முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியில்,
கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600 113
(உலகத் தமிழ்ச்சங்கம்
(ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. நவம்பர் 10, 2014)
எந்த ஒரு சமுதாயத்திற்கும் அடிப்படைத்
தேவைகள் என்பது உணவு-உடை-உறையுள் என்பதாகவே அமைகிறது. சமூகத் தன்னிறைவு என்பது இந்த
மூன்றின் அளவுகோள்களை அடியொற்றியே தீர்மானிக்கப்படுகிறது. மேலும், ‘ஒரு நாட்டின் வறுமையைக் குறிக்கும் காரணிகளுள்
முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவையாக, பயன்பாட்டில் உள்ள நிலத்தின் அளவு, வீட்டின்
தன்மை, சராசரியாக ஒரு நபர் அணியும் ஆடை’ என்பவை சுட்டப்படுகின்றன. இங்கு, நிலத்தின்
அளவு என்பது வேளாண் தொழிலும் அதைச் சார்ந்த உணவு உற்பத்தியும் என்பதாகும். எச்சமூகமாயினும், ஒவ்வொரு மனிதனுக்கும் நிரந்தர வருவாய்,
நிலையான இருப்பிடம், தேவையான உடை என்பன தவிர்க்க இயலாதனவாகின்றன. இன்று இவற்றின் நிறைவிற்காகவும்
மேம்பாட்டிற்காகவும் உலக நாடுகள் நாளும் பல்வேறு திட்டங்களையும் செயலாக்கங்களையும் மேற்கொண்டு வருகின்றன.
இன்றைய இச்சூழலில், அடிப்படை தேவைகளில்
முதலாவதான உணவை உற்பத்தி செய்வதிலும் அதில் தன்னிறைவு அடைவதிலும் பழந்தமிழர் மேற்கொண்ட
வேளாண் மேலாண்மை செயல்பாடுகளையும் அத்தொழிலில் அவர்கள் கையாண்ட பல்வேறு மரபு நுட்பங்களையும்
காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.
உணவின் தேவையும்
பற்றாக்குறைவின் விளைவும்
‘உறுபசியும்
ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு’ (குறள்,
734) என்பார் வள்ளுவர். இதில், பசி என்பது, பிணி, பகை என்ற மற்ற காரணிகளுக்குக் காரணமாவது
பெறப்படும். பசியில்லா மனிதரிடத்தே ஆரோக்கியமான உடலும், ஆரோக்கியமான மனமும் அவற்றின்வழி
ஆரோக்கியமான சிந்தனைகளும் வெளிப்பட்டு நிற்கும். அவ்வகையான சிந்தனை கொண்ட சமூகம் வளர்ச்சிப்
பாதைக்கான வழிகளை அமைப்பதில் முனைப்புக் காட்டும். எனவே, ‘பசியும் பிணியும் பகையும் நீங்கிய, வசியும் வளனும் சுரக்க’ (சிலப்.5:72-73)
என இளங்கோவடிகளும், ‘பசியும் பிணியும் பகையும்
நீங்கி வசியும் வளனும் சுரக்க’ (மணி.1:70-71) என சாத்தனாரும் வாழ்த்தினர்.
தொல்காப்பியரும் கருப்பொருளைப் பட்டியலிடும்போது,
‘தெய்வம் உணாவே மாமரம் புள் பறை’ (தொல்.
964) என்று, தெய்வத்திற்கு அடுத்த நிலையில் உணவை வைத்திருப்பதோடு, ‘மெய்தெரி வகையின் எண்வகை உணவின் (தொல்.
1579) என்று உணவின் வகைகளையும் சுட்டுகிறார். அதனால்தான்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள்.1031)
என்கிறார்
வள்ளுவரும்.
வேளாண் மேலாண்மை
கூறுகள்
ஒரு நாட்டின் அல்லது ஒரு சமூகத்தின் வளவாழ்வு,
தன்னிறைவு பெற்ற வாழ்வு என்பது, அச்சமூகம் தன் உணவுத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள மேற்கொள்ளும்
திட்டமிடல், செயல்பாடு, தொழில்நுட்பப் பயன்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய துறைசார் ‘மேலாண்மை’யைப்
பொறுத்தே அமைகிறது. இவற்றில் மழைவளம் காத்தல், நீர் மேலாண்மை, மூலதனங்களைப் காத்தல்
மற்றும் பெருக்குதல், மண் வளம் பேணுதல், விளை நிலம் விரிவாக்கத் திட்டம், தரமான வித்துகளைப்
பயன்படுத்துதல், தேவையான நீர் பாய்ச்சுதல், களையெடுப்பு, எருயிடல், பயிர்ப் பாதுகாப்பு,
காலத்தே அறுவடை செய்தல், சுழற்சி முறை வேளாண்மை, மானாவாரி பயிரிடுமுறை, இரண்டாம் நிலை
உற்பத்திப் பொருள், வேளாண் கருவிகளின் பயன்பாடு, வேளாண்மை சார்ந்த பொருளாதார மேம்பாடு
போன்ற படிநிலை செயல்பாடுகள் முக்கிய இடத்தைப் பெருகின்றன. பழந்தமிழரின் இவ்வகை வேளாண்
உத்திகள் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுளமையைக் காணமுடிகிறது.
