திங்கள், 17 ஆகஸ்ட், 2020

காசி ஆனந்தன் கவிதைகளில் மொழி - இனம் - நாடு

 முனைவர் ஆ.மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் (ம) மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603 203.

(ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம்,18ஆவது கருத்தரங்கு, மே 12,13- 2007

 

            ஈழம் எண்ணற்ற சிறந்த படைப்பாளர்களை, ஆய்வாளர்களைத் தந்து தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளது. புலம் பெயர்ந்தோர் படைப்புகளில் ஈழ இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கப் பங்கினை வகிக்கின்றன. நவீன ஊடகமான இணையத்திலும் தமிழ் அதிக அளவில் உலா வர, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களே காரணம் என்பதும் அறிந்ததே. இவற்றிடையே, தமிழில் பரணி இலக்கியம் போல, ஈழ விடுதலைப் போராட்டத்தில் களவீரராக நின்று கவிதை பாடியவர் கவிஞர் காசி ஆனந்தன். இவரைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து,  ‘ஈழம் நமக்குத் தந்த இனமான வேழம் கவிஞர் காசி ஆனந்தன்! ‘அவரின் கவிதைகளில் புயலின் வேகத்தை - பூகம்ப குலுக்கலை - எரிமலையின் சீற்றத்தை உணர முடியும்’. வேகப் பாட்டெழுதும் புலவர் மட்டுமட்ட, வெஞ்சிறை வாழ்வுக்கும் வன்கணாளர் கொடுமைக்கும் அஞ்சிடாத நெஞ்சுரம் கொண்டவர்’ என்று புகழ்கிறார் கலைஞர். 

            இவர் தமிழ் ஈழத்தில் தேனாடு என்று அழைக்கப்படும்  மட்டக்களப்பில் நாவற்குடா என்னும் சிற்றூரில் 4-4-1938இல், காத்தமுத்து - அழகம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.  ஈழ விடுதலைக் களத்தில் போராடியதன் விளைவாக, ஐந்து ஆண்டுகள் சிங்கள ஏகாதிபத்தியத்தின் சிறைச் சாலைகளில் கைதியாகவும் வாழ்ந்தார்.

            காசி ஆனந்தன், 1959ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் காஞ்சியிலும், சென்னை பச்சியப்பன் கல்லூரியிலும் தமிழ்ப் பயின்றார். பாவேந்தர் பாரதிதாசனிடம் பழகியும், அவரிடம் அதிகப் பற்றுகொண்டும் வாழ்ந்தவர். ‘நாம் தமிழர் இயக்க’த் தலைவர் தந்தை சி.பா. ஆதித்தனாரால்  ‘உணர்ச்சிக் கவிஞர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டுப் பாராட்டப்பட்டவர். கவிஞர் மட்டுமல்ல, அவரின் குடும்பத்தில்        அனைவருமே களத்தில் நின்றவர்கள். கவிஞரின் அன்னையார், தமிழீழத்தின் உயர் தேசிய விருதான ‘நாட்டுப்பற்றாளர்’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

            கவிஞர் சிங்கள அரசால் சிறையிலடைக்கப்பட்டபோது,

 

பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்

                             பூட்டி வைத்தாலும் - என்றன்

அங்கம் பிளந்து விழுந்து துடிக்க

                             அடிகள் கொடுத்தாலும் - உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்

                             தூள்பட நேர்ந்தாலும் - ஒரு

செங்களம் ஆடி வரும் புகழோடு

                             சிரிக்க மறப்பேனா? (ப.33)

என்று முழங்கியவர். மேற்கண்டவற்றிலிருந்து, கவிதை காசி ஆனந்தனுக்கு வார்த்தையல்ல, வாழ்க்கை என்பது புரியும். அவ்வகையில், அவர்தம் ‘காசி ஆனந்தன் கவிதைகள்’ (காசி ஆனந்தன் குடில், சென்னை-5, 2003, பக்.221, விலை 100) என்னும் தொகுப்பின் வழி, மொழி - இனம் - நாடு குறித்த பதிவுகளைக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

மொழி

            காசி ஆனந்தன் கவிதைகளில், மொழிகள் குறித்தான பதிவுகள் மிகுதியும் காணப்படுகின்றன. இவ்வகைக் கவிதைகள் இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழியின் தேய்வு, தமிழரிடையே தமிழ்மீது காதலின்மை, மொழியின் பண்டைச் சிறப்பு, தமிழில் பிற மொழிச் சொற்கள் கலப்பு போன்றவற்றைக் கருவாகக் கொண்டுள்ளன.

            காசி ஆனந்தன் தமிழைத் தன்னின் அனைத்துமாகப் போற்றுகிறார். தமிழுக்கும் கவிஞருக்குமான உறவைக் குறிப்பிடுமிடத்து,

‘தமிழென் அன்னை!  தமிழென் தந்தை/ தமிழென்றன் உடன் பிறப்பு/ தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை!/ தமிழென் நட்புடைத் தோழன்!/ தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்!/ தமிழென்  மாமணித் தேசம்/ தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்/ தமிழே என்னுயிர் மூலம்’ (ப.79)

என்று அனைத்துமாகி நிற்கிறது கவிதை. மேலும், தமிழ்ப் பகைவர்களைக் கண்டு அஞ்சு ஒடுங்கோம், துயர்மிக வரினும் ஒதுங்கோம், தமிழின் துயர் களையாமல் ஓயோம் என்பதை,

‘பட்டினி கிடந்து பசியால் மெலிந்து / பாழ்பட நேர்ந்தாலும் - என்றன் / கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து / கவலை மிகுந்தாலும் - வாழ்வு / கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து/ கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்/ தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர் / துடைக்க மறப்பேனா?’ (ப.33)

என்று கவிஞரின் குரலை ஓங்கி ஒலிக்கின்றன.  ‘1957ஆம் ஆண்டு இலங்கையின் சிங்கள ஆட்சியாளர் வண்டிகளில் சிங்கள ‘சிறீ’ எழுத்தை இலக்கத் தகடுகளில் பொறித்ததை எதிர்த்து, மட்டக்களப்பு காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்த கவிஞர், அங்கிருந்த பெயர்ப் பலகையில் சிங்கள எழுத்துக்களை மை பூசி அழித்தார். அதனால், காவலரின் கொடுமையான தாக்குதலுக்கு ஆளானார். இரத்தவாந்தி எடுத்த கவிஞர் இதன் விளைவாக காச நோய்க்கும் ஆட்பட்டு ஐந்து ஆண்டுகள் நோயாளியாக மருத்துவமனையில் இருந்தார்’(ப.10)  என்பதிலிருந்து, மேற்கண்ட கவிதை, சொற்களின் வெற்றுக் கூட்டமைவு அல்ல, கவிஞரின் உணர்வின், செயலின் ஒருங்கிணைவு என்பது தெளிவு. மேலும், அடக்குமுறைக்கு ஆட்படாமல் தமிழுக்கு உயிரையும் கொடுப்பவர் கவிஞர் என்பதை,

                                    என்னுயிரைத் தூக்கி

                                      எறிந்து தமிழணங்கே

                             அன்னை நினதுயிராய்

                                      ஆவேன் நான்…(ப.25)

என்ற கவிதை அடிகள் காட்டுகின்றன.

தமிழகத்தில் இந்தி மொழித் திணிப்பு நடைபெற்றபோது, அதனை எதிர்த்து காசி ஆனந்தன் கவிதைகள் முழங்குகின்றன. மூத்த மொழியாம் தமிழைக் காத்திட உணர்வாளரை ஒருங்கிணைத்து, களம் புக அழைக்கின்றன.

                        முந்து தமிழ்மொழி நொந்து வதைபட

                             இந்தி வலம் வரவோ? - இது

                   நிந்தை உடனுயிர் தந்து புகழ்பெறு!

                             வந்து களம் புகுவாய்! (ப.28)

என்றும்,

வஞ்ச நெஞ்சினள் இந்தி வடவர்

அஞ்சி நடுங்க அணிகள் திரட்டிவா!

நெஞ்சு தூக்கி நில் தமிழா! எழு!

புன்சிரிப்பொடு போர்க்களம் ஆடு போ! (ப.39)

என்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ‘போர்க்களப் பாடலாய்’ ஒலிக்கின்றன. பிறமொழி கட்டாயமாக்கப்படும் வேளையிலும் தமிழ்மொழி உணர்வுப் பெற்று விழித்தெழாதோரை,

தேனைப் பிழிந்தும் கனிகள் சொரிந்தும் / செங்கருப்பைப் பிழிந்தும் /ஆநெய் கருவாஏலம் கலந்தும் / அமுதாய்த் தமிழ்ப் புலவன்/ ஊனை உயிரை உருக்கும் தமிழை/ உன்றனுக்கே தந்தான்/  சோணைப் பயலே! தமிழை இழந்தும்/ தூங்கி நின்றாயோடா? (ப.29)

என்று ஏளனம் செய்கின்றன. தமிழ்வளர்த்த பண்டையோர் பெருமையைச் சுட்டுவதோடு, இன்றையோரின் மொழிப்பற்றின்மையை வன்மையாகச் சாடுகின்றன. மேலும்,

                        காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!

                             பூட்டு நொறுக்கிடுவாய்! - நிலை

                   நாட்டு குலப்புகழ் ! தீட்டு புதுக்கவி!

                             ஏற்று தமிழ்க் கொடியே! (ப.30)

என்று தமிழ்ப் பகை போக்கி, தமிழ்க்கொடி நாட்டவும் மொழிப்பற்றாளரை, உணர்வாளரை அழைக்கின்றன.

            இந்தியில் இருந்து தப்பிப்பிழைத்த  தமிழ், ஆங்கில மோகத்தில் அகப்பட்டுக்கொண்டது. இன்றைய சூழலில், தமிழன் தமிழனோடு கலந்துரையாட ஆங்கிலமே இடையூடகமாயிற்று; ஆங்கிலம் பேசுவது நாகரிகமாக எண்ணப்படுவது போல, தமிழ் தெரியாது என்பதும் நாகரிகமாயிற்று. ஆங்கில மோகத்தை அந்நியரர் புகுத்தவில்லை; இப்பாதகத்தை  அயலார் தமிழுக்குச் செய்யவில்லை; தமிழனே தமிழுக்குச் செய்தான்/செய்கிறான். இன்றைய நிலையில், தமிழ் தமிங்கலமாக மாறிப்போனதை,

பாட்டன் கையிலே

                   ‘வாங்கிங் ஸ்டிக்கா’

பாட்டி உதட்டுல

                   என்ன ‘லிப்ஸ்டிக்கா’?

