முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113. பிப்ரவரி 17, 2020.
‘அறம்’ என்பது மனித வாழ்வின் உயர் மதிப்பீடான விழுமியங்களை உருவாக்குவதாக அமைகிறது.
அது மரபினருக்குத் தொடர்ந்து வழிவழி கற்பிக்கப்படுகிறது. பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களான அற இலக்கியங்கள், அறத்தை நேரடியாக வலிந்து
வலியுறுத்தும் தன்மையைக் கொண்டுள்ளன. சங்க இலக்கியங்களில்
அறம் வலிந்து வலியுறுத்தப்படுவதில்லை.
எனினும், பாடற் கருத்தோடு இயைந்த
அறியுறுத்தல்களாக இருக்கின்றன. அறம் வாழ்வியலோடு இயைந்ததாக,
இன்பமும் பொருளும் அறத்தின் வழிப்பட்டதாக இருக்க நெறிப்படுத்தப்பட்டது.
‘தனிமனிதன், ஒரு குடும்பம்-குழு-அரசு போன்றவற்றில் இணைந்தே செயல்படுகின்றான். சமுதாயம் தனிமனிதனைச் சமுதாய உறுப்பினனாக்கப் பெருமளவிற்குத் தொண்டு புரிகின்றது. பொதுவாகச் சமூக இயல்பு தனிமனிதன் இயல்பு ஆகிய இரண்டும் ஒருங்கே வளர்கின்றன’ (சமூகவியல், ப.64) என்பது சமூகவியல் கோட்பாடு. மேலும், தனி மனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூகப் பிணைப்பும் குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன (தி.நீ.இ., ப.49) என்பது நோக்கத்தக்கது. எனவே, தமிழர் அறக்கோட்பாடுகளைச் சமூக உளவியல் நோக்கில் அணுகுவது தேவையாகிறது.
அறம்
‘அறு’ என்ற
வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும்
சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு,
உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து
என்ற பலவகைப் பொருள்கள் சுட்டப்படுகின்றன. இதன் அடிப்படையில்
அறம் என்னும் சொல்லிற்கு, ‘மனிதன் தனக்கென வரையறுத்துக்
கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம்’ என்று சமூகவியல்
விளக்கமும், ‘பிறவிதோறும் மனிதனைப்
பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற
ஆன்மீக விளக்கமும் தரப்படுகின்றன(தி.நீ.இ.,ப. 23).
நல்ல அல்லது தீய செயல்கள் மூலம் தானே வெளிப்படும் மக்களுடைய நடத்தையைப்
பற்றிய ஆய்வியல் கலை மேலை நாடுகளில் ‘எதிக்ஸ்’
(Ethics) என வழங்கப்படுகிறது. இதைத் தமிழில் அறவியல் எனலாம்.
‘எதிக்ஸ்’ என்னும் இக் கிரேக்கச் சொல் முதன் முதலில் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களை உணர்த்தியும்
பின்னர், நடத்தை என்னும் பொருளையும் வழங்குவதாகவும்
உள்ளது. தமிழில், அறம் என்னும்
சொல்லிற்கு ‘ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம்’ என்ற எட்டுவகையான
பொருள்கள் பெருவழக்காக வழங்கப்பட்டு வருகின்றன (தி.தி.இ., ப.48).
தனிமனித நடத்தை பெரும்பாலோரால் பின்பற்றப்பட்டபொழுது ஒழுக்கமெனும் பண்பாக மலர்ந்து, வாழ்க்கை நெறியாக மாண்புற்றது எனலாம். எனவே அறம் என்பது மனிதவாழ்வின் விழுமியங்களை உருவாக்குவதும் கற்பிப்பதுவுமான கருத்தோட்டமாக அமைகிறது. அறத்தை மீறுவது சமூகக் குற்றமாக, தெய்வக் குற்றமாக பார்க்கும் சூழல் அமைந்த நிலையில் ‘சட்டம்’ உருவானது எனலாம். அறம் தவறிய சமூக ஒழுக்கச்செயல்களில் ஈடுபடுவோர் சட்ட தண்டனைக்கு ஆளாகினர்.
