திங்கள், 17 ஆகஸ்ட், 2020

பழந்தமிழர் கட்டுமான நுட்பங்கள் - பயன்பாட்டுப் பொருள்கள்

 ஆ.மணவழகன், விரிவுரையாளர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். கலை -அறிவியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் - 603 203.

 (அறிவியல் தமிழ் மன்றக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ஆக.26,27- 2006)

            ஒரு நாட்டின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் அந்நாடு தொழில்நுட்ப அறிவினைத் தம்முள் கொண்டிருப்பதும், பல்துறைகளிலும் தொழில்நுட்ப உத்திகளைக் கையாள்வதும் அடிப்படையாக அமைகிறது. தொழில்நுட்பக் கூறுகளைப் பயன்படுத்தாத எந்த ஒரு நிறுவனமோ, துறையோ அல்லது நாடோ என்றாலும், வளர்ச்சி காண்பதும் தன்னிறைவு பெறுதலும் அரிதாகிறது. இன்றைய நிலையில், வளர்ந்த நாடுகளின் வரிசையில் உள்ள பலவும் தங்கள் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தினையே மூலதனமாக்கியுள்ளன என்பது கண்கூடு. வளர்ந்துவரும் நாடுகளும் அவ்வழியைப் பின்பற்றியே தங்களை வளர்த்துக் கொள்ள முனைவதையும்  காணமுடிகிறது.

            தொழில்நுட்பம் என்பது, திடீரென இன்று முளைவிட்டு கிளைத்தெழுந்த ஒன்றா?  மேலும், அது இன்று தொழில்நுட்பங்களில் முன்னிலை வகிக்கும் நாடுகளுக்கு மட்டுமே உரித்தான ஒன்றா? என்பன போன்ற கேள்விகள் தொழில்நுட்பத்தின் தீவிரத் தேவையால் இன்று முன்னிறுத்தப்படுகின்றன. மனிதனின் அடிப்படைத் தேவைகள் விரிவடையும் ஒவ்வொரு காலகட்டத்திலேயும், அத் தேவைகளை நிறைவு செய்ய புதிய புதிய வழிமுறைகளைக் கையாளவும், புதுப் புதுக் கருவிகளைக் கண்டுபிடிக்கவும் அவன் முனைகிறான். அத் தேவைகளின் நிரந்தரத் தன்மைக்கும், வேலை பளு குறைப்பு மற்றும் கால மேலாண்மைக்கும் புதிய புதிய நுட்பங்களைக் கையாள வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படுகிறது. இவ்வடிப்படையிலேயே மனித வரலாறு தொடங்கிய காலந்தொட்டு இன்று வரை புதிய புதிய கண்டுபிடிப்புகளும், நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன/வருகின்றன.

     மேலும், தொழில்நுட்ப வல்லமையே ஒருநாட்டின் நாகரிக வளர்ச்சியினைத் தீர்மானிக்கும் அளவுகோலாகவும் அமைவதைக் காணமுடிகிறது. இவ்வியல்புக்குப் பழந்தமிழகமும் விதிவிலக்கல்ல. இவ்வடிப்படையில், பழந்தமிழர் கட்டுமானத் தொழில்நுட்பத்தினையும் கட்டுமான பொருள்களையும் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

கட்டுமானத் தொழில்நுட்பம்

    கட்டுமானத் தொழில்நுட்பம் என்ற இக்கட்டுரையானது, குடியிருப்புகள், நீர் நிலைகள், பாதுகாப்பு அரண்கள், பிற கட்டுமானங்கள் ஆகிவற்றின் கட்டுமான நுட்பங்களையும் கட்டுமானப் பொருள்களையும் விளக்குகிறது

1. குடியிருப்பில் பல்வகை நுட்பங்கள்

    குடியிருப்புகள் சுகாதார வசதிகளுடன், பயன்பாட்டு நோக்கில், திட்டமிட்ட அமைப்பினையும் கொண்டிருந்தன. தெருக்களின் இரு புறங்களும் பெரிய பெரிய இல்லங்கள், பல்வகைப் பயன்பாட்டுடன் கூடிய தொழில்நுட்பத்துடன் எழுப்பப்பட்டிருந்தன. வானை முட்டும்படியான உயர்ந்த நல்ல இல்லில் ஆங்காங்கே காற்றோட்டத்திற்கான சாளரங்கள் அமைத்துக் கட்டப்பட்டிருந்ததையும் அறியமுடிகிறது(மதுரைக்.356-358). நிலாமுற்றமும், பெரிய அணிகள் வைத்த அறைகளோடு கூடிய இடங்களும், மானின் கண்ணைப் போலத் துளை செய்யப்பட்ட சாளரங்களைக் கொண்ட மாளிகைகளும் இருந்ததை,

