செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

புறநானூற்றில் பழந்தமிழர் தொழில்நுட்பம்

 ஆ.மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

 (தேசியக் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அக்.18,19,20-2006)

 

முன்னுரை

            ஒரு நாட்டின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் அந்நாடு தொழில்நுட்ப அறிவினைத் தம்முள் கொண்டிருப்பதும், பல்துறைகளிலும் தொழில்நுட்ப உத்திகளைக் கையாள்வதும் அடிப்படையாக அமைகிறது. தொழில்நுட்பக் கூறுகளைப் பயன்படுத்தாத எந்த ஒரு நிறுவனமோ, துறையோ அல்லது நாடோ தன்னிறைவு பெறுதலும் வளர்ச்சி காண்பதும் அரிதாகிறது. இன்றைய நிலையில், வளர்ந்த நாடுகளின் வரிசையில் உள்ள பலவும் தங்கள் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தினையே மூலதனமாக்கியுள்ளன என்பது கண்கூடு. இந்நிலையில், வளர்ந்துவரும் நாடுகளும் அவ்வழியைப் பின்பற்றியே தங்களை வளர்த்துக் கொள்ள முனைவதையும்  காணமுடிகிறது.

            நாட்டில் பல்வேறு மூலப்பொருள்கள் மண்டிக்கிடப்பதாலேயே அந்நாடு தன்னிறைவு பெற்றதாகவோ, வளர்ச்சியடைந்ததாகவோ கொள்ள முடியாது. மூலப்பொருட்களை அதிகம் பெற்றிராத, அதே வேளையில் தொழில்நுட்ப வல்லமை கொண்ட அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான் போன்றவை இன்று உலக நாடுகளில் பொருளாதார வல்லமை கொண்டவையாக முன்னிறுத்தப்படுகின்றன. இவை தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தி நிற்கின்றன. அவ்வகையில், 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார வல்லரசாக மாற,  ‘தொழில்நுட்பத்தை மையமாகக்கொண்ட தொழில்துறை வளர்ச்சி’ என்பது திட்டகுழுவினரால் இன்று முன்னிறுத்தப்பட்டுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கது.

             தொழில்நுட்பம் என்பது திடீரென இன்று முளைவிட்டு கிளைத்தெழுந்த ஒன்றா?  மேலும், அது இன்று தொழில்நுட்பங்களில் முன்னிலை வகிக்கும் நாடுகளுக்கு மட்டுமே உரித்தான ஒன்றா? என்பன போன்ற கேள்விகள் தொழில்நுட்பத்தின் தீவிரத் தேவையால் இன்று முன்னிறுத்தப்படுகின்றன. மனிதனின் அடிப்படைத் தேவைகள் விரிவடையும் ஒவ்வொரு காலகட்டத்திலேயும், அத்தேவைகளை நிறைவு செய்ய புதிய புதிய வழிமுறைகளைக் கையாளவும், புதுப் புதுக் கருவிகளைக் கண்டுபிடிக்கவும் அவன் முனைகிறான். அத்தேவைகளின் நிரந்தரத் தன்மைக்கும், வேலை பளு குறைப்பு மற்றும் கால மேலாண்மைக்கும் புதிய புதிய நுட்பங்களைக் கையாள  வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படுகிறது.  இவ்வடிப்படையிலேயே மனித வரலாறு தொடங்கிய காலந்தொட்டு இன்று வரை புதிய புதிய கண்டுபிடிப்புகளும், நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன/வந்திருக்கின்றன. தொழில்நுட்ப வல்லமையே ஒருநாட்டின் நாகரிக வளர்ச்சியினைத் தீர்மானிக்கும் அளவுகோலாகவும் அமைகிறது எனலாம். இவ்வியல்புக்குப் பழந்தமிழரும் விதிவிலக்கல்ல.  இன்று உலகம் வியக்கும் தொழில்நுட்பக் கூறுகளின் தன்மைகள் பலவும் பழந்தமிழரிடையே கையாளப்பட்டு வந்தமை பழந்தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் உண்மையாகும். இவ்வகையில், சங்க இலக்கியங்களின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் பழந்தமிழர்களின்,  தன்னிறைவு பெற்ற சமுதாயத்திற்கு வித்திடும் தொழில்நுட்பக் கூறுகள்  காணப்படுவதை இனங்காட்டுவதாக  இக்கட்டுரை அமைகிறது.

             ‘புறநானூறு காட்டும் பழந்தமிழர் தொழில்நுட்பம்’ என்ற இக்கட்டுரையானது,  அடிப்படைத் தேவைகளின் தன்னிறைவிற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களான, வேளாண் தொழில் நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், கட்டுமானத் தொழில்நுட்பம் என்பவற்றோடு உலோகத் தொழில்நுட்பம், எந்திரத் தொழில்நுட்பம் என்ற பெரும்பகுப்புகளையும் அவற்றுள் பல  உட்பகுப்புகளையும் கொண்டு அமைகிறது.

 வேளாண் தொழில் நுட்பம்

            நாட்டின் இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களுள் முதன்மையானது வேளாண் தொழிலாகும். சமுதாய வறுமைநிலையினைப் போக்கவும், மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பவற்றுள் முதன்மையானதாகிய உணவின் தேவையை நிறைவு செய்யவும் வேளாண் தொழில் இன்றியமையாததாகிறது.  வேளாண் தொழிலே மற்ற எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதைப் பழந்தமிழர் நன்கு உணர்ந்திருந்தனர். இவ்வகை வேளாண்தொழிலுக்கு  அடிப்படை ஆதாரமாக விளங்குவது மழைநீராகும். இம்மழைநீரினைச் சேமிக்க குளங்கள், அணைகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளை ஏற்படுத்துதல், சேமிப்பு நீரினை முறையாகப் பயன்படுத்தி நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தல்,  தரிசு நிலங்களைப் பண்படுத்துதல்,  சுழற்சி முறையில் பல்வித  பயிர்களைப் பயிரிடுதல், மானாவாரி பயிரிடுமுறையைக் கையாளுதல், நிலத்தை உழுதல் தொடங்கி அறுவடை வரையிலான வேளாண் செயல்பாடுகளில் பலவித கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற பல்வகை நிலைகளிலும் பழந்தமிழர் தொழில்நுட்பத்தினைக் கையாண்டுள்ளனர்.

             ஒரு நாட்டின் வளமான நிலைக்கும், சிறந்த ஆட்சிமுறைக்கும், வீரர்கள் போர்க்களத்தில் வெற்றியை ஈட்டி வருதற்கும் அடிப்படையாக அமைவது உழுது விளைவித்த நெல்லின் பயனே.  ஆதலால், ஏரைக் காப்பவரின் குடியைக் காப்பதே நல்லரசின்  கடமையாகும் என்பதை பழந்தமிழ்ப் புலவர்கள் மன்னர்களுக்கு உணர்த்தினர்(புறம் 35). இதனையே வள்ளுவரும்,                              சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

                   உழந்தும் உழவே தலை (குறள்.1031)

என்கிறார்.

            இவ்வகை தலைமைச் சிறப்பு  வாய்ந்த வேளாண் தொழிலின் இன்றியமையாமையை மக்களும் உணர்ந்திருந்தனர். உணர்ந்ததன் பயனாய் அத்தொழிலில் பல தொழில்நுட்பங்களைக் கையாண்டு வேளாண் உற்பத்திப் பெருக்கத்திற்கு  வழிவகுத்தனர். தரிசு நிலங்களைப் பண்படுத்தவும், நிலத்தினை ஆழ உழவும், களைகளை எடுக்கவும், தானியங்களைப் பிரித்தெடுக்கவும் பலவித கைக்கருவிகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

             கார்காலத்தில் பெய்த மழையின் ஈரம் உலர்வதற்குள் நிலத்தைப் பலமுறை உழுவர். நன்செய் நிலமாயின் அந்நிலத்தை உழும்போது ஏற்படும் கட்டிகளைக் களைய/உடைக்க தளம்பு என்ற ஒருவித கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

                          'மலங்குமிளிர் செறுவிற் றளம்புதடிந் திட்ட

                         பழன வாளை'     (புறம்.61:3-4)

 என்ற புறநானூற்று அடிகள் காட்டுகின்றன. வாளைமீன்கள் தளம்பிடை மாட்டி வெட்டுப்பட்டன என்ற குறிப்பிலிருந்து, ‘தளம்பு’ என்பது இரும்பினால் தகடுகளாக வடிவமைக்கப்பட்ட ஒருவித வேளாண்கருவி  என்பது புலனாகிறது.

            அவ்வாறே, நிலத்தைப் பண்படுத்திப் பலமுறை உழுது, விதைத்த பயிரை ஒழுங்கு செய்வதற்கும்,  களையெடுப்பதற்கும்   பல கிளைகளையுடைய ஒரு வித கலப்பையைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

                              ‘பூமி மயங்கப் பலவுழுது வித்திப்

                             பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்

                             களைகால் கழாலிற் றோடொலிபு  நந்தி’ (புறம். 120:2-3)

என்ற புறநானூற்று அடிகள் சுட்டுகின்றன.  மேலும், ஈரநிலமாயினும் பலசால் உழுவதால் புழுதி உண்டாகும். அவ்வாறான நிலத்தில் எரு இடாமலே நன்கு விளையும் என்பர். இத்தன்மையையே ‘பூமி மயங்கப் பல உழுது’ என்கிறார்.

        அதேபோல, விளைந்த கரும்பினை வெட்டி எடுத்து, அதிலிருந்து சாறினைப் பிரித்தெடுக்க கரும்புபிழி எந்திரம் பயன்படுத்தப்பட்டதை பதிற்றுப் பத்து, ஐங்குறுநூறு போன்ற இலக்கியங்களைப் போல புறநானூறும் காட்டுகிறது.  இதனை,

                              'கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல

                               திருஞ்சுவல் வாளை பிறழும்'       (புறம் 322:7-8)

என்ற அடிகளில் அறியலாம். கரும்பைப் பிழியும் ஆலையானது ஒலிக்குமானால், பக்கத்து நீர்நிலையில் உள்ள பெரிய             பிடரையுடைய வாளை மீன்கள் துள்ளிப் பாயும் என்பதிலிருந்து, கரும்பு பிழி எந்திரம் ஓங்கி ஒலிக்கும் தன்மையதாக இருந்ததை அறிய முடிகிறது.

