புதன், 19 ஆகஸ்ட், 2020

தமிழர் மரபு அறிவியல்

 முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(அகில இந்திய வானொலி நிலைய உரை, சென்னை. அக்டோபர் 13, 2017)

 

            பண்பாடு என்பதும் அறிவியல் என்பதும் கூழாங்கற்களைப் போலத்தான். தொடக்கம் கரடுமுரடாகத்தான் இருக்கும். காட்டாற்றின் ஓட்டத்தில் கூழாங்கற்கள் செம்மையுற்ற வடிவத்தைப் பெருவதைப்போல, காலமும் பட்டறிவுமே பண்பட்ட சமூகத்தையும் வடிவமைக்கும். உலகின் எந்தவொரு முன்னேறிய சமூகத்திற்கும் இது பொருந்தும்.

            பொதுவாக, அடிப்படைத் தேவைகளில் ஓரளவு நிறைவுபெற்ற ஒரு சமூகம், தம்முடைய அறிவுத் தேடலின் விளைவால் புதிய புதிய துறைகளில் தம் எண்ணத்தையும், தேடலையும் தொடங்குகிறது. அதனடிப்படையில், உலோகவியல் முதலான பல புதிய துறைகள் கண்டறியப்படவும், அதனோடு தொடர்புடைய இன்னபிற துறைகள் தோன்றவும், வளர்ச்சி அடையவும் ஏதுவாகிறது. அவ்வகையில் பழந்தமிழ்ச் சமூகம், தம் மரபு அறிவியலை வாழ்வியல் தேவைகளுக்குப் பயன்படுத்திய திறத்தை, சங்க இலக்கியங்கள் முதலான பழந்தமிழ் இலக்கிங்கள் காட்டுகின்றன. அகப்-புற பாடல் மரபுகளுக்கிடையே இச்செய்திகள் புதைந்துகிடக்கின்றன.

            இயற்கையோடு இயைந்த இவர்களின் மரபு அறிவியல்நுட்பங்கள், அவர்தம் தேவைகளை நிறைவுசெய்துகொள்ளவும், வருவதை முன் உணரவும், தம் ஆளுமைகளைப் பல நிலைகளிலும் விரிவுபடுதிக்கொள்ளவும் பயன்பட்டன.

            தமிழர் மரபு அறிவியலில் பாதுகாக்கபட வேண்டியவையும், மீட்டுறுவாக்கம் செய்யப்பட வேண்டியவையும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டியவையும் ஏராளம். நண்பர்களே, இந்த சிற்றுரையின் நோக்கமும் அதுவே.  

            பழந்தமிழர் அறிந்துகொள்ள முயன்ற துறைகளும், அறிந்திருந்த துறைகளும் எண்ணற்றவை. அளந்தறிய முடியாதவற்றையும் அளந்தறிய முயன்ற அவர்தம் அறிவின் வெளிப்பாடு இலக்கியத்தில் புலனாகிறது. அவ்வகையில், ஐம்பெரும் பூதங்கள், உலகத் தோற்றம், வானியல், உயிரியல், உலோகவியல், வேளாண்மையியல், மருத்துவம், கட்டடக்கலையியல், நீர் மேலாண்மை, பொறியியல் முதலான பல துறைகளிலும் பழந்தமிழர் தம் கருத்தினைச் செலுத்தினர் என்பதை இலக்கியச் சான்றுகள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. இவற்றிலுள்ள ஒவ்வொன்றையும் மிக விரிவாகவும் ஆழமாகவும் பேசமுடியும் என்றாலும், காலம் கருதி சிலவற்றை மட்டும் இப்பகுதியில் அறிமுகம் செய்ய விழைகிறேன்.

ஐம்பூதங்கள்

            ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்பனவற்றைப் பற்றிப் பழந்தமிழர் நன்கு அறிந்திருந்தனர். நிலம் முதலிய ஐந்தும் கலந்த மயக்கமே உலகமென்பதைக் தம் இயற்கை அறிவால் கண்டனர். இவை ஒவ்வொன்றின் தன்மையையும் தனித்தனியே கண்டறிந்து, எல்லாவற்றிற்கும் இவையே அடிப்படை என்பதையும் உணர்ந்தனர். எனவே, அளப்பரிய பிற பொருட்களுக்கு இவற்றை உவமைகளாக எடுத்தோதுவதை மரபாகக் கொண்டனர். இலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

            நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

          கலந்த மயக்கம் உலகம்              (தொல்.1589)

என்று தெளிவுபடுத்துகிறார் தொல்காப்பியர்.

            மண்திணிந்த நிலனும் / நிலன் ஏந்திய விசும்பும் என்ற புறநானூற்றின் 2வது பாடலில், நிலம் பல அணுக்களால் செறிந்தது என்றும், ஆகாயம் அந்நிலத்தில் உயர்ந்து பரந்து விளங்குவது என்றும், காற்று அவ்வாகாயத்தைத் தடவிக்கொண்டு வரும் என்றும், காற்றினின்று தீ பிறக்கும் என்றும், தீயொடு மாறுபட்டு நீர்விளங்கும் என்றும் முரஞ்சியூர் முடிநாகராயர் விளக்குகிறார்.

          அதேபோல, இந்த உலகத்தின் தோற்றம் பற்றிய தமிழரின் அறிவியல் வியப்பை ஏற்படுத்தக்கூடியது. இன்றைய நவீன அறிவியலும் ஏற்றுக்கொண்டது. ஒளிப்பிலம்பான கதிரவனிலிருந்து சிதறிய பெருந்துகளான இந்த பூமியில், பல ஊழிக்காலங்கள் கழிந்த பின்பு உயிர்கள் தோன்றும் சூழல் உருவாயிற்று என்பதை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளது பரிபாடல் (பரி.2:5,6). 

       செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு / தண்பெயல் தலைஇய ஊழியும்  - எனும் பாடலில் இச்செய்தி குறிக்கப்படுகிறது. இப்பாடல் அடிகளில், உலகம் உருண்டை வடிவானது; அது மாபெரும் நெருப்புக்கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பு; நெருப்பு உருண்டையாக, ஒரு ஊழிக்காலம் விண்ணில் சுழன்று கொண்டிருந்தது; அக்கோளத்தில் காற்று வழங்க ஒரு ஊழிக்காலம் ஆனது; நாளடைவில் மேற்பகுதி வெப்பம் குறைந்து பனிப்படலமாகப் படிய ஒரு ஊழிக்காலம் எடுத்துக்கொண்டது. அதன்பின், பனி உருகி நீராக மாற, தரைப்பகுதி தலைதூக்க, அதில் உயிரினங்கள் உருவாயின என்ற அறிவியல் உண்மை சுட்டப்படுகிறது. இச்செய்தி தமிழர் மரபு அறிவிலின் உச்சமாகும். 