வேயா மாடமும் வியன்கல விருக்கையும்

மான்கட் காலதர் மாளிகை யிடங்களும் (சிலப்.5:7-8)

என்ற அடிகள் காட்டுகின்றன. செம்பினால் செய்யப்பட்டது போன்ற தன்மையைக் கொண்ட நெடிய சுவர் அமைந்திருந்ததையும், அச்சுவரில் வடிவழகையுடைய பல பூக்களையுடைய ஒப்பற்ற பூங்கொடியை ஓவியமாய் வரைந்திருந்ததையும்,

செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவ

ருருவப் பல்பூ வொருகொடி வளைஇக்

கருவொடு பெயரிய காண்பி னல்லில்  (நெடுநல்.112-114)

என்ற அடிகள் காட்டுகின்றன. அதேபோல, மரகதம், வயிரம் ஆகிய மணிகள் வைத்துப் பதித்த பவளத் தூண்களுடன் கூடிய திண்ணைகளை உடைய  நெடுநிலை மாளிகைகளை,

மங்கல நெடுங்கொடு வானுற வெடுத்து

மரகத மணியொடு வயிரங் குயிற்றிப்

பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை

நெடுநிலை மாளிகை                     (சிலப்.5:146-149)

என்ற அடிகள் காட்சியாக்குகின்றன.

          அ. பருவ நிலைக்கு ஏற்ற தளங்கள்

       கட்டடங்களைக் கட்டுவதற்கான தொழில்நுட்பங்களையும் அரணைமனை அமைப்பையும் நெடுநல்வாடை விளக்கிச் செல்கிறது(நெடுநல்.72-114). அதேபோல, பலமாடிக் கட்டடங்களையும், பருவநிலைக்கு ஏறப உறையும் தளங்களையும் (வேனிற் காலத்திற்கான சிறப்பு வடிவமைப்பு),

வானுற   நிவந்த மேனிலை மருங்கின்

வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்

நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்

போர்வாய் கதவந் தாழொடு துறப்ப  (நெடுநல்.60-63)

என்ற அடிகள் காட்டுகின்றன. இதைப்போலவே, வேனிற் காலத்திற்கும், கூதிர்க் காலத்திற்கும் தனித்தனியே தளங்கள் வடிவமைக்கப்பட்டிருந்த தொழில்நுட்பத்தை,

வேனிற் பள்ளி மேவாது கழிந்து

கூதிர்ப் பள்ளிக் குறுங்க ணடைத்து (சிலப்.4:60-61)

என்பதில் அறிய முடிகிறது. இதில், இளவேனிற் காலத்திற்குரிய நிலா முற்றத்தே செல்வதை தவிர்த்து, கூதிர்க் காலத்துக்குரிய இடைநிலை மாடத்தே சென்று தங்கினர் என்ற செய்தி பெறப்படுகிறது. அதேபோல, தனக்குள்ள இடமெல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப்பெற்று, உயர்ந்த ஏழு நிலையினையிடைய மாடத்தினை,

                         இடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து’(முல்லை.86)

என்பதில் காணமுடிகிறது.

            மேலும், வானை அளக்கும் மாளிகையையும், அதில் உள்ள நிலா முற்றத்தில் பெண்கள் வரிப்பத்து விளையாடுவதையும், ‘வான்றோய் மாடத்து வரிப்பந் தசைஇ’(பெரும்பாண். 333) என்பதிலும், நகரில் மாடங்கள் மிக உயரமானதாகவும், மலைகளின் கூட்டத்தைப் போன்று நெருக்கமானதாகவும் அமைக்கப்பட்டிருந்ததை, ‘மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்ப’ (புறம். 390:7) என்பதிலும், உயர்ந்த, மணியைவிட அதிகமாக ஒளிவீசும் மாடத்தினை, ‘கதிர்விடு மணியிற் கண்பொரு மாடம்’(புறம். 53:2) என்பதிலும் காணமுடிகிறது. மணியைவிட அதிக பளபளப்புத் தன்மை கொண்ட மாடம் என்பதனால் தேர்ந்தெடுத்த கற்களைப் பளபளப்பாககி கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும்  நுட்பம் கைவரப்பெற்றிருந்தமை தெளிவாகிறது. இவை இன்றைய நிலையில் பயன்படுத்தப்படும் சலவைக் கல்லை ஒத்தவையாகலாம். கல்லைத் தேர்ந்தெடுக்கவும், அறுத்தெடுக்கவும், பளபளப்பாக்கவும் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் பழந்தமிழர் கொண்டிருந்தனர் என்பது இதன்வழி உய்த்துணரப்படுகிறது. 