நீர் மேலாண்மை
வேளாண் தொழிலில் நீர் மேலாண்மை என்பது
இன்றியமையாததாகிறது. மழைநீரே வேளாண்மையின் அணிவேராக அமைவதைப் பழந்தமிழர் நன்கு உணர்ந்திருந்தனர்.
பருவத்திற்கேற்ற மழை, அதன் தன்மையில் மாறுபடாமல் பொழிந்தால் வேளாண்மை வளர்ச்சி என்பது
குன்றாமல் இருக்கும். பழந்தமிழ் இலக்கியங்களின் சில இடங்களில் நிலங்களின் வறட்சிநிலை
சுட்டப்பட்டாலும், மழைப்பொழிவும், மழை வளமும் பரவலாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.
புதுவெள்ளமும், காட்டாறும் வருணிக்கப்படுகின்றன. பருவத்தே மாறாத மழைப்பொழிவால் ஆண்டின்
குறிப்பிட்ட நாளில் ‘புதுப்புனலாடுதல்’
ஒரு முக்கிய விழாவாக நடத்தப்பட்டது. உலகமும் உயிர்களும் நீரின்றி இல்லை என்பதை,
‘நீரின்று அமையா உலகம் போல’ (நற்.1:6)
என்கிறது
நற்றிணை. இதையே,
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே (புறம்.18:18-21)
என்ற
புறநானூற்று அடிகளும் அறிவிக்கின்றன. மேலும், இவ்வகையான சிறப்பு வாய்ந்த நீரினையும்,
நிலத்தையும் ஆங்காங்கே நீர்நிலைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒன்றாகக் கலக்கச் செய்பவரே,
இவ்வுலகத்தில் உடலையும் உயிரையும் படைத்தவர் என்ற பெருமையைப் பெறுவர் என்பதனை,
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும்
உயிரும் படைத்திசி னோரே (புறம்.18:22,23)
என்ற
அடிகள் சுட்டுகின்றன.
மேலும், உலகத்தில் நிகழும் தொழில்களுள்
ஒன்றேனும் கெடாமல் இருக்க, உழும் தொழிலுக்குரிய கலப்பைகளும் பயன்பட, பருவத்தே மழை பெய்ய
வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது(அகம்.41:4-6). இவ்வகை அறிவுறுத்தலால், நாட்டில்
தேவைப்படும் இடங்களனைத்தும் நீர்நிலைகளால் நிரம்பியிருந்தன. மடு, குளம் (பெரும்பாண்.288-89;
மதுரை.710-11; குறிஞ்சி.63; மலைபடு.47, 213; திருமுருகு.224; பொருநர்.240; மதுரை.244-6),
குட்டம் (பெரும்பாண்.269-71), கேணி (சிறுபாண்.172) என்று, பலபெயர்களுடனும்,
பல தன்மையுடனும் கூடிய, பல்வேறு பயன்பாட்டிற்கான நீர்நிலைகள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டன.
வேளாண்மைக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து
‘புதவின்’ (புறம்.24:18-19: புறம்.24.19;
176:5) வழி பாசனத்திற்கான நீர் கொண்டுசெல்லப்பட்டது. வயல்களுக்கு நீரினைத் திருப்பிவிடும்
‘போக்கு மடை’கள் அமைக்கப்பட்டன. வேளாண்
தொழிலின் உயிர்நாடியாக விளங்கும் நீரினைப் பாதுகாக்க நீர்நிலைகளுக்குக் காவலர் பாதுகாப்பிற்கு
அமர்த்தப்பட்டனர் (புறம்.15:9-10).
மழைவளம்
பெருக்கும் வழிகள்
மழை வளத்தைப் பெருக்க உதவும் வழிகளுள்
முதன்மையானது இயற்கை வளங்களாகிய மலைவளத்தையும், வனங்களையும் காத்தலும், அதோடு, நீர்நிலைகளை
ஆங்காங்கே ஏற்படுத்தி, நீர்ச் சுழற்சிக்கு வழிவகுத்தலுமாகும். அடுத்ததாக, செயற்கை வளங்களை உண்டாக்குதல். இதில்,
மரங்களை வளர்த்து, இயற்கைச் சமநிலையைப் பேணுதல் குறிப்பிடத்தக்கது. இவ்வறிவியல் உண்மையைப்
பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். அதனால், மரங்களைக் காக்கவும், மரங்களை மக்களைவிட உயர்வானதாக
உணரவும், சாலையோரங்களில் மரங்களை வளர்க்கவும் செய்தனர்.