வானவியல்

            பழந்தமிழர், நிலப் பகுதிகளை ஆய்ந்து உணர்ந்ததைப் போலவே, வானத்தையும், அதில் விளங்கும் ஞாயிறு, திங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் முதலியவற்றின் தன்மைகளையும ஆய்ந்து அறிந்தனர். கதிரவனது வீதியையும், அதன் இயக்கத்தையும், இயற்கை ஒளிபெற்ற கோள்களையும் கதிரவனிலிருந்து ஒளிபெறும் மீன்களையும், காற்று இயங்குகின்ற திக்குகளையும், காற்று இல்லா அண்ட வெளியையும், ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கிற ஆகாயத்தையும் ஆய்ந்தறிந்தனர். இவற்றையெல்லாம் அங்கங்குச் சென்று அறிய முயன்றனர். இதனை,

            செஞ்ஞாயிற்றுச் செலவும்

          அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

          பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

          வளிதிரிதரு திசையும்

          வறிது நிலைஇய காயமும் என்றிவை

          சென்று அளந்து அறிந்தார் போல             (30:1-5)

என்கிறது புறநூனூறு.

            ‘தமிழரின் வானநூலறிவு மிகவும் சிறப்பு மிக்கது என சிலேட்டர் போன்ற அறிஞர்களும் பாராட்டியுள்ளனர்’ (த.நா.ப., ப.44). வானவியல் குறித்து பழங்காலத்தில் இருந்த தனிநூல்கள் கிடைக்கவில்லை எனினும், சங்க இலக்கியங்களில் இதுகுறித்து பல்வேறு நுட்பமான செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன. வானவியல் அறிவைக் கொண்டு, இயற்கையின் மாற்றத்தினை அறிந்தனர். வான்நிலையின் தன்மைகளுக்கேற்ப பூமியல் நடைபெறும் மாற்றங்களை, நிகழ்வுகளை முன்பே உணர்ந்தனர். கோள்கள், விண்மீன்களின் அமைப்பினையும், தன்மையினையும் எரிகற்களின் செயல்பாடுகளையும் கொண்டு, நாட்டில் நிகழவிருக்கும் நன்மை-தீமைகளையு கணித்தனர். வானில் இயற்கைக்கு மாறாக நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப, நாட்டின் நடப்பிலும் மாற்றம் ஏற்படும் என்பதைக் அறிந்தனர்.

            மழை பெய்வதற்குரிய கோள்நிலை தெளிவாகச் சுட்டப்படுகிறது. வெள்ளி என்னும் மீன் வடப்பக்கத்தே தாழ்ந்தால் மழை பெய்யும் என்றும், தெற்கே சாய்ந்தால் மழை பெய்யாது என்பதையும் பதிற்றுப்பத்து(24:23-28), புறநானூறு(3:6-8, 117:1-3) முதலிய இலக்கியங்கள் சுட்டுகின்றன. 

            அதுமட்டுமல்ல, வானில் செவ்வாயும், வெள்ளியும் கூடினால் மழைபெய்யாது என்றும், இவ்விரண்டும் தனித்தனியே இருந்ததால் மழை பொழியும் என்றும் பதிற்றுப்பத்துத் தெரிவிக்கிறது (பதி.13:25-26). வெள்ளி என்கிற மீன் குறிப்பாக மழை மீனாகவே காட்டப்படுகிறது. இம்மீனின் தன்மை, அது சேர்ந்திருக்கிற கோள்நிலை ஆகியவற்றைப் பொருத்து மழைப் பொழிவு கணிக்கப்பட்டது.

            பழந்தமிழர், வானியலின் நாள் நிலையும் கோள் நிலையும் மக்கள் வாழ்வியலை தாக்கத்திற்கு உள்ளாக்கும் என்பதையும் கண்டறிந்தனர். நாள் கோள்களின் நிலையை ஆய்ந்து அதற்கேற்ப வினை புரிந்தனர். கோள் நிலையில் தீமை விளையாத நல்ல நாளினைக் கணித்து, அந்நாளிலே திருமணச் சடங்கைச் செய்தனர் (அகம்.86:6-7).

            விண்மீன்களை வகைப்படுத்தியும், அவற்றின் மாற்றங்களை அறிந்தும் தம் அன்றாட செயல்பாடுகளை முறைப்படுத்திக் கொண்டனர். வானில் மீன்கள் முறை திரிந்ததனால் நாட்டின் தலைமைக்குத் தீமை விளையும் என்று மக்கள் வருந்தியிருக்க, அவர்கள் வருந்தியபடியே மன்னனும் இறந்துபட்ட வரலாற்றுச் செய்தியை கூடலூர் கிழாரின் புறநானூற்றுப் பாடல் (புறம்.229:1-23) பதிவு செய்கிறது. இப்பாடல் பல நுட்பமான வானியல் நிகழ்வுகளையும் நாள்மீன் கோள்மீன் போன்றவன்றின் தன்மைகளையும் விவரிக்கிறது. புறநானூற்றில் காணப்படும் இப்பாடல் மிகுந்த ஆராய்ச்சிக்கு உட்பட்டது.

            தமிழர் வானவியல் அறிவின் உச்சமாக, வானத்தில் காற்று இல்லாதப் பேரிடத்தைப் பற்றிய பதிவைக் குறிப்பிடலாம். அண்ட வெளியில், குறிப்பிட்ட உயரத்துக்கு மேலே காற்று இல்லாத நிலையினை, ‘வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்’ (புறம்.365:3) என்கிறார் சங்கப் புலவர் மார்க்கண்டேயனார். இன்றைய ஏவுகணைக் தொழில்நுட்பங்கள் இந்த காற்று வழங்கா வளியையும் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

            அதுமட்டுமல்லாமல், இப்பெருவெளியில் வீசுகிற காற்றைக் கட்டுப்படுத்தித் தமக்குத் துணையாகப் பயன்படுத்தினர் என்ற செய்தியும் காணமுடிகிறது.