            இத்தகைய திட்டமிட்ட செயல்பாடுகளாலும், தொழில்நுட்ப உத்தியாலும் நாட்டின் உணவுத் தேவையை வேளாண்மக்கள் நிறைவு செய்ய முயன்றதோடு, 'வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை'யும் (புறம்; 108) வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகிறது.

 நெசவுத் தொழில்நுட்பம்

            இயற்கை நிலையிலிருக்கும் ஒன்றைத் தன் தேவைக்கேற்ப மாற்றி அமைத்து, அவற்றைப்  பயன்படுத்த முனையும் நிலையில் மனிதனின் தொழில்நுட்ப அறிவு வெளிப்படத் தொடங்குகிறது. அவ்வகையில் ,   தழை, மரப்பட்டை போன்றவற்றை உடையாகப் பயன்படுத்தும் வண்ணம், அவற்றை வடிவமைத்த ஆதிமனிதச் செயல்பாட்டில் தொழில்நுட்பம் முகைவிடத் தொடங்கியது எனலாம்.  எனினும், இரண்டாம் படிநிலையாகிய விலங்குகளின் தோலினையும், மூன்றாம் படிநிலையாகிய பருத்தி, பட்டு போன்றவற்றையும் பயன்படுத்தத் தொடங்கிய நிலையிலேயே அவனின் தொழில்நுட்ப அறிவு மலரத் தொடங்கியதாக கொள்ளப்படுகிறது. இவற்றிலும், மூலப்பொருள்களை உற்பத்தி செய்து (பருத்தி, பட்டுக்கூடு) அவற்றிலிருந்து இரண்டாம் நிலை உற்பத்தி பொருள்களை (நூல், பட்டு இழை) உருவாக்கி, மூன்றாம் நிலை உற்பத்திப் பொருளாகிய துணியை நெய்து, பின்னர் பயன்பாட்டுக்கு ஏற்ப பல வடிவங்களிலும், வண்ணங்களிலும், அலங்கார வடிவமைப்புடனும் கூடிய ஆடைகளை நெய்யத் தொடங்கிய நிலையே தொழில்நுட்பத்தின் உயர்நிலையாக முன்னிறுத்தப்படுகிறது.

          பழந்தமிழ் சமுதாயத்தைப் பொறுத்த அளவில் உடையின் தேவையை நிறைவு செய்யவும், அவற்றின் வழி பொருளாதாரத்தை ஈட்டவும், பல்முனைச் செயல்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. முதலில், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உடையின்  தேவையை நிறைவுசெய்ய நெசவுத் தொழில்நுட்பத்தைப் பெண்களும் கற்று அதனைக் குடிசைத் தொழிலாக்குதல், இரண்டாவது, அவற்றிற்குத் தேவையான மூலப்பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தல், மூன்றாவது, உடை உற்பத்தியில் பல வகை நுட்பங்களையும் பயன்படுத்தி உடைகளில் பலவகைகளையும், வண்ணங்களையும் ஈட்டி அவற்றை  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பொருளாதாரத்தைப் பெருக்குதல் என்ற அடிப்படையில் இச்செயல்பாடுகள் அமைவதைக் காணமுடிகிறது.

      முல்லை நிலத்துப் பெண்கள் மோர்விற்று தம் குடும்பப் பொருளாதாரத்தை வளப்படுத்தியதைப் போல, கணவனைப் பிரிந்த பெண்கள், தனியே இருக்கும் பெண்கள் உட்பட இல்லிருப்போர் தங்கள் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்ட நெசவுத் தொழிலை வீட்டிலேயே செய்து வந்திருக்கின்றனர்.  நெசவுத்தொழிலில் ஈடுபட்ட பெண்களைப் புறநானூறு ‘பருத்திப் பெண்டிர்’ எனக் குறிப்பிடுகிறது. இதனை,

                        பருத்திப் பெண்டின் பனுவ லன்ன          (புறம். 125: 1)

 மற்றும்,

                        'சிறையுஞ் செற்றையும் புடையுந ளெழுந்த

                       பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து’ (புறம்.326:4-5)

என்ற பாடலடிகள் உறுதிசெய்கின்றன. மேலும், இரவு நேரத்திலும் வீட்டின் விளக்கொளியில் பெண்கள் பருத்திப் பஞ்சை நூல்நூற்க ஏற்றவாறு தரம்பிரித்து, அவற்றிலுள்ள சொத்தைகளையும் குறைகளையும் நீக்கி பண்படுத்தும் பணியை ஏற்றிருந்தமை புலப்படுகிறது.

       நெசவுத்தொழிலுக்கு மூலப்பொருளான பருத்திப் பஞ்சைப் பெறுதல் பொருட்டு,  பருத்திச் செடியை உள்நாட்டிலேயே விளைவித்த வேளாண்மை நுட்பத்தை புறநானூறு காட்டுகிறது. ஊரைச் சுற்றிலும் பருத்தி மிகுதியாகப் பயிரிடப்பட்டிருந்ததை,

                               ‘பருத்தி வேலிச் சீறூர்’                   (புறம். 299:1)

என்பதன் வழி அறிய முடிகிறது.  பருத்திச் செடியிலிருந்துப் பெறப்பட்ட பஞ்சை உலர்த்தி, பண்படுத்த இல்லத்தின் முன்றிலில் பரப்பி வைத்திருந்த காட்சியை,

                               ‘பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கட்’    (புறம். 166:5)

என்ற புறநானூற்று அடி சுட்டுகிறது.

            தன்னை நாடி வரும் வறியவர்க்கும் பாணர்க்கும் அவர்களின் கிழிசல் ஆடைகளைக் களைந்து, புத்தாடைகளை உடுக்கச்செய்யும் பழந்தமிழ் அரசர்களின் செயல்களைப் புறநானூறு  வெளிப்படுத்துகிறது. அவ்வாறு வழங்கப்பட்ட ஆடைகள் பலவகை நுண்வேலைப்பாடுகளைக் கொண்டவையாகவும், பல்வகைத் தொழில்நுட்பங்களின் வெளிப்பாடாகவும் விளங்கின. பாம்பின் தோல் போன்ற தன்மையுடையனவும், மூங்கிலின் உள்பக்கத்தில் உள்ள தோலைப் போன்றனவும், நெய்யப்பட்ட நூல் இழைகளின் வரிசை அறிய முடியாத, பூ வேலைப்பாட்டுடன் கூடியனவுமாகிய தொழில் நுட்பம்கொண்ட ஆடைகளை வறியவர்க்குக் கொடுத்து உடுக்கச் செய்த சிறப்பினை,

                             ‘பாம்புரி யன்ன வடிவின காம்பின்

                             கழைபடு சொலியி னிழையணி வாரா

                             ஒண்பூங் கலிங்க முடீஇ’     (புறம். 383:9-11)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன.

            இதைப் போலவே, இரவலர்க்கு மணி, பொன், முத்துக்களோடு பல்வேறு தன்மைகளில் பல்வகை உடைகளை வழங்கிய செய்தியை,    

                                வேறுபட்ட வுடையுஞ் , சேறுபட்ட தசும்பும்       (புறம்;377:18-19)

என்ற அடி காட்டுகிறது. மேலும், ஆடைகளுக்கு வண்ணம் ஏற்றும் தொழில்நுட்பத்தினைப் பழந்தமிழர் கற்றிருந்தனர் என்பதோடு, கடல்அலை போன்ற தன்மையிலான ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப வன்மையையும் கைவரப் பெற்றிருந்தனர் என்பதை,

                                  ‘நீலக் கச்சைப் பூவா ராடை’                                   (புறம். 274:1)

என்ற அடியும்,

                                  ‘கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும்’(புறம். 275:1)

என்ற அடியும் காட்டுகின்றன. இதன் வழி பழந்தமிழர் நெசவுத் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கினர் என்பதோடு, நெசவுத் தொழிலில் உள்நாட்டு மூலப்பொருள்களையும் நுட்பத்தையும் பயன்படுத்தினர் என்பதும் பெறப்படுகிறது.

 கட்டுமானத் தொழில்நுட்பம்

     அடிப்படைத் தேவைகளில் உணவு, உடைக்கு அடுத்த இடத்தினைப் பெறுவது இருப்பிடத்தேவையாகும். இயற்கையாக அமையப்பெற்ற மலைக்குகைகள், மரப்பொந்துகளில் மனிதன் ஒளிந்து வாழ்ந்த நிலையிலிருந்து, செயற்கையாக இருப்பிட வசதியினை ஏற்படுத்திக்கொள்ள முனையும் நிலையில் அவனின் தொழில்நுட்ப அறிவு  வெளிப்பட்டு நிற்கிறது. அவ்வாறு இருப்பிட வசதியை ஏற்படுத்திக்கொள்ளும்போது, மண்ணின் தன்மை, சுற்றுச்சூழல், கூட்டமாக வாழ்வதற்கான வாய்ப்புகள், இருப்பிடங்களை ஒட்டியுள்ள தொழில்சார்ந்த நிலங்களின் தன்மை, இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு  போன்ற பலவற்றையும்  கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வகையான முன்யோசனை  நிறைந்த, திட்டமிடுதலுக்குப் பின்னரே பழந்தமிழகத்தில் சிற்றூர்களும், பேரூர்களும் தோன்றியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இவ்வகையான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதிலும், கட்டடக்கலையில் தொழில்நுட்பங்களைக் கையாளுவதிலும் கைதேர்ந்தவர்களாகப் பழந்தமிழர் விளங்கியுள்ளனர். 