வீட்டில பெண்ணின்

                   தலையில் ‘ரிப்பனா’?

வௌ¢ளைக்காரன்தான்

                   உனக்கு அப்பனா?

தமிழா நீ பேசுவது தமிழா? (ப.143)

என்று எள்ளலாக, வேதனையை வெளிப்படுத்தி, தமிழ் உணர்வாளரைச் சிந்திக்கச் சொல்கின்றன காசி ஆனந்தன் கவிதைகள்.

இனம்

            காசி ஆனந்தன் இக் கவிதைத் தொகுப்பு, தமிழ், தமிழினம், ஈழம் தவிர்த்து வேறெதையும் பேசவில்லை. தமிழினத்தின் பண்டைப் பெருமையை உணர்த்துவதோடு,இன்றைய இழி நிலையைச் சுட்டுவதும்,  இன மான மீட்புக்கு உணர்வாளர்களை ஒன்றுதிரட்டி அழைப்பதும் கவிதையின் நோக்கமாகிறது.  மொழி, இன உணர்ச்சியற்றோரை வன்மையாகச் சாடும் கவிதைகள், இத்தன்மையோர் இருப்பதிலும் இறப்பது மேலென்கின்றன.  தமிழினம் தழைக்க குரல்கொடுக்கும் இவைகள்,

‘சத்தை இழந்த தமிழ்ச்/ சாதி பிழைக்க நான்/ பத்தாயிரங் கவிதை / படைக்காமல் போவேனோ?’ (ப.25)

என்று  கவிஞரின் உணர்வையும் வெளிப்படுத்தவும் தவறவில்லை.  தமிழனப் பெருமை ஏட்டில் மட்டும் எஞ்சி நிற்க, நாட்டிலோ அதன் நிலை  வேறு என்பதை,

            முந்தி முளைத்த கலங்கரை

                   தமிழ்ப் பரம்பரை - நடுச்

          சந்தியில் வீழ்ந்து துடிப்பதேன்?

                   தாழ்ந்து கிடப்பதேன்?

 

          அள்ளிக் கொடுத்த கை கேட்குதே

                   ஓடு தூக்குதே - இலை

          கிள்ளிப் பொறுக்கித் திரியுதே!

                   உள்ளம் எரியுதே! (ப.31)

என்று,  தமிழினத்தின் வாழ்வும் வீழ்வும் குறித்த பொருமலாக வெளிப்படுப்படுகின்றன. இவ் இழிநிலை ஏற்பட இன உணர்வின்மையும், ஒன்றுமையின்மையுமே காரணமாக அமைகிறது. மொழியால், இனத்தால் ஒன்றுபடாமல், சாதியால், அரசியலால் பிளவுபட்டு, பிறருக்கு அடிமைப்பட்டு, தமிழினம் தம் முகத்தையும், முகவரியையும் இழந்து நிற்பதை,

ஊருக்கூர் சண்டை தெருக்கொரு சண்டை/ உருப்படு வோமோடா?/ பாருக்குள் அடிமைத் தமிழர் நமக்குள்ளே / பத்துப் பிரிவோடா? (ப.37)

என்றும்,

வலிபடைத்து முறமெடுத்துப்/ புலியடித்த தமிழகம்/ கிலிபிடித்த நிலைபடைத்து/ வெலவெலத்து வாழ்வதோ? (ப.45)

என்றும் சாடுகின்றன. துளித்துளியாய் கரைந்து போன, தம்மைக் கரைத்துக் கொண்ட இனம்; அடிமைத் தளையில், அந்நிய மோகத்தில் தம்மைத் தாமே பூட்டிக்கொண்ட ஒரு பேரினம் தமிழினம். அதனை மீட்டெடுப்பதும், மீட்டுருவாக்கம் செய்வதும் இன உணர்வாளரின், மொழிப்பற்றாளரின், கவியுள்ளம் கொண்டவரின் கடமையாகிறது. அவ்வகையில், இனவிடுதலையின் ஏக்கமே இங்குக் கவிதையாகிறது.

                              கடமுட என ஒரு கவியிடி

                             கொடியவர் பொடிபட வெடியாதோ?

                             திடுதிடு மென ஒரு படையணி

                             அடிமைகள் படுதுயர் துடையாதோ?

                             மடமட என ஒரு நொடியினில்

                             இடுகர விலங்குகள் ஒடியாதோ?

                             கொடியொடு படையொடு முடியொடு

                             தமிழின விடுதலை கிடையாதோ? (ப.38)

தமிழினத்தின் விடுதலை என்பது, மெல்ல மெல்ல மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய, நடந்தேறவேண்டிய ஒன்றல்ல. அதற்கான காலமும் இங்கில்லை. அதனால், வீறுகொண்ட செயல்களே இன மானத்தை மீட்டுத்தரும் என்பதை,

பல்லாயிரம் நாட் பயிரை - வீரம்

          பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை

எல்லாம் நிறைந்த தமிழை - தழலில்

          இட்டவன் உடல்மேல் இடடா தழலை (ப.55)

என்ற உணர்ச்சிப் பாக்கள் வெளிப்படுத்துகின்றன. ‘எதிரி  வம்பாடி, வாளெடுத்து, தலை கொய்ய வருகையில், நீ மலர் கொடுத்து, கரம் குவித்து, சிரம் தாழ்த்தி நிற்பது கோழைத்தனம்’ என்பதாக இதனைக் கொள்ளலாம்.

நாடு

            ‘இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியும், நடுக்காலத்தில் பாரதிதாசனும் உருவாக்கிய தமிழர் எழுச்சியின் போர்க்குரலாக இந்த நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ஒலிப்பவர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்’ என்றும்,  தமிழீழப் போர்க்களத்தைப் பாடும் கவிஞனாக மட்டுமல்ல களவீரனாகவும் விளங்குகிறார்’ என்றும் கவிஞரைப் புகழும் பழ. நெடுமாறனின் புகழுரை, கவிஞரையும் அவர்தம் கவிதையையும் நமக்கு இனங்காட்டும்.

            ஈழத்தின் விடுதலைக்காக களத்தில் கவிபாடுகிறார் கவிஞர். குருவிக்கும், எலிக்கும், நண்டுக்கும் கூட வாழ இடமுண்டு; ஆனால், ஈழத்தை ஆண்ட தமிழனோ உரிமை மண்ணை இழந்து, மக்களை இழந்து,  உறைவிடம் இழந்து, உறவை இழந்து,  ஏதிலியாக நிற்கிறான். இத்துயர் போக, ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள்வதே தீர்வு என்கிறது கவிதை.

                            ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை

                                      ஆள நினைப்பதில் என்ன குறை?

                             கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு!

                                      குருவிக் கூடு மரத்தி லுண்டு!

                             காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு

                                      கஞ்சல் எலிக்கோர் குழியுண்டு!

                             கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர்

                             குலத்துக் கொரு புகல் இங்கில்லையோ?(ப.27)

            இவ்வகை இழிநிலையை எண்ணி ஓலமிட்டுக்கொணிடிருந்தால் போதாது, இழிநிலை துடைக்க எழுந்துவா தமிழினமே என்பதையும் கீழ்க்கண்டவாறு முன்வைக்கிறது.

                                      எழுந்திரடா தமிழா

                                                ஏடா… என்னடா உனக்

                                      இன்னும் உறக்கமோடா? (ப.42)

என உணர்வைத் தட்டி எழுப்பி,

                                      ஊனத் தசைதான் தமிழுடலோ? அட

                                                உணர்ச்சி கடவுள் தரவில்லையோ?

                                      ஈனச் சரிதை கிழியப் புதியதோர்

                                                ஏடு படைப்போம் எழு தமிழா! (ப.27)

என்று ஆற்றவேன்றிய பணியையும் சுட்டுகிறது. காசி ஆனந்தன், ‘கவிதை விற்று காசு தேடும்’ கவிஞராக அல்லாமல், கவிதையை, மொழி விடுதலைக்கு, இன விடுதலைக்கு, மண் விடுதலைக்குப் படைப்பவராகத்  திகழ்கிறார்.

             கவிஞர் சிறைப்பட்ட வேளையில், வேற்று சிறையில் அடைபட்ட தம் தம்பியருக்கு,

 

கொடுஞ்சிங் களத்தின் வெலிக்கடைக் கோட்டம்

          குடியிருக்கும் உங்கள் அண்ணன்

இடும்பணி கேளீர்! கண் விழித்திருங்கள்!

          இன்னுயிர்தான் விலை எனினும்

கொடுங்களடா என் தம்பிகாள்! கொடுங்கள்!

          கூத்தாடுவேன் உடன்பிறப்பே! (ப.118)

என்று கவி பாடுகிறார். பின்னாளில் கவிஞரின் தம்பியருள் ஒருவர், களத்தில் எதிரிகளால் சூழப்பட்ட நிலையில் வீரமரணத்தைத் தழுவினார் என்பதும் இங்குக் குறிக்கத்தக்கது.

            ‘பாரதி, பாரதிதாசன் வழியில் துணிவோடும், போராடும் உணர்ச்சிப் பெருக்கோடும் உள்ளுறை சீற்றத்தோடும் உயிர்ப்புள்ள கவிதைகள் இயற்றியுள்ள கவிஞர் காசி ஆனந்தன் இதர பல கவிஞர்களைப் பார்க்கிலும் தனிச் சிறப்புகள் கொண்டவர்’(ப.9) என்ற வல்லிக்கண்ணனின் பாராட்டுரை இங்குக்  குறிப்பிடத்தக்கது. உணர்வைச் செயலில் வெளிப்படுத்தாமல், புலம்பல் கவிதை எழுதும் கவிஞரையும் அவ்வகைக் கவிதையையும் காசி ஆனந்தன் கவிதைகள் குட்டுகின்றன. வெற்றுப் புலம்பல் பாக்களைத் தவிர்த்து,

தவளைக் குரலில் முழங்கினால் இங்குள்ள/ தாழ்வு மறைந்திடுமோ?-நாலு / கவிதை எழுதிக் கிழித்துவிட்டால் எங்கள்/ கவலை குறைந்திடுமோ? - வீட்டுச்/ சுவருக்குள் ஆயிரம் திட்டங்கள் தீட்டிச் / சுதந்திரம் வாங்கிடவோ? - தலை/ குவியக் கிடந்த செருக்களம் ஆடிக் / குதிக்கப் புறப்படடா! (ப.48)

என்று, இலக்கு நோக்கிய செயற்பாட்டிற்கு அழைப்பு விடுக்கின்றன.

