சனி, 19 செப்டம்பர், 2015

பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும் - Dr.A.Manavazhahan

நூல்                - பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்
ஆசிரியர்        - முனைவர் ஆ.மணவழகன் – Dr. A. Manavazhahan
வெளியீடு      - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113. 2015.

அணிந்துரை
முனைவர் கோ.விசயராகவன்

            சங்க இலக்கியங்கள், தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடுவாழ்வியல் போன்றவற்றை உலகிற்கு உணர்த்துகின்றன.   தமிழ்ச் சமூகம்  அறிந்து வைத்திருந்த பல்வேறு அறிவு நுட்பங்களுக்கும் இவ்விலக்கியங்களே முதன்மைச் சான்றுகளாகவும் விளங்குகின்றன. இவ்வுண்மைகளை, இலக்கியங்கள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன. 

            அவ்வகையில், சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ள கீழ்க்கணக்கு தொடர்பான ஆய்வு நூலாக ‘பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ என்ற இந்நூல் அமைந்துள்ளது. உலகப் பொதுமறையாம் திருக்குறள் தவிர்த்து, ஏனைய கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் அறக்கோட்பாட்டு நோக்கிலேயே அணுகப்பட்டுள்ளன. இச்சூழலில் இந்நூல், சங்கம் மருவிய கால நூல்களில் காணப்படுகிற பழந்தமிழரின் மரபு அறிவுப் பதிவுகளை  மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.

            இந்நூலில், வேளாண் அறிவும் மரபு நுட்பங்களும், மருத்துவ நுட்பங்களும் உடல்நல மேலாண்மையும், வானியல் அறிவும் நீர் மேலாண்மையும், கட்டடக்கலை நுட்பங்களும் பயன்பாட்டுப் பொருள்களும், உயிரியல் அறிவும் சூழலியல் மேலாண்மையும்உலோகவியல் நுட்பங்களும் கருவிகளும், அரசியல் மேலாண்மையும் ஆளுமைப் பண்பும், சட்டவியல் அணுகுமுறைகள் என்ற பெருந்தலைப்புகளில் தமிழர் அறிந்திருந்த பல்வேறு துறைகளும் மரபு நுட்பங்களும் தக்க சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன.   இதன்வழிசங்கம் மருவிய காலத்தில் பல்வேறு அறிவுத் துறைகள் சிறந்திருந்ததையும், அத்துறைகளில் பல்வேறு நுட்பங்கள் கையாளப்பட்டதையும் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.   தமிழர்களின் மரபு நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்ய சிறந்த தரவு நூலாக இது அமைவதோடு, ‘சங்கம் மருவிய காலம் இருண்ட காலம்’ என்ற பொதுவான கூற்றையும் உடைக்கிறது.


            நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் அணுகுவதோடுஅக்காலச் சமூகத்தின் மரபு நுட்பங்களையும் மேலாண்மைச் சிந்தனைகளையும் வெளிக்கொண்டுவரும் அரிய முயற்சியில்   தொடர்ந்து  ஈடுபட்டு வருபவர். அந்த வகையில், ‘பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ எனும் தலைப்பில் ஆய்வுத் திட்டம் மேற்கொண்டு, அதனை நூலாக வடித்துள்ள  முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு  எனது பாராட்டுகள்.    

தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம் - அறிவியல் - சமூகம்

நூல்                - தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம் (ஆய்வு நூல்)
ஆசிரியர்        - முனைவர் ஆ. மணவழகன் – Dr.A.Manavazhahan
வெளியீடு      - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113. 2013.

 (தமிழ்நாடு அரசின் சிறந்த ஆய்வு நூலுக்கான பரிசு பெற்றது)



அணிந்துரை

முனைவர் கோ. விசயராகவன், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

பழந்தமிழ்ச் சமூகம் அறிவை உடைமையாகக் கொண்டது. அது தம் தேடல்களை அரசியல், சமூகவியல், பொருளாதாரம், அறிவியல், அறவியல், கலைகள் என நாள்தோறும் விரிவுபடுத்தியது. தேடலின் முடிவுகளைப் பொதுமன்றங்களில் வைத்து முறைப்படி பதிவு செய்தது. அப்பதிவுகள் பழந்தமிழ் இலக்கியங்களாக நம்முன் ஒளிர்கின்றன. இன்றைக்கும் உலகம் வியந்து போற்றுகிற கருத்துக் கருவூலமாக அவை திகழ்கின்றன. அதனாலேயே பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகள் இன்றும் பல்வேறு கோணங்களில், புதுப்புது ஆய்வுப் பொருண்மைகளோடு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