     பழந்தமிழர் குடியிருப்பினைத்  திணை சார்ந்த குடியிருப்புகள்/வயல்வெளி குடியிருப்புகள், சிற்றூர் குடியிருப்புகள், பேரூர் அல்லது நகரக் குடியிருப்புகள் என வகைப்படுத்திக் காண்பது  பொருத்தமாகிறது. இவ்வகைப்பாடு ஒவ்வொன்றிலும் வெவ்வேறு தன்மையிலான குடியிருப்புகளைக் காணமுடிகிறது. திணை சார்ந்த குடியிருப்புகள் என்பதில், திட்டமிட்ட கட்டுமான அமைப்பு இல்லாமல், வாழும் நிலப்பகுதிகளில் கிடைக்கும் அல்லது உருவாக்கும்  பொருள்களைக் கொண்டு (கரும்புத் தோகை, வைக்கோல,  தினைத் தாள்) இருப்பிட வசதியை ஏற்படுத்திக்கொள்ளல் (புறம்.22:14-15, 120:13) என்பதாகும். அடுத்துள்ள சிற்றூர் குடியிருப்புகள் மற்றும் நகரக் குடியிருப்புகள் என்பதில், திட்டமிட்டு, தொழில்நுட்பத்துடன்  உருவாக்கப்பட்ட வீடுகளும், அரண்களும், மதில்களும் காணப்படுகின்றன. 

    தூண்களுடன்  கூடிய சிற்றில்களைக் கட்டுதல்,  கட்டடங்களின் உறுதிப்பாட்டிற்குத் தேவையான பொருள்களைத் தயாரித்தல் (மண் பொடி), உயரமான மாடங்களை உருவாக்குதல், பாதுகாப்புடன் கூடிய, போர்க் கருவிகள் பொருத்தப்பட்ட  அரண்களை அமைத்தல், வானுயர்ந்த மதில்களைக் ஏற்படுத்துதல், இவையல்லாமல், அணைகள் போன்ற நீர்நிலைக் கட்டுமானங்களில்  தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துதல் (அணைகள், கால்வாய்கள், மதகுகள்) போன்ற தொழில்நுட்பத்தின் பல நிலைகளைப் புறநானூற்றின் வழி அறிய முடிகிறது.

      சிறிய இல்லமாயினும் அதன் உறுதிப்பாட்டிற்கு வேலைப்பாடமைந்த தூண்களை நிறுவியதை,

                              ‘சிற்றில் நற்றூண் பற்றி ..’             (புறம்.86:1)

என்ற அடி சுட்டுகிறது. நற்றூண் என்பதால் நல்ல வேலைப்பாடமைந்த தூண் என்பது பெறப்படுகிறது.

            நகரில் கட்டடங்கள் மிக உயரமானதாகவும், மலைகளின் கூட்டத்தைப் போன்று நெருக்கமானதாகவும் அமைக்கப்பட்டிருந்தன என்பதை,

                                மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்ப’                  (புறம். 390:7)

என்ற அடியும்,   உயர்ந்த, மணியைவிட அதிகமாக ஒளிவீசும் மாடத்தினை,          

                                 ‘கதிர்விடு மணியிற் கண்பொரு மாடம்’(புறம். 53:2)

என்ற பாடலடியும்  காட்டுகின்றன. மணியைவிட அதிக பளபளப்புத் தன்மை கொண்ட மாடம் என்பதனால் தேர்ந்தெடுத்த கற்களைப் பளபளப்பாக்கி கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும்  நுட்பம் கைவரப்பெற்றிருந்தமை தெளிவாகிறது. இதற்கான கருவிகளைப் பழந்தமிழர் கொண்டிருந்தனர் என்பது இதன்வழி உய்த்துணரப்படுகிறது.

பழந்தமிழகத்தில் சிற்றில்கள் இருந்ததைப் போலவே நெடிய, உயரமான சுவர்களைக் கொண்ட இல்லங்களையும் கட்டும் தொழில்நுட்பம் காணப்படுகிறது. இதனை,

                             ‘நெடுஞ்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து’       (புறம். 373:11)

என்ற புறநானூற்று அடி சுட்டுகிறது.

             இவையல்லாமல், கட்டடங்களின் உறுதிப்பாட்டிற்கு, மண்ணை அரைத்துப் (சிமெண்ட் போன்ற மண் கலவை) பயன்படுத்திய தொழில்நுட்பத்தினையும், செம்பைப்போன்ற / செம்பை உருக்கி ஊற்றி வலுவான கோட்டைகளை  உருவாக்கும் செயல்திறனையும், ஓடிவரும் மழைநீரினைத் தேக்கிவைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த அறையும், பொறையும் அமைந்த பகுதிகளை இணைத்து வளைந்த வடிவிலான அணைகள் கட்டும் நுட்பத்தினையும் பழந்தமிழர் கைவரப்பெற்றிருந்தனர்.

                              கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்

                             செம்புறழ் புரிசைக் செம்மல் மூதூர்'          (புறம்.37:9-10)

என்பதில், செம்பை உருக்கி ஊற்றி கோட்டை எழும்பும் தொழில்நுட்பத்தை அறியமுடிகிறது. இந்நுட்பம் அரண்களின் உறுதிப்பாட்டிற்கானதாகும். செம்பை உருக்குதற்கும், கட்டுமானத் தொழிலில் அவற்றைப் பயன்படுத்துதற்கும் பலவகையான நுட்பங்களைப் பயன்படுத்தியிருத்தல் வேண்டும் என்பது தெளிவு.  அதேபோல,

                              'குரூஉக்கெடிற்ற குண்டகழி

                             வானுட்கும் வடிநீண்மதில்'             (புறம்.18:10-11)

என்பதில்,  வானம் வரையில் நீண்டு உயர்ந்த மதிலைக் கட்டும் பழந்தமிழர் கட்டுமானத் தொழில்நுட்பம் வெளிப்படுகிறது.

                              '--------------------- பருந்துயிர்த்

                             திடைமதிற் சேக்கும் புரிசைப்

                             படைமயங் காரிடை நெடுந லூரே'           (புறம்.343:15-17)

என்பதில், பருந்துகள் தங்கி இருக்கும் உயர்ந்த மதிலை உடைய, படைக்கருவிகள் பொருத்தப்பட்ட அரண்களைக் காணமுடிகிறது. உயர்ந்த மதில்களில் ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்களையும், வெளியில் அறியமுடியாவண்ணம் பொருத்தப்பட்ட படைக்கருவிகளையும், அவற்றை இயக்கும் எந்திரங்களையும் கொண்டதாகும்.  மேலும், நிலத்தின் ஆழத்தைக் கடந்த அகழியையும், வானைமுட்டும் உயரமான மதிலையும் ஏற்படுத்தியிருந்ததை,

                           'நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி

                             வான்றோய் வன்ன புரிசை’                               (புறம்.21:2-3)

என்ற புறநானூற்று அடிகள் சுட்டுகின்றன.

 

இவைபோலவே, கட்டுமான நுட்பத்தின் மற்றொரு வெளிப்பாடான நீர்நிலைக் கட்டுமானங்களும்  புறநானூற்றில் சிறந்து விளங்குகின்றன.

                                ‘அறையும் பொறையு மணந்த தலைய

                             எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரை’  (புறம்.118:1-2)

என்பதில், பாறைகளையும், சிறிய குவடுகளையும் இணைத்துக் கட்டப்பட்ட எட்டாம் நாள் தோன்றும் திங்களைப் போன்று வளைந்த கரையையுடைய குளம் சுட்டப்படுகிறது. இங்கு கட்டுமானத் தொழில்நுட்பத்தினை நீர் மேலாண்மைக்குப் பழந்தமிழர் பயன்படுத்திய செய்தி அறிய வருகிறது.  இவைப் போலவே,

                               'வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது

                             படமடைக் கொண்ட குறுந்தா ளுடும்பின்'           (புறம்.326)

என்பதில், அணைக்கட்டுப் பகுதியும் அங்கு சிறுவர்கள் உடும்பு பிடித்த காட்சியும் விளக்கப்படுகிறது. அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தேக்கி வைத்த நீர், கட்டப்பட்ட கால்வாய்களின் வழியாக வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனை,

                             ‘ஓம்பா ஈகை மாவேள் எவ்வி

                             புனல் புதவின் மிழலையொடு கழனி’                   (புறம்.24:18-19)

என்ற புறநானூற்று அடிகள் காட்டுகின்றன. நீர் வெளியேற்றும் வாயில்களில் பாசனத்திற்காக திறந்துவிட்ட நீரின் ஓசையை

                                    'இழுமென வொலிக்கும் புனலம் புதவிற்'             (புறம்.176:5)

என்ற புறநானூற்று அடி காட்சியாக்குகிறது. இதில் பழந்தமிழரின் கட்டுமான நுட்பத்தினோடு நீர் மேலாண்மையையும் உணர முடிகிறது.