தனிமனிதரும்
அறமும்
சங்க இலக்கியங்களில் அறன்இல், மாசுஇல், நிறைஇல் என்பன போன்ற சொற்களின் பயன்பாடு காணப்படுகிறது. ‘இல்’ எனும் சொல்லின் முன் அறன், பண்பு, மாசு, மரன், வறன், நயன், நார், நிறை, முனிவு, புலை, மாண்பு, அன்பு, அருள், ஊறு, அசை, ஈரம் போன்ற சொற்கள் பயின்று வந்துள்ளன. இவற்றுள், ‘அறன்இல்’ எனும் சொல் அன்னை, யாய் போன்ற சொற்களோடு சேர்ந்து அறன்இல் அன்னை, அறன்இல் யாய் என வந்துள்ளது. அறன் இல்லாத என்பதை உணர்த்தும் அறன்இல் எனும் சொல்லன்றி, அறனிலாளன், அறனும் அன்றே, அறன் இன்று எனும் சொற்றொடர்களும் சங்க அக இலக்கியத்துள் பயின்று வந்துள்ளன. இச்சொற்கள் தலைவன், தலைவியின் ஊர், அஃறிணைகள் குறித்து செவிலி, தோழி மற்றும் தலைவியால் சுட்டப்படுவன. ஆயினும், அறம், அறன் எனும் சொற்கள் பயின்று வருகிற இடங்களைக் கொண்டு மட்டுமே தலைவனுக்குச் சுட்டப்படுகிற அறத்தை வரையறுத்துவிட முடியாது. இச்சொற்கள் நேரடியாக இடம்பெறாமல் கருத்து நிலையில் அறம் வலியுறுத்துகிற இடங்களையும் கருத்தில் கொண்டே தலைவனுக்கான அறக்கோட்பாட்டை வரையறுக்க முடியும். மேலும், ஒரே வகையான செயல், தொடர்புடைய இருவேறு மாந்தர்களின் பார்வையிலும் சமூக உளவியல் நோக்கிலும் வேறுபட்டு விளங்குவதையும் காணமுடிகிறது. அவ்வகையான செயல்களுக்குப் பொதுவானவர்களின் (சான்றோர்) கருத்து பெறப்பட்டு அறம் உறுதிசெய்யப்படுகிறது (எ.கா. உடன்போக்கு). அக வாழ்க்கையில் தலைவனுக்கான அறத்தை களவு, கற்பு என்ற இருநிலைகளிலும் பார்க்க முடிகிறது. இவ்விரு நிலைகளிலும் காணப்படும் மாந்தர்களான தலைவன், தலைவி, செவிலி, நற்றாய், தோழன், தோழி, வாயில்கள், கண்டோர் ஆகியோரின் கூற்றுகளின் வழி தலைவனுக்கான அறம் பெறப்படுகின்றன.
தனிமனித
அறங்களைக் குறிப்பிடும் இடத்து, தாம்வளம்பட வாழ்தல், தம்
கேளிரைத் தாங்குதல், இரந்தோர்க்கு இல்லையென்னாது ஈதல் ஆகிய இம்மூன்றினையும் உயிரினும் மேலாகக் கொள்ளுதல் வேண்டும் (கலி.2:11,15,19) என்று அறிவுறுத்தப்பட்டது. அதேபோல, கிளையழிய
வாழ்பவன் ஆக்கம் பொலிவு பெறாது(கலி.34:18). பொருளில்லான்
இளமையும் (கலி.38:15) அறஞ்சாரான் மூப்பும்(கலி38:19) பொலிவழியும் என்றும் வலியிறுத்தப்பெற்றது.
பொன்னாலும், முத்தாலும்
மணியாலும் செய்யப்படும் அணிகலன்கள் கெடுமானால் தொழில் வல்லோரால் சீர்படும்.
சால்பும் இயல்பும் வியப்பும் குன்றினால் மாசற்ற தம் புகழினை நிறுத்தல் முற்றுந்துறந்த முனிவர்க்கும் ஆகாது என்கிறார் கபிலர்
(குறிஞ்சி.13-18). செயல்களுக்கு மனதும் அதில் தோன்றும் எண்ணங்களும் அடிப்படை என்பதால்,
‘மனத்துக்கண்
மாசிலனாதல் அனைத்து அறன்’
என்கிறார் வள்ளுவர்.