அவ்வகையில், பழந்தமிழ் இலக்கிய ஆய்வு குறித்த பொருண்மைகளான இயற்கை, வருணனை, உவமை, தலைவன், தலைவி, தோழி, காதல், நட்பு என்பனவற்றிலிருந்து விலகி சமூகம், தொழில்கள், மேலாண்மை, மனிதவளம், தொழில்நுட்பம், எதிர்காலவியல், தொலைநோக்கு என இன்று நவீனத் தேடல்களோடு புதிய தடங்களில் ஆய்வுகள் வளர்ந்திருப்பது சிறப்பு. அவ்வகையில், எவ்வகைப் பொருண்மைக்கும் தேடலுக்கும் ஆய்வுக் களத்தை அமைத்துக் கொடுக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள் என்றும் வியப்பிற்குரியனவே.

நூலாசிரியரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் இணைப்பேராசிரியருமான முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களை நவீனப் பொருண்மைகளோடு அணுகுபவர். செவ்வியல் இலக்கிய ஆய்வுகளுக்காகக் குடியரசுத் தலைவரின் ‘இளம் ஆய்வு அறிஞர்’ விருதினைப் பெற்றவர். பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, சங்க இலக்கியத்தில் மேலாண்மை, பழந்தமிழர் தொழில்நுட்பம், தொலைநோக்கு போன்ற இவரின் முந்தைய நூல்களும் நூற்பொருண்மைகளும் பழந்தமிழ் இலக்கியங்களை நவீனப் பார்வையில் அணுகும் ஆய்வுமுறைக்குச் சான்றுகள். அவ்வகையில், இந்நூலும் பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வுக் களமாகக் கொண்டு புதிய ஆய்வுப் பொருண்மைகளோடு எழுதப்பட்டுள்ளது சிறப்பு.

மகளிர் தொழில்முனைவோர், திணைசார் வாழ்வியல், பொறியியல் நுட்பம், மனிதவள மேம்பாடு, ஆளுமைத்திறன், மருத்துவம், உடல்நல மேலாண்மை, பல்துறை நுட்பம், சமூக மதிப்பீடு, சமயநிலை, அறம், மரபு அறிவு எனப் பன்முகத் தன்மைகளோடு ஆராயப்பட்ட கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களைக் களமாகக் கொண்டு ஆய்வினை மேற்கொள்ள விழையும் ஆய்வாளர்களுக்கு இப்பொருண்மைகள் மேலாய்வுக் களங்களாகத் திகழும். 

நூலறிமுகம்

பழந்தமிழ் இலக்கியங்கள் பரந்து விரிந்த ஆழ்கடலாக நம்முன் காட்சியளிக்கின்றன. அக்கடல் சிலரை அன்போடு அரவணைக்கிறது;  சிலரைப் பயமுறுத்துகிறது. அது எப்போதும் வியப்பிற்குரியதாகவே  இருக்கிறது.

அந்த ஆழ்கடலுள்  விலைமதிப்பற்ற பலவித நன்மணிகள் புதைந்து கிடக்கின்றன. ஆர்வமும் விருப்பமும் கொண்டோர் அவற்றைத் தேடி காலந்தோறும் அக்கடலில் நீந்திக்கொண்டே இருக்கின்றனர்; மூழ்கிமூழ்கி முயற்சித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களின் முயற்சிக்கேற்ப அறிவுச் செல்வங்களோடு கரை சேர்க்கிறது அலை. ஆழம் கண்டு அஞ்சுவோர் சிலர், ‘என்ன இருக்கிறது இதில்’? என்று குறைகூறி, கடலையும் நீந்துபவரையும் வெறுப்போடு பார்த்துச் செல்கின்றனர். இலக்கியக் கடல், அவர்களுக்கும் சேர்த்தே கருத்து மணிகளை விதைத்து வைத்திருக்கிறது.