             இன்றைய நிலையில் கட்டுமானப் பணியில் கட்டடங்களின் உறுதிப்பாட்டிற்குப்   பயன்படுத்தப்படும் சிமெண்ட் என்ற கட்டுமானக் கலவைப் பொருளுக்கு முன்னோடியான பொருள் பழந்தமிழரால் உருவாக்கப்பட்டுள்ளது.  மண்ணை அரைத்து அதனைக் கொண்டு கோட்டை போன்றவற்றை வலுவுடையதாக கட்டியிருக்கின்றன. கோட்டை, அணைகள் போன்ற பெரிய கட்டுமானப் பணியில் மண்ணைச் சிறிய அளவில் கையால் அரைத்து பயன்படுத்துதல் என்பது இயலாத ஒன்று. அதற்கென வடிவமைக்கப்பட்ட அரவை எந்திரத்தினாலேயே இது ஏற்புடையதாகும். அதற்கான எந்திரம் பற்றிய குறிப்பு புறநானூற்றில் இல்லை என்றாலும், ‘அரைமண் இஞ்சி’ பற்றி பதிற்றுப்பத்து போன்ற இலக்கியங்களும் குறிப்பிடுவதால் (பதி.58:6)  அதன் பயன்பாடு உணரப்படுகிறது. அதேபோல, செங்கல்லை வடிவமைத்து, அதனைக் கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தும்  நுட்பத்தினையும் பழந்தமிழர் அறிந்திருந்தனர். மண்ணை அரைத்து அரண் அமைத்திருந்ததையும்,  அரணின் கொடி பறக்கவிடப்பட்டதையும்

                                   ‘அரைம ணிஞ்சி நாட்கொடி நுடங்கும்’(புறம். 341:5)

 என்ற புறநானூற்று அடியும், கல்லை அறுத்து  கிணற்றின் சுற்றுச்சுவர் கட்டியிருந்த குறிப்பினை,

                                    'கல்லுறுத் தியற்றிய வல்லுவர்க் கூவல்'(புறம்.331:1)

என்ற புறநானூற்று அடியும் சுட்டுகின்றன.

 உலோகத் தொழில்நுட்பம்

            பழந்தமிழர் இரும்பு போன்ற உலோகப் பொருள்களின்  பயனை நன்கு அறிந்திருந்தனர். இரும்பை உருக்கி படைக்கலன்கள், வேளாண்கருவிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவை  செய்யும் திறன் பெற்றிருந்தனர். செம்பு போன்ற உலோகத்தினை கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுத்திய நுட்பம் குறிக்கப்பட்டது போல,  இரும்பு உலைகள் ஆங்காங்கே இருந்த செய்திகள்  அதிகமாக சுட்டப்படுகின்றன. காட்டாக, பெண் யானை மூச்சுவிட்டது போல் கை கோப்புப் பொருந்திய உலையின் வாயினை,

                              ‘பிடியுயிர்ப் பன்ன கைகவ ரிரும்பின்

                             நோவுற ழிரும்புறங் காவல் கண்ணி’                     (புறம். 345:8-9)

என்று காட்டுகிறது. புறநானூறு.

‘கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய

இரும்பு ணீரினு மீட்டற் கரிதென’                        (புறம்.  21:7-8)

என்பதில், வன்மையான கையை உடைய கொல்லன் இருப்பை காய்ச்சி, வடிவமைத்து அதனை நீரில் வைத்து வன்மையாக்கிய காட்சி சுட்டப்படுகிறது.

                              ‘இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்

                             விசைத்தெறி கூடமொடு பொரூஉம்

                             உலைகல் லன்ன வல்லா ளன்னே’             (புறம்.170:15-17)

என்பதில், வலிய கையினால் விசையுடன் அடித்த சம்மட்டி அடியை ஏற்று மாறுபடும் உலைக்களத்தில் உள்ள அடைகல் (உலைகல்) குறிக்கப்படுகிறது.

                              'கருங்கைக் கொல்லனை யிரக்கும்

                             திருந்திலை நெடுவேல் வடித்திசி னெனவே'       (புறம்.180:12-13

என்ற அடிகள், கொல்லனை போர்க்கருவிகளுள் ஒன்றான வேலினை வடிக்கச் சொல்லுதல் காட்டப்படுகிறது.

                              'கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய

                             இரும்பு ணீரினு மீட்டற் கரிதென'            (புறம்.21:7-8)

என்பதிலும், இரும்பை உருக்கும் உலைக்கலனும், உலைக்கலத் தொழிலில் ஈடுபட்ட ‘கருங்கை கொல்லனும்’ காட்டப்படுகின்றனர்.  இதன்வழி,  உலோகத்தொழில் நுட்பத்தில் பழந்தமிழர் தேர்ச்சிப் பெற்றிருந்தமையை அறிய முடிகிறது. மேலும், இருப்புத்  தாதினைக் கண்டறியவும், அதனைப் பிரித்தறியவும்,  அதிலிருந்து உலோகப்பொருள்களை வடித்தெடுக்கவும் தேவையான  தொழில்நுட்ப அறிவினையும், தொழிற்கூடங்களையும் பெற்றிருந்தனர் என்பதை இதன்வழி உணரமுடிகிறது.

 எந்திரவியல் நுட்பம்

            ஆழமான அகழிகளையும், நீண்ட மதில்களையும், வலிமையான கோட்டைகளையும் வடிவமைத்ததோடு, கோட்டைகளில் தானே எய்தக்கூடியதும், தொடர்ச்சியாக தாக்கவல்ல  ஆயுதங்களை  வெளியிடக்கூடியதுமான பலவித எந்திரப் பொறிகளைப் பொருத்தினர். அதற்கான எந்திரங்களை வடிவமைக்கும் நுட்பத்தினையும் பெற்றிருந்தனர். இத்தன்மை வாய்ந்த அரண்கள் குன்றுகள் போல அருகருகே அமைக்கப்பட்டிருந்தை,

 

                             தமரெனின் யாவரும் புகுப வமரெனிற்

                             றிங்களு நுழையா வெந்திரப் படுபுழைக்

                             கணமாறு நீட்ட நணிநணி யிருந்த

                              குறும்பல் குறுபில்               (புறம்.177:4-7)

 என்ற புநானூற்று அடிகள் சுட்டுகின்றன. அம்புகள் பொருத்தப்பட்ட காவல் மிக்க அரணை,

                                    'அம்புதுஞ்சுஞ் கடியரண்'    (புறம்.20:16)

என்ற புறநானூற்று அடி  சான்று காட்டுகிறது.

 

            அதேபோல, ஓட்டுநர் தேவையில்லாத வான ஊர்தியைச் சிந்தித்துப்பார்த்த பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவினை,

                        ‘வலவ னேவா வான வூர்தி’                        (புறம். 27:7-8)

என்ற புறநானூற்றுப் பாடலடி கோடிட்டுக் காட்டுகிறது.

 முடிவு

            ஒவ்வொரு சமுதாயமும் அவற்றிற்கேயுரிய பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் நாகரிக கூறுகள் போன்றவற்றால் பிற சமுதாயத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்கின்றன. இவ்வகை பிரித்தறியும் நோக்கிற்கு அச்சமுதாயத்தின் பழம் பண்பாடு, பழக்கவழக்கம் நாகரிகம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பழம்பெரும் இலக்கியங்கள் அளவுகோல்களாக அமைகின்றன.  மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பற்றவையோ, அல்லது  திடீரென முளைத்தெழுந்தவையோ அல்ல. இவற்றின் பெருக்கத்திற்கான, வளர்ச்சிக்கான கூறுகளை மொழியும், அதைச் சார்ந்த இலக்கியங்களும் தம்முள் கொண்டுள்ளன. அவ்வகையில் பழந்தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கத்தைப் பாதுகாக்கும் கலைப் பெட்டகமாக விளங்குவது பழந்தமிழ் நூல்களுள் ஒன்றான புறநானூறு. இது பழந்தமிழர்களின் பல்வகைச் சிறப்புகளை அடைகாப்பது போலவே, நாகரிகத்தின் முதன்மைக் கூறாகக் கருதப்படும் தொழில்நுட்பச் சிந்தனைகளையும் தன்னுள் கொண்டு விளங்குகிறது என்ற உண்மையை மேற்கண்ட சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. இச்சான்றுகளின் வழி பழந்தமிழரின் வேளாண் தொழில்நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், கட்டுமானத் தொழில்நுட்பம், எந்திரத் தொழில்நுட்பம், உலோகத் தொழில்நுட்பம் போன்றவற்றை அறிய முடிகிறது.

 புறநானூற்றுப் புலவர்களில் ஆவூர் மூலங்கிழார் தன்பாடல் பலவற்றில் தொழில்நுட்பக்கூறுகளைப் பதிவுசெய்கிறார். மேலும், கபிலர், அண்டர் நடுங்கல்லினார், குறுங்கோழியூர் கிழார் மற்றும் பரணரும் தொழில்நுட்பக் கருத்துகளை ஆங்காங்கே சுட்டுகின்றனர். இவர் அன்றி காவற்பெண்டு, பொருந்திலிளங்கீரனார், மாறோக்கத்து நப்பசலையார், குடபுலவியனார், நன்னாகனார், மாங்குடி மருதனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், முதுகண்ணன் சாத்தனார், பொன்முடியார், உத்திரையார், ஓரூஉத்தனார், உலோச்சனார், ஔவையார், கோவூர்கிழார், தங்கால் பொற்கொல்லனார், உறையூர் முதுகூத்தனார் ஆகியோர் பாடல்களிலும் பழந்தமிழர் தொழில்நுட்பம் குறித்த பதிவுகளைக் காண முடிகிறது. 

 

www.thamizhiyal.com

தமிழியல்.காம்

 

பாரதியின் கல்வியியல் தொலைநோக்கு

 முனைவர் ஆ. மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் (ம) மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம். 603203

 (பன்னாட்டுக் கருத்தரங்கம், மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி, செப்.21 – 2007.)

            ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் / பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ (பாண்டியன் நெடுஞ்செழியன்,புறம்.183:1,2) என்றும், ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன் / சாந்துணையும் கல்லாத வாறு’ (வள்ளுவர், குறள்.397) என்றும், ‘கற்கை நன்றே கற்கை நன்றே / பிச்சை புகினும் கற்கை நன்றே’ (ஔவையார்) என்றும்,  காலந்தோறும் கல்வியின்  தேவை சமூகத்தில் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. ‘வளத்தை உருவாக்குவதற்குக் கல்வி அறிவு பயன்படுத்தப்படும் நிலையில் இருந்து, கல்வி அறிவே வளம்; அதன் வழி மற்ற வளங்களையும் உருவாக்கலாம் என்ற வளர்ச்சிதான் கல்வி அறிவு யுகத்தின் கூறுபாடு. ‘படைவலிமையோ, பொருளாதார வலிமையோ இன்றைய உலகில் ஒரு நாட்டின் இடத்தை நிர்ணயிப்பது இல்லை; அது ஒரு நாட்டின் அறிவு  வலிமையைப் பொறுத்தது’ என்கிறார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் (வ.செ.குழந்தைசாமி, தமிழகப் பல்கலைக்கழகங்களின் சீரமைப்பு, தினமணி, 13.08.06). ஆயினும், ‘ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் கல்வி மிக முக்கியமானது. 2020ஆம் ஆண்டுவாக்கில் இந்தியா ஒரு முழுமையாக வளர்ச்சியடைந்த நாடாக மாறிவிடும் வகையில் மாற்றங்கள் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனினும், 35 கோடி பேர் எழுத்தறிவு பெற  வேண்டியுள்ளது’ (அ.ப.ஜெ. அப்துல்கலாம், திட்டம், செம்டம்பர் 2005, ப.2) என்பதாகவே, இன்றைய கல்வி நிலை உள்ளதைக் காணமுடிகிறது. 

            ‘மற்ற நிறுவனங்களைப் போலக் கல்வி நிறுவனமும் ஒரு உள்ளடக்கம் கொண்ட நிறுவனமாகும். ஆதலில் கல்வியும் கல்வி நிறுவனங்களும் சமுதாயத்திற்கு அடிப்படையாக உள்ளன. ஏனெனில், புதுமையைத் தோற்றுவிக்கவும் மாற்றங்களை உண்டாக்கவும் கல்வி இன்றியமையாதது’(சமூகவியல்,ப.143). ஆகவே, கல்வியியல் திட்டமிடுதல் மற்றும் செயலாக்கத்தில் தொலைநோக்குப் பார்வை காலத்தின் கட்டாயமாகிறது. அவ்வகையில், கல்வியியலில் தொலைநோக்கோடு சிந்தித்து, ஒரு முழுமையான கல்வியியல் கட்டமைப்பை உருவாக்கித் தந்து, இன்றைய கல்வி முறைக்கும், எதிர்காலக் கல்விமுறைக்கும் அடித்தளமிட்டவர் பாரதி எனலாம். கல்வியே சமூக ஒழுங்கைக் கட்டமைக்கிறது என்பதிலும், கல்வியால் சமூகத்தினரிடம் சுதந்திர மனப்பான்மையையும், தன்னிகரில்லா அறிவு தளத்தையும், அதன்வழி அடிமைத் தளையை அறுத்தெறியும் சூழலையும் உருவாக்க முடியும் என்பதிலும் பாரதி முழு நம்பிக்கை கொண்டிருந்ததை அறியமுடிகிறது. அந்நியர் பிடியிலும், மோகத்திலும் நாடு கட்டுண்டிருந்த சூழலில், மக்களை தற்சிந்தனையுடையவர்களாகவும், அறிவு தளத்தைக் கைகொள்பவர்களாகவும், அடிமைத்தனத்திலிருந்து தம்மைத்தாமே மீட்டெடுத்துக் கொள்பவர்களாகவும், தமக்கானதைத் தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தன்னறிவு கொண்டவர்களாகவும் மாற்ற, கல்வியை ‘ஆயுதமாக்க’ முயன்றார் என்பது தெளிவு.  பாரதியின் பல்வேறு சிந்தனைத் தளங்களுக்கிடையே, அவரின் கல்வியியல் சிந்தனை ஒரு திட்டமிட்ட வரையறைக்குள் முழுமைபெற்றிருப்பதையும், அவ்வரையறைக்குள் இன்றைக்கும் நாளைக்குமான கல்வியியல் தொலைநோக்கு பொதிந்திருப்பதையும் அறியமுடிகிறது.

கல்வியின் தேவை

            மனிதன் வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியத் தேவையோ, அதையொத்ததே கல்வியும் என்பது பாரதியின் ஆழமான நம்பிக்கையாகிறது. இதை,

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு / வாழும் மனிதருக் கெல்லாம் / பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப் / பாரை உயர்த்திட வேண்டும்       (பாரதி, முரசு)

என்று முழங்குகிறார். பாரதி பொதுவான கல்வியியல் தேவையாக முன்மொழிவது, மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமுமாகும். சிறப்புநிலை பணிகளாக,  பயிற்று மொழி மற்றும்  பாடத்திட்ட அமைப்பு;  கற்போர் - கற்பித்தல்; துணைநிலைக் கருவிகள்;  கல்விக் கூடங்கள் நிறுவுதல் ஆகியவை அமைகின்றன.

மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்

            இந்திய நாட்டில் வழக்கிலுள்ள பல மொழிகளில் உயர்கல்வி பெறுவதற்கு ஏற்ற மொழிச் சூழல் (Lingustic Environment) சிறந்த முறையில் எற்பட மொழித்திட்டமிடுதல் (Language Planning) வழி வகுக்கும். இம்மொழிகளில் வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்திற்கேற்ப, கலைச் சொல்லாக்கம், அகராதிகள், அடிப்படைச் சொற்களஞ்சியம் போன்ற பலவும் ஏற்படுத்துதல் வேண்டும் (பாரதி தமிழ், ப.142) என்று வலியுறுத்தப்படுகிறது. இவ்வகைத் தேவைகளைத் தொலைநோக்கோடு சிந்தித்து, அதற்கான திட்ட வரையறையைக் கொடுத்தவர் பாரதி. இன்று கலைச்சொல் என்று வழங்கப்படுவதை, பரிபாஷை, ஸங்கேதம், குழுவுக்குறி என்ற சொற்களில் பாரதி வழங்குகிறார் (பாரதியார் கட்டுரைகள்,ப.331). பிற மொழி அறிவியல் கண்டுபிடிப்புகளை, ஆக்கங்களை மொழிபெயர்ப்பதற்கு முன்னால், இவ்வகைக்  கலைச்சொற்களை தமிழில் உருவாக்க வேண்டும் என்பதையும், அதற்குக் காரணமாக, ‘கூடியவரை சாஸ்த்ர பாரிபாஷையை நிச்சயப் படுத்தி வைத்தால், பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமமிராது; ஸங்கடமிராது’ (பாரதியார் கட்டுரைகள், ப.331) என்பதையும் சுட்டுகிறார்.

மேலும்,  “அ.........ன்’’ மேலே காட்டிய குறியின் பொருள் யாது? என்று வினவி, தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாம் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள் என்கிறார். ‘ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமின்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; ‘’ஸ்லேட்’’ ‘’பென்சில்’’ என்று சொல்லக் கூடாது’ (பாரதி கட்டுரைகள், 395) என்கிறார்.

முப்பெரும் கூறுகள்

            பாரதியின் கல்வியியல் தொலைநோக்கில்,  பெயர்த்தல், கற்றல், இயற்றல் என்பவை முப்பெரும் கூறுகளாக அமைகின்றன.

                         புத்தம் புதிய கலைகள் - பஞ்ச / பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

                   மெத்த வளருது மேற்கே - அந்த / மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

                   ----------------- ----------- ------------- / சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்

                   செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’  (பாரதி, தமிழ்த்தாய்)

என்று இருக்கும் நிலையினைச் சுட்டி, இயற்கையைப் பற்றிய ஆராய்ச்சியிலும், பஞ்ச பூதங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும் மேலைநாட்டவர் முன்னிலையில் இருப்பதால், அவற்றை தமிழ்ப்படுத்தியே தீரவேண்டும் என்கிறார். ‘ஏற்கெனவே சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்; வளர்ந்து தீரவேண்டும்’ (பாரதியார் கட்டுரைகள், ப.331) என்கிறார். இது பாரதியின் ‘பெயர்த்தல் தொலைநோக்காக’ அமைகிறது.

மந்திரம் கற்போம் வினைத்தந்திரம் கற்போம் / வானையளப்போம் கடல் மீனையளப்போம் / சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் / சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் (பாரதி, பாரத தேசம்)

 

என்று, வானியல், கடலியல்,  சுற்றுச்சூழலியல் போன்ற பல துறைகளையும் கற்றுத் தேர்வோம் என்பது, பாரதியின் ‘கற்றல் தொலைநோக்காக’ அமைகிறது. இதேபோல,  பள்ளிப் பாடங்களின் வைப்புமுறையிலும் கற்றலின் துறைகளை விரிவாகச் சுட்டுகிறார். இதேபோல,

                        இறவாத புகழுடைய புதுநூல்கள் / தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்                             (பாரதி, தமிழ்)

என்பதில், தமிழிலே பலதுறை சார்ந்த இறவாத புதுநூல்கள் படைக்கப்பட வேண்டும் என்று, ‘இயற்றல் தொலைநோக்கை’ முன் வைக்கிறார்.

பயிற்று மொழி

            கல்விக் கொள்கையைப் பற்றிப் பேசும்போது சமுதாயநிலை, மொழிப் பயன்பாடு ஆகியவற்றையும் ஒரு நாட்டின் சமுதாய மொழிச் சூழலையும் கருத்திற் கொண்டு அவற்றிற்கேற்ற தேவையான கோட்பாடுகளை உருவாக்குதல் நல்லது என்று குறிப்பிடப்படுகிறது (பாரதி தமிழ்,  ப.139). இன்றைய நிலையில் பயிற்று மொழி பற்றிப் பலப்பல சிக்கல்கள் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆங்கில மொழியின் வாயிலாகப் படிப்பதே அறிவு தளத்திற்கு இட்டுச் செல்லும் எனும் மாயையைச் சமுதாயம் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், பாரதி இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழியின் வாயிலாகவே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப் பெறல் வேண்டும் என்கிறார். ‘சமுதாயத்தில் எந்த மொழி பேசப்படுகின்றதோ அம்மொழியைக் கல்வி மொழியாக ஆக்கும்போது மக்கள் அவர்தம் மொழியில் பயன் பெறுவர்’ என்பதும், இந்தியாவின் கல்விச் சூழலில் இடம்பெற்றுள்ள ஆங்கில மொழியின் பயன்பாடு குறைக்கப்பட்டு (அ) நீக்கப்பட்டு இந்திய மொழிகளே கல்வி மொழிகளாக ஆக்கப்பட்டால் கல்விமொழி மாறுதலடையும்; கல்வி நிலை பெருகும் (பாரதி தமிழ்.ப.143) என்பதே பாரதியின் கருத்தாக அமைகிறது.