சோழன் கரிகாற் பெருவளத்தானைக் குறிப்பிடும் இடத்து, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக    (புறம்.66:2) என்கிறார் வெண்ணிக்குயத்தியார்.  

உயிரியில் துறை

            பழந்தமிழர், தாவரவியல், விலங்கியல் தொடர்பான உயிர் அறிவியலிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தனர் என்பதை சங்க இலக்கியங்களும் தொல்காப்பியம் முதலான இலக்கணங்களும் காட்டுகின்றன. தமிழர்களின் உயிரியல் அறிவு மிக நுட்பம் வாய்ந்தது. குறிப்பாக, உயிர்களின் அறிவு அடிப்படையிலான வகைப்பாடு வேறு எம்மொழி இலக்கிய இலக்கணங்களிலும் காணப்படாத ஒன்று. ஆறறிவு உயிர்களை வகைப்படுத்தும்போது,

            ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

          இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

          மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

          நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

          ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

          ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

          நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே (தொல்.1526) 

என்று சிறப்பாக வகைப்படுத்திக் காட்டுகிறார் தொல்காப்பியர். மேலும், புல், மரம் போன்ற தாவர இனங்களை ஓர் அறிவு கொண்டவையாகவும் (தொல்.1527), நத்தை, சிப்பி போன்ற கடல்வாழ் உயிரினங்களை இரண்டு அறிவு கொண்டவையாவும் (தொல்.1528), வண்டு, தும்பி இனங்களை மூன்று அறிவு கொண்டவையாகவும் (தொல்.1529), விலங்கினங்களையும், மனிதர்களில் விலங்கியல்பாய் இருப்போரையும் ஐந்து அறிவு கொண்டவையாகவும் பகுப்பார் (தொல்.1531). இவ்வகையில், பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனை ஆறறிவு உடையவற்றில் அடக்குகிறார் (தொல்.1532) தொல்காப்பியர். அறிவியல் அடிப்படையிலான இப்பகுப்பு உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானதாகவே அமைகிறது.

            விலங்குகளின் இயல்புகளையும், அவற்றைப் பயிற்றுவிக்கும் முறைகளையும்  விளக்கும் நூல்கள் இருந்தன. பாதுகாப்புத் துறையில் ஈடுபடுத்தப்பட்ட குதிரைக்கென்று தனி இலக்கண நூல் இருந்ததை, ‘நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி’ (அகம். 314:8) என்று அகநானூறு காட்டுகிறது. அதேபோல, யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுப் போரில் ஈடுபடுத்தப்பட்டன. அதற்கான பயிற்சியை வழங்குவோர் ‘விரவு மொழி பயிற்றும் பாகர்’ என்று அழைக்கப்பட்டனர் (மலைபடு.327; முல்லை.35-36). குதிரை, யானை போன்றற்றோடு, நாய் மற்றும் பறவைகளுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்ட செய்திகளும் காணக்கிடைக்கின்றன.

             விலங்குகளின் செயல்பாடுகளைக் கொண்டு, அவற்றின் உடல்நிலை மாற்றங்களையும் அறிந்தனர். வன்மையையுடைய யானை தன் தும்பிக்கையை நிலத்திலே ஊன்றி உறங்கினால், உடல்நலம் குன்றியிருக்கிறது என்பதை, ‘மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்’ (புறம்.229:18) என்கிறது புறநானூறு. அதேபோல, கருவுற்ற யானைக்கு வயா என்னும் நோய் வந்ததைப்பற்றி அகநானூறு பேசுகிறது.

மருத்துவ அறிவியல்

          மனித வளம் நாடும் ஒரு சமூகம் மருத்துவ அறிவினைக் கைகொண்டிருப்பது இன்றியமையாதது. இன்றைக்கும் பயன்கொள்ளக்கூடிய பல அரிய மருத்துவச் செய்திகளையும் உடல் நல மேலாண்மைச் சிந்தனைகளையும் பழந்தமிழர் நூல்கள் கொண்டுள்ளன. தொல்காப்பியர் மருத்துவரை, ‘நோய் மருங்கு அறிநர்’ (தொல்.1447) என்கிறார்.  சித்தமருத்துவம் தமிழர்களுக்கு உரியது என்றாலும், மருத்துவத் துறையின் உயர் தொழில்நுட்பமான அறுவைச் சிகிச்சை மருத்துவமும் கையாளப்பட்டதை பதிற்றுப்பத்துக் (பதி.42:2-4) காட்டுகிறது.

             முதலில் நோய் இன்னதென்பதை ஆராய்ந்து, நோயின் காரணம் எது என்பதை அறிந்து, அதனைத் தணிப்பதற்குரிய வழியைக் கண்டு, அந்த வழியையும் நோயாளியின் உடலுக்குப் பொருந்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவத்திற்கு  இலக்கணத்தை வகுக்கிறார் திருவள்ளுவர் (குறள்.948).  மேலும்,

                        உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்

          கற்றான் கருதிச் செயல்     (குறள்.949)

என்பதில், மருத்துவனைக் கற்றான் குறிப்பிடுகிறார். இம்மருத்துவத் துறையில் மருந்தாளும் செவிலியும் முக்கிய இடம் பெறுகிறார்.

            மருத்துவர்கள், நோயாளி விரும்புகிற யாவற்றையும் அளிக்காது, நோய்க்குத் தகுந்த நன்மருந்தினை ஆய்ந்து கொடுத்து, உடலைப் பிணியிலிருந்து காத்தனர் என்பதை,

            அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது,

          மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல        (நற். 136: 2-3)

என்கிறது நற்றிணை. தாவரத்திலிருந்து மருந்து பெறும் செயல்பாட்டிலும் அறநோக்கு இருந்தது. மரத்தை அழித்து மருந்தைப் பெருதல் கூடாது என்பதை ‘மரம்சா மருந்தும் கொள்ளார்’ (226:1) என்று அறிவுறுத்தினர்.

          இவை மட்டுமல்லாமல் நான் முன்பே கூறியதைப்போல, பழந்தமிழர் உலோகவியல், கட்டட கலையியல், நெசவுத் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை போன்றவற்றையும் தனித்தனியே மிக விரிவாகவும் நுட்பமாகவும் காணமுடியும். இவற்றிற்கான செய்திகள் பழந்தமிழ் இலக்கியம் முழுவதும் நிரம்பவே கிடைக்கின்றன.