கடலில் நீந்தவில்லை என்றாலும் கால்களை நனைத்துப் பார்த்தவன் என்கிற மகிழ்ச்சி எனக்குள் எப்போதும் உண்டு. கடலையும் அதன் அருமையையும் எனக்கு அறிமுகப் படுத்தியவர்களே அந்தப் பெருமையை எனக்கு வழங்கியோர். அவர்கள் எப்போதும் என் நன்றிக்கு உரியோர்.

பழந்தமிழ் இலக்கியத்தில் இது எனது நான்காவது நூல். இந்நூல், செவ்வியல் இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பழந்தமிழ் நூல்களை ஆய்வுக் களமாகக் கொண்ட பத்து ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்புநூல். அறம், அறிவியல், சமூகம், சமயம், மருத்துவம், மனிதவளம், ஆளுமைத் திறன்  எனப் பலவித நுண்பொருண்மைகளைக் கொண்டது. இக் கட்டுரைகள் முடிவைச் சுட்டுவன அல்ல. மேலும் ஆய்விற்கு வித்திடுவன.

சிலரால்தான் சில நற்செயல்கள் நடந்தேறும். அந்தவகையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அண்மைகாலச் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள். ஆராய்ச்சிப் பணி, அலுவலகப் பணி, மேம்பாட்டுப் பணி என அனைத்திலும் ஒருங்கே கவனம் செலுத்துகிற பன்முக ஆளுமைக்குச் சொந்தக்காரர். இந்நூல் அவரால்தான் வெளிவருகிறது. அவருக்கு என் நன்றியை நவில்கிறேன்.

‘மாதத்திற்கு ஓர் ஆய்வுக் கட்டுரை; ஆண்டிற்கு ஓர் ஆய்வு நூல். இதனை எப்போதும் மனத்தில் வைத்து ஆய்வு செய்யவேண்டும்’ என்று காணுந்தோறும் அறிவுரை கூறுவார் முதுபெரும் தமிழறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள்.  அவரின் சிந்தனையை முறையாகச் செயல்படுத்த முடியவில்லை என்றாலும், என்  நூல்கள் வெளிவருகிற போதெல்லாம் அவரின் அறிவுறுத்தலை எண்ணுகிறேன். அதேபோல், பேசுகிற போதெல்லாம் என் ஆய்வுப் பணிகள் குறித்து கேட்டறிந்து, விரைந்து செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தி வருகிற என்னுடைய பேராசிரியர் முனைவர் அன்னிதாமசு அவர்களையும் நன்றியோடு நினைக்கிறேன்.

அன்புடன்,

ஆ. மணவழகன், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113.

தொலைநோக்கு - Dr.A.Manavazhahan


நூல்                - தொலைநோக்கு
ஆசிரியர்        - முனைவர் ஆ.மணவழகன்- Dr.A.Manavazhahan
வெளியீடு      - அய்யனார் பதிப்பகம், சென்னை 88. 2010

பதிப்புரையிலிருந்து…
நேற்றைய பட்டறிவை அடித்தளமாகக் கொண்டு, இன்றைய தொழில்நுட்ப-மனித வளத்தின் திறத்தால் நாளைய சமூக நலனுக்குத் தேவையானவற்றைச் சிந்தித்தலும், அவற்றை முன்னெடுத்துச் செயலாக்கம் செய்ய முனைதலும் தொலைநோக்காகிறது. இவ்வகைச் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கொண்ட சமூகமே தன் தேவைகளை நிறைவுசெய்து கொள்வதோடு, பிற சமூகத்திற்கும் வழிகாட்டி, தலைமை ஏற்கும் தன்மையைப் பெறுகிறது.

2020-இல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு சமூக ஆர்வலர்களால் இன்று பரவலாக முன்மொழியப்படும் சொல்லே ‘தொலைநோக்கு’ என்பது. இச்சொல்லே இந்நூலிற்கு வேராக அமைந்திருக்கிறது. அவ்வகையில் தொலைநோக்கு என்ற சொல்லிற்கான முழு வரையறையைக் கொடுத்து, இச்சிந்தனையை ஒரு இயக்கமாக மாற்ற முனைந்திருக்கிறார் ஆசிரியர்.