  • இனத்தின் மீதான பற்றும், அதன் இழிநிலை குறித்த குமுறலும் காசி ஆனந்தன் கவிதைகளில் பதிவுகளாகின்றன.
  • காசி ஆனந்தன் கவிதைகள், முழுக்க முழுக்க தமிழ்மொழி, தமிழினம், ஈழ விடுதலைக் குறித்த ‘புதிய புறநானூறாக’  ஓங்கி ஒலிக்கின்றன.  
  • மொழி குறித்த பதிவுகளைக் காணுமிடத்து, இவர்தம் கவிதைகள், மொழியின் பண்டை பெருமை பேசுவதோடு, இன்று அதன் இழிநிலையைச் சுட்டுவனவாகவும், மொழியின் சிறப்பை உணராதோரைப் பழிப்பதோடு, மொழியை இழிசெய்வோரை எச்சரிப்பனவாகவும் அமைகின்றன.  மொழி விடுதலையும், இன விடுதலையும், மண்ணின் விடுதலையும் தாள் பணிந்து பெருவதல்ல, வீறுகொண்ட செயலால் பெறுவது. பிச்சை பெறுவதல்ல; உரிமையை எடுத்துக்கொள்வது என்பதை இவர்தம் கவிதைகள் உரைக்கின்றன.…
  • வெற்றுக் கூச்சலை, பெட்டை முனகலைத் தவிர்த்து, மொழியைக் காக்க, இனத்தைக் காக்க, மண்ணைக் காக்க களம் புகுதலே இழந்த பெருமையை மீட்டுருவாக்கம் செய்து, தமிழனுக்குப் பெருமை சேர்க்கும் என்பதை வலியுறுத்துகின்றன. பரணி பாடல்களைப் போல சந்த ஓசையைப் பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அவை போர்க்களப் பாடலாக அமைகின்றன.
  • தமிழையும், தமிழினத்தையும், தமிழ் மண்ணையும், ஈழ விடுதலையையும் பாடும் காசி ஆனந்தன்  கவிதைகள், ஈழ வரலாற்றில் மட்டுமன்று, தமிழக வரலாற்றிலும் நிறைந்த-நிலைத்த இடத்தைப் பெறுபவை என்பதில் ஐயமில்லை.

                        நாளை விடிந்தால் வேலை முடிந்தது

                             நாடு  பிறந்தது ! வீசுக புயலே!

                   கோழையர் இல்லை தமிழக மண்ணில்!

                             குமுறி ஆடுக! ஆடுக பார்ப்போம்!

                   தோளை நிமிர்த்திய வீரர் துள்ளினார்!

                             தொல்லை மடிந்தது வீசுக புயலே!

                   வேளை மலர்ந்தது !வீசுக வீசுக!

                             விளித்தது சங்கம் ஒலித்தது முரசே! (ப.56)

***** 

www.thamizhiyal.com

அறிவியல் தமிழ் ஆய்வுகள்

 முனைவர் ஆ.மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் (ம) மானிடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.

(தமிழாய்வு - கடந்த காலமும் வருங்காலமும், முதல் பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் மொழித்துறை, பிப்ரவரி 14-15, 2007)

 

            கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் எதுவாயினும், அதன் பயன் நிறைவு என்பது,  சராசரி மனிதனை அது சென்றடைவதைப் பொறுத்தே அமைகிறது.  சராசரி மனிதனை எளிதில் சென்றடையாத எந்தவொரு கலை, இலக்கியமாயினும், அறிவியல், தொழில்நுட்பமாயினும் அதனால் யாதொரு பயனும் இல்லை. சராசரி மனிதனைச் சென்றடைதல் என்பதில் ‘வெளிக்காட்டு உத்திமுறை’ (Way of Presentation) முக்கியப் பங்காற்றுகிறது. வெளிக்காட்டு உத்திமுறையில், கையாளப்படும் ஊடகம், வழங்கும் வடிவம் என்பவற்றோடு மொழி ஆளுகையின் தேவையும் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.  குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கும் சாராசரி மனிதனுக்குமிடையேயான இடைவெளியைக் குறைப்பதில், அவரவர் தாய்மொழி முதன்மை இடத்தைப் பெறுகிறது. ‘மக்கள் உருவாக்கிய மொழி அவர்களது கருத்துகளைத் தெளிவுபடுத்தும் வண்ணம் வளர்ச்சியடைவது அவர்களது முயற்சியைப் பொறுத்து அமையும்’ (அறிவியல் தமிழாக்கம், ப.1)  என்ற கருத்து இங்குச் சுட்டத்தக்கது. எனவே, அறிவியல், தொழில்நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் இன்றைய உலக சூழலில், அவரவர், அவரவர் மொழியில் அதனைக் கைகொள்வது போலவே, தமிழரும் தமிழால் அறிவியல் கருத்துகளைக் கைகொள்ள முனைவது காலத்தின் தேவையாகிறது. அதுவே பயன்பாட்டு நிறைவிற்கு வழி வகுக்கிறது. அறிவியல் கருத்துகளை மொழிபெயர்த்தல் என்ற நிலையிலிருந்து, தமிழிலேயே அறிவியல் படைப்புகளை உருவாக்குதல் என்பது காலத்தேவையாகிறது.

            ஓர் இனம், தலைமுறை தலைமுறையாகக் கண்ட வளர்ச்சிகளின் சாரம் முழுவதையும் வரும் தலைமுறைக்குத் தனது மொழியின் வாயிலாகத்தான் விட்டுச் செல்கிறது. தற்காலம் வரையிலான அறிவு வளர்ச்சி முழுமையையும் தன்னுள் கொண்டு, நாளைய தலைமுறைக்கு அதை வழங்கும் ஆற்றல் ஓர் இனத்தவரின் மொழிக்கு இல்லையெனின் அந்த நாகரிகம் வளர்ச்சி குன்றி, வாழ்விழந்து விடும். நாள்தோறும் மிகுகின்ற வேகத்துடன் வளரும் கல்வியறிவை, நம் மொழியின் துணையாகவல்லது, மற்றொரு மொழியின் துணைகொண்டு, நாமும் பெற்று, அதன்வழியே நமது அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்கிறோம். இதன் விளைவுகள் நமது நாகரிகமும், பண்பாடும் நசிவதற்குக் காரணமாகிவிடலாம்’ (அறிவியல் தமிழ், வா.செ. குழந்தைசாமி, ப.17) என்பதை வெறும் செய்தியாக நோக்காமல், எச்சரிக்கையாக நோக்குதல் தமிழின, மொழி வளர்ச்சியில் முக்கியத் தேவையாகிறது.

            அறிவியல் வளர்ச்சியின் ஓட்டத்தில்,  நாமும் நம்மை இணைத்துக் கொள்ளுதலும், முன்னேறுதலும் காலத்தின் கட்டாயமாகும். அதற்கு அருந்துணையாக அமையவல்ல தாய்மொழியாகிய தமிழை அறிவியல் மொழியாக வலுவோடு வளர்க்கவேண்டியது இன்றியமையாத் தேவையாகும்.  மேலும், ‘பாதுகாப்பு வேறு; வளர்ச்சி வேறு.  வளர்ச்சிக்குப் பாதுகாப்புத் தேவை. ஆனால், பாதுகாப்பே வளர்ச்சியாகிவிடாது. வேளாண்மைக்கு வேலி தேவைப்படலாம். ஆனால், வேலியே வேளாண்மையாகி விடுவதில்லை. ஒரு இனத்திற்கும் மொழிக்கும் வளர்ச்சியே பாதுகாப்பு  (அறிவியல் தமிழ், வா.செ. குழந்தைசாமி, ப.16) என்ற கருத்தின் அடிப்படையில், இன்றைய சூழலில் தமிழின் வளர்ச்சி என்பதும், தமிழரின் வளர்ச்சி என்பதும் அறிவியல் தமிழின் வளர்ச்சியைச் சார்ந்தே அமையும் என்பது  தெளிவு. எனவே, அறிவியல் தமிழை வளர்ப்பதும், வளப்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது.

அறிவியல் தமிழ்

            அறிவியல் தமிழ் என்பது, அறிவியல் துறை சார்ந்த கருத்துகளை அறிவியல் மொழியில் விளக்கும் இயற்றமிழ்  வகை என்பர் (வளரும் தமிழ், ப.162). மேலும் இதனை, தமிழைப் பயிற்று மொழியாக ஏற்றுக்கொண்ட பின் எழும் சில சிக்கல்களைக் களைந்து, பயிலும் கலையில் ஒருவர் முறையே ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியின் விளைவே அறிவியல் தமிழ். பல துறைகளில் அறிவைப் பெற விழையும் தமிழரின் அறிவுப் பசியைத் தணிக்க எழுந்த பலதுறை நூல்களுள் அமைகின்ற ஒரு வழக்கை அறிவியல் தமிழ் எனலாம் (வளரும் தமிழ், ப.163) என்றும் விளக்குவர். தமிழில் உள்ள அறிவியல் கருத்துகளை வெளிக்கொணர்தல் அறிவியல் தமிழில் ஒருவகை செயலாக்கம் என்றாலும், அறிவியல், தொழில்நுட்பங்களை தமிழில் படைத்தளித்தலே ‘அறிவியல் தமிழாக’ சுட்டப்படுகிறது. இங்கு, மொழிக்கு இரண்டாம் இடமும், அறிவியலுக்கு முதன்மை இடமும் வழங்கப்படுகிறது.

            முயற்சியை வளர்த்து மனிதனைச் செயலுக்குத் தூண்டுவதாய் அறிவியல் சிந்தனை அமைகிறது. இது காலநிலைக்கேற்ற வளர்ச்சி, வளர்ச்சிக்கான மாற்றங்கள், மாற்றங்களுக்கான அணுகுமுறை இவற்றை வழங்குவதோடு, சமுதாயத்தின் தேவையை நிறைவு செய்யும் பணியையும் தூண்டுகிறது (வளரும் தமிழ், ப.162). இவ்வளர்ச்சிகளையும், மாற்றங்களையும், அணுகுமுறைகளையும்  சராசரி மனிதர்க்கும் புரியும் எளிய தமிழில் வெளிப்படுத்துவது ‘அறிவியல் தமிழாகிறது.

