மறந்துபோன மரபு
விழாக்கள்
பொங்கல் / உழவர் திருநாள் / தமிழர் திருநாள்
முனைவர்
ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
tamilmano77@gmail.com
இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழருடையது.
வாழ்வு கொடுத்து வளமளிக்கும் இயற்கையைக் காத்தனர்.
உலக உயிர்களுக்கெல்லாம் மூலமான ஞாயிறையும்
திங்களையும் மழையையும் போற்றினர். மரங்களையும் தெய்வங்களாக எண்ணி இயற்கையோடு இணைந்தனர்.
உலக மாந்தரினம் பலவும் ஆடையின்றி அரைமனிதராக
அலைந்து திரிந்த வாழ்வியல் சூழலில், மானிட வாழ்விற்கும்
வளர்ச்சிக்கும் அடிப்படையாம் வேளாண்மையைக் கண்டறிந்து, அதில் மேலாண்மை செய்தவர்கள்
தமிழர்கள். வேளாண் தொழிலோடும் உழவோடும் தொடர்புடைய கதிரவனையும், மழையையும், மாடுகளையும்
தமிழர் கொண்டாடினர். அவற்றிற்கு விழாக்கள் கண்டு நெஞ்சம் நிறைந்தனர். ஆம், வளமைக்கும்
நன்றிக்குமான விழாவான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பழமையும் சிறப்பும் தனித்துவமும்
மிக்கது.
தைப் பொங்கல், தமிழர் திருநாள், அறுவடைத்
திருநாள், உழவர் திருநாள் எனப் பலவாறு அழைக்கப்படும்
பொங்கல் விழாவானது, நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தொடர் நிகழ்வாகும். முதல் நாள்
போகி, அடுத்த நாள் கதிரவன் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம்
நாள் காணும் பொங்கல் அல்லது கரிநாள்.
மார்கழி
இறுதி நாள் போகி (போக்கி). ஆடிப்பட்ட வேளாண்மை
மார்கழியில் களம் கண்டு, திங்கள் இறுதியில் வீடு சேர்த்தலின் விழாக்கோலமே இப்போகி. பழையன கழிதல் என்பதற்கேற்ப இல்லத்தைத் தூய்மைப்படுத்துதல், வெள்ளையடித்தல், செம்மண் பட்டை தீட்டுதல் போன்றன இதன்
முன் நிகழ்வுகளாகும். வேளாண் குடிகளின் வாழ்வியல் சடங்குகள் பலவும் இந்நாளில்
நிகழ்த்தப் பெறுகின்றன. இந்நாளில் முன்னோர் வழிபாடும் மேற்கொள்ளப்படுகிறது. புது வருவாயான
அரிசியில் மாவிடித்து விளக்கேற்றுவர். போகி நாள் இரவில்
இறைவழிபாடு செய்யப்பட்ட பூசைப் பொருட்களைக் கொண்டு மறுநாள் விடியற்காலையில் காடு
வளைத்தல் என்ற சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, முதல்நாள் இரவில் பூசையில்
வைக்கப்பட்ட மா, வேம்பு, பூளா பூ (பூளை) ஆகியவற்றின் கொத்துகளைத் தனக்கு உரிமையாக உள்ள
விளைநிலத்தின் நான்கு எல்லைகளிலும் இட்டு, தனக்கான அத்துகளை உழவர் உறுதிசெய்வர்.
இரண்டாம் நாள் கதிரவன் பொங்கல். தைத் திங்களின் முதல்
நாளிது. செங்கதிரோன் வெளித்தோன்றும் முன்பே அடுப்பு மூட்டி, புதுப் பானை உலையில்
புத்தரிசிப் பொங்கல் வைப்பர். காலைக் கதிரவன் வெளித்தோன்றும்போது பொங்கல்
பொங்கவேண்டுமென்பது மரபு. கதிரவன்
வெளித்தோன்றும்போது குலவையிட்டு, பொங்கலோ பொங்கலென ஓசை எழுப்பி, இசை முழக்கி, ஆர்ப்பரித்து
கதிரவனுக்கு நன்றி நவிலும் இயற்கை வழிபாடிது. அரசி மாக்கோலம், கரும்புத் தூண்களில்
மஞ்சள் –வேம்பு – மாவிலை – பூளை பூத்தோரணம் என இல்லங்கள் தோறும் அலங்காரம்
அணிவகுக்கும்.
மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். உலக உருவாக்கத்திற்கு மூலமான
இயற்கைக்கு நன்றி சொன்ன தமிழன், உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையான வேளாண் தொழிலில்
துணைநிற்கும் விலங்குகளுக்கு நன்றி நவிலும் நன்னாளே இந்நாள். உழவனின் வாழ்வியல் மூலதனம்
எருது. உழவனுக்கு எது வாய்க்கிறதோ இல்லையோ தொழிலுக்குத் துணையாக எருதுகள் வாய்க்க
வேண்டும். நல்ல எருதுகள் வாய்க்கப்பெற்ற உழவன் பேறு பெற்றவன். மாட்டுப் பொங்கல் நாளில் எருதுகளையும்
பசுக்களையும் குளிப்பாட்டி, உடலில் வண்ணப் பொடிகளால் அணிசெய்வர். கொம்புகள் சீவி, வண்ணம் தீட்டி அழகுபடுத்துவர். புதுக் கயிறு மாற்றி, சலங்கை
கட்டி, மாலையிட்டு களிப்பர்.
