

என்கிறார் கவிஞர். அதேபோல,

கருங்கல் வாங்கியும் செங்கல் வாங்கியும் /கட்டி முடிக்காத வீட்டு வாயிலுக்கு - அருகால், சன்னல், அது, இதற்கு எல்லாம் / வேம்பை அறுத்துக்கொள்ளலாம் என்பார் / எனக்குப் பதறும்           (ச.க., ப.17)

என்பதில் மரத்திற்கும் வருந்தும் தமிழ் மனத்தை வெளிப்படுத்துகிறார். 

     தனக்குச் சோறு இருக்கிறதோ இல்லையோ தாம் வளர்க்கும் விலங்குகளுக்கு உணவளிக்கத் தவறாது கிராமத்து உழுகுடி. தன்னைச் சுற்றி இருக்கும் மரம், செடி, கொடி, விலங்குகளையும் உறவுகளாகவே பார்ப்பது அதன் உயர் பண்பு. முருங்கை மரத்தையும் பிள்ளையாகப் பார்க்கும் மண்ணின் மனம் குறித்து,

            ஒரு புயலில் சாய்ந்தது முருங்கை /   வெறவுக்கு ஆவும் என்றேன்/ புள்ளயாட்டம்,           அடுப்பிலியா வைக்கிறது/ மலடிதான் அத்தை / என்றாலும், முருங்கையும் ஒரு பிள்ளை அவளுக்கு  (ச.க., ப.45)

என்றும்,

            கிளிசோசியம் பார்ப்பார்கள்/ எட்டிப்பார்க்கும் அம்மா/

          கிளிக்குப் பாவம் பார்ப்பாள். (வே.ஒ.சு., ப.30)

என்றும் பதிவு செய்கிறார். 

       தமிழ்ச் சமூகம் மரங்களைத் தெய்வங்களாகவும் உறவுகளாகவும் போற்றிய சமூகம். நற்றிணைத் தலைவி மரத்தைச் சகோதரி என்கிறாள். பழமலய் புளிய மரத்தை கன்னி என்றும் தாய் என்றும் பதிவுசெய்கிறார். பழங்களும் பரந்து விரிந்த நிழலும் கொடுத்து, பல்லாண்டுகளால் மக்களோடு மக்களாய் வீற்றிருந்த புளிய மரத்தை யோரோ வெட்டிவிட, 

            நான் பார்க்கச் சுமைதாங்கி இருந்தது / இடை விட்டுப் புளியமரங்கள் இருந்தன

          ஓடிப் பொறுக்கப் பழங்கள் கிடக்கும் /….. /கோலம் போட்டதாய்ப் பரந்திரந்த

          நிழலெல்லாம் எங்கே /நிழலின் திருடர்கள் யார்?  (ச.கதை, ப.55)

என்றும்,

            திருட்டு மரம் வெட்னவம் /  அதிலியே எரிஞ்சான் என்றார்கள் /

          நான் நம்ப   முடியாது / நிழல்தான் கொடுத்திருக்கும் /    

          கன்னியாகத் தோற்றம் காட்டித்/ தாயாக நின்ற மரம். (ச.க., ப.62) 

என்றும் பதிவுசெய்கிறார். மரம் கிராமத்து மண்ணின் மக்களால் உயிருள்ள உறவாகப் போற்றப்படுவதும், மரத்தைத் திருட்டுத்தனமாக வெட்டி விற்றால் அந்த விறகாலேயே வெந்துபோவார்கள் என்ற நம்பிக்கையும் இதில் பதிவுசெய்யப்படுகிறது. சில நம்பிக்கைகள் மக்களை அச்சுறுத்தி, நன்மை செய்ய வைப்பவை என்பதையும் உணர்தல் வேண்டும். 