தம் மகளைவிடச் சிறந்ததாகப் புன்னை மரத்தினைக்
கருதிய தாயினை நற்றிணை காட்டுகிறது (நற்.172:1-5). மன்னன் பிறநாட்டின் மீது போர்த்தொடுத்துச்
செல்லுங்கால், ‘அந்நாட்டில் உள்ள விளை நிலங்களைக் கவர்ந்தாலும், ஊர்களை எரியூட்டினாலும்,
எதிரிகளை அழித்தாலும், அந்நாட்டில் உள்ள மரங்களை மட்டும் அழிக்காது விடுக’ என்று அறிவுறுத்துகிறார்
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (புறம்.57:5-11). சாலையோரங்களில் வைத்த மரங்கள்
வழிப்போவோர்க்கு நிழல்கொடுத்ததோடு, அவற்றின் இனிய கனிகள் உணவாகவும் பயன்பட்டன (பதி.60:5-7).
மேலும், வழிகளைச் செம்மைப்படுத்தி, அவற்றின் இருமருங்கிலும் அசோகு (செயலை) மரங்களையும்,
மூங்கிலையும் (கழை) நட்டு வளர்த்தனர் (மலைபடு.158, 161).
மண்
வளம்
மண் வளத்தின் தன்மையைப் பாதுகாப்பதில்
மழைவளத்தின் பங்கு அளவுகோலாகிறது. இதனால், ‘வானம்
வாய்க்க மண்வளம் பெருகுக’ (மணி.19:151) என்று வாழ்த்தும் ஒலி பழந்தமிழகத்தில் கேட்கிறது.
மக்கள் தம்மை வருத்தி தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவில் உள்ள நாடு சிறந்த நாடாகக்
கருத்தப்படமாட்டாது. நாடா வளத்திற்கு அந்நாட்டின் மண்வளம் முக்கியப் பங்காற்றுகிறது.
‘நிலம்பயம் பொழிய’ (பதி.69:13) என்பதாக
மண்ணின் வளம் அமைதல் வேண்டும்.
நிலமும் - நீரும், உடலும் - உயிரும்
போன்றதாகச் சுட்டப்பட்டன. நிலத்தின் வளத்தைப் பாதுகாக்க ஆங்காங்கே நீர்நிலைகளை அமைத்தனர்.
விளைநிலங்களின் இடையிடையே சிறுசிறு குளங்களை ஏற்படுத்தி, மண்ணின் வளத்தைப் பேணினர்
(குறு.8:1,2). இதனால் விளைநிலங்கள் தன்மையில் மாறுபடாது, வேளாண் வளத்தில் குன்றாது
விளங்கின.
வேளாண் உற்பத்திப்
பெருக்கம்
விளை
நிலம் விரிவாக்கத் திட்டம்
உணவுப் பொருளின் உற்பத்தியைப் பெருக்க,
புதர்களையும், கரம்புகளையும், காடுகளையும் அழித்து, விளைநிலமாகப் பண்படுத்தினர்.
காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கி (பட்டினப்.283-288)
என்பதில்,
பயிரிடுவதற்கு ஏதுவாகக் காடுகளைச் சீர்படுத்தி,
நீர்நிலைகளை ஏற்படுத்தி, உணவு உற்பத்திப்
பெருக்கத்திற்கு வித்திட்டது தெரியவருகிறது. அதேபோல, மானாவாரி (வன்புலம்) பயிரிடுமுறை சிறந்த
பயனைத் தந்தது. உணவுத் தேவையை ஈடுசெய்ய இத்திட்டம் பேருதவியாக அமைந்தது. அவ்விதம், புதிய தினைக்கொல்லையை உண்டாக்கும் பொழுது
எழும் புகையினை, ‘இதைமுயல் புனவன் புகைநிழல்
கடுக்கும்’ (அகம்.140:11) என்ற அடி காட்டுகிறது.
மேலும், காட்டைத் திருத்தி, தினைப் பயிரிட்டு,
அப்பயிர் விளைந்து அறுவடைக்குக் காத்திருக்கும் காட்சிகளையும் (அகம்.192, குறு.141,142),
பெருங்கற்களை உடைய பக்க மலையைத் திருத்தி, உழுத இடத்தில், கரும்பைப் போன்று திரண்டு
அழகுடைய கதிரையுடைய தினை விளைந்து நின்ற காட்சிகளையும்
(அகம்.302; 368:1-3; குறு.198; 291;) சங்க இலக்கியம் காட்டுகிறது. இவ்வகைப் மானாவாரி
பயிரிடுமுறையால் உணவுத் தேவையில் நிறைவு ஏற்பட்டதை, ‘தொய்யாது வித்திய துளர்படு துடவை’ (மலைபடு.123) என்பதிலும், ‘சுவல்விளை நெல்லின்’ (மலைபடு.436) என்பதிலும்
அறியமுடிகிறது.
வேளாண் தொழிலில்
நுட்பங்கள்
துறைசார் நுட்பங்களையும், தொழில்நுட்பக்
கருவிகளையும் பயன்படுத்துதல், அத்துறையின் மிகு வளர்ச்சிக்கும், பயன் நிறைவிற்கும்
ஏதுவாகிறது. அவ்வகையில், வேளாண்துறையில் பழந்தமிழர் பல்வகை நுட்பங்களையும், தொழில்நுட்பக்
கருவிகள் மற்றும் எந்திரங்களையும் பயன்படுத்தி, மிகு விளையுளைப் பெற்றது சங்க இலக்கியம்
வழி அறியப்படுகிறது.