தமிழ் வழிக் கல்வி

            தேசியக் கல்வி தமிழ் மொழியை மையமாகக் கொண்டது என்றும், அதில் ஆங்கிலத்தில் பயிற்றுவித்தல் ‘தேசியம்’ என்பதற்கு எதிராக அமையும் என்றும் சுட்டுகிறார். ‘தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண சஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக வேண்டும்’ (பாரதியார் கட்டுரைகள், ப. 163) என்று உறுதிபட மொழிகிறார். ‘மழலையர் பள்ளிகள் அனைத்தும் தாய்மொழி தமிழ்வழிக் கல்வியையே பின்பற்ற வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை, தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் (தமிழண்ணல், சமச்சீர்க் கல்வி: சில கருத்துரைகள்,  தமிழ் ஓசை,10.11.06) என்ற இன்றைய கல்வியாளர் சிந்தனை இங்கு ஒப்புநோக்குதற்குரியது.

பாடத்திட்ட அமைப்பு

            தேசியக் கல்வியைத் தவிர, ஒவ்வொரு இந்தியனும், 1.எழுத்து, படிப்பு, கணக்கு   2.சரித்திரப் பாடங்கள் (வரலாற்றுப் பாடங்கள்) 3.பூமி சாஸ்திரம் (புவியியல்) 4.மதப் படிப்பு 5.ராஜ்ய சாஸ்திரம் (அரசியலமைப்புச் சட்டம்) 6.பொருள் நூல் (வணிகவியல்) 7.ஸயன்ஸ் அல்லது பௌதிக சாஸ்திரம் (அறிவியல்) 8.கைத்தொழில், விவசாயம், தோட்டப் பயிற்சி 9.சரீரப் பயிற்சி (உடற் கல்வி) போன்றவற்றை கைகொள்ள வழிவகை செய்யவேண்டும் என்கிறார் பாரதி. மேலும், இவையனைத்தையும் அவரவர் தாய்மொழியில் பயிற்றுவித்தலே நிச்சயித்த பயனை தரும் என்றும் வலியுறுத்துகிறார் (பாரதியார் கட்டுரைகள், பக்.367-380).

வரலாற்றுக் கல்வி (சரித்திரப் பாடங்கள்)

            வேதகால - புராணகால- பௌத்த கால வரலாறுகளையும்,  ராஜபுதனத்தின் வரலாற்றையும் கற்பிக்கவேண்டும் என்றும்,  பள்ளிக்கூடம் ஏற்படுத்தப் போகிற கிராமம் அல்லது பட்டணம் எந்த மாகாணத்தில் அல்லது எந்த மாநிலத்தில் இருக்கிறதோ, அந்த மாநிலத்தின் வரலாறு சிறப்பாக பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டுகிறார். இவையனைத்தும் அதிபால்யப் பருவத்திலேயே கற்பிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் (பாரதியார் கட்டுரைகள், ப.367). இவையல்லாமல்,  ‘இயன்றவரை அராபிய, பாரஸீக, ஹரிஷ், போலிஷ், ருஷிய, எகிப்திய, இங்கில¦ஷ், ப்ரெஞ்சு, அமெரிக்கா, இத்தாலிய, கிரேக்க, ஜப்பானிய , துருக்க தேசங்கள் முதலியவற்றின் சரித்திரங்களிலும் சில முக்கியமான கதைகளும் திருஷ்டாந்தங்களும் பயிற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்தல் நல்லது’ என்கிறார் (பாரதியார் கட்டுரைகள், ப.368).

பூமி சாஸ்திரம் (புவியியல்)

            பாரதியின் புவியியல் கல்விப் பாடம் பரந்து விரிந்ததாகும். ஆரம்ப பூகோளத்தையும், அண்டத்தையும், உலகையும்¢, அதைச் சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும் வின்மீன்களைப் பற்றியும், இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்கிறார். மேலும், வரைபடங்களை அதிக அளவில் பயன்படுத்தவும், கண்டங்கள் பற்றியும், முக்கிய நாடுகள், மக்கள் தொகை, மதங்கள், மொழிகள், அரசியல் நிலை, வணிகம், விளைபொருள்கள், தொழில்கள் பற்றியும் தெளிந்த அறிவினை மாணவர்களுக்குப் புகட்ட வேண்டும் என்றும் சுட்டுகிறார். இவற்றோடு, நம் பாரத நாட்டின் வரைபடமும், மேற்குறிப்பிட்ட கூறுகளோடு கற்பிக்க வேண்டும் என்றும், நாட்டின் இயற்கை வளங்கள், நோய்கள், காரணங்கள், செல்வ வளங்கள் போன்றவற்றையும் கற்றுத்தர வேண்டும் என்றும் மொழிகிறார். பாரத தேசத்தின் அற்புதமான சிற்பத் தொழில்கள், கோயில்கள் இவற்றைப் பற்றி மாணவர்கட்குத் தெரிவிக்க வேண்டும் என்பதோடு, இந்தியர்கள்  வெளிநாடுகளில் எங்கெங்கு வாழ்கிறார்கள் என்பதையும், அவர்களின் நிலையினையும் கற்பித்தல் வேண்டும் என்கிறார் (பாரதியார் கட்டுரைகள், பக்.368-370). பூமிப் படங்கள், கோளங்கள் முதலியவற்றிலெல்லாம் பெயர்கள் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பாரதியின் வலியுறுத்தலாக அமைகிறது.

சமயக் கல்வி / மதப் படிப்பு

            பள்ளிக் கல்வியானது சிறந்த வாழ்க்கை, சிறந்த மனிதன், சிறந்த குமுகாயம் ஆகியவற்றை உருவாக்கத் தேவையான அறிவு, திறன், ஒழுக்கம், பொருத்தப்பாடு ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்பார் அறிஞர் பிரவுடி (Broody). ஒழுக்க வளர்ச்சிக்குச் சமய கல்வி மிகவும் வலுவான- தேவையான-திறமான அடிப்படையாக அமைகின்றது என்பதால்,  அவ்வகைத் தன்மைகளை உள்ளடக்கிய மதப் படிப்பு என ஒன்றையும் பாரதி வலியுறுத்துகிறார் (பாரதியார் கட்டுரை, ப.371).

சமூகவியல் (ராஜ்ய சாஸ்திரம்)

            கிராம நிருவாகம் பற்றியும், மக்களின் கடமைகள், உரிமைகள் பற்றியும்  மாணவர்களுக்குப் போதிக்கப்படவேண்டும் என பாரதி வலியுறுத்துகிறார். ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதும் தொழில் ஏற்படுத்திக் கொடுத்தும் உணவு தருவதும் அரசின் கடமை என்பது மட்டுமின்றி, கிராமத்து மக்கள் அத்தனை பேருக்கும் பொதுக் கடமையாகும். குடிகள், அரசை தம்முடைய நன்மைக்காகவே சமைக்கப்பட்ட கருவியென்று நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும். குடிகளுடைய தேவைக்கே அரசு நடத்தப்பட வேண்டும். தீர்வை விதித்தல், தீர்வைப் பணத்தைப் பல துறைகளிலே வினியோகித்தல், புதுச் சட்டங்கள் சமைத்தல், பழைய சட்டங்களை அழித்தல் முதலிய அரசு செயல்பாடுகளெல்லாம் குடிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒப்புதலோடே நடத்த வேண்டும் (பாரதியார் கட்டுரைகள், ப.173) என்கிறார். இந்தப் பாடங்களையெல்லாம் ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்குக் கற்பிக்குமிடத்தே, இப்போது பூமண்டலத்தில் இடம்பெறும் முக்கியமான ராஜாங்கங்கள் எவ்வளவு தூரம் மேற்கண்ட கடமைகளைச் செலுத்தி வருகின்றன என்பதையும் எடுத்துரைக்க வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும் (பாரதியார் கட்டுரைகள், ப.374).

பொருள் நூல்

            வரி விதிப்பு, வணிகத் தொடர்பு போன்ற பலவற்றை மாணாக்கர்கள் உணர்ந்திருக்க வேண்டும் எனப் பாரதியார் விழைகின்றார். கூட்டு வியாபாரத்தின் சிறப்பினை அதிகமாக வலியுறுத்துகிறார். பொருள் நூலைப் பற்றிய ஆரம்பக் கருத்துக்களை மாணாக்கர்களுக்கு போதிக்குமிடத்தே, தீர்வைப் பற்றிய கருத்தையும் முன் வைக்கிறார். வரி வசூலில் மக்களின் நலனைக் கருத்தில் கொள்ள மாணவர்களுக்குப் படிப்பிக்க வேண்டும் என்பதோடு, வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ஙனம் சிறந்ததோ, அது போலவே கைத்தொழிலிலும் கூட்டுத் தொழிலே சிறப்பு வாய்ந்ததாகும் என்கிறார். செல்வம் ஒரு நாட்டில் சிலருக்கு வசப்பட்டதாய், பலர் ஏழைகளாக இருக்கும்படி செய்யும்வியாபார முறைகளைக் காட்டிலும், சாத்தியப்பட்டவரை அநேகரிடம் பொருள் பரவியிருக்கும்படி செய்யும் வியாபார முறைகள் மேன்மையாக பாராட்டத் தக்கனவாம் என்பது அவர்தம் கொள்கையாகிறது(பாரதியார் கட்டுரைகள், ப.374).