            தனது வாழ்வில் இன்ப துன்பங்களை அஃறிணை உயிர்களிடத்துச் சொல்லிப் புலம்பும் மக்களின் இயல்பை கிராமங்களில் இன்றும் காணலாம். இது, ஆற்றாமையின் வெளிப்பாடு மட்டுமன்று, எளியோரின் மனத்துன்பத்தைப் போக்கும் உளவியல் மருத்துவமாகவும் செயல்படுகிறது.  தான் வளர்க்கும் உயிரினங்கள் தன் குறைகளைக் கேட்கும், தீர்க்கும் என அவர்கள் நம்புகிறார்கள். அதேபோல, தாம் வளர்க்கும் மரங்களுக்காகவும் விலங்குகளுக்காகவும் கண்ணீரும் வடிக்கிறார்கள்.

தோட்டத்துத் தனிமையில் / உன் குறைகளைக் கேட்கும் / தங்க அரளி தங்கத்தை உதிர்க்கும் / முற்றத்துப் பவழமல்லி / நீ மறந்தும் நினைத்து அழும்

காட்டிலும் கிடந்து தான் சீரழிவதை / வேம்பிடம் அழுது / மூக்கைச் சிந்துவாள்        (ச.கதை, ப,18)

என்பன போன்ற பதிவுகள் கிராமத்து மக்களுக்கும் அஃறிணை உயிர்களுக்குமான பிணைப்பைக் காட்டுகின்றன. 

பிறருக்காக அழும் மனம்

      தனக்கென வாழாமல் பிறருக்கென வாழும் சான்றோர்களாலேயே இந்த உலகம் நிலைத்திருக்கிறது என்கிறான் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. பிறருக்காக அழும் மனம் வாய்க்கப்பெற்ற மனிதநேயர்களைக் கிராமங்கள் இன்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளன.     

            முற்றத்துப் பவழமல்லி / நீ மறந்தும் நினைத்து அழும் /அன்னை உன் தாலாட்டும் /          அழுகையில் முடியும். /ஊரில் இழவு என்றால் ஒப்பாரி வைக்க   ஓடுவாய்.  (ச.க., ப.15)

என்பதில், தன் துன்பம் தன்னோடு இருந்தாலும், ஊரில் இழவு என்றால் ஓடோடி செல்லும் மண்ணின் மனம் காட்டப்படுகிறது. மனிதம் உயிர்த்திருப்பது இவர்களைப் போன்றோரால்தான். 

உறவுகளின் மேன்மை

          உறவுகளின் வலிமையே உயிர்களின் வலிமை. உறவுகளின் தேவைகள் இழப்புகளிலும்  துன்பங்களிலுமே தெரியவருகின்றன. தமிழ்ச் சமூகம் உறவுகளின் மேன்மையை விழுமியமாக முன்னிறுத்துகிறது. அதனாலேயே உறவுப் பெயர்கள் தமிழில் அதிகமாக உள்ளன. பழமலய் அவர்கள் தன்னுடைய திட்டக்குடி தாத்தா பற்றிக் பதிவுசெய்யும்போது, 

            எலும்பைப் பிள்ளைகளுக்குத் தருவார் / அக்காள் மகனுக்குக் கறியைக்         கொடுப்பார் / தொண்டைக்கு இந்தண்டை இருந்துவிட்டால் /      அப்பாவுக்குத்தானாம்   (ச.க., ப.26)

என்கிறார். தன்பிள்ளையைவிட தன் சகோதரியின் பிள்ளை மீது அன்பைக் காட்டி வளர்க்கும் மாமன் உறவு இதில் பதிவுசெய்யப்படுகிறது கிராமத்து மண் சார்ந்த வாழ்வியலும் உறவுகளின் பிணைப்புமே இதனைச் சாத்தியமாக்குகிறது. 

            உறவுகளைப் பிரிந்திருப்போர்க்கே அதன் அருமை புரியும். குறிப்பாக, தன்னுடைய இன்பதுன்பங்களை மறந்து குடும்பத்திற்காகவும், உறவுகளுக்காகவும் உழைக்க வேற்று ஊர் செல்வோரின் மனம் ஊரையும் உறவுகளையுமே சுற்றிச் சுற்றி வரும். எத்தனையோ இன்னல்கள் இருந்தாலும் உறவுகளைக் கண்டதும் மலரும் முகத்தினை,

            இருள் கவிந்த முகங்கள் / விளக்காலும் விலக்கமுடியாத இருள் /         வேண்டியவர்களைக் கண்டதும் / விலகி ஓடிவிடுவது எப்படி?(ச.க., ப.82)

என்கிறார் கவிஞர். 