உழுதலில்
நுட்பம்
பலமுறை
உழுதல்
வேளாண் விளையுள் பெருக்க நுட்பத்தில் முதலாவதாக
அமைவது நிலத்தினை உழுதலாகும். உழுதல் என்பது, மண் மேல்-கீழ் நன்றாகப் புரளும்படி செய்யவும்,
மண்ணைப் பதப்படுத்தவுமான உத்தியாகும். நிலத்தினை பல முறை நன்றாக உழுதல் வேண்டும்; உழுது
உடனே பயிர்செய்யாமல், நிலத்தினைக் காயப்போட வேண்டும் (ஆறப்போடுதல்); அவ்வாறு செய்வதால்
அப்புழுதியே எருவாக மாறும் என்கிறது குறள். (குறள்.1037).
அதாவது, புழுதி மண் நான்கின் ஒருபங்காகும்படி உழுது காயவிட்டால், அப்புழுதியே
பயிருக்கு நல்ல எருவாகும் என்பது இயற்கை வேளாண் அறிவியலாகும். இதனையே,
---------------- உறுபெயல்
தண்துளிக்கு
ஏற்ற பலஉழு செஞ்சேய
மண்போல்
நெகிழ்ந்து (அகம்.26:23-25)
என்கிறது
அகநானூறு. அதாவது, மிக்க பெயலை உடைய நிலத்தைப்
பலமுறை உழுதலால், அந்நிலம் நெகிழ்ந்து வேளாண்மைக்கு ஏற்றதாய் அமைதல் இங்குச் சுட்டப்படுகிறது.
அதேபோல, பூமி நெகிழும்படி பலமுறை உழுது விதைத்ததை,
பூமி மயங்கப் பலவுழுது வித்தி (புறம்.
120:2-3)
என்ற
அடியும் சுட்டுகிறது. இங்கு, ஈரநிலமாயினும் பலசால உழுவதால் புழுதி உண்டாகும். அவ்வாறான
நிலத்தில் எரு இடாமலே நன்கு விளையும் என்ற நுட்பத்தையே, ‘பூமி மயங்கப் பல உழுது’ என்கிறார். அதேபோல, ‘பலகாலும் உழுதலால் பயன்படும் நிலம்போல’ (ஐங்குறு.14) என்பதில், பலமுறை
உழுதலால் மண்ணின் தன்மை மேம்படும் என்பதோடு, களைகளும் அழிக்கப்படும் என்பது வேளாண்உத்தியாக
அமைகிறது.
ஆழ
உழுதல்
‘அகல உழுதலை விட ஆழ உழுதல் நன்று’ என்பது
வேளாண் சார்ந்த பழமொழி.
------------- நாஞ்சில்
உடுப்பு
முக முழுக் கொழு மூழ்க ஊன்றி (பெரும்பாண்.199,200)
என்பதில்,
கொழு முழுகும் அளவில் ஆழமாக உழது பயிரிட்டது சுட்டப்படுகிறது. இவ்வாறு உழுதலால் உழவர்,
‘செஞ்சால் உழவர்’ (பெரும்பாண்.196) என்று
அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு உழுதலில் நுட்பத்தினைச் செயல்படுத்தி,
நல்விதைகளை தேர்ந்து விதைத்து, அதிக விளைச்சல் பெற்றதை,
ஊன் கிழித்தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய
மருங்கின் விதைபல நாறி (அகம்.194:4,5)
என்ற
அடிகள் சுட்டுகின்றன.
நீர்ப்பாய்ச்சுதல்
வயல்களுக்கு வேண்டிய நீரை ஆறு, ஏரி, குளம்
ஆகியவற்றிலிருந்து பாசனத்திற்குப் பயன்படுத்தினர். உழவர் பாடியவாறு, குளங்களிலிருந்து
பட்டை எனும் கருவி கொண்டு நீர் இறைத்து வயலில் பாய்ச்சினர் என்பதை மதுரைக்காஞ்சி
(89, 90) காட்டுகிறது. வேளாண்மைக்குத் தேவையான நீரினைப் பாய்ச்சுதற்குப் பல்வேறு வகையான
கருவிகளை உருவாக்கினர். ‘பட்டை’, ‘பன்றிப் பத்தர்’, ‘ஆம்பி’, ‘சால்’, ‘தொப்பரை’,
‘துலா’, ‘பூட்டைப்பொறி’ போன்ற கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் கைவரப் பெற்றிருந்தனர். ஆறு, குளம், அணை, கிணறு ஆகியவற்றிலிருந்து வயல்களுக்கு
வேண்டிய நீரினைப் பயன்படுத்தினர். மேலும், எருதுகளைக்கொண்டு ‘பன்றிப்பத்தர்’ எனப்படும் ஆம்பி மூலமாகவும், சால், தொப்பரை மூலமாகவும்,
துலா அமைத்தும் பூட்டைப் பொறியின் மூலமாகவும் நீர்ப்பாச்சும் முறையினையும் அறியமுடிகிறது.