தனி
வாழ்க்கையில் அறக்கோணல் ஏற்படுமாயின், அது சமுதாயத்திற்கு
ஊறு பயக்குமென்ற நம்பிக்கை
அக்காலத்திலிருந்தது. தம் பெற்றோர் தன்னை நொதுமலர்க்கு வரைந்தால் அவ்வறமில்
செயலால் வள்ளிக் கிழங்கும் கீழ்வீழா; மலைமிசைத் தேனுந்தோன்றா
என்று எண்ணுகிறாள் தலைமகள்(கலி.39:11-14). அறக்கோணல்
தெய்வக்குத்தமாக கருதப்பட்டது.
அறமும் நம்பிக்கையும்
அறம் இயற்கை
நிகழ்வுகளோடும், சமூகத்தில் நிகழும் நன்மை தீமைகளோடும் பொருத்திப்பார்க்கப்பட்டது.
சான்றாக, அகவாழ்வில் ஆடவர்க்கான அறத்தில் முதன்மையானதாக வலியுறுத்தப்பட்ட ‘புணர்ந்தாரைப் பிரியாமை’ என்பதைக் கூறலாம். தலைவன்-தலைவி
களவொழுக்கத்தில் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்ததற்கு எந்தவொரு சாட்சியும் இல்லை.
இந்நிலையில் ‘புணர்ந்தாரைப் பிரியாமை’ என்ற ஆடவர்க்கான அறக்கோட்பாடே சமூக
விழுமியமாக அமைந்தது. சமூகம் ஏற்றுக்கொண்ட அறங்களை மீறுவது
இயற்கைக்கு எதிரான செயலாகவும், தெய்வக் குற்றமாகவும் வலியுறுத்தப்பட்டது. இது மிக நுட்பமான சமூக உளவியலாகும். எனவேதான், சூள் பொய்த்தான் மலையில்
எப்படி அருவி வீழும் என்கிறாள் ஒரு தலைவி.
குன்றகல்
நன்னாடன் வாய்மையில் பொய் தோன்றில்
திங்களுள்
தீ தோன்றியற்று (குறிஞ்சிக்கலி,5)
எனப் பதில் மொழிகிறாள்
தலைவி. இந்நிலையிலேயே,
‘போற்றுதல் என்பது
புணர்ந்தாரைப் பிரியாமை’ (கலி.நெய்.16)
என்ற அறக்கோட்பாடு
உருவாக்கப்படுகிறது. பெண்ணோடு பழகிவிட்டு இல்லையென்று கூறி ஏமாற்றும் அறம் மீறலுக்கு, பொதுமக்களின் முன்னிலையில்
தண்டனையும் வழங்கப்பட்டது(அகம்.526).
அறத்தொடு
நிற்றலும்
சமூக உளவியலும்
சங்க
இலக்கியங்கள் சுட்டுகிற களவு வாழ்க்கையில் எது அறம், எது அறம் அன்று என்பது
குறித்த எதிர்நிலை கருத்துகள், விவாதங்கள் காணப்படுகின்றன. ‘அறனில் அன்னை’ என்ற
சொல்லாட்சியும் ‘அறனிலாளன்’ என்ற சொல்லாட்சியும் நோக்கவேண்டியவை. ‘அறனில் அன்னை’
என்பது தலைவியின் தாயையும் ‘அறனிலாளன்’ என்பது தலைமகனையும் குறிப்பன.
களவு வாழ்க்கையை அனுமதிக்காத அன்னை, தலைவியின் பார்வையில் அறம் அற்றவளாகிறாள். தினைப்புனம் காக்க சென்றால் தலைவனைச் சந்திக்கலாம்; ஆனால் தாய் தலைவியைத் தினைப்புனம் காக்க அனுமதிக்கவில்லை. அனுமதிக்காத அன்னையைத் தலைவி அறனில் அன்னை என்கிறாள்(அகம்.302). தலைவன் தலைவி உறவு பற்றி ஊரில் அலர் தோன்றுகிறது; அதனால் அன்னை தலைவியை இற்செறிக்கிறாள்; அலர் கூறும் ஊரும் அறமில்லாதது; இச்செறிக்கும் அன்னையும் அறமற்றவள் (குறு.262; நற்.63) என்பது தலைவியின் கோபம். எனவே, ‘புலிகள் வழங்கும் மலைகள் பிற்பட உன்மகள் சுரங்களைக் கடந்து தலைவனுடன் சென்றனள் என்று அறனில் அன்னைக்குக் கூறுங்கள்’ என்று வழிப்போக்கரிடம் கூறுகிறாள் உடன்போக்கு மேற்கொண்ட ஒரு தலைவி (ஐங்.385).