தாய்மொழியும் அறிவியல் மொழியும்

            அறிவியலின் வளர்ச்சி என்பதும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்பதும் தோன்றும் இடங்களால் வேறுபடலாம். ஆனால், அவற்றின் பயன் உலக நோக்கை முன்னிறுத்தியது.  அறிவியலை ஆணிவேராகக் கொண்டு இயங்கும் இன்றைய உலக சூழலில், அறிவியலின் பயனையும், தொழில்நுட்பத்தின் திறனையும் ஒருவர் எளிதில் பெற, அவரின் தாய் மொழியில் அவை வழங்கப்படுதல் வேண்டும்.             உலகமயமாக்கலின் இன்றைய சூழலில், மக்கள் வளமும், நுகர்வோரும் நிறைந்த இந்தியா போன்ற நாடுகள் வெற்றுச் சந்தைகளாக மாறிவரும் இன்றைய சூழலில், அவ்வகைக் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவை அவரவர் தாய்மொழியில் கைகொள்ளுதல்  அறிவியல் யுகத்தில் நம்மை இணைப்பதாகிறது. மேலும், அறிவியல், தொழில்நுட்பம் பற்றிய மாயையை உடைப்பதாகவும், சராசரி மனிதனுக்கும் தொழில்நுட்பத்திற்குமான இடைவெளியைக் குறைப்பதாகவும்  இது இஅமைகிறது.

            இக்கருத்தை, ‘உலகின் பல்வேறு பாகங்களிலும் அந்தந்த நாட்டுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. அதுவே உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பயன்படக் கூடிய கண்டுபிடிப்புகளாகவும் வளர்ச்சியும், மாற்றமும் பெற்று வருகின்ற, இந்தப் புதுமைகளை, மக்கள் அறிந்து, புரிந்து தன் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். அதுவே அறிவியல் வளர்ச்சியின் உண்மையான பயன் ஆகும்’ (இந்திய அறிவியல் தொழில்நுட்பம், ப.233) என்றும்,  புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான செயல்விளக்கமும், பயன்பாடும் மக்களைச் சென்றடைய மொழி ஓர் ஊடகமாகப் பயன்படுகிறது. இவ்வூடகம் ஒருவரின் தாய் மொழியாக இருக்கும் நிலையில் கருத்துப் பரிமாற்றம் மேலும் சிறப்பானதாகவும், தெளிவானதாவும் எளிமையானதாகவும் அமையும் என்பது திண்ணம் (வளரும் தமிழ், பதிப்புரை) என்றும் வலியுறுத்துவர். ஒரு மொழியின் அகவளர்ச்சி மற்றும் புறவளர்ச்சி என்ற இரு நிலைகளும், அம்மொழி ஏற்றுக்கொள்கின்ற பிறதுறை தொடர்புடைய கருத்துகளின் அடிப்படையில் அமையும் என்பதும்,  இன்று தமிழ் வளர்ச்சி என்பது அறிவியல் தமிழ் வளர்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது என்பதும் உணரத் தக்கது. மேலும், அறிவியல் தமிழுக்குப் புதிய துறை அன்று. நம் முன்னோர்கள் மருத்துவம், மனையியல், வானவியல், கணிதம், சோதிடவியல், உலோகவியல், பொறியியல்  போன்ற பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்ததையும் நாம் அறியவேண்டும்.

அறிவியல் கலைச்சொற்கள்

            அறிவியல் தமிழாக்கத்தில் ‘கலைச்சொல்லாக்கம்’ முக்கியப் பங்கினை வகிக்கிறது. குறிப்பிட்ட துறையிலுள்ள கருத்துகளுக்குரிய பொருளை விளக்கப்பயன்படும் சொல்லையே கலைச்சொல் என்று குறிப்பிடுகிறோம். சாதாரண வழக்கில் உள்ள சொற்களே அறிவியலில் சிறப்புப் பொருளைத் தரும்பொழுது கலைச்சொல்லாகிறது (அறிவியல் தமிழ், டி.பத்மனாபன், ப.2) மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், ஒலிபெயர்ப்பு என்ற மூன்று நிலைகளில் அமையும் கலைச்சொல்லாக்கத்தின் அடிப்படையிலேயே அறிவியல் தமிழாக்கத்தின் பயன் வெளிக்கொணரப்படுகிறது. ‘கருத்துக்களை வரையறைக்குட்பட்டு, துல்லியமாக வெளியிடுவதே அறிவியலின் சிறப்புப் பண்பு. இதற்குத் துணைபுரிவது அந்தந்த அறிவியல் துறையில்  பயன்படும் கலைச்சொற்களே(அறிவியல் தமிழ், டி. பத்மனாபன், ப.2).

            முறையான கலைச்சொல்லாக்கப்பப்பணி 20ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இராஜாஜி, வெங்கடசுப்பையருடன் சேர்ந்து சேலத்தில் 1916இல் ‘தமிழ் சாஸ்திர பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகையைத் தோற்றுவித்தார். கலைச் சொல்லாக்கப் பணியில், முதல் கூட்டு முயற்சியாக இதைச் சொல்லலாம் (அறிவியல் தமிழ்,                     வா.செ. குழந்தைசாமி, ப.77-78). இவ்வாறு தொடங்கப்பட்ட கலைச்சொல்லாக்கப்பணி,  இன்று அரசாலும், தனியாராலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவியல் தமிழின் வளர்நிலையான கணினித் தமிழில், கணினி கலைச்சொற்களை ஐம்பதாயிரத்திற்கும் மேல் உருவாக்கியுள்ள மணவை முஸ்தபாவின் பணி இங்குக் குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கும் வளர்தமிழ் மன்றமும் கணினி கலைச்சொல் அகராதி ஒன்றினை வெளியிட்டுள்ளது. பதிப்பகங்கள் சிலவும் இப்பணியில் ஈடுபட்டுள்ளமை அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாய் உள்ளது. கணினிக் கலைச்சொல் அகராதி போல, பிற அறிவியல் துறைகளுக்கும் இதுபோன்ற கலைச்சொல் அகராதிகளை உருவாக்குதல் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையாகிறது.

அறிவியல் தமிழ் அறிஞர்கள்

            அந்தந்த துறைசார்ந்த அறிஞர்கள் மட்டுமே அவ்வவ்துறைக்கான அறிவியல் தமிழ் கட்டுரைகளை வடித்தல் வேண்டும் என்ற சிலரின் கூற்று ‘அறிவியல் தமிழ் களத்தில்’ ஏற்புடையதாக இல்லை. துறைசார் வல்லுநர்களுக்கு அத்துறைசார் அறிவு வாய்க்கப்பெற்றும் மொழிநடை கைவரப்பெறவில்லையெனின் அவரிடத்திலிருந்துப் பெறப்படும் கருத்து பயன்நிறைவைத் தராமல் போகலாம். பிறதுறை வல்லுநர்கள் சிலர் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் சிறந்து விளங்குதல்போல, மொழிநடை வாய்க்கப்பெற்ற தமிழரிஞர்களும், ஆய்வாளர்களும் தகுந்த ஆதாரத்தோடும், ஏற்றுக்கொள்ளப்பட்ட, பண்படுத்தப்பட்ட கலைச் சொற்களின் பயன்பாட்டோடும், துறைசார் அறிவோடும் உருவாக்கப்படும் அறிவியல் தமிழ் படைப்புகள் பயன் நிறைவைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்¬லை. அதே வேளையில் ‘அறிவியல் ஈடுபாடே இல்லாத ஒருவர் பொருளுக்காகத் துணுக்குகளை எவ்வித பிரக்ஞையுமின்றித் தொகுத்தும், தமிழ்ப்பற்று இன்றி அறிவியல் பலதுறைக் கட்டுரைகளை எந்திரமாக மொழிபெயர்த்தும் நூல் எழுதுவது அறிவியல் தமிழுக்கு அணி சேர்க்காது’ (அறிவியலும் இலக்கியமும் - சில மதிப்பீடுகள், ப. 18)  என்ற உண்மையை மறுத்தற்கில்லை.

அறிவியல் சொற்களை உருவாக்குவதில் அறிவியலில் ஈடுபாடும், தேர்ச்சியும் பெற்றிருப்பதும், தமிழ்மொழி அமைப்பிலும், நடையிலும்  தேர்ச்சிப் பெற்றிருப்பதும் தேவையாகிறது. எனவே, அறிவியல் தமிழ் படைப்பில் அறிவியல் அறிஞர்கள் மற்றும் தமிழறிஞர்களின் கூட்டு முயற்சி இங்கு வலியுறுத்தப்படுகிறது. அறிவியல் தமிழாக்கத்தில் தமிழறிஞர்களை நாடுதல் தேவையற்றது என்ற சிலரின் கூற்றும், செயலும் அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தேக்கத்தை விளைவிக்கும் என்பதை உணரவேண்டும்.

அறிவியல் தமிழாக்கம்

            அறிவியல் தமிழாக்கம் என்பதில், அறிவியல் தமிழில் கட்டுரைகளும் நூல்களும் வெறும் மொழிபெயர்ப்புகளாக வெளிவந்துகொண்டிருந்த நிலை மாறி, தமிழிலேயே அறிவியல் படைப்புகளை உருவாக்கும் பரவலான நிலையை இன்று காணமுடிகிறது.  ‘தமிழில் அறிவியல் எழுதுவோரைக் காட்டிலும், அறிவியல் பற்றி எழுதுவோரும், பேசுவோரும் பெருகிவிட்டனர். அதனாலேயே இத்தருணத்தில் தமிழகத்தின் பல்துறை அறிவியல், பொறியியல், பேராசிரியர்கள் தம்தம் துறைசார் அறிவியல் ஆய்வுகளைத் தமிழில் வழங்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது’ (அறிவியலும் இலக்கியமும், சில மதிப்பீடுகள், ப.24).