            இன்றைய-நாளைய சமூக நலனிற்கு முன்மொழியப்படும் தொலைநோக்குத் திட்டங்கள் முன்னைச் சமூகத்தின் தொலைநோக்குச் சிந்தனைகளிலிருந்து பெற்றவையே என்பதை மீள்பார்வை பார்த்தலும், மீட்டுருவாக்கம் செய்தலும் இந்நூலின் நோக்கமாக அமைந்துள்ளது.


‘தொலைநோக்கு’ என்ற கலைச்சொல் புதியதாக இருக்கலாம், ஆனால், தொலைநோக்குச் சிந்தனை பழந்தமிழரிடத்து மிகுந்திருந்ததென்பதைப் பழந்தமிழ் இலக்கிய-இலக்கணச் சான்றுகளின் வழி நிறுவியிருப்பது சிறப்பு. கருத்துருவாக்கத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் இக்கால நடப்பியல் வரையிலாக முன்வைக்கப்பட்டுள்ள சான்றுகள் ஆசிரியரின் வாசிப்பனுபவத்திற்கும், தேடலுக்கும் சான்று பகர்கின்றன.

கவிஞர் ஆ.மணவழகனின் கூடாகும் சுள்ளிகள் கவிதைத் தொகுப்பு


நூல்              - கூடாகும் சுள்ளிகள்  (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்        - கவிஞர் ஆ. மணவழகன் (Dr.A.Manavazhahan)
வெளியீடு      - அய்யனார் பதிப்பகம், சென்னை-88. 2010


மணவழகன் கவிதைகள் குறித்து

கூட்டின் அடிவயிற்றில் மெத்தென்ற சிறு பஞ்சு மீது...


கவிஞர் இரா.பச்சியப்பன்

கண்காணாத தூரத்தில் பிழைக்கும்படியான நெடுங்காலம் கடந்த பின்பொழுதொன்றில், பால்ய நண்பனோ ஊர்க்காரனோ எதிர்ப்படும்பொழுது மனசின் அடியாழத்திலிருந்து அப்படியேன் அலையெழும்புகிறது? கரங்கள் பற்றும் தருணத்தில் துளிர்க்கும் கண்ணீரைச் சட்டென்று ஒதுக்கிவிட முடிகிறதா என்ன? தனக்குப் பிடித்தமான ஒன்றை எதிர்பாராத கணத்தில் காண நேர்கிறபோது அவ்வளவு எளிதில் முகம் திருப்பிக்கொள்ள இயலுமா என்ன?

சென்னைக்கு வந்த புதிதில் மாநிலக்கல்லூரியின் பின்புறத்தில் வௌவால்கள் நிறைந்த அந்த ஆலமரத்தை அடிக்கடி போய் ஆச்சர்யம் மீதுற பார்த்திருக்கிறேன். ஊரில் இலுப்பைத் தோப்பில் அப்படித்தான் வௌவால்கள் கொத்துக்கொத்தாய்க் கனிந்திருக்கும். மூங்கில் புதர் வேலியாய் அமைந்த அந்தத் தோப்பில் கங்கையம்மன் அகண்ட கண்களோடு வௌவால்கள் பறப்பதை, விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். வௌவால்களின் முகம் அசப்பில் குழந்தையின் முகம்போலவே தோன்றும். நெடுங்காலத்திற்குப் பிறகு சென்னையில் நுணா மரத்தைப் பார்க்கிறபோதும் அப்படித்தான் நிற்கத் தோன்றியது. கம்மம்பூக்களின் வாடையும், நுணாப் பூக்களின் வாசனையும் தொலைத்த வாழ்வில் எங்காவது அவை தட்டுப்பட்டால் வேறென்னதான் செய்வது?