அறிவியல் கல்வி (சயன்ஸ் அல்லது பௌதிக சாஸ்திரம்)

            அறிவியல் கல்வியில் செய்முறைக்கு முக்கியத்துவம் தருகிறார். மணவர்களே பரிசோதனைச்  செய்து பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும்,  ஐரோப்பிய அறிவியலின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும் தேர்வுகள் மூலமாகவும் பிள்ளைகளுக்குக் கற்பித்துக் கொடுத்தல் மிகவும் இன்றியமையாததென்றும் சுட்டுகிறார்(பாரதியார் கட்டுரைகள், ப.376). மேலும், அறிவியல் கல்வியை  மாநில மொழிகளிலேயே கற்றுத்தர வேண்டும் என்பதில் பாரதி தீவிர கருத்தைக் கொண்டிருக்கிறார். ‘அறிவியல் கல்வியைக் கற்றுக் கொடுப்பதில், மிகவும் தெளிவான எளிய தமிழ் நடையில் பிள்ளைகளுக்கு மிகவும் எளிமையாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். இயன்ற இடத்திலெல்லாம் பொருள்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே பயன்படுத்த வேண்டும். காட்டாக, ‘’ஆக்ஸிஜன்’’ ‘’நைட்ரஜன்’’, முதலியற்றிற்கு ஏற்கெனவே தமிழ் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற பெயர்களையே வழங்க வேண்டும் என்கிறார். ‘குணங்கள், செயல்கள், நிலைமைகள் இவற்றிக்கு ஆங்கிலப் பதங்களை ஒருபோதும் வழங்கக்கூடாது. ‘பதார்த்தங்களின் பெயர்கள் மாத்திரமே இங்கில¦ஷில் சொல்லலாம், வேறு வகையால் உணர்த்த இயலாவிடின் நுட்பமான விவரங்கள் கற்றுக் கொடுப்பதற்குத் தகுந்த பாட புஸ்தங்கள், தமிழில் இன்னும் ஏற்பட வில்லையாதலால், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில், உபாத்தியாயர்கள் இங்கிலீஷ் புத்தங்களைத் துணையாக வைத்துக் கொண்டு, அவற்றிலுள்ள பொதுப்படையான அம்சங்களை மாத்திரம் இயன்றவரை தேசபாஷையில் மொழிபெயர்த்துப் பிள்ளைகளுக்குச் சிறிது சிறிது கற்பித்தால் போதும்’(ப.377-78) என்கிறார். ‘அறிவியல் தமிழ்’ என்பது இன்றைய நிலையில் பள்ளிக் கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இங்குச் சுட்டத்தக்கது.

தொழிற்கல்வி

            அறிவியலைக் கைகொள்ளுதல் என்பதோடு, தொழிற் கல்வியின் தேவையையும் பாரதி வலியுறுத்துகிறார். ‘இயன்ற வரை மாணாக்கர்கள் எல்லாருக்கும், விசேஷமாகத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நெசவு முதலிய முக்கியமான கைத்தொழில்களிலும் நன்செய், புன்செய் பயிர்த்தொழில்களிலும் பூ, கனி, காய், கிழங்குகள் விளைவிக்கும் தோட்டத் தொழில்களிலும், சிறு வியாபாரங்களிலும், தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படி செய்தல் நன்று’ என்கிறார் (பாரதியார் கட்டுரைகள், ப.367). தொழிற்கல்விக்கு ஆசிரியர்களைத் தவிர, தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகளிலே சற்றுப் படிப்பும், தொழில் அனுபவமும் உடையவர்களைக் கொண்டு ஆரம்பப் பயிற்சி ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடியதாக அமையும் என்பது பாரதியின் எண்ணம் (பாரதியார் கட்டுரைகள், ப.379).

உடற் பயிற்சிக் கல்வி / உடற்கல்வி (சரீரப் பயிற்சி)

            மனத்திற்கான கல்வி, அறிவிற்கான கல்வி, பொருளுக்கான கல்வி என்பதோடு, உடலுக்கான கல்வி என்பதிலும் பாரதி எண்ணத்தைச் செலுத்துகிறார். உடற்கல்வியின் தேவையை இன்றும் முழுமையாக உணராத, செயல்படுத்த முயலாத சூழலில், பாரதியின் இவ்வகைச் சிந்தனை சிறந்த தொலைநோக்காக அமைவதைக் காணலாம். ஊருக்கு ஊர் சரீர பலத்திற்குரிய கர்லா, சிலம்பு, கஸரத் இவை பழக்கும் பயிற்சிக் கூடங்கள் ஏற்படுத்த வேண்டும் (பாரதியார் கட்டுரைகள், ப. 361) என்கிறார். மேலும், மாணவர்கள் தங்கள் தேவையைத் தாங்களே நிறைவு செய்து கொள்ள வேண்டுமென்றும், இவற்றைத் தவிர ஓட்டம், கிளித்தட்டு, சடுகுடு முதலிய நாட்டு விளையாட்டுகளும், காற்பந்து (Foot Ball) முதலிய ஐரோப்பிய விளையாட்டுகளும் பிள்ளைகளுடைய படிப்பில் முதன்மையானதாகக் கருதப்பட வேண்டும் என்றும்,  குஸ்தி, கசரத், கரேலா முதலிய தேகப் பயிற்சிகளும் இயன்றவரை சொல்லிக்கொடுக்கவேண்டும் என்றும் சுட்டுகிறார் (பாரதியார் கட்டுரைகள், ப.379). ‘படிப்பைக் காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிக சிரத்தை எடுக்கும்படி செய்ய வேண்டும். ‘சுவரில்லாமல் சித்தரமெழுத முடியாது’. பிள்ளைகளுக்குச் சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமனே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்குநாள் ஆரோக்கியம் குறைந்து அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராத துக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும்’(ப.380) என்று வலியுறுத்துகிறார்.  இந்நிலையில், ‘தொடக்கக் கல்வி முதலே விளையாட்டு ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த ஏற்பாடு செய்யலாம்’(பேரா.செல்வகுமார், மாணவர் இடைநிற்றல் தடுக்க வழி, தமிழ் ஓசை, 27.12.06) என்று இன்று வலியுறுத்தப்படுதலைக் காணலாம்.

 வாழ்க்கைக் கல்வி / குடும்பக் கல்வி

            முற்போக்கான சமுதாயத்தில் கல்வியைத் தனித்துறையாகவும் நிறுவனமாகவும் கருதுகின்றோம். பொதுமனிதனின் வாழ்க்கையில் முதற்குழுவாகிய குடும்பம் அவனுக்கு எல்லாவற்றையும் கற்பித்தபோதிலும் அவன் நாட்டின் உறுப்பினனாகவும் மனித வர்க்கத்தில் இடம் பெறவும் கல்வி துணை நிற்கின்றது (சமூகவியல். ப.143) என்பர் சமூகவியலாளர். இக்கருத்தைப் பாரதியும் வலியுறுத்துகிறார். தேசக் கல்விக்குக் குடும்பக் கல்வியே வேர் என்கிறார். வீட்டுப் பழக்கந்தான் நட்டிலும் தோன்றும். வீட்டில் யோக்கியன் நாட்டிலும் யோக்யன்; வீட்டில் பொறுமையுடையவன் நாட்டிலும் பொறுமையுடையவன். குடும்பம் நாகரீகமடையாவிட்டால், தேசம் நாகரீகமடையாது. குடும்பத்தில் விடுதலை இராவிடில், தேசத்தில் விடுதலை இராது (பாரதியார் கட்டுரைகள், ப.359) என்கிறார்.

கல்விப் பயணம் (யாத்திரை)

            புவியியல் கல்வியில் விளைபொருள் முதலியவற்றை நேரடியாக காண்பித்தல் மூலமாகத் தெளிவு படுத்துவதுடன், இயன்ற வரை பிள்ளைகளைக் கல்விப் பயணத்துக்கு அழைத்துச் சென்று பிற இடங்களை நேருக்கு நேராகக் காண்பித்தல் நன்று என்கிறார். மலைகள், கடலோரங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கையின் அழகுகளையும் அற்புதங்களையும், பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்ய வேண்டும். மேலும், பலவிதமான செடி, கொடிகள், மரங்கள், கல் வகைகள் முதலியவற்றின் இயல்பைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறார் (பாரதியார் கட்டுரைகள், ப.380). இந்தக் கல்விக் கொள்கையின் மூலம் மாணவர்களிடையே பட்டறிவோடு, ஒருமைப்பாட்டுணர்வும் (Integration), தேசப்பற்றும் (Nationalism), சுதந்திர உணர்வும் ஏற்பட வழி ஏற்படுகின்றது என்பது பாரதியார் எண்ணமாக அமைகிறது.

பெண் கல்வியும் குழந்தைக் கல்வியும்

            சென்ற 10 முதல் 15 ஆண்டுகளில் பள்ளிக்குச் செல்லும் சிறுமியரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆயினும் பெண்கள் கல்வி விஷயத்தில் மிகப் பின்தங்கிய நிலையில் நம் நாடு இருப்பதாக யுனஸ்கோ கூறியுள்ளது(திட்டம், செம்டம்பர் 2005, ப.13). இந்நிலையில் பாரதியின் பெண்கல்வி பற்றிய சிந்தனை கல்வியியல் தொலைநோக்காக அமைவதைக் காணமுடிகிறது.