ஈதல் அறம் – விருந்தோம்பல்

            அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் தலைவியைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. விருந்தோம்பல் தமிழர் விழுமியங்களில் தலையாய இடத்தினைப் பெற்றது. ஆனால், இன்றைய வாழ்வியல் அதற்கு இடமளிக்கவில்லை. நகரங்களில் மறைந்துபோன பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகவே விருந்தோம்பல் இன்று மாறிவிட்டது. கிராமத்திலும்கூட மிகவும் அரிதாக இன்று காணப்படுகிறது. 

            வழிபோற யாராச்சும் / வந்து நம்ம திண்ணயிலே /வழிபாத்து நீராரம் /         வேணுமுன்னு  கேக்கையிலே / கூழுருண்ட நாபோட்டுக் / கொடுப்பேனே இன்னக்கி / வாழுறேனே கூழுக்கும் / வக்கத்துப் பேனேன. (ச.க., ப.30) 

என்ற பதிவு, நீராகாரம் கேட்போரின் பசிபோக்க கூழினைக் கரைத்துக்கொடுக்கும் கிராமத்து விருந்தோம்பல் பண்பைச் சுட்டுவதோடு, உயர்பண்பிற்குரிய அம்மக்கள் இன்று வாழ்விழந்து நிற்கும் அவலத்தையும் படம்பிடிக்கிறது. 

இயற்கையோடு இயைந்த வாழ்வு வேண்டும்

          ஒவ்வொரு திணைக்கும் கருப்பொருள்களை வகுத்து, இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவன் தமிழன். அவன் வகுத்தளித்த வனங்களும், நிலங்களும், நீர் நிலைகளும் இன்று தொகுப்பு வீடுகளாகவும், தொழிற்சாலைகளுமாக மாறிப்போயின. முரண்களரி அமைத்து தற்காப்புக் கலை வளர்த்த தமிழன் இன்று முடங்குவதற்கும் இடமின்றி தவிக்கிறான். இந்நிலையில் கவிஞர், 

            கும்மி அடிக்கவும், சடுகுடு ஆடவும்/ எங்கள் ஊர் இலுப்பைத் தோப்புப் போல

          ஊர் ஊருக்கும் வேண்டும். / மனம் சலித்து நடந்து போனால் /இருந்து திரும்ப         நிழல்           இருக்கணும் / ஊருக்கு அருகில். (ச.க., ப.61)

என்று, ஒவ்வொரு ஊருக்கும் தோப்பு வேண்டும் என்றும், மரங்கள் வேண்டும் என்றும், தமிழர்களின் பண்பாட்டுப் பண்டிகைகளையும் அதுசார்ந்து விளையாட்டுகளையும் முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். மேலும், இருந்த வளங்கள் இல்லாது போனதுபற்றிக் கூறுமிடத்து, 

            ஊரில் / எட்டித் தொடும்படி நிறைந்திருந்த கிணறுகள் / பார்த்திருக்கிறேன் /         நீருக்கு மேல் வந்து / நுரைவிடும் வரால்கள் / மிதந்து அசையும் தவளைகள்.

          வீட்டு முருங்கையிலோ வயல் வன்னியிலோ / வந்து அமரும் நீலநிற மீன்கொத்தி/ காத்திருக்கத் தேவை இல்லாத காலமாய் இருந்தது அது (கு.கொ.நே., ப.163)

என்று பதிவுசெய்கிறார். 