இதனை,
நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பும் இசை ஏற்றத்
தோடு வழங்கும் அகல் ஆம்பியின்
கயன் அகைய வயல் நிறைக்கும்
மென் தொடை வன் கிழாஅர் (மதுரைக்.89-93)
என்கிறது
இலக்கியம்
எரு இடுதல்
பண்டைக் காலத்தில், வேளாண் மக்கள் கால்நடைகளின்
கழிவாகிய தொழு உரமும் இலைதழைகளாகிய தழையுரமும் பயன்படுத்துவதை மரபாகக் கொண்டிருந்தனர்.
நிலவளத்திற்கும் அதிக விளைச்சலுக்கும் அவை ஏற்றவையாய் இருந்தன. எரு இடுதல் என்பதில், இயற்கை முறை எருவினைப் பயன்படுத்தியமை
தெரியவருகிறது. ‘தாது எரு மறுகின்’ (நற்.345:3;
புறம்.33:11; 215:2; 311:3), ‘இரும்புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி, பைந்தாது
எருவின்’ (நற். 271:1-2), ‘தாதெரு மறுகு’ (நற்.343:3) ‘தாது எரு மறுகின் மூதூர்’ (அகம்.165:4), ‘தாது எருமறுத்த கழிஅழி மன்றத்து’ (பதி.13:17),
‘தாது எருத் ததைந்த’ (மலைபடு.531), ‘இடு முள் வேலி எருப் படு வரைப்பின்’ (பெரும்பாண்.154)
என்பவற்றில் குப்பைக் கூளங்களே எருவாகப் பயன்பட்டமை அறியப்படுகிறது. எருக்களைக் கொட்டி
வைப்பதற்கென்று விடப்பட்ட இடங்களில் அவற்றைச் சேர்த்து வைப்பர். இது ‘தாதெரு மன்றம்’ (கலி.108:60) எனப்படுகிறது.
களையெடுத்தல்
இரைக்கும் நீரும், இடும் எருவும் முழுமையாகப்
பயன்பட வேண்டுமாயின் வயலில் களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ‘களைகால் கழீஇய பெரும்புன வரகின்’ (அகம்.194:9)
என்று களையெடுத்தலின் தேவையை அகநானுறு சுட்டுகிறது. இதனையே, ‘பைங்கூழ்
களை கட்டதனொடு நே’ர் (குறள்.556) என்பார் வள்ளுவரும். களையெடுப்பதற்கான கருவிகள்
இருந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
கலப்பு மற்றும்
சுழற்சி முறை வேளாண்மை
மண்ணின் வளம் பேணுதலுக்கும், வேளாண் விளைச்சலின்
பெருக்கத்திற்கும் கலப்பு முறை வேளாண்மையும், சுழற்சி முறை வேளாண்மையும் இன்று அறிவுறுத்தப்படுகிறது.
இவ்விரண்டின் பயன்பாட்டையும் பழந்தமிழர், தம் மரபு அறிவால் அறிந்திருந்தனர் என்பது
சங்க இலக்கியங்கள் வழிப் பெறப்படுகிறது. வன்புலமாகிய
மேட்டுநிலத்தின் பயிராகிய தினையில் ஊடுபயிராக வெண்சிறுகடுகும், அவரையும் விதைத்தனர்.
அதேபோல, மென்புலமாகிய நன்செய் நிலத்தில் சுழற்சி முறை வேளாண்மையாக நெல்லின் அறுவடைக்குப்
பின் உழுந்து பயிரிட்டனர்.
மூங்கில் நெல் விளைந்து, கொய்யும் பதத்தை
எட்டிய பிறகு, அந்நிலத்தில் உழாமலே விதைத்த வெண்சிறுகடுகு விதைத்திருந்ததையும், உழவர்கள்
அச் செடிகளின் போதுகளைக் கோதி ஒழுங்குபடுத்திய நுட்பத்தையும்,
அவல்
பதம் கொண்டன அம் பொதித் தோரை
தொய்யாது
வித்திய துளர் படு துடவை
ஐயவி
அமன்ற வெண் காற் செறுவில் (மலைபடு.121-123)
என்ற
அடிகள் காட்டுகின்றன. தினைக்கதிர்களைக் கொய்த
பின்னர்த் அடித் தட்டை (தாள்) மட்டும் உள்ள வயலில் அவரையை விதைத்தனர். அவரை தினையரித்
தாளில் படர்ந்து காய்த்திருந்தது. இதனை,
சிறுதினை கொய்த இருவி வெண்கால்
காய்த்த
அவரைப் படுகிளி கடியும் (ஐங்குறு.286:1-2)
என்ற
அடிகள் விளக்குகின்றன. அதேபோல, சுழற்சி முறையில் நெல் மற்றும் தினை போன்றவற்றிற்கு
அடுத்து உழுந்து பயிரிடப்பட்டதையும், தடியைப் பயன்படுத்தி அடித்து, உழுத்தம் பருப்பைப்
பிரித்தெடுத்ததையும்,
பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு
முதுகாய் உழையினம் கவரும் (குறு.68:1-2)
என்பதிலும்,
உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள்
(குறு.384:1)
என்பதிலும்
அறிய முடிகிறது.