            இவ்வகையான தமிழர் அறிவு மரபை இளைய தலைமுறையினர்க்கும் எடுத்துச் செல்வதும், மரபைக் காக்கவேண்டியதன் தேவையை அவர்களுக்கு உணர்த்துவதும் நம் கடமை. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கும் ஏற்புடையதாக விளங்கும் தமிழர் மரபு அறிவியல் நுட்பங்களை மீட்டுறுவாக்கம் செய்து பயன்கொள்வதும் இன்றைய தேவையாகும். இவ்வகையான நோக்கங்களுக்காகவும் தமிழர் மரபு அறிவியலை உலகறியச் செய்வதற்காகவும் சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் என்ற ஒன்று தமிழக அரசால் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

            இக்காட்சிக் கூடத்தின் அரங்குகளில் பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்புகள், பண்பாட்டு விழுமியங்கள், அறிவு நுட்பங்கள், கலைக் கூறுகள், தொழில்நுட்பத் திறன்கள், அரசியல் மேலாண்மை போன்றவை ஓவியங்களாக, மரம்-கல்-சுடுமண்-உலோகச் சிற்பங்களாக, புகைப்படங்களாக, சுதை வடிவங்களாக, புடைப்புச் சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காட்சிக்கூடத்தில், நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய திரையரங்கு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரையரங்கில், பழந்தமிழர் வாழ்வியல், பழந்தமிழர் மருத்துவம், தமிழர் நீர்மேலாண்மை, ஆட்சித்திறன், பழந்தமிழர் போரியல் போன்ற குறும்படங்கள் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்படுகின்றன.

            இந்தியாவிலேயே செவ்வியல் நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள முதல் காட்சிக்கூடமும் இதுவே. இவற்றைப் பொதுமக்களும் பள்ளி-கல்லூரி-ஆய்வு மாணவர்களும் இளைய தலைமுறையினரும் வெளிநாட்டினரும் கண்டு பயன்பெற வேண்டும். 

அன்பர்களே, நம் மரபின் சிறப்பை நாம் உணர்வோம்! உலகிற்கும் உணர்த்துவோம்!

*****

Dr. A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

தமிழியல்

www.thamizhiyal.com  


வாழ்வியல் பாடத்திட்டம்

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(தினமணி, சூலை 29, 2017)

             உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்று பாண்டியன் நெடுஞ்செழியனும் ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன், சாந்துணையும் கல்லாதவாறு’ என்று வள்ளுவரும் ‘கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று ஔவையாரும் கல்வியின் தேவையையும் சிறப்பையும் வலியுறுத்துவர். தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு போற்றப்படும் சிறந்த செல்வமாக கல்வி விளங்கி வருகிறது.

             அண்மைக்காலச் சமூகச் செல்நெறிகள் கல்வியை அனைத்திற்குமான அடிப்படை மூலதனமாகக் கட்டமைத்துள்ளன.  மனவளமும் அறிவு வளமும் கல்வியால் ஆகும் என்ற நிலை மாறி, பொருளியலும் அதன்வழி இன்பமுமே கல்வியால் ஆகும் என்ற நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இன்று, கல்வி ஒரு வேட்டைச் சமூகத்தின் முக்கிய தேடல் பொருளாக மக்கள் மனத்தில் குடிகொண்டுள்ளது. இச்சூழலில், வல்லுநர்கள் பலரை அழைத்து பள்ளிப் பாடத்திட்ட உருவாக்கம் தொடர்பான கருத்துகளை அரசு கேட்டுள்ளது. பாடத்திட்ட உருவாக்கத்தில் அரசும் வல்லுநர் குழுவும் கருத்தில் கொள்ளவேண்டியவை பல உள்ளன.

             பழந்தமிழ்ச் சமூகம் என்றாலே காதல், வீரம், உடன்போக்கு என்பதான புரிதலையே இன்றைய இளந்தலைமுறையினர் கொண்டுள்ளனர். இளந்தலைமுறையினர் மட்டுமல்ல சங்கத் தமிழை அதன் துறைகளோடு உள்வாங்காத யாவருக்குமான புரிதலும் இதுவே. தமிழ்ச் சமூகம் எதை விதைத்ததோ அதை அறுவடை செய்யவில்லை என்பது உண்மையில் முரண்பாடே.

             அறுவை சிகிச்சை மருத்துவம் நம்மிடையே இருந்ததா என்றால் இல்லை, அது மேலைநாட்டு வரவு என்கிறான் மாணவன். நீர் மேலாண்மை உத்திகளும் நெசவுத் தொழில்நுட்பங்களும் கட்டுமான நுட்பங்களும் எங்கிருந்தோ வந்தவை என்பதே அவனுடைய அசைக்கமுடியா நம்பிக்கையாக உள்ளது.  அது மாணவன் தவறு அல்ல, அவனுக்குச் தமிழ்ச் சமூகத்தின் பெரும் அறிவு மரபை அறிமுகம் செய்யாது விட்ட நம் தவறு.

             ஐம்பூதங்களின் தன்மைகள் பற்றியும் உலகத்தின் தோற்றம் பற்றியும் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் பேசுகின்றன. கோள்நிலைகளைக் கொண்டு உலக நிகழ்வுகளை முன்னுணர்ந்த நுட்பத்தைச் சங்கச் சான்றோர் உணர்த்துகின்றனர். விண்மீன்களும் கோள்களும் தத்தமக்குரிய இடத்தே நிற்க, மழை தப்பாது பொழிந்ததை பதிற்றுப்பத்துப் பதிவு செய்கிறது.            அண்டவெளியிலே குறிப்பிட்ட உயரத்துக்கு மேலே காற்று இருப்பதில்லை என்ற வானியல் உண்மையைப் புறநானூறு அறிவிக்கிறது. இந்த இயற்கை அறிவியலையும் முன்னோர் அறிவையும் இளந்தலைமுறைக்கு கொண்டுசேர்க்காமல் போனது யார் தவறு?