கவிதைகூட அப்படித்தான் போல. மெல்லிய இசையாய் நமக்குள் தங்கிவிட்ட ஒரு பொழுதை, காலம் ஆற்றிய பெரும் தழும்பை, மழைக்காலத்தில் பழகிய நீச்சலை, நேருக்கு நேர் நின்று ஊழ் துப்பிய எச்சிலை என ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு கவிதையும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. கவிதை பறவைகள் போல. அவை நம்மைப் பொருட்படுத்துவதேயில்லை. அதன் அலகில் இருக்கும் சுள்ளிகளோ, இரையோ நம்மிடமிருந்து யாசித்துப் பெறாதவை. நமக்குப் போல இல்லை. அதற்கென்று எல்லையற்ற வானமும் சிறுகிளையும் வாய்த்திருக்கிறது. பறவைகள்போல கவிதை செய்கிறவர்கள் பாக்கிவான்கள். நள்ளிரவொன்றில் குழல்விளக்கு வெளிச்சத்தில் நண்பர் மணவழகன் கவிதைகளை வாசிக்கிறபோது பறவைகளும் வௌவால்களும் நிறைந்த தோப்பில் நுழைவதுபோலவே உணர்ந்தேன். சருகு மூடிய குளமும் நாவல் மரத்தின் கிளையொன்றிலிருந்து சட்டெனப் பாய்ந்து மீனைக் கொத்தியபடி மறுபடி கிளையமர்ந்து தலைசிலிர்ப்பும் மீன்கொத்தியும், பெரிய மூக்கு விடைக்கும்படி நோக்கும் கங்கையம்மனும் நெடுநாளைக்குப் பிறகு சந்தித்த ஆச்சர்யம்தான்.

சிறியதும் பெரியதுமான சற்றேரக்குறைய எழுபது கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் பணிபுரிந்த தொடக்க காலத்திலிருந்து என்னுடன் அவர் மனமுவந்து பழகிவந்திருக்கிறார். சங்க இலக்கியங்களை வாசித்திருக்கிற, ஆய்ந்திருக்கிற அவரின் ஆழம் நம்மை தூரவே நிறுத்திவைத்து வியக்க வைக்கும். இடையில் முளைக்கும் சிறுபுதரை அழித்து, எழுப்பி வைத்திருக்கிற தயக்க வேலியினை மிதித்துவந்து அவரின் நட்பு வட்டத்தில் நம்மை இணைத்துக் கொண்டதற்கு அவருக்குள் இருக்கிற படைப்பாளி ஒரு பெரும் காரணமாக இருந்திருக்கலாம். இணையத்தில் வெகுகாலமாய்க் கவிதைகள் எழுதிவந்திருக்கிறார். இணையத்தில் அவரின் வாசகர் வட்டம் மிகப்பெரிது.

இளம் ஆய்வாளருக்கான செம்மொழி விருதினைப் பெற்றிருக்கும் ஒருவருக்குள் இன்னும் அந்தக் கம்மங்கொல்லை குருவிகள் பறக்க, காற்றிலாடும் கொல்லை வனப்பு கூடியிருப்பது மிகுந்த ஆச்சர்யம்தான். தனியார் கல்லூரியின் வேலைப்பளுக் கிடையில் இத்தனை சாத்தியங்களைக் கொண்டிருப்பது சாதாரணமானதல்ல.
இந்தத் தொகுப்பினை வசதிக்காக மூன்று வகையாகப் பகுத்துக்கொள்ளலாம். உருகி உருகிக் காதலிக்கும் நெஞ்சத்தின் உணர்வுகள்; இழப்பின் காயத்தின்வழி கசியும் துளிகள்; தனக்கான அரசியலை முழங்கும் பதாகைகள் எனப் பெரும்பான்மையான கவிதைகளை உத்திபிரித்துக்கொள்ளலாம். நெற்கட்டை

அரி அரியாக வைப்பதில் ஓர் அழகு மட்டுமல்ல ஓர் அவசியமும் இருக்கிறது. ஒரே பக்கம் கதிர்வைத்துக் கட்டுக் கட்டமுடியாது. சின்னச்சின்ன கட்டாக்கி கட்டுப்போர் போடுவது ஒருவகை. பென்னைப் பென்னையாய் வைக்கோல் சுமைகட்டி வைக்கோல் போர் போடுவது ஒருவகை. முன்னதில் தனித்தனியாக எடுக்கவேண்டிய அவசியம் இருப்பதுபோலவே பின்னதில் பின்னிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. கவிதையைச் சொல்லியிருக்கிற உத்தியும் அதாவது, கட்டியிருக்கிற பாங்கும் அதனை வரிசைக்கிரமாய்த் தொடுத்திருக்கிற பாங்கும் மிக நுட்பமானது.