 

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் / பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் / இளப்பில்லை காணென்று கும்மியடி  

                                                                                  (பாரதி, பெண்கள் விடுதலைக் கும்மி)

என்றும்,

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் / றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார் /  வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற / விந்தை மனிதர் தலைக விந்தார்  (பாரதி, பெண்கள் விடுதலைக் கும்மி)

என்றும் பாடுகிறார். ‘பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக்கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்’ என்றும், பெண்கள் வெளிநாடுகள் சென்று உயர்கல்வியையும் கற்றுவர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். கொஞ்சம் கொஞ்சம் பலதுறைகளில் பயிற்சி வாய்ந்திருக்கும் தமிழ் சகோதிரிகள் இரவு பகலாகப் பாடுபட்டு அவ்வத் துறைகளில் நிகரற்ற தேர்ச்சி பெற முயலவேண்டும். இடைவிடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள இயற்கையறிவை மிகவும் உன்னத நிலைக்குத் கொணர்ந்துவிடுதல் சாலவும் எளிதாம். சற்றே ஊன்றிப் பாடுபடுவார்களாயின், தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்து விடுவார்கள். எனவே பலவிதமான சாஸ்திரங்கள் படித்துத் தேறுங்கள்; தமிழ்ச் சகோதரிகளே! அங்ஙனம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப் போய் கீர்த்தி சம்பாதித்துக் கொண்டு வாருங்கள் என்கிறார் (பாரதி தமிழ், ப.21).    

            ஆண்குழுந்தைகளுக்கு மட்டுமன்றி பத்துவயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும் தேசியக் கல்வியைக் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பது பாரதி வலியுறுத்தும் கருத்தாகும். பெண் கல்வி பற்றி அறியாமையிலும் அச்சத்திலுமிருக்கும் ஊர்களில் பெண் ஆசிரியைகளைக் கொண்டு கல்வி கற்பித்தல் பலனைத் தரும் என்கிறார் (பாரதியார் கட்டுரைகள்,ப.383). குழந்தைக் கல்வியைப் பாரதியார் பெரிதும் வலியுறுத்தக் காரணம் பிஞ்சு உள்ளங்களில் எந்தக் கருத்தும் எளிமையாய், நன்கு ஆழமாய்ப் பதியும் என்பதேயாகும்.  ‘இந்தியாவில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 22 கோடியாகும். இதில் 12 கோடி குழந்தைகளால் மட்டுமே பள்ளி செல்ல முடிகிறது. இந்த 12 கோடி குழந்தைகளில் பள்ளிப் படிப்பை முழுவதுமாக முடிப்பவர்களின் எண்ணிக்கு 3 கோடிக்கும் குறைவாகும்’ (கல்வி - யாருக்கு?, பி. தயாளன், தமிழ் ஓசை, 29.12.06) என்ற இன்றைய நிலை இங்குச் சிந்தித்தற்குரியது.

இராப்பள்ளிகள்

            சமூகத்தில் எல்லோருக்கும் கல்வி என்ற பாரதியின் நிலைப்பாடு அவர்தம் கல்விக் கொள்கையில் வெளிப்படுகிறது. பாரதி, வீதிகள் தோறும் பள்ளிகள் ஏற்படுத்தி, கல்விக் கொடையினை வழங்கிட வேண்டுமெனக் கனவு கண்டதோடு, ‘இராப்பள்ளிகளும் நடத்திடல் வேண்டும்’ என்கின்றார் (பாரதி தமிழ், ப.34). ‘அங்கங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்தி அவற்றில் தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வியூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்யவேண்டும். மேலும், பகற் பள்ளிக்கூடங்கள் மாத்திரமேயன்றி இராப்பள்ளிக் கூடங்களும் ஏற்படுத்தி அவற்றில் தொழிலாளிகள் பிள்ளைகள் எல்லாப் பிராயத்தினரும் சென்று படிப்பதற்குரிய காரியங்களை நடத்த வேண்டும்’ என்கிறார். ஆனால் இன்றைய நிலையோ, ‘20 இலட்சம் தொடக்கப்பள்ளிகளின் தேவைக்கு, வெறும், 6 இலட்சம் பள்ளிகளே உள்ளன’(பி. தயாளன், கல்வி - யாருக்கு?,  தமிழ் ஓசை, 29.12.06) என்பதாகவே உள்ளது.

பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும்

            சிற்றூர்களுக்கு ஊருக்கு ஒரு பள்ளியும், பேரூர்களுக்கு இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளியும் அமைக்க வேண்டும் என்கிறார் பாரதி. பள்ளிக்குக் குறைந்தது மூன்று ஆசிரியர்கள் இருக்க வேண்டுமெனச் சுட்டுகிறார். தமிழ்நாட்டில் ஏற்படும் தேசீயப் பாடசாலைகளில் உபாத்தியாயராக வருவோர் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும்,  அதோடு, சிறந்த தேசப்பற்றும், உயிரிரக்கமும், நல்லொழுக்கமும் உடையவர்களையும், ஆரோக்கியமும் திடசரீரமுமுடையவர்களையும்  ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சுட்டுகிறார் (பாரதியார் கட்டுரைகள், ப.366).  ‘தமிழகத்தில் நிரப்பப்படாத ஆசிரியர்களின் காலிப் பணியிடங்கள் ஒரு இலட்சத்திற்கு மேல் உள்ளது. இதனால், கல்விச் சூழல் மிகவும் சீர்கேடு அடைந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 1500 பள்ளிகள் இன்றுவரை ஓராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன’ (தமிழ் ஓசை, 29.12.06) என்பதே இன்றைய நிலையாகும்.

பள்ளிகள் அமைத்தல்

            பள்ளிக் கூடங்களை ஏற்படுத்துதலிலும், முழுமையான திட்டவரையறையை முன்வைக்கிறார். நிதி திரட்டும் வழிமுறைகள், அவற்றைக் கையாளுதல், தேவைக்கேற்ப செலவிடுதல் என்று பலவும் அவற்றில் அடங்குகின்றன. பள்ளிகள் நல்ல காற்றோட்டமான இடத்தில் அமைத்தல் சிறந்தது என்கிறார். அதேபோல, பள்ளி நிருவாகத்தையும் ஒழுங்குபடுத்துகிறார். ‘இந்தப் பள்ளிக்கூடங்களை ஒரு சில மனிதரின் ப்ரத்யேக உடைமையாகக் கருதாமல், கோயில், மடம், ஊருணி முதலியன போல் கிராமத்தாரனைவருக்கும் பொது உடைமையாகக் கருதி நடத்த வேண்டும். பொது ஜனங்களால் சீட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்படுவோரும் ஐந்து வருஷங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டியவருமாகிய பத்து கனவான்களை ஒரு நிர்வாக சபையாகச் சமைத்து அந்த சபையின் மூலமாகப் பாடசாலையில் விவகாரங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நிர்வாக சபையாரைத் தெரிந்தெடுப்பதில் கிராமத்து ஜனங்களில் ஒருவர் தவறாமல் அத்தனை பேருக்கும் சீட்டுப்போடும் அதிகாரம் ஏற்படுத்த வேண்டும்’ என்கிறார் (பாரதியார் கட்டுரைகள், ப.382). ஆனால், ‘கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழகம் தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. கல்விக் கூடம் ஆரம்பிப்பது, ‘அதிக முதல¦டு இல்லாத வியாபாரம்’ என்ற நிலை ஏற்பட்டுக் கல்வி வியாபாரிகள் வளர்ந்துள்ளனர்’ (தமிழ் ஓசை, 29.12.06) என்ற இன்றைய நிலை இங்கு எண்ணத்தக்கது.  இந்நிலையில் பாரதியின் கல்வியியல் சிந்தனைகளை மீட்டுருவாக்கம் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

இலவசக் கல்வி-உணவு-சீருடை-பாடநூல்கள்

            இலவசக் கல்வி, மதிய உணவு, பாட நூல்கள் என்பன பாரதியின் தொலைநோக்கில் உதித்தவையாகும். பள்ளிகள் மாணாக்கர்களிடத்து, சம்பளம் என்னும் பெயரில் எந்தத் தொகையும் வசூலிக்கக்கூடாது. ஆனால், சம்பளம் கொடுக்கக்கூடிய நிலையிலுள்ளவர்களிடத்து நன்கொடையாகப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏழைச்சிறார்களுக்குப் படிப்பதற்குரிய பாட நூல்களும், உண்ண உணவும், உடுக்கச் சீருடையும் அளிக்கப் பெற வேண்டும் (பாரதியார் கட்டுரைகள், ப.383) என்கிறார். ‘நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் 45 ஆவது பிரிவில் 1960க்குள் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாய, இலவசக் கல்வி அளிக்கப்படும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால் சுமார் 60 ஆண்டுகள் ஆகியும் கூட இன்றுவரை அரசியல் அமைப்புச் சட்டத்தின் உத்தரவாதம் நிறைவேற்றப்படவில்லை (தமிழ் ஓசை, 29.12.06)என்ற இன்றைய சூழலில் பாரதியின் மேற்கண்ட தொலைநோக்கு விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பது எண்ணத்தக்கது.

 

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் / இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் / ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும் / பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி / ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்

                                                (பாரதி, வெள்ளைத்தாமரை)

*****

பயன் நூல்கள்

சமூகவியல், இரா.,கல்பகம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1973.

திருக்குறள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், சென்னை, 2005.

பாரதி கண்ட கல்வியும் பெண்மையும், மு. கோவிந்தராசன், முத்துக்குமரன் பதிப்பகம், சென்னை, 1981

பாரதி தமிழ், கி. கருணாகரன், வ. ஜெயா, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1987.

பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு, 2001.

பாரதியார் கவிதைகள், கங்கை புத்தக நிலையம்,சென்னை,1999.

பாரதியின் பன்முகநோக்கு, ஹயக்ரீவா பதிப்பகம், சென்னை, 2002.

புறநானூறு மூலமும் உரையும், அ. மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2001.

மகாகவி பாரதியார் கட்டுரைகள், (தொகுப்) ஜெயகாந்தன், சிற்பி பாலசுப்பிரமணியன்,

சாகித்திய அக்காதெமி, 2002.

 

இதழ்கள்

தமிழ் ஓசை (10.11.06; 27.12.06; 29.12.06) 

திட்டம் மாத இதழ் (செம்டம்பர் 2005)

தினமணி(13.08.06) 


தமிழியல்.காம்

www.thamizhiyal.com