இதற்கு எதிர்நிலையாக தாயின் மனநிலை அமைகிறது. தலைவன் தலைவி உடன்போக்கு மேற்கொள்கின்றனர். அவர்கள் சென்ற வழியோ கொடிய பாலைநிலம். ‘அந்தக் பாலை நிலத்தில் அறனிலாளன் ஆகிய தலைவன் தோண்டிய கலங்கிய நீரைத் தலைவி அருந்தித் துன்புறுவாளோ’ என்று தாய் புலம்புகிறாள். இங்கு, தாயின் பார்வையில் தலைவன் அறனில்லாதவன் ஆகிறான் (அகம்.207). அதேபோல ‘அறனில்லாதவனோடு சென்றாளே’ என்று தலைவி பற்றிப் பிறிதொரு தாய் கலக்கம் உறுகிறாள் (அகம்.25). இங்குப் பெற்றோரையும் உறவினர்களையும் பிரித்து தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன் அறனிலாதவன் ஆகிறான்.
மேலும், ‘என் மகளை உடன் போக்குச் செல்லக் காரணமான ஊழ் அறம் அற்றது; அந்த அறனில் ஊழ், காட்டிடை எரியில் வெந்து ஒழிவதாக’ என்று ஒருதாய் சாபம் இடுகிறார் (ஐங்.376). அதேபோல, தலைவி தலைவனுடன் உடன் போக்கினை மேற்கொள்கிறாள்; இதனை அறிந்த அன்னை அறத்தினை வெறுத்துப் பழித்து உரைக்கிறாள் (ஐங்.393).
ஆக, களவு வாழ்க்கையில் உடன்போக்கு என்பது காதலர் பார்வையில் அறமாகக் தெரிகிறது; பெற்றோர் பார்வையில் அது அறமற்றதாகத் தெரிகிறது. உடன்போக்கு மேற்கொள்ளும் தலைவன், தலைவியின் பெற்றோர் பார்வையில் அறமில்லாதவன் ஆகிறான். களவு வாழ்க்கையைத் தடைசெய்யும் தாய் தலைவியின் பார்வையில் அறமற்றவள் ஆகிறாள். இந்நிலையில் அறம் எது என்ற வினா எழுகிறது. தலைவன் தலைவி களவு வாழ்க்கையை வெளிப்படுத்தும் தோழியின் செயற்பாட்டை ‘அறத்தொடு நிற்றல்’ என்கிறது இலக்கணம். இங்கு அறத்தொடு நிற்றல் என்பது களவு வாழ்க்கையை கற்பு வாழ்க்கையை நோக்கி நகர்த்துதல் ஆகிறது; தலைவியின் காதலைப் பெற்றோர்க்கும் உறவினர்க்கும் உணர்த்துதல் ஆகிறது. அவ்வாறு அறத்தொடு நிற்கும் தோழி ஒருத்தி காதலர் களவு வாழ்க்கையை அனுமதிக்காத மலை வாழ்நரை ‘அல்ல புரிந்து ஒழுகுவோர்’(கலி.39) என்கிறாள். இங்கு ஊரார் அறமற்றவர்களாகின்றனர். களவு வாழ்க்கையைத் தடை செய்வதால் ‘வள்ளிக்கிழங்கு விளையாது, மலையில் தேன் கூடு கட்டாது, தினைப்புனத்தில் தினைக்கதிர்கள் விளையாது’ என்கிறாள் (கலி.39). அறம் வழுவுதல் இங்குத் தெய்வக் குற்றமாகிறது.
இல்லறத்தில் நல்லறம்
கற்பு வாழ்க்கை, கொடுப்போர் பெறுவோர் என்ற முறைமையின் அடிப்படையிலான
முதல்நிலை திருமண நிகழ்வோடோ அல்லது தலைவன்-தலைவியுடனான காதல் என்ற முறைமையின்
அடிப்படையில் உடன்போக்கு என்ற இரண்டாம் நிலை நிகழ்வோடோ தொடங்குகிறது.
முறைப்படுத்தப்பட்ட திருமண நிகழ்வாயினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்போக்கு
நிகழ்வாயினும் அதற்குப் பின்னான கற்பு வாழ்வில் தலைமாந்தர்களுக்கான சில அறங்கள் அறிவுறுத்தப்பட்டன.