ஆ. மாடங்கள்

            பண்டைத் தமிழர் இருப்பிடங்களில் மாடம் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. அக்கால மக்களின் வாழ்க்கை மேன்மையையும், நாகரிக வளர்ச்சியையும், தொழில்நுட்பத் திறனையும் மாடங்களின் கட்டுமான நுட்பம் அறிவிக்கிறது. குறிய படிகளை உடைய, நெடிய ஏணிகள் சார்த்தின, வளைந்த சுற்றுத் திண்ணைகளையும், பல கட்டுக்களையும், சிறிய வாயில்களையும், பெரிய வாயில்களையும், பெரிய இடைகழிகளையும் உடைய மேகம் படியும் மாடங்களும், அம்மாடங்களில் தென்றல் காற்று நுழையும் இடமாகிய சாளரமும் வைத்துக் கட்டப்பட்டிருந்த நுட்பத்தினை,

குறுந்தொடை நெடும்படிக்காற்

கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற்

புழைவாயிற் போகிடைகழி

மழைதோயு முயர்மாடத்து     (பட்டி.142-145)

என்ற அடிகள் காட்டுகின்றன. வேயாடமாடம் என்பது நிலாமுற்ற அமைப்பை விளக்கி நிற்கிறது. இது தற்காலத்தில், ‘மொட்டைமாடி’ என்று வழங்கப்படும் அமைப்பாகும். பெண்கள் பந்தாடுமிடமாகப் பரந்த அமைப்பைக் காட்டுகிறது. மாடத்தின் சுவர்களான மதில்கள் விளங்கின. அங்கு வள்ளிக் கூத்து நடைபெற்றது.  மாடத்தின் உயரந்த அமைப்பு நகரச் சிறப்பைப் பறை சாற்றுகிறது.

            அதேபோல, ‘வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇ’(பெரும்.333), ‘விண்பொர நிவந்த வேயா மாடத்து, இரவின் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி’ (பெரும்.348-49), ‘விண்தோய் மாடத்து விளங்குசுவர் உடுத்த, வாடா வள்ளி...’(பெரும்.369-70), ‘மலைக் கணத்தன்ன மாடம் சிலம்ப என, அரிக்குரல் தடாரி இரிய ஒற்றி’(புறம்.390), ‘மாடம் ஓங்கிய மணல்மலி மறுகு’(பெரும்.322), ‘இடஞ்சிறந்து உயரிய எழுநிலை மாடம்’(முல்லை.86), ‘மழையாடு மலையின் நிவந்த மாடம்’(மதுரை.355), ‘மலை புரை மாடம்’(மதுரை.406), ‘நிரைநிலை மாடம்’(மதுரை.451), ‘பிறங்குநிலை மாடம்’(பட்டின.285), ‘மலையென மழையென மாடம் ஓங்கி’(மலைபடு.484), என்பவற்றில், மலைபோன்று உயர்ந்த, இடத்தால் அகன்ற, வரிசைபட அமைக்கப்பட்ட, பலநிலைகளைக்கொண்ட  மாடங்களின் வகைககள் காட்டப்படுகின்றன.

            மேலும், புதுப்பிறை வடிவிலே மாடங்களுக்கு அழகு செய்யப்பட்ட கவின்திறனும்,  மாடத்திற்கு பனிக்கயம்போல ஓவியம் வரைந்து நிறமூட்டப்பெற்றதையும், அதன் தூண்களின் வேறுபட்ட அமைப்பையும், ‘புதுப்பிறையன்ன சுதை செய் மாடத்து, பனிக்கயத்தன்ன நீள்நகர்’  (புறம்.378), ‘சுதை மாடத்து அணிநிலாமுற்றம்’ ( கலி.96), ‘நெடுங்கால் மாடத்து ஒள் எரி’ (பட்டின.111), ‘கொடுங்கால் மாடத்து நெடுங்கடை’ (பட்டின.261) என்பவற்றில் அறியமுடிகிறது. அரண்மனை - மாடங்கள் எல்லாம் வெள்ளி போன்ற சுண்ணச் சாத்தினால் பூசப்பட்டிருந்தன. நீலமணி போன்ற கரிய திரண்ட தூண்கள் அங்கங்கே காணப்பட்டன. செம்பினால் செய்து அமைத்த நீண்ட உட்புறச் சுவரிலே அழகிய பல பூக்களைக் கொண்ட பூங்கொடிகள் எழுதப் பெற்றிருந்தன(நெடுநல்.72-114).