மேலும், ‘இரும்பனிப் பருவத்து மயிர்க்காய் உழுந்து’ (நற்.899:5) என்பதால், உழுந்து
முன்பனிப் பருவத்தில் முதிர்வன என்பது அறியப்படுகிறது. இதன்வழி பருவத்திற்கேற்ற பயிர்களை,
சுழற்சி முறையில் பயிரிடும் வேளாண் நுட்பம் பெறப்படுகிறது.
வேளாண் தொழிற்கருவிகள்
உழு கருவிகள்
வேளாண்மைப் பயன்பாட்டுக் கருவிகளுள் முக்கியமானது
‘கலப்பை’ எனப்பட்டது. இவ்வகைக் கருவியை உருவாக்கவும்,
பயன்படுத்தவும் பழந்தமிழர் கற்றிருந்தனர். பழந்தமிழ் இலக்கியத்தில் இக்கருவி ‘ஏர்’ என்றும், ‘நாஞ்சில்’ (அகம்.26:23) என்றும் வழங்கப்படுகிறது. அதேபோல, கலப்பையின் உறுப்பாகிய ‘கொழு’ (அகம்.26:24) இலக்கியத்தில் இடம்பெறுகின்றது.
அதேபோல், புன்செய் நிலங்களை உழுது, பயிர் செய்யும் வலிய கையையுடைய உழவர், சிறந்த பல
கடாக்களை அவற்றின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்கும்படி பூட்டி, கலப்பையால் உழுகின்ற
காட்சி(பதி.58:17) காட்டப்படுகிறது.
மேலும்,
குடி நிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடை
நவில் பெரும் பகடு புதவில் பூட்டி
பிடி
வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு
முகமுழுக்கொழு மூழ்க ஊன்றி (பெரும்பாண்.197-200)
என்பதில்,
உழவர், அவர் வீட்டின் வாயிலிலேயே எருதுகளை நுகத்தில் (நுகத்தடி - கலப்பையின் உறுப்பு)
பூட்டுவர். பூட்டிச் சென்று, பெண் யானையின் வாயைப் போன்று வளைந்த வடிவையுடைய கலப்பையின்
(நாஞ்சில்) உடும்பு முகம் போன்ற கொழு முழுவதும்
மறையும்படி ஆழ உழுவர் என்ற செய்தி காணப்படுகிறது. இதில், இதில், வேளாண் உழு கருவியான
கலப்பை, கலப்பையின் உறுப்பாகிய கொழு ஆகியவற்றின் வடிவமும் பயனும் சுட்டப்படுகின்றன.
அதேபோல, கலப்பையை ‘கொழுவல்சி’(141) என்கிறது மதுரைக் காஞ்சி.
கட்டிகளைக்
களையும் கருவி
நிலத்தை நன்கு உழுவதோடு, நிலத்தில் புரளும்
மண் கட்டிகளை உடைத்து மண்ணை சமன் படுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் மண்ணே எருவாக
மாறவும் விதைக்கவும் நீர்ப்பாய்ச்சவும் ஏதுவாக அமையும். இந்த நுட்பத்தினை பழந்தமிழர்
அறிந்திருந்தனர். அதனார், கார்காலத்தில் பெய்த மழையின் ஈரம் உலர்வதற்குள் நிலத்தைப்
பலமுறை உழுதனர். அவ்வாறு உழும்பொழுது, நன்செய் நிலமாயின் அதில் ஏற்படும் கட்டிகளைக்
களைய/உடைக்க ‘தளம்பு’ என்ற கருவியைப் பயன்படுத்தினர். இதனை,
மலங்குமிளிர்
செறுவில் தளம்புதடிந் திட்ட
பழன
வாளை (புறம்.61:3-4)
என்ற
அடிகள் காட்டுகின்றன. வாளைமீன்கள் தளம்பிடை மாட்டி வெட்டுப்பட்டன என்ற குறிப்பிலிருந்து,
‘தளம்பு’ என்பது இரும்பினால் தகடுகளாக வடிவமைக்கப்பட்ட வேளாண்கருவி என்பதுதெரியவருகிறது.
களை எடுக்கும்
கருவிகள்
நிலத்தைப் பண்படுத்திப் பலமுறை உழுது,
விதைத்த பயிரை ஒழுங்கு செய்வதற்கும், களையெடுப்பதற்கும் பல கிளைகளையுடைய கலப்பையைப்
பயன்படுத்தினர். இதனை,
பூமி மயங்கப் பலவுழுது வித்திப்
பல்லி
ஆடிய பல்கிளைச் செவ்விக்
களைகால்
கழாலின் தோடுஒலிபு நந்தி (புறம்.