சாக்கடை நாற்றத்தோடு கழிவுநீர் ஊற்றுகள்
அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்
பறவைகள் அமர்ந்தறியா செயற்கை மரங்கள்
முளைக்காத தானியங்கள்
விதை கொடுக்காத கனிகள்
உயிரில்லா முட்டைகள்
தாய் தந்தை உறவறியா
குளோனிங் குழந்தைகள்
எனச் சொல்லுகிற ஒரு ஒழுங்குமுறை. மனதுக்குள் இசை அலையைச் சீராக எழுப்பி கரையில் வந்து அடிப்பதுபோல் கடைசியில் மனிதக் கொடூரத்தின் முகத்தை எழுதுகிற எழுத்து லாவகம் அடுத்து இப்படிச் செல்கிறது...

                      ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்
அறிவியல் வளர்ச்சிகள்
ஆடுகளை மலையில் விட்டு
அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து
பால் பருவக் கம்பைப் பக்குவமாய்  
நெருப்பிலிட்டு
கொங்கு ஊதி தாத்தா கொடுத்த
இளங்கம்பின் சுவைக்கு
ஈடு இது என்று
எதைக்காட்டி ஒப்புமை சொல்வேன்
பச்சைக் கம்பு தின்றதே இல்லை
ஆதங்கப்பட்ட தோழிக்கு
பல மைல் வெயில் கடந்து வந்தவனுக்குச் சட்டென்று ஒரு புங்கை நிழல் கிடைப்பதுமாதிரி, கொடுமை வாழ்வை அடுக்கிச் சொல்லிவிட்டு ஒரு கம்மங்கதிரில் இழந்த வாழ்வின் ருசியைச் சொல்லியிருக்கிற நேர்த்தி சாதாரணமானதல்ல. இங்கே வருகிற ஆடுமேய்த்தலும், கம்மங்கதிரைச் சுட்டுத்திண்ணலும் அதைமட்டுமேயா உணர்த்தி நிற்கின்றன? பறவை அமர்ந்தறியா செயற்கை மரங்களெனச் சொல்லுகிறபோது மரங்களை மட்டுமா சுட்டுகிறது? வரிசையாய்க் கடக்கும் நமது நாட்கள் கூட மரங்கள்தானே. நமது நாட்களில் ஒரு கணம் பறவை அமர்வதுபோன்ற அனுபவம் நேர்ந்ததுண்டா? நமது மரங்கள் எதற்காகவோ வானுயர்ந்து நிற்கின்றன. அதுதரும் நிழல் ஒன்றுதானா வேரோடி நிற்பதற்கான காரணம். இதே போன்றதொரு இழப்பின் வலி சொல்லும் மற்றொரு அற்புதமான கவிதை இக்கரைக்கு அக்கரை’. ‘வீடு சுமந்து அலைபவன்கவிதை தமிழர்களின் அவல வாழ்வினையும் சேர்த்தே சொல்லுகிற கவிதை.
                        இருந்தது இல்லாமல் போகும்போதும்
                        இருப்பு இடம்மாறிப் போகும்போதும்தான்
                        உரைக்கிறது
ஏதிலிகளின் வலி
தன்னனுபவத்தில் சிறகு விரித்து பெரும் ஜனசமூகத்தின் நெடுங்காலத் துயர வரலாற்றோடு கைகோர்த்து நிற்கிறது இக்கவிதை.

இத்தொகுப்பு காதல் கவிதைகளால் மேலும் அழகாகிவிடுகிறது. காலகாலமாய் ஓடும் ஜீவநதியின் அடிமடியில் உருண்டு விளையாடும் கூழாங் கற்களின் மினுமினுப்பில் இருக்கிறது நீரின் காதல். உதிர்ந்த சிறகுஎன்ற கவிதையில் இப்படி வருகிறது:
                        பெரும் பயணத்திலும் பேருந்து ஓட்டத்திலும்
                        கண்ணில்படும் பலகையின் பெயரைக்
                        கண்டு மனம் பதைபதைக்கும் - அவள்
                        வாழ்க்கைப் பட்டது இவ்வூரோ?...
ஓடுகிற ஓட்டத்தில் கண்ணில் அடிக்கும் முள்ளாய் அந்த ஊர்ப்பெயர். தூலம் உளுத்து ஒருபக்கமாய்ச் சாய்ந்த கூரை ஒழுகி ஓதமேறிக்கிடக்கும் மண்சுவராய் மனம். மழைக்காலத்தின் நள்ளிரவொன்றில் குடும்பமே அலறுவதுபோல ஏதோ ஒரு பொழுதில் அந்த ஊர்வழியே கடக்கிறபோது நினைவுகளின் அலறலை என்ன செய்துவிட முடியும். ஒரு கவிதை எழுதுவது தவிர.
                        எந்திரமாய்க் கை குலுக்கி / என்றும் போல்
                        புன்னகைத்துப் பிரிந்த /        அந்தக் கடைசி நிமிடம்...