அறிவியல் தமிழாக்கம் என்பதற்கான ஒரு முறையான வரையறை இதுவரை இல்லை. பலரும் தங்களுக்கான நடையில், தங்களின் துறைசார் அறிவினைக் கொண்டு அறிவியல் தமிழாக்கத்தினைச் செய்து வருகின்றனர். அதேவேளை, அறிவியல் தமிழாக்கத்தினை ஒரு வரையறைக்குள் கொண்டுவருதலும் ஏற்புடையதாகப்படவில்லை. அறிவியல் தமிழ் என்பது, பல்துறைத் தொகுப்பாக விளங்குதலே இதற்குக் காரணம் எனலாம். மேலும், ‘கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை போன்ற அறிவியல் துறைகட்கும் தனிநடை உண்டு. சொல்லமைப்பு உண்டு; மரபு உண்டு. எனவே அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதுவது என்பது தமிழில் இலக்கியம் படைப்பதாகும். அதற்கான இலக்கணம் உருவாக வேண்டும். பாரம்பரியம் வளரவேண்டும். இவை பல நூல்கள் வெளிவருவதன் மூலம்தான், வெளிவந்த பின்தான் உருவாக இயலும் (அறிவியல் தமிழ், வா.செ. குழந்தைசாமி, ப.61) என்ற கருத்து இங்கு எண்ணத்தக்கது.

ஆயினும், அறிவியல் தமிழாக்க முயற்சிகளில் சில தன்மைகளை அறிஞர்கள் சுட்டுகின்றனர். அறிவியல் தமிழ்ப் படைப்புகளில், ஆகவே, எனவே, எனின், பின்பு - போன்ற சலிப்புச் சொற்களை மீண்டும் மூண்டும் பயன்படுத்தக் கூடாது (அறிவியல் தமிழ்,             டி.பத்மனாபன், ப.37). ‘அறிவியலைச் சுமந்து வரும் தமிழாகிய அறிவியல் தமிழுக்கு கலைச் சொல்லாக்கம் (Technical word) முதன்மையானது. அடுத்து, அதன் உள்ளடக்கம் (Contents), மூன்றாவது பொருள் விளக்க நடை (Style)(அறிவியலும் இலக்கியமும் - சில மதிப்பீடுகள்,  ப.14) இவற்றில் கவனம் செலுத்த வலியுறுத்தப்படுகிறது.

அறிவியல் தமிழை, அறிவியல் செய்திக் குறிப்புகள், அறிவியல் தகவல் கட்டுரைகள், தொழில்நுட்ப ஆய்வுரைகள் என்ற வடிவில் குறிப்பிட்ட பொருண்மையை உள்ளடக்கியும்,  அறிவியல் நூல்கள் என்ற வடிவில், ஒன்றுக்கு மேற்பட்ட பொருண்மைகளை உள்ளடக்கியும் வழங்கலாம்.  ஆனால், இவை ஒவ்வொன்றிற்குமான வெளிப்பாட்டு உத்தி முறைகளில்  வேறுபாடு இருத்தலை அறியவேண்டும். மேலும், செய்தி சென்றடையும் பயனாளரைப் பொருத்தும், அதாவது, சராசரி மனிதர், ஆர்வலர், ஆய்வாளர், அறிஞர் என்ற நிலையிலும்  அறிவியல் தமிழாக்கப் படைப்புகளை வேறுபடுத்தி வழங்குதல் பயனிறைவிற்கு வழிவகுக்கும். 

அறிவியல் தமிழ் வளர்க்கும் இதழ்கள் மற்றும் அமைப்புகள்

முதல் அறிவியல் இதழ் 1831ஆம் ஆண்டு வெளிவந்த ‘தமிழ்மேகசின்’ என்ற தமிழ்மாத இதழ், இது தமிழில் அறிவியல் கருத்துகளை வெளியிட முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற உதவியது (வளரும் தமிழ், ப.42). 1933இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்க்கடல்’ என்ற இதழ் தன் நோக்கத்தை கீழ்க்கண்டவாறு வெளியிட்டது. இவ்விதழ், ‘பூமிசாஸ்திரம், வானசாஸ்திரம், தாவரசாஸ்திரம், ராஸாயனசாஸ்திரம், பௌதீகசாஸ்திரம் முதலியவற்றை மக்களுக்கு சொல்லும்’ என்று குறிப்பிட்டது (வளரும் தமிழ், அணிந்துரை). அறிவியல் தமிழை முதன்மை நோக்கமாக கொண்ட இதழாக இது அறியப்படுகிறது. தற்போது,   கலைக்கதிர், யுனஸ்கோ கூரியர், அமுதசுரபி,  செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்க்கலை, தமிழ்ப்பொழில், கலைமகள், தாமரை, மஞ்சரி போன்ற இதழ்கள் பொது பொருண்மையில் அறிவியல் தமிழிற்கு வாய்ப்பளித்து வளர்த்து வருகின்றன. இவையல்லாமல், இளம் விஞ்ஞானி, மருத்துவமலர், சித்த மருத்துவம், மருத்துவர், கால்நடைக் கதிர், வளரும் வேளாண்மை, நவீன வேளாண்மை, நிலவளம், மூலிகை மணி, ஆரோக்கியம், தமிழ்க் கம்யூட்டர் முதலிய இதழ்கள் அறிவியல் துறைகளைத் தனித்தனியாகக் கொண்டுள்ளன.

இதேபோல, ‘களஞ்சியம்’ இதழ்  அண்ணா பல்கலைக்கழக  வளர்தமிழ் மன்றத்தின் மூலமும், ‘துளி’ இதழ், தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த்துறை மூலமும், ‘அறிவியல் பலகணி’ (மொழி அறிவியல் ஆய்வேடு)  இதழ், தொல் அறிவியல் துறை மூலமும் வெளிவந்து அறிவியல் தமிழ்ப்பணி ஆற்றுகின்றன. தமிழ்ப் பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும்,  ‘அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பு அறிவியல் தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிவருதல் குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பு, 1988 முதல் 2006 வரை தொடர்ச்சியாக அறிவியல் தமிழ் கருத்தரங்குகளை நடத்தி, சுமார் 25 நூல்களை வெளியிட்டுள்ளது அறிவியல் தமிழ் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைகிறது. மேலும், ‘பொறியியல் தொழில்நுட்பம்’(1993¢), ‘மருத்துவ அறிவியல் வளர்ச்சி’ (1994), ‘சுற்றுச் சூழல் பாதுகாப்பு’(1995), ‘தகவல் தொடர்பியல்’ (1999), ‘வேளாண் அறிவியல் வளர்ச்சி’ (2000), ‘கல்வி நுட்பவியல்’ (2001), ‘உயிர் தொழில் நுட்பவியல்’ (2002), ‘இணையத் தமிழ்’(2003) ஆகிய சிறப்பு பொருண்மைகளில் கருத்தரங்குகளை நடத்தி நூலாக வெளியிட்டுள்ளது சுட்டத்தக்கது.

அறிவியல் தமிழும் எதிர்காலவியலும்

இன்று அறிவியலும், தொழில்நுட்பமும் வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்து விட்டன. இந்தத் துறைகள் சார்ந்த செய்திகளை அனைவருக்கும் எட்டச் செய்ய, அவற்றின் பயனை அனைவரும் அறிய, நுகர அறிவியல் தமிழ் விரைந்து வளரவேண்டியுள்ளது. ‘அறிவியல், தொழில்நுட்பத்துறைகள் நம் பண்பாட்டின் கூறாக அமைய வேண்டும். அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்க வேண்டும். வேற்றுமொழி சார்ந்ததாகவும், பொதுமக்களின் பண்பாட்டுக்கும், அன்றாட வாழ்வியலுக்கும் சற்றே புறப்பானதாகவும் இருக்கும் வரை அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் பயன் இருக்காது (இந்திய அறிவியல் தொழில்நுட்பம், ப.236-37). எனவே, இத்துறையில் விரைந்து செயலாற்றுதல் தமிழின் எதிர்காலத்திற்கும், தமிழரின் எதிர்காலத்திற்கும் வளமூட்டுவதாக அமையும். 

            நமது நாட்டில் அறிவியல் அறிஞர்கள் இருக்கிறார்கள். அறிவியல் கல்வி இருக்கிறது. அறிவியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், இவை நமது மொழியில் இல்லை(அறிவியல் தமிழ், வா.செ. குழந்தைசாமி, ப.58) என்ற நிலை தற்போது மெல்ல மாறிவருதலைக் காணமுடிகிறது. அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழக கருத்தரங்குகளில் மட்டும் சுமார் நானூற்றிற்கும் மேற்பட்ட அறிவியல் துறை சார்ந்த அறிஞர்கள் தமிழில் அறிவியலை எழுதுமளவிற்கு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி, அதனால் ஏற்படும் அரசியல் சமூக மாற்றங்கள் ஆகியவை இலக்கியங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. அதனால் தமிழ் ஆய்வு எல்லைகள் விரிந்துவிட்டன. இலக்கண இலக்கியங்களை மட்டும் ஆய்வு எல்லைகளாகக் கொண்டிருந்த நிலைமாறி பிறதுறைகளையும் தன் வயப்படுத்திக் கொண்டது தமிழ்மொழி. எனவே, தமிழ் அறிஞர்களும் பிறதுறை அறிஞர்களும் இணைந்தே அறிவியல் தமிழ் ஆய்வுகளை வளர்த்தெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

            அறிவியல் தமிழைப் பரப்பும் வழிகள்

            அறிவியல் தமிழைப் பரப்பும் வழிகளாக கீழ்க்கண்டவை இனங்காணப்படுகின்றன

1.         கட்டுரைகள், குறிப்புரைகள், கருத்துச் சித்திரங்கள், புகைப்படங்கள் உதவியுடன் இதழ், நூல் வழி அறிவியலைக் பரப்புதல். இம்முறையில் வாசகர் தகவல்களைப் படித்து மனத்தில் பதித்துக் கொள்ளவேண்டும்.

2.         வானொலி, மேடைப் பிரசங்கங்கள் வழி அறிவியலைப் பரப்புதல். இது நேயர் கேட்டுப் பயனுற உகந்த வழி

3.         தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் வழி நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் துய்த்து பயனுற உணரச் செய்தல்

4.         செய்முறை விளக்க (Demonstration) முகமைகள் மூலம் வகுப்புகள் நடத்தியும், செயல்பாடு மாதிரிகள் (Working Models) இயக்கியும் அறிவியல் பொது நலன்களைப் பரப்புவதாகும்.

5.         படிப்பறிவேயற்றவர்களுக்காக - கார்டூன் ஓவியம், ஊமை நிழற்படங்கள் பயன்படுத்துதல். மேலும், அவர்களுக்குப் புரியும் வகையில் தெருக்கூத்து, பாவைக்கூத்து, வல்லிப்பாட்டு, நாடோடி கானம் போன்ற எளிய நாட்டுப்புறக் கலைகளும் அறவியல் பரவ அரியதோர் ஊடகமாகும்.