மாட்டுப் பொங்கல் நாளில், சாணத்தால் சிறு தொட்டிகள் நான்கு
கட்டி, ஒன்பது கோள்களைக் குறிக்கும் வகையில் அதன் ஒவ்வொரு முனையிலும் சாணி
பிள்ளையார் வைப்பர். ஒரு முனையில் மட்டும் மஞ்சள் பிள்ளையார் அலங்கரிக்கும். சிறு
தொட்டிகள் பசும் பாலால் நிரப்பப்பட்டு, பாலில் மலர்களும், துளசியும், அருகம்
புல்லும் தூவப்படும். தொட்டிகளின் தலைப்பகுதியில் உழவுக் கருவிகள், உலக்கை,
அலங்கரிக்கப்பட்ட தடி, கதிர் அரிவாள், களைகொட்டு, மண்வெட்டி, கரும்பு, மஞ்சள்,
பூளா பூ (பூளை), ஆவாரம் பூ போன்றவை பயன்பாட்டு
நோக்கிலும் வளமை நோக்கிலும் வைக்கப்படும். பொங்கல் சமைத்து, அது பொங்குகிற போது
பொங்கலோ பொங்கலென குலவையிடுவர்.
சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்
ஆகிவற்றைப் படையல் செய்து வழிபட்டு, அதனை வெல்லம், வாழைப்பழத்துடன் கலந்து
மாடுகளுக்கு ஊட்டி மகிழ்வர். ஊட்டும்பொழுதும்
பொங்கலோ பொங்கலென முழங்குதல் மரபு. சிறுபிள்ளைகள் சிறுபறை இசைத்து மகிழ்வர். ஊரில், அலங்கரிக்கப்பட்ட எருதுகளின்
உலாவும் நிகழ்த்தப்பெறும்.
நான்காம் நாள் காணும் பொங்கல். இதனை உழவர்கள் தங்களுக்கான
ஓய்வு நாளாக, விளையாட்டுகளால் மகிழ்ந்திருக்கும் நாளாகக் கொள்கின்றனர். உறவினரோடும்
நண்பரோடும் விழாக்களைக் கண்டு மகிழ்வர். கட்டிளங்
காளையர் காளையடுக்கும் ஏறு
தழுவுதல் எனும் வீர விளையாட்டு இந்நாளில் நிகழ்த்தப்பெறும்.
நகரமயமாதலில்
உழவு
மாடுகள் இல்லை; உழு கருவிகள் இல்லை; புதுநெல் வரவு இல்லை; புதுப்பானைப்
பொங்கல்
இல்லை; உறவுகள் உடன் இல்லை; ஏறு தழுவுதல் எதுவும் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் சமையலறையில்
மின்சார அடுப்பேற்றி, உயர் அழுத்தச் சமையல் கலனில் (குக்கர்) பொங்கல் வைத்துக்கொண்டிருக்கிறாள்
என் மனையாள். தொலைக்காட்சியில் நடிகைகள் பல்லிளிக்கும் பொங்கல் கேளிக்கை நிகழ்ச்சிகளை
வெறித்தபடி, எம் பிள்ளைகளுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறேன் என் பாட்டன் பாட்டி இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவிட்டுப் போன பாங்கை.
அகத்தியமும்
தொல்காப்பியமும்
மேல்கணக்கும்
கீழ்க்கணக்கும்
பெருங்
காப்பியமும் சிறு காப்பியமும்
பக்தி
இலக்கியமும் பல்துறை நுட்பங்களும்
சித்தர்
இலக்கியமும் சிற்றிலக்கியமும்
கொன்றெரித்து
தமிழ்ப்
பெருமையும் தன்மானமும்
வீரமும்
விவேகமும்
அறிவும்
அரசியலும்
ஆற்றலும்
ஆளுமையும் என
அனைத்தையும்
செரித்துத்
தொலைத்த எம்மக்கள்...
இன்று
இலவசங்களில்
ஏமாந்தவற்றைப் போகியாகத்
தெருவெங்கும்
எரித்துக்கொண்டிருக்கின்றனர்
பாலை
நிலத்துக் கொற்றவைமுன்
துடி
இசைத்துக் கூத்தாடிய வீரனைப்போல
நகரத்து
வீதியெங்கும்
சிறுபறை
முழக்கி
எக்காளமிட்டுச்
செல்கின்றனர்
எம்
சிறுவர்கள்.
ஆ.மணவழகன்
tamilmano77@gmail.com