ஒன்றன்
கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார்
வாழ்க்கையே வாழ்க்கை (கலி.9.23-24)
என்று, தலைவன் தலைவிக்கான எண்ண ஒற்றுமை சுட்டப்பட்டது. ஆகவே, தலைவன் தலைவியின் ஒன்றிய வாழ்க்கைக்கும், திருமண வாழ்வின் நோக்கத்திற்கும், சுற்றத்தின் உயர்விற்கும், சமூக நலனிற்குமாக தலைவன் தலைவியிடத்தே இருக்க வேண்டிய அறச் செயல்பாடுகள் முன்னிறுத்தப்படுகின்றன.
மேலும்,
தலைவியைப் கூடும்முன் காட்டுகிற அன்பு, களவில்
அவளைப் பிரிந்திருக்கிற சூழலில் வெளிப்படுத்துகிற அன்பு, அவளோடு நிரந்தரமாக
கற்புவாழ்வில் சேர்ந்தபின்பும் மாறாமல் இருக்க வேண்டும் எனத் தலைவனுக்கு வலியுறுத்தப்பட்டது. உடன்போக்கு மேற்கொள்ளும்
சூழலில் தலைவனிடன் தோழி கூறுவதாக கீழ்க்கண்ட பாடல் அமைகிறது.
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்மனர் மேனி மணியில் தாழ்ந்த
நன்னெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி (நற்.10)
இதில், தலைவியல் மார்புகள் தளர்ச்சியுற்ற காலத்தும், கரிய நெடிய கூந்தல் நரை எய்திய முதுமைக் காலத்தும், தலைவி மீதுகொண்டிருக்கிற அன்பு மாறாமல் இருக்க வேண்டும் என்று தலைவனிடம் வேண்டுகிறாள் தோழி. எனவே, தலைவியை என்றும் பிரியாமல் இருப்பதும், மாறாத அன்போடு இருப்பதும் இல்லறத்தின் நல்லறமாகச் சுட்டப்படுகிறது.
அறவழிகளாவன இல்லறம், துறவறம் இவ்விருவகை அறங்களுள் சிறந்தது எது என்பது
தொடர்ந்துவரும் வினா. இதற்கு,
காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல்.கற்பு.190)
என்று விளக்கமளிக்கிறார் தொல்காப்பியர்.
இதில், இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து, பெருமை
பொருந்திய மக்களுடன் நிறைந்து, அறத்தினைப் புரிகின்ற
சுற்றத்தோடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய வாழ்க்கை முறையினையும், நன்னெறியினையும் சமூகத்திற்குப் பயிற்றுவித்தல், அவர்கள்
வாழ்ந்ததன் பயனாகும் என்கிறார். இதையே,
‘ஆற்றின் ஒழுக்கி
அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
(குறள்.48)
என விளக்குகிறார் வள்ளுவரும்.
பொருள் தேட்டமும் சமூக அறமும்
களவு, கற்பு என்ற இரு நிலைகளிலுமே பிரிவிற்கான இலக்கணத்தை வகுக்கிறார் தொல்காப்பியர். இரண்டிற்குமான பிரிவிலும் காரணங்களும், கால வரையறைகளும் உண்டு. ஆயினும் களவு கற்பு இருநிலைகளிலுமே பிரிவைத் தலைவி ஏற்றுக்கொள்வதில்லை. எச்சூழலிலும் தலைவன் உடன் இருக்கவேண்டும் என்ற தலைவியின் எண்ணமும், எவ்வகைச் செல்வத்தினும் தலைவியுடன் இருப்பதே சிறந்தது என்ற தலைவனின் எண்ணமும் கற்புக் கால நிகழ்வுகளில் பதிவுசெய்யப்படுகிறது.
தலைவியைப் பிரிந்து பொருள்தேடச் செல்லுதல் அறமற்றதாக தலைவியால்
சுட்டப்படுகிறது. இல்லறத்திற்குத் தேவையான பொருளைத் தேடுதல் ஆடவர்க் கடமை ஆயினும்,
அக்கடமையைத் தலைவி உணர்ந்திருப்பினும்,
அன்பின் காரணமாக, தலைவனை அறனிலாளன் என்கிறார் தலைவி.