இப்படி நிறைய இடங்களைச் சொல்லலாம். காதல் கவிதை எழுதும்போது எந்தச் சவாலும் எழுந்து நிற்கவில்லை. சண்டையில் தோற்றுப்போனவனின் தூங்காத இரவுகள் போலவே அவஸ்தைப்படுத்துகிற வார்த்தைகளால் நெய்யப்பட்டிருக்கின்றன.

            அரசியல் கவிதைகள் வனைதலில் தமிழர்களின் குருதியே முதன்மையாகிறது. இழந்த மண்ணிலிருந்து சிந்திய ரத்தம் கொண்டு ஆத்திரங்கொண்டு எழுத்தைச் சுற்றி வெறிகொண்ட கைகள் விரல் நுணுக்கத்தில் எழும்பி வந்தவை அவை. முடிகிற இடத்தில் சரியாக அறுத்து மாலை வெயிலில் காயவைத்துத் தட்டித்தட்டி சூளையிலிட்டதை மனம் தட்டிப்பார்க்க திசைகள் அதிர்கின்றன. பொய்த்தேவுகவிதையில் வெளிப்படையாகவே தனது அரசியலைச் சொல்கிறார் கவிஞர். அதற்கான வரலாற்று நியாயங்களையும்  வாசகனுக்குத் தெளிவுபடுத்துகிறார். பத்துக் கோடிக்கும் மேலாக வாழ்கிற ஓர் இனம் தமது ஒரு பகுதி மக்கள் துடிக்கத்துடிக்கச் சாகிறபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே எதனால்? காஷ்மீரிகளைப் போல தனித்த தேசிய இறைமை கொண்ட இனமாக, கவிஞர் சொல்லில் சொன்னால் நான் தமிழன் என்கிற ஒரு தெளிவு இல்லாததுதானே காரணம். இந்த இனம் நினைத்திருந்தால் ஓர் அரசியல் நிர்ப்பந்தத்தை உருவாக்கிப் பேரழிவிலிருந்து காப்பாற்றி இருக்காதா என்ன?

          ‘மே 2009’ கவிதை மிக நுட்பமாக இந்த அரசியலைப் பேசுகிறது. கையாலாகாதனத்தின் முன்பு நமது எல்லாப் பெருமிதங்களும் பல்லிளித்துக்கொண்டு நிற்பதை இக்கவிதை எடுத்துக்காட்டுகிறது. பிரபாகரன்கவிதை நம்பிக்கைப் புள்ளியிலிருந்து எழுந்ததாக இருக்கிறது.  

       இது மிளகாய்த் தோட்டத்தில் முதல் வெப்புபோல. உள்ளே நுழைந்து பழமெடுக்கும்போது பூவும் பிஞ்சும் உதிராமல் நடக்கப் பழகும் நளினம் வேண்டும். நாற்று நட்டதிலிருந்து பார்த்தால் முதல் வெப்பு நெடுங்காலம் கடந்ததாய்த் தோன்றும். ஆனால் அவை நேர்த்தியானவை. பழுதில்லாதவை. அடுத்த வெப்புமிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த தொகுப்பை இதைவிட நேர்த்தியாகக் கொண்டுவருவார் என்பதற்கு இத்தொகுப்பு ஓர் உதாரணம். ஏனெனில் தமிழ் வாழ்வு என்ற வற்றாத கிணறு இவர் மனசில் உண்டு.

     மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் ஆந்தைகளும் வௌவால்களுமெனப் பறவைக்காடாய் இருந்த அந்த இலுப்பைத் தோப்பை விழுங்க சுற்றியிருந்தவர்களுக்குப் பேராசை வந்தது. வெங்கோடை இரவுப் பொழுதொன்றில் மூங்கில் புதர் தீப்பற்றியதாய்ப் பேச்செழுந்தது. கொள்ளிவாய் பிசாசின் வேலையென்று வேடிக்கை பார்த்தனர். குஞ்சுகள் கருகும் நிணவாடையும் புகையும் ஊரைச் சூழ, இலுப்பைத் தோப்பின் பெருமைமிகு வரலாற்றைத் திண்ணைதோறும் வாய்வலிக்கப் பேசினர். பறவைகளின் அலறல் ஓய்ந்த மாலையொன்றில் எரிந்த விறகுகளை ஆளாளுக்குச் சுமந்துவந்தனர். வரப்புகள் எல்லை மாறின. பஞ்சாயத்தின் தீர்மானங்கள் மாறின. கங்காதேவி மொசைக் பதித்த சிறு கோயிலில் பளபளக்க அருள் பாலிக்கிறாள். கங்கா நகர் என்று அறிவிப்புப் பலகையொன்று வழிகாட்டுகிறது. வௌவால்களையும் குருவிகளையும் இலுப்பை மரங்களையும் மனதில் சுமந்து பித்தேறித் திரிபவர்கள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சடைமுடி குலுங்க மந்திரம் ஜெபிக்க ரத்தப் பலியிட்டு நிணச்சோறிறைத்து ஏவிய இந்த ரத்தக்கவிதைக் காட்டேறி பழிவாங்க மாட்டாளா? செய்வாள்.


சனி, 27 செப்டம்பர், 2014

மறைமலையடிகளின் பன்முகப் பார்வை - நூல் வெளியீடு








உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 15.9.2014 அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்ற 'மறைமலையடிகளின் பன்முகப் பார்வை' நூல் வெளியீட்டு விழா. இடமிருந்து - அறக்கட்டளைப் பொறுப்பாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் .மணவழகன், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் கா.மு. சேகர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் பொற்கோ, உலகத் தமிழாராய்ச்சி நிறுனவத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், நூலாசிரியர் திரு.மறை.தி.தாயுமானவன் (தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளின் பெயரன்), கவிஞர் கலைச்செல்வி (உரையாசிரியர் புலியூர் கேசிகனின் மகள்)

வெள்ளி, 22 மார்ச், 2013

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வித் திருவிழா




           உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரி 2013 முழுவதும் கல்வியியல் தொடர் நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. பிப்ரவரித் திங்கள் தொடர் நிகழ்வுகளில், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஒன்பது; மூன்று நாள் பயிலரங்குகள் இரண்டு; ஐந்து நாள் பயிலரங்கு ஒன்று; தேசியக் கருத்தரங்கு ஒன்று; கலை நிகழ்ச்சிகள்; மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. சிறப்பாக, உலகத் தாய்மொழித் தினமான பிப்ரவரி 21 அன்று, அறக்கட்டளைச் சொற்பொழிவு, மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை,கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. தமிழக முதல்வரின் பிறந்தநாளான பிப்.24அன்று நிறுவன வளாகத்தில் 65 பழமரக்கன்றுகள் நடும் விழா, சிற்றுண்டி நிலையம் திறப்பு விழா போன்றவை நடைபெற்றன.




தொடக்க விழா

        2013 பிப்ரவரி திங்கள் 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், தேசியக் கருத்தரங்குகள், தேசியப் பயிலரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு, அதன் துவக்க நிகழ்ச்சியாக 01.02.2013 அன்று மாலை 03.00 மணியளவில் தொடக்கவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், இ.ஆ.ப., அவர்கள் பிப்ரவரித் திங்களுக்கான நிகழ்வுகளைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். கவிஞர் கலைமாமணி திரு ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களும், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். நிறுவனத் தனி அலுவலர் திரு தா.மார்டின் செல்லதுரை அவர்கள் நன்றியுரை கூறினார்.
வரவேற்புரை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல்,கலை(ம) பண்பாட்டுப் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன்

தலைமையுரை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன்

தொடக்கவுரை:தமிழ்வளர்ச்சிஅறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம்

வாழ்த்துரை: கலைமாமணி ஏர்வாடி திரு இராதாகிருட்டிணன்


வாழ்த்துரை:அரசுமொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்

நன்றியுரை :உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தனி அலுவலர் திரு மார்ட்டின்