            மேற்கண்ட ஐந்து வகைகளிலும், முதல்வகையே அதிக பயனை விளைவிப்பதாக அறியப்படுகிறது. படிக்க, பாதுகாக்க, ஆய்வு மேற்கொள்ள என்ற நிலையில் இது முதன்மைப்படுத்தப்படுகிறது.  அவற்றிற்கு ஊக்கமளிக்கவேண்டியுள்ளது.

பயன் நிறைவிற்கு

            அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கும், அதன் பயன் அனைவரையும் சென்றடையவும் கீழ்க்கண்ட கருத்துகள் முன்மொழியப்படுகின்றன.    

  • கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், தனியாகவும் நடத்தப்படும் கருத்தங்குகளில் வழங்கப்படும் அறிவியல் தமிழ் படைப்புகளை, முறையாக தொகுத்து வழங்குதல். அவை, எளிதில் ஓரிடத்தில் கிடைக்க வழிவகை செய்தல்
  • தனியாரால் உருவாக்கப்பட்டிருக்கும் பல்துறை கலைச்சொற்களையும் ஒழுங்குபடுத்தி தொகுத்தல்
  • துறைசார் கலைச்சொற்களை முறைப்படுத்தி வழங்க வல்லுநர் குழுவினை அமைத்தல்
  • பண்படுத்தப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட கலைச்சொற்களை படைப்பாளர்கள் பயன்படுத்த வரையறுத்தல்.
  • அறிவியல் அறிஞர்கள் - தமிழ் அறிஞர்கள் இவர்களுக்கிடையேயான ஒருகிணைப்பை ஏற்படுத்துதல்
  • ஒவ்வொரு துறைக்குமான அறிவியல் தமிழ் குழுவினை ஏற்படுத்துதலோடு, இவற்றின் ஒருங்கிணைப்பு குழு ஒன்றிணையும் அமைத்தல்
  • அறிவியல் தமிழின் பயன் எல்லோரையும் சென்றடையும் வகையில், பல்லூடகத்தின் வழி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • பட்ட வகுப்பில் அறிவியல் தமிழை அறிமுகப்படுத்துதல்

*****

பயன் நூல்கள்

அறிவியல் தமிழ், பதிப். ச. இராமநாதன், இராம. சுந்தரம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1995.

அறிவியல் தமிழ், வா.செ. குழந்தைசாமி, பாரதி பதிப்பகம், சென்னை, 1986.

அறிவியல் தமிழ், பதிப். டி.பத்மனாபன், க.மணி, கலைக்கதிர், கோயம்புத்தூர், 2000.

அறிவியல் தமிழ் ஊடகங்கள், பதிப். சா.கிருட்டினமூர்த்தி, ஆ. தசரதன், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 2004.

அறிவியல் தமிழ் வளர்ச்சி, பதிப். சா. கிருட்டினமூர்த்தி, சா. உதயசூரியன், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 1999.

அறிவியல் தமிழாக்கம், பதிப். இராம. சுந்தரம், இரா. சபேசன், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 1997.

அறிவியல் தமிழியல், நெல்லை சு. முத்து, விஜயா பதிப்பகம், சென்னை, 1993.

அறிவியல் தமிழியல் கோவை I & II,  பதிப். க.ப. அறவாணன். ந. சுகுமாரன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1998.

அறிவியல் தொழில்நுட்ப வரலாறு, ஜே. தர்மராஜ், டென்சி பப்ளிகேஷன்ஸ், இரண்டாம் பதிப்பு, 1998.

அறிவியல் பார்வை, பதிப். டி.பத்மனாபன், க.மணி, கலைக்கதிர், கோயம்புத்தூர், 2001.

அறிவியலும் இலக்கியமும்-சில மதிப்பீடுகள், நெல்லை சு.முத்து, சேகர் பதிப்பகம், சென்னை, 2003.

இந்திய அறிவியல் தொழில்நுட்பம், பதிப். சா. கிருட்டினமூர்த்தி, இராமசுந்தரம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 2006.

காலந்தோறும் அறிவியல் தொழில்நுட்பம், பதிப். இரா. சுந்தரம், சா. கிருட்டினமூர்த்தி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 1998.

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்,  தொகுப். சிராஜ் உன்னிசா நாசர் மற்றும் பலர், வானதி பதிப்பகம், சென்னை, 2003.

தமிழ்வழி அறிவியல் கல்வி, ஜெயகிருஷ்ணன், காவ்யா பதிப்பகம், சென்னை, 2003.

தமிழ் வளர்ச்சியில் இதழ்கள், பதிப். சா.கிருட்டினமூர்த்தி மற்றும் பலர், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 2005.

தமிழியலின் எதிர்காலவியல், பாகம் 3, தொகுப். வ.ஜெயதேவன் மற்றும் பலர், கலைஞன் பதிப்பகம், சென்னை, 2006.

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், மணவை முஸ்தபா, மணவை பப்ளிகேஷன், சென்னை, 1997.

பல்துறைத் தமிழ், பதிப். இராம. சுந்தரம், மற்றும் பலர், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 2003.

பிறதுறைத் தமிழியல்,  பதிப். இரா. காசிராசன் மற்றும் பலர், ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, 2004.

வளர் தமிழ் ஆய்வு I & II, பதிப். சி. மைக்கேல் சரோஜினி பாய் மற்றும் பலர், வளர் தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல், 2004.

வளரும் தமிழ், பதிப். சா. கிருட்டினமூர்த்தி மற்றும் பலர், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 2003.

 

www.thamizhiyal.com

Dr.A.Manavazhahan

 

 

 

புறநானூற்றில் நீர் மேலாண்மை

 முனைவர் ஆ.மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் (ம) மானிடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் - 603 203.

 (தமிழில் உலகப் பொதுமை, பன்னாட்டுக் கருத்தரங்கம், தமிழ் மரபு மையம், ஆரோவில், புதுச்சேரி, திசம்பர் 9, 2007)


       ‘நீரின்று அமையாது உலகு’(குறள்.20) என்பார் வள்ளுவர். மிகினும், குறையினும் தீங்காகும் நீரினை, மழை வழிப் பெறுதல் தொடங்கி அதனை முறையாகச் சேமித்துப் பல் வகையினும் பயனுறுவது வரையிலான பன்முகச் செயல்பாடுகள் நீர் மேலாண்மை என்றாகிறது. ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் அதனை அடிப்படையாகக் கொண்டே அமைவதறிய முடிகிறது.   ‘உலக நீர் ஆதாரத்தில் 97.5 விழுக்காடு கடல் நீராகும். மீதமுள்ள 2.5 விழுக்காடு மட்டுமே நல்ல நீராக உள்ளது. மேற்பரப்பு நீராக உள்ள 1.9 விழுக்காடு உலகத்தில் பரவலாக இருந்தாலும் பனிப்பிரதேசத்தில் உள்ள நீர் நமக்குப் பயன்படுவதில்லை’ (திட்டம், மார்ச்சு2005, ப.94) என்பது இங்கு எண்ணத்தக்கது. மொத்த நீர் ஆதாரத்தில் 0.6 விழுக்காடு மட்டும் உள்ள நிலத்தடி நீரானது மனித வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் அடைந்துள்ளதை இதன் வழி அறியலாம்.

            நீர் மேலாண்மையைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து, ‘நீர்வள மேலாண்மை கடைபிடிக்கும் பண்பு நம்மிடையே இல்லாததால் நீர்வளங்கள் இங்கு வீணாக்கப்படுகிறது. ஒருபுறம் வறட்சியையும் மறுபுறம் வௌ¢ளப் பெருக்கையும் ஒவ்வொரு ஆண்டும் நாடு எதிர் நோக்கியுள்ளது. மத்திய அரசு வறட்சி மற்றும் வௌ¢ள நிவாரணப் பணிகளுக்காக நாட்டின் மொத்த வருவாயில் பெருந்தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது. நமது நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு இதுவுமொரு காரணமாகும். நமது நாட்டில் 1880 கன கிலோமீட்டர் நீரை மட்டுமே நாம் உபயோகப்படுத்துகிறோம். மீதமுள்ள 1190 கன கிலோ மீட்டர் நீரை பயன்படுத்திக் கொள்ளத்தக்க திட்டப்பணிகள் மேற்கொள்ளாததால் வீணாகிக் கடலில் சேர்கிறது. தற்போதைய சூழ்நிலையில் நீர்வளத்தை வீணாக்காமல் பயன்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்’ (திட்டம், டிசம்பர் 2005, ப.27) என்ற அறிவுறுத்தல் இங்குச் சுட்டத்தக்கது. நீர் மேலாண்மையின் தேவை இங்கு வலியுறுத்தப்படுகிறது.

       தமிழகத்திற்கு விவசாயத்திற்காக சுமார் 5 மில்லியன் ஹெக்டேர் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கும், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் சுமார் 2 மில்லியன் ஹெக்டேர் மீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆக மொத்தம் நீர் தேவையானது சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் மீட்டராகும். இதிலிருந்து மொத்த நீர்ப்பற்றாக்குறை சுமார் 2.16மி.ஹெக்டேர் மீட்டராகக் கணிக்கப்படுகிறது. இது மொத்த நீர்த்தேவையில் 31 சதவீதமாகும். இந்த நீர்ப் பற்றாக்குறையை, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமும், நீர் மறு சுழற்சி மற்றும் மழை நீரைச் சேகரித்து பயன்படுத்துவதன் மூலமும் பூர்த்தி செய்ய வாய்ப்புள்ளது என்கிறது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ ஆய்வு முடிவு (திட்டம், ஏப்ரல் 2004, ப.35).  இத்தேவையின் அடிப்படியில், இவ்வகை நீர் மேலாண்மை என்ற சிந்தனை, மேலாண்மையியல் செயல்பாடுகள் பழந்தமிழரிடத்து காணப்பட்டனவா என்பதன் அடிப்படையில், வருங்காலத்திற்குத் தமிழ் என்பதன் அடிப்படையில், புறநானூற்று இலக்கியவழித் தேடலாக, ‘புறநானூற்றில் நீர் மேலாண்மை’ என்ற இக்கட்டுரை அமைகிறது.