‘நம் நோய்
அறியா அறனில்லாளர்’ (அகம்.294)
பொருள் தேடுதல் போன்ற காரணங்கள் தலைவியின் அன்பினால் அறமற்றதாகச் சுட்டப்படினும், சமூக நோக்கில் அவ்வாறு எண்ணப்படவில்லை. தலைவியைச் அமைதிப்படுத்திவிட்டு, பொருள்தேடச் செல்லும் தலைவனைச் சிறந்த வினையாளனாகக் காட்டுகிறது சமூகம். தான் காதலிக்கும் தலைவியைத் தவறாது மணக்க உறுதி கூறும் தலைவனொருவன்,
விருந்துண்டு எஞ்சிய
மிச்சில் பெருந்தகை
நின்னொடு உண்டலும்
புரைவது என்று ஆங்கு
அறம்புணை யாகத் தேற்றிப்
பிறங்குமலை
மீமிசைக் கடவுள்
வாழ்த்திக் கைதொழுது (குறிஞ்சி.206-209)
அமைகிறான்.
வருவோர்க்கெல்லாம் வரையாது நல்லுணவு அளித்தல் இல்லறத்தின் கடமைகளுள் தலையாய
ஒன்றென்று கருதியிருந்தனர். விருந்தினர் உண்டு எஞ்சிய மிச்சிலை உண்பதில் நிறைவு
கொண்டனர். அத்தகைய இல்லறத்தினை நடத்துதற்காகவே தலைவியை மணமுடித்தல் வேண்டும் என்கிறான் இத்தலைவன். இதற்குப் பொருள்
இன்றியமையாதது. ஆகவே, ஆடவர் பொருள்தேடப் பரிந்துசெல்லுதல் சமூக நோக்கில் அறமாகக் கருதப்பட்டது.
எனவே,
வினையே ஆடவர்க் குயிரே (குறு.135)
என்னும் அறம் வலியுறுத்தப்பட்டது. அதோடில்லாமல், வினையாற்றாமல் மரபுவழிச் செல்வத்தைக்கொண்டு வாழும் வாழ்வை உடையவனை, சோம்பியிருக்கும் ஆடவனை,
குடுபுரவு
இரக்கும் கூரில் ஆண்மை (புறம்.75)
என்று பழிக்கிறது.
வினைமேற்கொள்பனின்
செயல், பிறர்க்கென முயலும் பேரருள் (நற்.186) என்று போற்றப்பட்டது.
பொருள் தேடி இன்புற்று வாழ்தல் நோக்கம். ஆயினும் அறமே வழியாதல்
வேண்டும் என்னும் கொள்கை நிலவியது.
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல் (புறம்.31)
பழியோடு
வரும் இன்பமும் (புறம்.112:11-12), அறத்திற்கு எதிராக வரும் பொருளும்
வெறுக்கப்பட்டது.
அறக் கழிவுடையன பொருட்பயம்படவரின்
வழக்கென வழங்கலும் பதித்தன்று என்ப (1164)
குடும்பம்
காத்தல் ஆடவர்
அறம்
மனைவி மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு என்பது ஆடவரிடம்
ஒப்படைக்கப்பட்டது. இது கடமையாகவும் அறமாகவும் உணர்த்தப்பட்டது. வேட்டையாட வந்த
வீரனை வழி மறித்து, தன் துணையையும் குட்டிகளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு,
ஆயுதத்தோடு வேட்டையாட வந்த வீரனை வழிமறித்து எதிர்கொண்ட
ஆண்பன்றியை,
‘அரும்புழை முடுக்கர் ஆட்குறித்து நின்ற... (அகம்.248)
என்ற பாடல் காட்டுகிறது. ஒரு
மனிதன் தன்மனைவி மக்களைக் காக்க நினைக்கின்றான். ஓர் ஆண் பன்றி தன் பெண்ணையும்
குட்டிகளையும் காப்பாற்றும் பொருட்டு வீரத்தோடு செயல்படுகிறது. இங்கு அஃறிணை உயிரின் வாயிலாக ஆடவரின் பொறுப்பும் அறமும் வலியுறுத்தப்படுகிறது.