             தாவரங்களுக்கு உயிரும் ஓர் அறிவும் உண்டு என்று முதன்முதலாக அறிவித்த தொல்காப்பியரின் தாவரவியல் கண்டுபிடிப்பை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மறைத்து வைத்திருக்கப் போகிறோம்? ’நோய் மருங்கு அறிநர்’ என்று மருத்துவனை விளிக்கும் தொல்காப்பியம் தொடங்கி, இயற்கை மருத்துவம், இசை மருத்துவம், நுண்மருத்துவம், அறுவை மருத்துவம், மனவள மருத்துவம் என நீளும் பண்டைத் தமிழனின் மருத்துவ அறிவை இப்போது விட்டால் வேறு எப்போது மாணவனுக்கு அறிமுகப்படுத்துவது?

               ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’ என்று ஏர்க்குடிகளின் இன்றியமையாமையைச் சுட்டியதோடு, நிலத்தினை ஆழமாகவும், மண் மேல்-கீழ் புரளும்படி பலமுறை நன்கு உழுதலும், நிலத்தை ஆறப்போடுதலும் மண்ணையே எருவாக்கும் நுட்பங்கள் என்று வள்ளுவரும், பூமி மயங்க பலமுறை உழுது விதைக்கவேண்டும் என்று புறநானூறும், கொழு முழுகும் அளவிற்கு ஆழமாக உழவேண்டும் என்று பெரும்பாணாற்றுப்படையும் வேளாண்மை நுட்பங்களை வலியுறுத்துகின்றன.

            மண்ணையும் நீரையும் ஒன்றிணைப்போர் உடலையும் உயிரையும் படைத்தவராவார் என்ற புறநானூற்றுச் சான்றோனின் நீர் மேலாண்மைச் சிந்தனை உலகம் வியக்கக்கூடியது. ஓடிவரும் மழைநீரைத் தேக்கிவைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த பாறைகளையும் சிறிய குவடுகளையும் இணைத்து, எட்டாம்நாள் பிறைநிலவைப் போன்ற வடிவத்தில் கட்டப்பட்ட தடுப்பணையை இலக்கியம் காட்டுகிறது. நீர்த்தேக்க கட்டுமான நுட்பத்தில் வளைந்த வடிவிலான தடுப்பணை என்பது தமிழன் உலகிற்கு வழங்கிய கட்டுமான நுட்பமாகும்.

       பழந்தமிழர் கட்டுமான நுட்பத்தில் நீர்நிலைகளோடு குடியிருப்புகளின் வடிவமைப்புகளும் நுண்மை வாய்ந்தவை. பலமாடிக் கட்டடங்களையும் பருவநிலைக்கு ஏற்ப உறையும் தளங்களையும் நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்கள் கண்முன் நிறுத்துகின்றன. குடியிருப்புகளில் சுருங்கைத் தூம்பு எனப்படும் கழிவுநீர் போக்குக் குழாய்களும் அமைக்கப்பட்டிருந்தது தமிழரின் மரபுத் தொழில்நுட்பத்திற்கும் நாகரிகத்திற்கும் சான்று. 

             பட்டிலும் பருத்தியிலும் நெய்யப்பட்ட உடைகள் நூலிழைகளின் இடைவெளியை அறிய முடியாத நுட்பத்திலும், பல வண்ணங்களிலும், பூ வேலைப்பாடுகள் நிறைந்தும், பாம்பின் தோல், பாலாடை, மூங்கிலின் உள்தோல், அருவியின் சாரல் எனப் பல்வேறு தன்மைகளில் மிக்கத் தொழில்நுட்பங்களோடு வடிவமைக்கப்பட்டிருந்ததைத் தமிழின் செவ்விலக்கியங்கள் காட்டுகின்றன. சிறல் எனும் மீன்கொத்திப் பறவை நீரில் மூழ்கி மேலெழும்போது அதன் அலகில் மீன் மாட்டி இருபுறமும் தொங்குவதைப் போல, மார்பில் வெட்டுப்பட்ட வீரனின் காயத்தைத் தைக்கும் ஊசியின் தோற்றம் இருப்பதாகப் பதிற்றுப்பத்து பழந்தமிழரின் அறுவை சிகிச்சை மருத்துவ நுட்பத்தைப் படம்பிடிக்கிறது.   

            பண்டை இலக்கியங்களில் பொதிந்துகிடக்கிற தமிழரின் மரபு அறிவு நுட்பங்கள் அனைத்தும் யாருக்காக? இளங்கலையிலும் முதுகலையிலும் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்து தமிழியல் ஆய்வில் ஈடுபடுவோருக்கு மட்டுந்தானா? இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு நிலையில்தான் நம் பாடத்திட்டம் இயங்குகிறது என்பது வேதனையான உண்மை. தமிழரின் அறச்சிந்தனைகளை, மரபு அறிவு நுட்பங்களை, வாழ்வியல் விழுமியங்களை, மரபுக் கலைகளைப் பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதும், அறிமுகம் செய்வதும் நம் கடமையல்லவா?  

             செவ்விலக்கியங்களில் ஒரு தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அக்காலப் பாடத்திட்ட உருவாக்கமே. அத்தொகுப்பில் தமிழரின் அறம்-அறிவியல்-சமூகம் என அனைத்துக் கூறுகளும் பொதிந்துள்ளன.  இவற்றிலிருந்து தேவையானவற்றைச் சாறுபிழிந்து மாணவனுக்குக் கொடுக்க முடியும். ‘வடக்குத் திசையோடு, கோணத் திசைகளிலும் தலைவைத்துப் படுக்கக்கூடாது’, ‘இரவில் மரங்களின் அடியில் படுத்துறங்கக் கூடாது’, ‘இனிப்புச் சுவையுள்ள உணவை முதலிலும், கசப்புச் சுவையுள்ள உணவை இறுதியிலும், மற்ற சுவையுள்ள உணவுகளை இடையிலும் உண்ணுதல் வேண்டும்’ என்பன போன்ற மாணவர்களுக்கான வாழ்வியல் அடிப்படைகளைக் கீழ்க்கணக்கு நூல்கள் மிக நுட்பமாகப் பதிவுசெய்துள்ளன. குறிப்பாக, வாழ்வியல் நெருக்கடிகளை எதார்த்தமாக எதிர்கொள்ளத் தேவையான அத்தனைக் கூறுகளையும் நம் இலக்கியங்கள் நிரம்பவே கொண்டுள்ளன. தொடக்கப் பள்ளி பாடத்திலிருந்தே இவற்றை முறைப்படுத்தி வழங்க முடியும்.