உழைப்பவன் வலி – கருவிகளுக்கும் உண்டு

            கழுவாமலோ சுரண்டாமலோ / வெட்டியாப் போட்டுவைத்தால் /        ஒட்டியிருக்கும் மண் சுமையால் / உடல் வலிக்கும் மண்வெட்டிக்கு / உடையவனுக்கும் வலிக்கும் இரவில்.... /   ’வலி உணரும் மனிதர்கள்’ /      வலிகள்       பற்றி...  - ச.க., ப.85

என்ற கவிதை உழைப்பாளிகளின் நுட்பமான வாழ்வியலைப் பதிவுசெய்கிறது.. தன் உழைப்பால் வாழாத ஆடவனை ’கூரில் ஆண்மையாளன்’ என்கிறது சங்கப் பனுவல். இங்குக் காட்டும் மண்சார்ந்த மக்களோ உழைக்காமல் இருந்தால் கருவிக்கும் உடையவனுக்கும் உடல் வலிக்கம் என்று கற்பிக்கின்றனர். 

பழமலயின் கவிமொழி வழி

            ‘இந்தக் கவிதைகள் என்னை எனக்கும், என் மக்களை அவர்களுக்கும் உணர்த்துபவை. நம் இழிவுகளுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்கவும் போராடவும் உந்துபவை. இந்தச் சமூக அவசியங்கள்தாம் இவற்றை வெளியிடும் துணிவை எனக்குத் தருபவை’(ச.க., ப.12) என்பது தன் படைப்புகள் குறித்தப் பழமலயின் வாக்குமூலமாக இருக்கிறது. மக்களை, அவர்களின் வாழ்பனுபவங்களை, நம்பிக்கைகளை, விழுமியங்களை, மக்களின் மொழியிலேயே கவிதைகளாக முதன்முதலில் பதிவுசெய்த சிறப்பு கவிஞர் பழமலய்க்கு உண்டு. எண்பதுகளில் வெளிவந்த இவருடைய ‘சனங்களின் கதை’ கவிதைத் தொகுப்பு குறித்துக் குறிப்பிடும்பொழுது ‘தமிழகத்தில் ஒரு கல் மழை பொழிந்ததைப் போல சனங்களின் கதை கவிதைத் தொகுப்பு வெளிவந்து, அதுவரை கவிதை குறித்து இருந்த அத்துனை கற்பிதங்களையும் உடைத்தெரிந்தது’ என்கிறார் எழுத்தாளர் கி.ரா. அவர்கள்.           

   உலகின் தொன்மையான இனக்குழுவான தமிழினம் தனக்கான தனித்த அடையாளங்களுள் சிலவற்றையேனும் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்றால் அது மாண்சார்ந்த கிராமத்து வாழ்வியலில்தான் என்பதை இவரின் கவிமொழிகொண்டு அறியமுடிகிறது. தமிழகத்து மண்ணின் வாழ்வியலை அச்சுஅசலாகப் பதிவு செய்திருக்கும் இவருடைய படைப்புகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த வாழ்வியலை அறிந்துகொள்ளும் ‘மாதிரி’ வடிவங்களாகத் திகழ்கின்றன. மண்சார்ந்த, உழுகுடி சார்ந்த வாழ்வியலை, விழுமியங்களை அந்தந்த வட்டார மொழிகளில் பதிவுசெய்யும் படைப்பாளர்கள் பலர் உருவானதற்கும் பல படைப்புகள் வெளிவந்துகொண்டிருப்பதற்கும் இவரின் படைப்புகளே முதற்புள்ளி.   

பயன் நூல்கள்

1.பழமலய், சனங்களின் கதை (1988) 

2.பழமலய், குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்(1991)

 3.பழமலய், இவர்கள் வாழ்ந்தது(1994) 

4.பழமலய், இன்றும் என்றும்(1998) 

5. பழமலய், புறநகர் வீடு(2000) 

6. பழமலய், இரவுகள் அழகு(2001)

7.பழமலய், வேறு ஒரு சூரியன்

 8.பழமலய், பழமலய் கவிதைகள்(2009)         

***** 

Dr. A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

தமிழியல்

www.thamizhiyal.com