சமூகக்
கட்டமைப்பில் அறத்தின் பங்களிப்பு
நீதியும், நட்பும், இழிசெயல் விலக்கலாகிய நாணும், பிறர்க்கும் தமக்கும் பயன்படும் திறமாகிய பயனும், நற்குணங்கள்
நிறைந்த பண்பும், பிறர் தன்மை அறிந்து ஒழுகும் பாடும் ஆகிய
ஆறு பண்புகளைத் தனிமனித ஒழுக்கங்களாக அற்றைச் சமூகம் அறிவுறுத்தியது. இதனை,
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் (நற்.160:1-2)
என்கிறது இலக்கியம். ஒரு
நாட்டின் நில அமைப்போ,
இயற்கையில் அமையப்பெற்ற வளங்களோ அந்நாட்டை நல்லநாடாக முன்னெடுத்துச்
செல்வதில்லை. அந்நாட்டில் வாழும் மனிதர்களின் செயல்களே
அச்சமூகத்தை முன்னேற்றுகின்றன என்பதை,
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையோ கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம். 187)
என்று சுட்டுவார்
ஔவையார். எனவே,
நல்லது
செய்தல்
ஆற்றீர்
ஆயினும்
அல்லது செய்தல்
ஓம்புமின்,
அதுதான்
எல்லோரும் உவப்பது,
அன்றியும்
நல்லாற்றுப் படூஉம்
நெறியும்மார்
அதுவே (புறம்.195;
1– 9)
என்று வலியுறுத்தப்பெற்றது.
நிறைவு
புணர்ந்தாரைப்
பிரியாமை, நன்றி மறவாமை, பிறர் துன்பத்தையும் தன் துன்பமாக எண்ணுதல், சொல்லிய சொல்லில்
நிற்றல், வினை ஆளுமை, எண்ணத் தூய்மை, சுற்றம் காத்தல், விருந்தோம்பல் என்பனவெல்லாம்
சமூகத்தைக் கட்டமைக்கும் அறக்கோட்பாடுகளாகச் சங்கச் சமூகத்தால் முன்னிறுத்தப்பட்டன.
தனி மனிதனும், அரசும் தங்களுக்கான அறங்களில் வழுவாது நிற்க அறிவுறுத்தப்பட்டது. அறம்
வழுவும் தனியனைச் சமூகம் தண்டித்தது. அறம் போற்றா அரசனைப் புலவர் பாடாது ஒதுக்கினர்.
சங்க இலக்கியத்திற்குப்
பின்வந்த ஆசாரக்கோவை,
நன்றியறிதல்
பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத
எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புர
வாற்ற வறிதல் அறிவுடைமைய
நல்லினத்
தாரோடு நட்டல் இவையெட்டும்
சொல்லிய
ஆசார வித்து
(ஆ.கோ.)
என்று, அறச்செயல்களைப்
பட்டியலிடுகிறது. மணிமேகலைக் காப்பியமோ,
அறமெனப்
படுவது யாதெனக் கேட்பின்
மறவாது
இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும்
உடையும் உறையுளும் அல்லது
கண்டதுஇல்
என்று, இந்த உலகத்து உயர்களுக்கெல்லாம் உணவும், உடையும், உறையும் கிடைக்கச் செய்வதே சிறந்த அறம் என்கிறது. எனவே, அறம் என்னும் சொல் காலந்தோறும் சமூகச் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய பொருள்களைப் பெற்று வந்துள்ளதை அறியமுடிகிறது.
அறம்
என்பது வாழ்வின் அடிப்படை ஒழுக்கத்தைக் குறிப்பதாயினும் அது பல்வேறு பொருண்மைகளை அகத்தடக்கிய
நுட்பமும் செறிவும் கொண்டதாகத் திகழ்கிறது. அறத்தை வடிவமைப்பதில் சமூக உளவியல் முன்னிற்கின்றது.
எனவே, மனிதன் தன் வாழ்வுச் சிறப்புக்கும், சமூக ஒழுங்கிற்கும் அமைத்துக்கொண்ட ஒழுக்கநெறிகள்
அனைத்தும் அறம் என்று கொள்ள முடியும். மேலாக,
முகத்தான் அமர்ந்த இனிதுநோக்கி
அகத்தானாம்
இன்சொ லினதே அறம் (குறள். 93)
என்று வள்ளுவர் உரைப்பதைப்போல, முகம் மலர்ந்து, இனிது நோக்கி, உள்ளத்திலிருந்து
இன்சொற்களைப் பேசுதே இன்றைய நிலையில் தேவையான, சிறந்த அறமாக உள்ளது.
சுருக்கக்
குறியீட்டு விளக்கம்
தி.நீ.இ.,ப. 23 - திருக்குறள் நீதி இலக்கியம்
Dr. A. Manavazhahan,
Associate Professor, Sociology, Art & Culture, International Institute of
Tamil Studies, Chennai -113.
தமிழியல்
www.thamizhiyal.com