120:2-3)
என்ற
அடிகள் சுட்டுகின்றன. அதேபோல, களைகளைக் களையப்
பயன்படும் ‘துளர்’ என்ற கருவியை, ‘தொடுப்பு
எறிந்து உழுத துளர் படு துடவை’ (பெரும்பாண்.201) என்பதில் அறியமுடிகிறது. இதில்,
கலப்பையால் உழுது விதைத்த விளைநிலத்தில் தோன்றிய களைகளைக் ‘கொட்டால்’ களையப்பட்ட தோட்டம்
காட்டப்படுகிறது. இதேபோல, ‘தொய்யாது வித்திய
துளர்படு துடவை’ (மலைபடு.122) என்பதில், வன்நிலத்தில் களைக் கொட்டால் அடிவரைந்து
கொத்தும் கொல்லை இடம்பெறுகிறது.
பயிர்ப் பாதுகாப்பு
விளை பயிர்களை விலங்குகளிடமிருந்து காக்கவும், ஊன்
உணவுகளைப் பெறவும், விலங்குகளை வீழ்த்தவும், பிடிக்கவும் விலங்குப் பொறிகளை உருவாக்கினர்.
விலங்குகளின் தன்மைக்கேற்ப பொறிகளின் செயல் திறனும், வடிவமைப்பும் மாறுபட்டிருந்தன.
அதேபோன்று, பறவை போன்றவற்றிலிருந்து விளை தானியங்களைக் காக்க, சிறிய அளவிலான கைக் கருவிகள்
பயன்படுத்தப்பட்டன. பயிர்ப்பாதுகாப்பு பற்றி,
ஏரினும் நன்றாம் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு (குறள்.1038)
என்கிறார்
வள்ளுவர்.
பெரிய
பொறிகள்
எய்யும் முள் போன்ற பருத்த மயிருடைய பிடரியைக்
கொண்டதும், சிறிய கண்களைக் கொண்டதுமான, நிலத்தில் மேயும் முள்ளம்பன்றி உயர்ந்த மலையையடுத்த
பரந்த தினைப்புனம் நோக்கி வரும்போது, அதனைப் பிடிக்க வைக்கப்பட்ட பெரிய துவாரத்தினை
உடைய எந்திரத்தை நற்றிணை காட்டுகிறது (98:1-4). அதேபோல, தினைப் புனத்தை அழித்து விடுவதால்,
பன்றிகட்கு அஞ்சி, அவை வரும் வழியில் வைக்கப்பட்ட எந்திரப் பொறியை மலைபடுகடாம் (193-195)
சுட்டுகிறது.
தினையை உண்ணும் பன்றி அஞ்சி ஓடும்படி,
புனத்திற்குரியவன் சிறிய பொறியாக இணைத்திருந்த ‘பெருங்கல் அடாஅர்’ என்னும் எந்திரத்தில்
ஒள்ளிய நிறமுள்ள வலிய புலி அகப்பட்ட காட்சியை,
தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு
பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்
ஒண்
கேழ் வயப் புலி படூஉம் (நற்.119:1-3)
என்பதில்
அறியமுடிகிறது. இதில், வலிமை மிகுந்த புலி மாட்டும் என்பதால் எந்திரத்தின் தொழில்நுட்பமும்,
செயல்திறமும் விளங்கும்.
சிறிய
கருவிகள்
பெண்கள்,
மலைப் பக்கத்தே கட்டின பரண்மீது ஏறித் தழலும் தட்டையுமாகிய கிளிகளைக் கடியும் கருவிகளைக்
கையிலே வாங்கிக் கிளிகளை ஓட்டினர் (குறிஞ்சி.41-44). தலைவி, வேங்கை மாலை சூடி, ஆயத்துடன்
அழகுற நடந்து தழலினைச் சுற்றியும் தட்டையினைத் தட்டியும் தினைப்புனம் காத்தாள் (அகம்.188:1-13).
தழலும் தட்டையுமாகிய கிளிகடி கருவிகளைத் தந்தும், தழையாடையைக் கொடுத்தும் இப்பொருள்கள்
உனக்கு ஏற்புடையன என்று புனைந்துரைகளைக் கூறி தலைவியின் ஆய்நலத்தைத் தலைவன் கொள்ளை
கொண்டான் (குறு.223:4-7) என்பன போன்ற குறிப்புகளிலிருந்து, வேளாண்மைத் துறையில் பாதுகாப்புக்
கருவிகளாகத் தழலும், தட்டையும் விளங்கியமை தெரிகிறது. இவை விலங்குப் பொறிகளைப் போலல்லாது, சிறிய வடிவில்
கையால் இயக்கும் தன்மையில் வடிவமைக்கப்பட்டிருந்தன என்பது பெறப்படுகிறது.
வேளாண்மைத்
துறையில் எந்திரப் பயன்பாடு
விளைபொருள்களாகிய உற்பத்திப் பொருள்களிலிருந்து,
இரண்டாம்நிலை உருவாக்கப் பொருள்களைப் பிரித்தெடுக்க எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
அவ்வகையில், விளைபொருளாகிய கரும்பிலிருந்து தேவையான இரண்டாம் நிலை பொருளாகிய கரும்புச்
சாற்றினைப் பிரித்தெடுக்க ‘கரும்புபிழி எந்திரம்’
உருவாக்கப்பட்டது. கரும்புச் சாறிலிருந்து வெல்லம் தயாரிக்கப்பட்டது.