             உலகின் தொன்மை இனமாம் தமிழினத்தின் தோற்றமும் வரலாறும், செம்மொழியாம் தமிழின் சிறப்புகள், மரபு இலக்கியங்களில் காணலாகும் அறச் சிந்தனைகள், மனிதநேயக் கூறுகள், உளவியல் சிந்தனைகள், மரபு அறிவியல் நுட்பங்கள், பல்துறை மேலாண்மை, கலைப் பண்பாட்டுக் கூறுகள், ஆட்சித்திறன் போன்ற விழுமியங்களைப் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்தல் வேண்டும். செய்திகளின் தன்மைகள், மாணவர்களின் வயது மற்றும் புரிந்துணரும் ஆற்றல் போன்றவற்றிற்கேற்ப மேற்கண்டவற்றை நிரல்படுத்த முடியும். மேலும், இவற்றை எளிய வடிவிலும் படக்கதைகளாகவும் சுவைபட வழங்க முடியும். தேர்வுகளை எதிர்கொள்ளும் பாடத்திட்டத்தோடு வாழ்வியலை எதிர்கொள்ளும் பாடத்திட்டமும் வேண்டும் என்பதே நம் விழைவு. மனவளமும் அறிவு வளமும் ஒருங்கே பெற்ற இளைய சமூகத்தை உருவாக்க அதுவே வழிவகுக்கும்.

 

*****

வரி வருவாயும் அரசு ஆளுமையும்

 ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113. சூலை 7, 2016


 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

                                              நாட வளந்தரு நாடு

என்று, நல்ல நாட்டிற்கான இலணக்கத்தை வரையறுக்கிற உலகப் பொதுமறை, நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை என்றும் அறிவுறுத்துகிறது.  ஒரு நாட்டின் தலைமையானது சமூகப் பொருளாதாரம், மக்கள் வளம், அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, நீதி, சமத்துவம், இயற்கை வளம், பாதுகாப்பு, தனிமனித உரிமை மற்றும் மேப்பாடு போன்றவற்றில் காட்டும் அணுகுமுறையே அந்நாட்டின் வளமைக்கும் வளர்சிக்கும் வழிவகுக்கிறது. 

            நாட்டின் அரசு தலைசிறந்த நல்லமைப்புடனும் நீதி நெறிகளுடனும் தகுந்த முடிவுகளை எடுக்கும் ஆற்றலுடைய ஒரு நிறுவனமாக இருத்தல் வேண்டும். அஃதாவது, நாடும் அரசும் மேன்மையுற்ற சமுதாயத்தை உருவாக்கி மக்களை உயர்த்துதல் வேண்டும் என்பது சமூகவியலாளர் கருத்து. பழந்தமிழ்ச் சமூகத்தில் மக்களுக்கு மன்னன் உயிராகவும் (புறம்.186) மன்னனுக்கு மக்கள் உயிராகவும் (மணி.7) மதிக்கப்பெற்றனர். எனவே, பிறரால் விளையும் கேட்டைவிட ஆள்பவரின் தீச்செயலால் மக்கள் அடையும் துன்பம் கொடுமையானது என்றும் ஆள்பவர் சரியில்லை என்றால் அச்சமூகம்,

                        ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல் (கலி.5)

துன்பமுறும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. குடிகள் அடியும் துன்பத்திற்குக் முதன்மைக் காரணமாக முறையற்ற வரிவசூல் அமைகிறது. 

            நாட்டில் குடிமக்களை வருத்தி வரி வசூலித்தல் செங்கோன்மையன்று. அவ்வகை அரசு கொடுங்கோன்மை அரசாக அக்காலத்தில் ஒதுக்கப்பட்டது. அதனால்தான் சிலப்பதிகாரத்தில், மாடலமறையோனின் அறிவுரையால் இனி, ‘குடிமக்களிடம் வரிவசூலிக்க வேண்டாம், நம் எல்லைக்கு உட்பட்டிருக்கும் சிற்றரசுகளும் நமக்குத் திறை எதுவும் செலுத்த வேண்டாம், இதை இன்றே எல்லோருக்கும் தெரிவியுங்கள்’ என்று சேரன் செங்குட்டுவன் உத்தரவிடுகிறான். வரையறையின்றிப் பெறப்படும் வரியால், அரசின் கையிருப்பு உயருமே அன்றி, மக்களின் வளம் பெருகாது என்பது தொன்மைச் சான்றோரின் தொலைநோக்கு.

            அரசுக்குரிய வருவாய் வழிகளைக் சுட்டுமிடத்து,

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெருபொருளும் வேந்தன் பொருள் (குறள்.756) 

என்கிறார் வள்ளுவர். இதில் உல்கு என்பது வரி வருவாயைக் குறிப்பது. ஆயினும், வரிவருவாய் மக்களின் வளமை அறிந்து, சுமையாக இல்லாமல் இயல்பாக மேற்கொள்ளும் ஒன்றாக அமையவேண்டும்.  மாறாக, மக்களைத் துன்புறுத்தி அடித்துப் பிடுங்கும் கள்வரைப் போல இருத்தல் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தான்,

                        வேலோடு நின்றான் இடு என்றது போலும் 
                   கோலொடு நின்றான் இரவு (குறள்552)

என்கிறார் வள்ளுவர். வரிவிதிப்பு மக்களின் வருவாய்க்கு உட்பட்டதாக அமையாமல், குடிமக்களைத் துன்புறுத்தி மிகுதியும் பெறுவதாக இருந்தால், வலிந்து பெறும் வரி அரசுக்கு தீராத பகையாக முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது(புறம்.75). 

            மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்

          உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்

          பொன்னும் கொள்ளார் மன்னர் (நற். 226:1-3)

என்பார் கணிபுன்குன்றனார். இதில், மருந்துமரம் என்பதற்காக வேரோடு பிடுங்கி பயன்படுத்துதலும், வரம் கிடைக்க உயிர் நீங்கமட்டும் தவம் செய்தலும் எப்படித் தீதாகுமோ அதைப்போல, மக்களின் வளம் கெட அவர்களை வருத்தி வரிவசூல் செய்தலும் மிகுந்து துன்பத்தைத் தரும் என்கிறார்.  