 நீர்நிலைகளின் தேவைகளை வலியுறுத்துதல்

  இவ்வுலகம் தன்நிலை திரியாமல் இருக்க, நீர்ப்பதத்தோடு கூடிய மண் இன்றியமையாததென்பதைப் பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். உயிர்கள் வாழ உணவு எவ்வளவு இன்றியமையாத் தேவையோ அதைப்போல, இந்நிலம் வளமாக இருக்க நீர் இன்றியமையாத மூலமாகும்  என்பதை உணர்த்தினர்.  இதனை,

                    நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

                   உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

                   உண்டி முதற்றே உணவின் பிண்டம்

                   உணவெனப் படுவது நிலத்தோடு நீரே (புறம்.18:18-21)

என்ற அடிகள் அறிவிக்கின்றன. மேலும், இவ்வகையான சிறப்பு வாய்ந்த நீரினையும், நிலத்தையும் ஆங்காங்கே நீர்நிலைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒன்றாகக் கலக்கச் செய்பவரே, இவ்வுலகத்தில் உடலையும் உயிரையும் படைத்தவர் என்ற பெருமையைப் பெறுவர் என்பதனை,

                             நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

                             உடம்பும் உயிரும் படைத்திசி னோரே           (புறம்.18:22,23)

என்ற அடிகள் சுட்டுகின்றன.

அதோடு, நெல் முதலானவற்றை விதைத்து மழையை எதிர்பார்த்திருக்கும்  மானாவாரி புன்செய் நிலம் நிறைய இருப்பினும் அதனால் யாதொரு பயனும் இல்லை. அதனால், நிலம் பள்ளமான இடத்தில் எல்லாம் நீர்நிலை பெருகும்படி நீரைக் கூட்டவேண்டும். அவ்வாறு  செய்தலே,  இவ்வுலகத்தில் தம் பெயரினை நிலைநிறுத்துவதாகும் என்பதை,

                    வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்

                   வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்

                   இறைவன் தாட்குஉதவாதே அதனால்

                   ------ ------ ------ ------- ------ ------

                   நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்

                   தட்டோர் அம்ம, இவண்தட் டோரே

                   தள்ளாதோர் இவண்தள்ளா தோரே     (புறம்.18:27-29)

என்று உலகிற்கு உணர்த்தினர். இவ்வகை அறிவுறுத்தலால், நாட்டில் தேவைப்படும் இடங்களனைத்தும் நீர்நிலைகளால் நிரம்பியிருந்தன என்பதை இலக்கியங்கள் சுட்டுகின்றன. [மடு, குளம் (பெரும்பாண்.288-89, மதுரை.710-11, குறிஞ்சி.63, மலைபடு.47, 213, திருமுருகு.224, பொருநர்.240, மதுரை.244-6), குட்டம் (பெரும்பாண்.269-71), கேணி(சிறுபாண்.172) என்று, பலபெயர்களுடனும், பல தன்மையுடனும் கூடிய, பல்வேறு பயன்பாட்டிற்கான நீர்நிலைகள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டன].

நீர்த்தடுப்பு /  மழைநீர் சேமிப்பு

            ‘உலகிலேயே அதிகமாக மழைபொழியும் வரிசையில் பிரேசிலுக்கு அடுத்து இந்தியா (ஆண்டுக்கு 1,150 மி.மீ) இரண்டாம் இடத்தில் உள்ளது. சுமார் 4,000 கன கி.மீ. பெய்யும் இந்நீரில் 690 கன கி.மீ. அளவிற்கு நாம் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள நீர் முறையான சேமிப்பின்றி வீணாக கடலில் கலக்கின்றது’ (திட்டம், மார்ச் 2005, ப.94) என்கிறது மழைநீர் தொடர்பான ஆய்வு. வீணாகும் நீரினைத் தடுத்துநிறுத்தி முறையாகப் பயன்படுத்தினால் நீரின் தேவையும், அதனால், உணவு மற்ற பிற தேவைகளும் நிறைவுறும். தொழில்களும் சிறந்து விளங்கும் என்பது தெளிவு. பழந்தமிழர், இவ்வகை நீரின் தேவையினை உணர்ந்திருந்ததால், அந்நீரினைப் பலவகையிலும் சேமித்து, அதனைப்  பலவகைத் தேவைகளுக்கும் பயன்படுத்தினர். காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி கடலில் கலப்பதால் நன்மை இல்லை. இதனை உணர்ந்து, ஓடிவரும் மழைநீரினைத் தடுத்து நிறுத்த நீரோட்டங்களின் இடையே நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தி, மழைநீர் சேமிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திவந்த பழந்தமிழர் நீர் மேலாண்மையை அவர்தம்  நூல்கள் காட்டுகின்றன.

பாசனத்திற்கான நீர் நிலைகள்

      ·    நீர்த்தேக்கம்

            ஓடிவரும் மழைநீரினைத் தேக்கிவைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த அறையும், பொறையும் அமைந்த பகுதிகளை இணைத்து, வளைந்த வடிவிலான நீர்த்தேக்கத்தினைக் அமைத்தனர். இதனை, 

                          அறையும் பொறையும் மணந்த தலைய

                       எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை                                                                             தெண்ணீர்ச் சிறுகுளம் ----------    (புறம்.118:1-3)

என்பதில் அறிய முடிகிறது. இதில், பாறைகளையும், சிறிய குவடுகளையும் இணைத்துக் கட்டப்பட்ட, எட்டாம் நாள் தோன்றும் பிறை நிலவைப் போன்று வளைந்த கரையையுடைய குளம் சுட்டப்படுகிறது. மேலும்,

                             வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது

                             படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் (புறம்.326:4,5)

என்பதில், நீர் வெளியேறும் வழிகளுடன் கூடிய அணைக்கட்டுப் பகுதியும், அணையில் காணப்பட்ட இடுக்குகளில், சிறுவர்கள் உடும்பு பிடித்த காட்சியும் விளக்கப்படுகிறது.

     · புதவு மற்றும் மடுகு

            அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தேக்கி வைத்த நீர், புதவின் வழியே திறக்கப்பட்டு, அமைக்கப்பட்ட கால்வாய்களின் வழியாக வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனை,   

ஓம்பா ஈகை மாவேள் எவ்வி

புனல் புதவின் மிழலையொடு கழனி   (புறம்.24:18-19)

என்ற அடிகள் காட்டுகின்றன. நீர் வெளியேற்றும் வாயில்களில் பாசனத்திற்காகத் திறந்துவிட்ட நீரின் ஓசையை, ‘இழுமென வொலிக்கும் புனலம் புதவில்’(புறம்.176:5) என்ற அடி காட்டுகிறது.  அதேபோல இதன் தொடர்ச்சியாக, அணைகளிலிருந்து நீர் வெளியேற்றும் வாயிலில் பூம்பொய்கை அமைந்திருந்ததையும், புனல்வாயிலில் பாசனத்திற்கு நீர் வெளியேற்றப்பட்டதையும் (பதி.13:1-3; 27:9), குளம் முதலியவற்றில் நீர் புகும் வாயில் அமைக்கப்பட்டிருந்ததையும் (மலைபடு.449, அகம்.237:14) இலக்கியங்கள் காட்டுகின்றன.

            மேலும், அணைகளில் வழிந்தோட அமைக்கப்பட்ட போக்கு மடையினையும், அதில் வழிந்தோடும் நீரின் ஓசையினையும் (புறம்.24:19, புறம். 176:5) புறநானூறு  காட்டுகிறது.  அதோடு, மதகில் நீர் எப்போதும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்ததை,

                             உள்ளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்

                             நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி (புறம்.376:19-20)

என்ற அடிகள் சுட்டுகின்றன.

குடிநீர்த் தேவைக்கான நீர்நிலைகள்

            வேளாண்மை தவிர்த்த குடிநீர்த் தேவைகளுக்கான தனியான நீர்நிலைகளையும் பழந்தமிழர் அமைத்தனர். இவ்வகை நீர் நிலைகளிலிருந்து பெறப்படும் நீரினைத் தூய்மைப்படுத்திப் பயன்படுத்தினர்.  ‘நீர் சேகரிப்பு அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும். நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் தடுப்பணைகள் கட்டப்படுவதும், நீர் பிடிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதும், குளங்களையும் ஆறுகளையும் தூர்வாருவதும், நீர் நிலைகளையும், கிணறுகளையும் புதுப்பிப்பதும் அவசியமாகும். முற்றிலும் தொழிலாளர் சார்ந்த இப்பணிகள் வாயிலாக அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும்’ (திட்டம், மார்ச்சு2005 ப.48) என்று, நீர்நிலைகளின் மேம்பாடும் அதன் வழி பெறும் வேலைவாய்ப்பும்  சுட்டப்படுகிறது.  இச்சிந்தனையைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்திய பழந்தமிழர் செயல் நுட்பத்தினை அக்கால இலக்கியங்கள் காட்டுகின்றன.

           நீருண்துறை

            உண்துறை என்பதற்கு, ‘உண்ணும் நீர் கொள்ளும் நீர்த்துறை’ என்று பொருள் வழங்குகிறது சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(ப.332). இவ்வகை, உண்துறையை இலக்கியங்கள் பரவலாகக் காட்டுகின்றன. நீரின் பயன்பாடு கருதி, இயற்கை நீர்நிலைகளான அருவி போன்றவற்றிலிருந்து  நீர் பெறும் தொழில்நுட்பத்தோடு இந்நீருண்துறைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தேவைக்கேற்ப நீர் பெறப்பட்டது. இத்துறையில் தெள்ளிய நீரினையும், பாசிபடர்ந்த நீரினையும், அருவியில் அடித்துவரப்படும் மலைபடுபொருள்களோடும் கூடிய நீரினையும் காணமுடிகிறது. இந்நீருண்துறையால் குடிநீரின் தேவையை நிறைவு செய்தனர். உண்துறைக்கு மலையிடத்துத் பூத்த பூக்களைத் தலைநீர் கொண்டுவந்து ஒதுக்குதலையும்(புறம்.390:23,24) காணமுடிகிறது.