இக் கரும்புபிழி எந்திரம் ஆண் யானை முழங்கும்
முழக்கத்திற்கு ஒப்பாக ஒலித்ததை, ‘கரும்பின்
எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்’ (ஐங்குறு. 55:1) என்றும், எந்திரத்தின் மிக்கொலியை,
‘கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை’ (மதுரைக்.258)
என்றும் இலக்கியங்கள் சுட்டுகின்றன. மருதநிலத்து நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள்
பயந்து துள்ளிப் பாயும் அளவிற்கு ஒலி எழுப்பிய எந்திரத்தை,
கரும்பின்
எந்திரம் சிலைப்பின் அயலது
இருஞ்சுவல்
வாளை பிறழும்
(புறம்.322:7-8)
என்ற
அடிகளில் அறியமுடிகிறது.
அதேபோல, கரும்புச் சாறு பிழியும் எந்திரத்திலிருந்து
சாலுக்குக் கருப்பஞ்சாற்றை எடுத்துச் செல்லும் தூம்பு சாறு ஓடுதலால் நனைந்து கெடுதலை, ‘தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த’ (பதி.19:23)
என்ற அடியும், யானைகள் கலங்கிக் கதறியதைப் போல் ஆலைகள் ஆரவாரிக்கும் மாறாத ஓசையை உடைய
கொட்டிலில், கரும்புச் சாற்றைக் கட்டிகளாகக் காய்ச்சுவதால் தோன்றும் புகையை,
கணம்
சால் வேழம் கதழ்வுற்றா அங்கு
எந்திரம்
சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
விசயம்
அடூஉம் புகை சூழ் ஆலை’ (பெரும்பாண்.260-262)
என்ற
அடிகளும் காட்டுகின்றன. அதேபோல, பசிய கரும்பைப் பிழிந்து, பாகை அடும் கொட்டிலில் காய்ச்சுதலை,
கார்க்கரும்பின்
கமழாலைத்
தீத்தெறுவிற்
கவின்வாடி
(பட்டினப்.9-10)
என்ற
அடிகள் உரைக்கின்றன.
மேலும், கரும்பு ஆலையில் சென்று, பயனுற
அசைந்த கரும்பினையும், மழை பெய்வதைப் போல் கருப்பஞ் சாற்றை மிகவும் பெய்யும் கருப்பாலைகளில்,
விரைந்து கோல்களின் கணுக்களை எந்திரம் பிழிவதால்
அந்தக்கரும்பினின்று எழும் ஆராவாரத்தை,
‘ஆலைக்
கலமருந் தீங்கழைக் கரும்பு’ (மலைபடு.119)
என்பதிலும்,
மழை
கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக்
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் (மலைபடு.340-341)
என்பதிலும்
அறியமுடிகிறது. இதேபோல, ஊர்களின் தோற்றப் பொலிவானது, கரும்பாலைப் புகையினால் பரப்பப்
பெற்று, இருண்ட மேகம் சூழ்ந்த பெருமலை போலத் தோன்றியதை,
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையில் தோன்றும்
(சிலம்பு.10:151,152)
என்பதில்
காணமுடிகிறது. இச்சான்றுகளின் வழி, கரும்பு பிழி எந்திரம் பெரிதாக ஒலிக்கும் தன்மையுடையதாகவும்,
இடைவிடாமல் இயங்கும் ஆற்றல் கொண்டதாகவும், அதிகப்படியான கரும்புகளைப் பிழிந்தெடுக்கும்
வன்மை வாய்ந்ததாகவும் உருவாக்கப்பட்டிருந்த தொழில்நுட்பம் பெறப்படுகிறது.
மேற்கண்ட சங்க இலக்கியச் சான்றுகளின்
வழி, பழந்தமிழர் அடிப்படைத் தேவைகளுள் முதலாவதான உணவின் தேவைக்கு, வேளாண் தொழிலைச்
சிறந்த முறையில் பயன்படுத்தினர் என்பது பெறப்படுகிறது. மேலும், இயற்கை மூலதனங்களைக்
காத்தல் மற்றும் பெருக்குதல், செயற்கை வளங்களை உண்டாக்குதல் மற்றும் நீர் மேலாண்மை,
வேளாண் விளைநிலங்களை விரிவாக்குதல் மற்றும் பண்படுத்துதல், உழுதலில் நுட்பம், பயிரிடுதலில்
நுட்பம், வேளாண் கருவிகளின் பயன்பாடு, இரண்டாம் நிலை உற்பத்திப் பொருள்கள் என்று, வேளாண்மையில்
அவர்களின் மேலாண்மைச் செயல்பாடுகள் சிறந்து விளங்கியதும் அறியப்படுகிறது.
*****
Dr. A. Manavazhahan,
Associate Professor, Sociology, Art & Culture, International Institute of
Tamil Studies, Chennai -113.
தமிழியல்
www.thamizhiyal.com