            அதேபோல,

                    மூத்தோர் மூத்தோர்க் கூற்றப் உய்த்தெனப்

                   பால்தர வந்த பழவிறல் தாயம்

                   எய்தனம் ஆயின் எய்தினம் சிறப்புஎனக்

                   குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்

                   சிறியோன் பெறின்அதி சிறந்தன்று மன்னே (புறம்.75) 

என்பதில், சிறப்புக்குரிய அரசுரிமையை அடைந்துவிட்டோம் என எண்ணிக்கொண்டு, தம் குடிமக்களிடம் வரியை வேண்டி இரக்கும் அரசன் சுமக்க இயலாத துன்பத்திற்கு ஆளாவான் என்றும், அப்படிப்பட்டவன் ‘கூரில் ஆண்மை சிறியோன்’(புறம்.75) என்றும் சோழன் நலங்கிள்ளி சினம்கொள்கிறான். 

            மேலும்,

                        காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே

                   …… …………… ……….. ……….

                   தானும் உண்ணான் உலமும் கெடுமே (புறம்184)

என்ற புறநானூற்றுப் பாடலில், முறையற்ற வரிவசூல் செய்யும் அரசைக் குறிப்பிடுமிடத்து,  ‘ஒரு மா என்னும் அளவைவிடக் குறைந்த நிலமேயாயினும், விளைந்த நெல்லைக் கொண்டுவந்து கவளமாக்கி யானைக்குக் கொடுத்தால் அது பலநாட்களுக்கு உணவாகும். நூறு செய் அளவுடைய பெரிய நிலமாயினும் அதனுள் யானை தானே தனியாகப் புகுந்து உண்ணத் தொடங்கினால், யானையின் வாயினுள் புகும் நெல்லைக் காட்டிலும் கால்களில் மிதிப்பட்டு அழிவது மிகுதியாகும். அதுபோல, அறிவுடைய மன்னன் ஒருவன் குடிமக்களிடமிருந்து வரி வாங்கும் நெறியை அறிந்து வாங்குவானானால், அவனது நாட்டில் வாழும் குடிமக்கள் அவனுக்கு மிகுதியும் பொருளைத் தந்து தாங்களும் தழைப்பர். மன்னன் அந்நெறியை அறியும் அறிவற்றவனாகி, குடிகளைத் துன்புறுத்தி வரிவசூல் செய்வானாயின் அந்த யானை புகுந்த விளைநிலம்போல, தானும் உண்ணப் பெறான்; உலகும் அழியும்’ என்று எச்சரிக்கிறார் பிசிராந்தையார். 

எனவேதான்,

அரசியல் பிழையாது அறநெறி காட்டிப்

பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது (மதுரைக்.191-192) 

ஆட்சிசெய்த அரசனை உலகம் சங்கச் சமூகம் போற்றியது. அதனால்தான், ‘உலகம் கொள்ளும் அளவிற்குச் செல்வம் கிடைக்கப்பெறினும் பழியோடு வரும் செல்வம் வேண்டாமெனஅக்காலத்தில் விலக்கப்பட்டது. ஆம். பேரரசு, சிற்றரசு என்பதெல்லாம் மக்கள் விரும்பும் நல்லரசு என்பதிலேயே அளவிடப்படுகிறது எப்போதும்.   


பொங்கல் - தமிழ்ப் பேரினத்தின் திருநாள்

 

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். திசம்பர் 26, 2016

 

            இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழருடையது. வாழ்வு கொடுத்து வளமளிக்கும்  இயற்கையைக் காத்தனர்.      உலக உயிர்களுக்கெல்லாம் மூலமான ஞாயிறையும் திங்களையும் மழையையும் போற்றினர். மரங்களையும் தெய்வங்களாக எண்ணி இயற்கையோடு இணைந்தனர். 

            உலக மாந்தரினம் பலவும் ஆடையின்றி அரைமனிதராக அலைந்து திரிந்த வாழ்வியல் சூழலில், மானிட வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாம் வேளாண்மையைக் கண்டறிந்து, அதில் மேலாண்மை செய்தவர்கள் தமிழர்கள். வேளாண் தொழிலோடும் உழவோடும் தொடர்புடைய கதிரவனையும், மழையையும், மாடுகளையும் தமிழர் கொண்டாடினர். அவற்றிற்கு விழாக்கள் கண்டு நெஞ்சம் நிறைந்தனர். ஆம், வளமைக்கும் நன்றிக்குமான விழாவான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பழமையும் சிறப்பும் தனித்துவமும் மிக்கது.  

            தைப் பொங்கல், தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள், உழவர் திருநாள்  எனப் பலவாறு அழைக்கப்படும் பொங்கல் விழாவானது, நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தொடர் நிகழ்வாகும்.  முதல் நாள் போகி, அடுத்த நாள் கதிரவன் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் அல்லது கரிநாள்.

             மார்கழி இறுதி நாள் போகி (போக்கி). ஆடிப்பட்ட வேளாண்மை மார்கழியில் களம் கண்டு, திங்கள் இறுதியில் வீடு சேர்த்தலின் விழாக்கோலமே இப்போகி. பழையன கழிதல் என்பதற்கேற்ப இல்லத்தைத் தூய்மைப்படுத்துதல், வெள்ளையடித்தல், செம்மண் பட்டை தீட்டுதல் போன்றன இதன் முன் நிகழ்வுகளாகும். வேளாண் குடிகளின் வாழ்வியல் சடங்குகள் பலவும் இந்நாளில் நிகழ்த்தப் பெறுகின்றன. இந்நாளில் முன்னோர் வழிபாடும் மேற்கொள்ளப்படுகிறது. புது வருவாயான அரிசியில் மாவிடித்து விளக்கேற்றுவர். போகி நாள் இரவில் இறைவழிபாடு செய்யப்பட்ட பூசைப் பொருட்களைக் கொண்டு மறுநாள் விடியற்காலையில் காடு வளைத்தல் என்ற சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, முதல்நாள் இரவில் பூசையில் வைக்கப்பட்ட மா, வேம்பு, பூளா பூ (பூளை)  ஆகியவற்றின் கொத்துகளைத் தனக்கு உரிமையாக உள்ள விளைநிலத்தின் நான்கு எல்லைகளிலும் இட்டு, தனக்கான அத்துகளை உழவர் உறுதிசெய்வர்.   