       ·   கூவல்

     உவர்மண் நிலத்தில் நீருக்காகத் தோண்டிய நிலைகள் ‘கூவல்’ என அழைக்கப்படுகின்றன. அக்கிணற்றில் ஊறிய கலங்கிய சிலவாகிய நீரை, முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த அகன்ற வாயினையுடைய சாடியில் பெய்து வைப்பர். இதனை,

                             பூவற் படுவில் கூவல் தோண்டிய       

                             செங்கண் சில்நீர் பெய்த சீறில்

                             முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி

                             யாம் கஃடு உண்டென வறிது மாசு இன்று (புறம்.319:1-4)

என்பதில் அறிய முடிகிறது. அதேபோல, வன்னிலத்தில் பாறைகளை உளியால் இடித்துக் குழியாக அமைத்த பொது நீர் நிலையினை,

                             பார்உடைத்த குண்டு அகழி

                             நீர்அழுவ நிவப்புக் குறித்து                    (புறம்.14:5-6)

என்ற அடிகள் காட்டுகின்றன. குடிநீர்த் தேவைக்காக பாறைகளையும், வன்னிலத்தையும்கூட தோண்டும் வகையிலான கருவிகளைக் கொண்டிருந்தனர் என்பதும் இதில் பெறப்படுகிறது.  இவ்வகைக்  கூவல், புலத்தி   துணி   வெளுப்பதற்கான   தொழிற்சார்   நீர்நிலையாகவும்    அறியப்படுகிறது.    வன்புலத்தில் பாறைகளை உடைத்து, தோண்டப்பட்ட கூவலை, ‘கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்’ (புறம்.331:1-2) என்பதில் காணலாம். உவர்நிலத்தில் கூவல்  தோண்டப்பட்டதையும், அதில் புலத்தி நாள்தோறும் ஆடையை வெளுத்ததையும்,

                             களர்ப்படு கூவல் தோண்டி நாளும்

                             புலத்தி கழீஇய தூவௌ¢ அறுவை                  (புறம்.311:1-2)

என்ற அடிகளும் குறிப்பிடுகின்றன. இவ்வகை நீர் நிலைகளிலிருந்து பெறும்  நீரினை அப்படியே பயன்படுத்தாமல்,  தேற்றா மரத்தின்  கொட்டையைக் கொண்டு,  கலங்கிய நீரினைத் தெளிய வைத்துப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தினை அறிந்திருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது(கலி.142:63-65).

·         நீர்நிலைப் பாதுகாப்பு

            ஒரு நாட்டின் நீர்நிலைகள் என்பவை அந்நாட்டின் உயிர் நாடியாக அமைகின்றன. அவ்வகை நீர்நிலைகளை உருவாக்கினால் மட்டும் போதாது, அவற்றை இயற்கைச் சீற்றங்களிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்தல் வேண்டும். நீர்நிலைகளை உருவாக்குதலும், அவற்றைக் காத்தலும் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற செயலாக அமைகிறது. அவ்வகையில், இயற்கை சீற்றத்திடமிருந்து நீர்நிலைகளைக் காக்க, காவலர் அமர்த்தப்பட்டனர்(புறம்.15:9-10).

கயம் என்பது குளத்தையும் ஏரியையும் குறிப்பதாகும். இந்நீர்நிலை பொதுமக்களுக்கும்,  கால்நடைகளுக்கும் குடிநீரின் தேவைக்காக உருவாக்கப்பட்டதாகும். பொதுமக்களின் குடிநீர்த்தேவையினை நிறைவு செய்யும் இவை, போர்க் காலங்களில் எதிரிகளால் அழிவுக்கு உட்பட்டன. யானைகளை விட்டு இந்நீர்நிலைகளை அழித்தல் என்பது பண்டை போர் முறைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. ஆகவே, இவ்வகை நீர்நிலைகளுக்குப் பாதுகாப்பு தேவையாகியது. இதனைப் பண்டைத் தமிழர் அமைத்தனர்  என்பது பெறப்படுகிறது(புறம்.15:9-10).

 மழைவளம் பெருக்கும் வழிகள்

            மழை வளத்தைப் பெருக்க உதவும் வழிகளுள் முதன்மையானது இயற்கை வளங்களாகிய மலைவளத்தையும், வனங்களையும் காத்தலும்,  அதோடு, நீர்நிலைகளை ஆங்காங்கே ஏற்படுத்தி நீர்ச் சுழற்சிக்கு வழிவகுத்தலுமாகும்.  அடுத்ததாக, செயற்கை வளங்களை உண்டாக்குதல். இதில், மரங்களை வளர்த்து, இயற்கைச் சமநிலையைப் பேணுதல் குறிப்பிடத்தக்கது. இவ்வறிவியல் உண்மையைப் பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். அதனால், மரங்களைக் காக்கவும், மரங்களை மக்களைவிட உயர்வானதாக உணரவும்/உணர்த்தவும், சாலையோரங்களில்  மரங்களை வளர்க்கவும் செய்தனர்.

மன்னன் பிறநாட்டின் மீது போர்த்தொடுத்துச் செல்லுங்கால், ‘அந்நாட்டில் உள்ள விளைநிலங்களைக் கவர்ந்தாலும், ஊர்களை எரியூட்டினாலும், எதிரிகளை அழித்தாலும், அந்நாட்டில் உள்ள மரங்களை மட்டும் அழிக்காது விடுக’ என்று அறிவுறுத்துகிறார் பழந்தமிழ்ப் புலவரான காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (புறம்.57:5-11). அவ்வகையில் வளர்க்கப்பட்ட மரங்கள், ‘கால மன்றியும் மரம்பயம் பகரும்’ (புறம்.116:13) தன்மையதாய் விளங்கின.

மழை

மண்ணின் நீர்  நிலைகளிலிருக்கும் நீர், ஆவியாகி மேகமெனத் திரண்டு,  குவிந்து, குளிர்ந்து, மேகம் இருண்டு மழையாகப் பொழிகிறதென்பதைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். அதனால்,   நீர் நிலைகளை ஆங்காங்கே பெரிதும் ஏற்படுத்தினர்.

                                      நீண்டு ஒலிஅழுவம் குறைபட முகந்து கொண்டு

                                      ஈண்டு செலல்கொண்மூ வேண்டுவயின் குழீஇ

                                      பெருமலை அன்ன தோன்றல் சூல்முதிர்பு

                                      உரும்உரறு கருவியொடு பெயல்கடன் இறுத்து

                                      வளமழை மாறிய என்றூழ்க் காலை

                                      மன்பதை எல்லாம் சென்று உண கங்கைக்

                                      கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு (புறம்.161:1-7)

என்பதில் கடல்நீரிலிருந்து ஆவியான மேகம், மலையெனக் குவிந்து, இருண்டு மழையாகப் பொழிந்தமை சுட்டப்படுகிறது. அதேபோல,

                                     கடல்வயின் குழீஇய அண்ணல்அம் கொண்மூ

                                      நீர்இன்று பெயரா வாங்கு           (புறம்.205:11,12)

என்பதில், கடல்நீரினை முகந்துசெல்லும் மேகம் காட்சிப்படுத்தப்படுகிறது. இவ்வகை மேகங்கள், பெருமலையால் தடுக்கப்பட்டு, குளிர்ச்சியடைந்து மழையெனப் பெய்கிறது(பதி.31:15-17; புறம்.103:7). இவ்வாறு, நீர்நிலைகளிலிருந்து நீரினைக் குடித்து  உருவான மேகம், மீண்டும் அந்நீர்நிலைகளை மழைநீரால் நிரப்பிற்று (புறம்.142:1-3).

இவ்வகை நீர் மேலாண்மை, ‘நீர் நிலை நிர்வாகம்’ ஆகும். நீர்நிலை நிர்வாகத்தின் தேவையையும்,  இவற்றில் மக்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் இன்றைய தொலைநோக்குச் சிந்தனையாளர் வலியுறுத்துகின்றனர். ‘நீர்நிலை நிர்வாகமானது, ஒவ்வொரு வயலுக்கும் பாசன நீர் கிடைத்தல், பசிப்பிணியைப் போக்குதல், வறுமையை அகற்றுதல், இயற்கைச் சமநிலையை மீட்டெடுத்தல் ஆகிய முக்கிய நோக்கங்களைச் சாதிக்கவல்லது. வனப்பரப்பை அதிகரித்தல், மழைப்பொழிவை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகியவற்றில், நீர்நிலை நிர்வாகம், முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘நீர்நிலை நிர்வாகம்’ என்னும் சொற் பிரயோகத்தில் ‘நீர்நிலை’ என்பது ஆறு அல்லது ஓடைகளுக்கு நீர்வழங்கும் ஓர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் குறிக்கிறது. இத்தகைய நீர்நிலைப் பகுதியில், நீர் மட்டுமின்றி, மண், மரம், புல், பயிர், கால்நடைகள் ஆகியனவும் உள்ளன. எனவே, ‘நீர்நிலை நிர்வாகம்’ என்பது, இந்த அனைத்து இயற்கை ஆதாரங்களின் ஒட்டு மொத்தப் பாதுகாப்பைக் குறிப்பதாகும் (திட்டம், அக்டோபர் 2004, பக்.16-17) என்று, நீர் நிலை நிர்வாகம் குறித்தும், அதன் தேவை குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

     மேலும், ‘நீர்நிலை நிர்வாகம் பிரபலமடைய வேண்டுமானால், அதாவது மக்கள் இயக்கமாக மாறவேண்டுமானால், இதற்கான தொழில்நுட்பங்கள் எளிமையாகவும், விலை மலிவாகவும், கண் கூடான பலன்களைக் கொடுக்க வல்லதாகவும் இருக்க வேண்டும்’  (திட்டம், அக்டோபர் 2004, பக்.16-17) என்றும் இன்று அறிவுறுத்தப்படுகிறது. அதே வழி, இவ்வகை நீர்நிலை மேலாண்மையானது, இன்றுபோலல்லாது பழந்தமிழகத்தில் மக்கள் இயக்கமாக விளங்கிற்று என்பதும், பழந்தமிழர்ப் பயன்படுத்திய நீரியல் தொடர்பாட தொழில்நுட்பம் எளிமையானதாகவும், பயன் நிறைந்ததாகவும், பொதுமக்கள் கையாளக் கூடியதாகவும் இருந்ததென்பதும் மேற்கண்ட புறநானூற்றச் சான்றுகள் வழி அறிய முடிகிறது. இவ்வகை மேலாண்மை நுட்பங்கள் இன்றும் கருத்தில்கொள்ளத் தக்க ஒன்றாக, வருங்காலத்திற்குத் தமிழ் நல்கிய கொடையக அமைவதை அறியமுடிகிறது.

*****

www.thamizhiyal.com

Dr.A.Manavazhahan