            இரண்டாம் நாள் கதிரவன் பொங்கல். தைத் திங்களின் முதல் நாளிது. செங்கதிரோன் வெளித்தோன்றும் முன்பே அடுப்பு மூட்டி, புதுப் பானை உலையில் புத்தரிசிப் பொங்கல் வைப்பர். காலைக் கதிரவன் வெளித்தோன்றும்போது பொங்கல் பொங்கவேண்டுமென்பது மரபு.  கதிரவன் வெளித்தோன்றும்போது குலவையிட்டு, பொங்கலோ பொங்கலென ஓசை எழுப்பி, இசை முழக்கி, ஆர்ப்பரித்து கதிரவனுக்கு நன்றி நவிலும் இயற்கை வழிபாடிது. அரசி மாக்கோலம், கரும்புத் தூண்களில் மஞ்சள் –வேம்பு – மாவிலை – பூளை பூத்தோரணம் என இல்லங்கள் தோறும் அலங்காரம் அணிவகுக்கும். 

            மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். உலக உருவாக்கத்திற்கு மூலமான இயற்கைக்கு நன்றி சொன்ன தமிழன், உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையான வேளாண் தொழிலில் துணைநிற்கும் விலங்குகளுக்கு நன்றி நவிலும் நன்னாளே இந்நாள். உழவனின் வாழ்வியல் மூலதனம் எருது. உழவனுக்கு எது வாய்க்கிறதோ இல்லையோ தொழிலுக்குத் துணையாக எருதுகள் வாய்க்க வேண்டும். நல்ல எருதுகள் வாய்க்கப்பெற்ற உழவன் பேறு பெற்றவன்.  மாட்டுப் பொங்கல் நாளில் எருதுகளையும் பசுக்களையும் குளிப்பாட்டி, உடலில் வண்ணப் பொடிகளால் அணிசெய்வர். கொம்புகள் சீவி, வண்ணம் தீட்டி அழகுபடுத்துவர். புதுக் கயிறு மாற்றி, சலங்கை கட்டி, மாலையிட்டு களிப்பர். 

            மாட்டுப் பொங்கல் நாளில், சாணத்தால் சிறு தொட்டிகள் நான்கு கட்டி, ஒன்பது கோள்களைக் குறிக்கும் வகையில் அதன் ஒவ்வொரு முனையிலும் சாணி பிள்ளையார் வைப்பர். ஒரு முனையில் மட்டும் மஞ்சள் பிள்ளையார் அலங்கரிக்கும். சிறு தொட்டிகள் பசும் பாலால் நிரப்பப்பட்டு, பாலில் மலர்களும், துளசியும், அருகம் புல்லும் தூவப்படும். தொட்டிகளின் தலைப்பகுதியில் உழவுக் கருவிகள், உலக்கை, அலங்கரிக்கப்பட்ட தடி, கதிர் அரிவாள், களைகொட்டு, மண்வெட்டி, கரும்பு, மஞ்சள், பூளா பூ (பூளை), ஆவாரம் பூ போன்றவை பயன்பாட்டு நோக்கிலும் வளமை நோக்கிலும் வைக்கப்படும். பொங்கல் சமைத்து, அது பொங்குகிற போது பொங்கலோ பொங்கலென குலவையிடுவர்.          

            சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்  ஆகிவற்றைப் படையல் செய்து வழிபட்டு, அதனை வெல்லம், வாழைப்பழத்துடன் கலந்து மாடுகளுக்கு ஊட்டி மகிழ்வர்.  ஊட்டும்பொழுதும் பொங்கலோ பொங்கலென முழங்குதல் மரபு. சிறுபிள்ளைகள் சிறுபறை இசைத்து  மகிழ்வர். ஊரில், அலங்கரிக்கப்பட்ட எருதுகளின் உலாவும் நிகழ்த்தப்பெறும். 

            நான்காம் நாள் காணும் பொங்கல். இதனை உழவர்கள் தங்களுக்கான ஓய்வு நாளாக, விளையாட்டுகளால் மகிழ்ந்திருக்கும் நாளாகக் கொள்கின்றனர். உறவினரோடும் நண்பரோடும் விழாக்களைக் கண்டு மகிழ்வர். கட்டிளங் காளையர் காளையடுக்கும் ஏறு தழுவுதல் எனும் வீர விளையாட்டு இந்நாளில் நிகழ்த்தப்பெறும்.  

     நகரமயமாதலில் உழவு மாடுகள் இல்லை; உழு கருவிகள் இல்லை; புதுநெல் வரவு இல்லை; புதுப்பானைப் பொங்கல் இல்லை; உறவுகள் உடன் இல்லை; ஏறு தழுவுதல் எதுவும் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் சமையலறையில் மின்சார அடுப்பேற்றி, உயர் அழுத்தச் சமையல் கலனில் (குக்கர்) பொங்கல் வைத்துக்கொண்டிருக்கிறாள் என் மனையாள். தொலைக்காட்சியில் நடிகைகள் பல்லிளிக்கும் பொங்கல் கேளிக்கை நிகழ்ச்சிகளை வெறித்தபடி, எம் பிள்ளைகளுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறேன் என் பாட்டன் பாட்டி இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவிட்டுப் போன பாங்கை.   

            அகத்தியமும் தொல்காப்பியமும்

            மேல்கணக்கும் கீழ்க்கணக்கும்

            பெருங் காப்பியமும்  சிறு காப்பியமும்

            பக்தி இலக்கியமும் பல்துறை நுட்பங்களும்

            சித்தர் இலக்கியமும் சிற்றிலக்கியமும்

            கொன்றெரித்து

 

            தமிழ்ப் பெருமையும் தன்மானமும்

            வீரமும் விவேகமும்

            அறிவும் அரசியலும்

            ஆற்றலும் ஆளுமையும் என

            அனைத்தையும்

            செரித்துத் தொலைத்த எம்மக்கள்...

            இன்று

            இலவசங்களில் ஏமாந்தவற்றைப் போகியாகத்

            தெருவெங்கும் எரித்துக்கொண்டிருக்கின்றனர்

 

            பாலை நிலத்துக் கொற்றவைமுன்

            துடி இசைத்துக் கூத்தாடிய வீரனைப்போல

            நகரத்து வீதியெங்கும்

            சிறுபறை முழக்கி

            எக்காளமிட்டுச் செல்கின்றனர்

            எம் சிறுவர்கள்.