இ. நகர்

            நகர் என்னும் சொல் இருப்பிட வகையில் மிகவும் வளமான இருப்பிடத்தையும், நகரத்தையும் குறித்து நிற்கிறது. ‘முரசு முழங்கு நெடுநகர்’(பதி.12), ‘உருகெழு நெடுநகர்’ (பதி.88), ‘வரைகுயின்றன்ன வான்தோய் நெடுநகர்’(அகம்.93), ‘விண் பொரு நெடுநகர்’ (அகம்.167),  ‘நெல்லுடை நெடுநகர்’(அகம்.176; புறம்.287),  மலை புரை நெடுநகர்’ (அகம்.296),  ‘வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்’(அகம்.325), ‘பொன்னுடை நெடுநகர்’(அகம். 385),  ‘நெடுநகர் வரைப்பில் படுமுழா ஓர்க்கும்’ (புறம்.68), ‘ஓண்சுடர் நெடுநகர்’(புறம்.177), ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’ (பெரும்.405), ‘நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப்பள்ளி’(மதுரைக்.169), ‘கடியுடை வியல் நகர்’(நெடுநல்.49) ஆகிய குறிப்புகள் நெடுநகரான இல்லங்களின் அமைப்பையும், இயல்பையும் விளக்கி நிற்கின்றன.

            மேற்காட்டிய நெடுநகர், மலைத்தொடர் போல தொடர்பான அமைப்புடையது; வெண்மணல் பரவிய முற்றம் உடையது; செங்கல்லால் அமைக்கப்பட்ட இருப்பிடத்தையுடையது; உயர்ந்த அமைப்புடையது; மதிலாற் சூழப்பட்டது; அழகிய வாயிற்கதவுகளைக் கொண்டது; ஒண்சுடர் விளக்குகளால் ஒளி பொருந்தியது; நெற்குதிர்கள் நிறைய உடையது; உருவிலே சிறந்த கவின் பொருந்தியது; பலர் நிறைந்து வாழும் இயல்புடையது; பொன் கொழிக்கும் செல்வம் நிரம்பியது; முரசு முழங்கும் ஓசையுடையது; முழவு அதிரும் விழவுடையது. இவற்றிலிருந்து பழந்தமிழரின் வளவாழ்வையும், கட்டுமானத் தொழில்நுட்பத்தினையும்  அறியமுடிகிறது.

ஈ. பெருநகரின் கட்டமைப்பு

            பெருநகரின் கட்டுமான அமைப்பானது, பாதுகாப்பு, போக்குவரத்து, செய்தொழில் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. நகரின் உள்ளமைப்பு அரசன் இருக்கையை நடுவாகக் கொண்டு, அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பெருங் குடிமக்கள் வீதிகளும், போர் மறவர், கொல்லர், குயவர் முதலிய பல்வேறு தொழில் புரியும் மக்கள் வாழும் வீதிகளும் முறைமுறையாக அமைந்திருந்தது. இந்த அமைப்பு தாமரைப்பூவின் நடுவிலுள்ள கொட்டையை அடுத்து இதழ்கள் அமைந்திருப்பதைப் போல உள்ளது என்று மதுரை நகரையும், கச்சி நகரையும் புலவர் காட்டுவர்.

                              மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

                             பூவோடு புரையும் சீர்ஊர் பூவின்

                             இதழகத்து அனைய தெருவம் அண்ணல்கோயில்

                             தாதின் அணையர் தண்தமிழ்க் குடிகள் 

                              தாதுஉண் பறவை அனையர் பரிசில் வாழ்நர் ( பரி.8:1-6)

 

                   நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்

                   நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்

                   தாமரைப் பொகுட்டின் காண் வரைத்தோன்றி

                   ---------- ------------ --------- ----------

                   மலர்தலை உலகத்துள்ளும் பலர்தொடி

                   விழவு மேம்பட்ட படிவிறல் மூதூர் (பெரும்.402-411)

உ. சுகாதார வசதி

            கழிவுநீர் செல்லும் வழிகள் அமைந்த வீடுகள்

            சிறிய இல்லமாயினும் காற்றோட்ட வசதி உடையதாகவும், சுகாதார வசதிகளுடனும் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. இல்லங்களிலிருந்து கழிவு நீர் வெளியேற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இச்சாய்க்கடைகள் ‘சுருங்கை தூம்பு’ என்று வழங்கப்படுகின்றன. இல்லங்களில் சிந்தும் கழிவு நீரானது வெளியேறுமாறு கற்களால் மறைத்து அமைக்கப்பட்ட சுருங்கைத் தூம்பை, ‘சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர்’ (மணி.28:5) என்பதிலும், சுருங்கைத் தூம்பின் வழியே கழிவு நீர் வெளியேறியதை, ‘சுருங்கை வீதி மருங்கிற் போகி’ (சிலப்.14:65) என்பதிலும் அறியலாம்.

ஊ. பொது இருப்பிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள்

அரங்கு

            காப்பியங்களில் அரங்கு அமைப்பு பற்றிய தெளிவான கருத்தினைப் பெறமுடிகிறது. இசை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களாக இவ்வரங்குகள் காணப்படினும், அமைப்பிலும், தொழில்நுட்பத்திலும், சங்க இலக்கியம் சுட்டும் ‘பொதியில்’ மற்றும் ‘மன்றம்’ ஆகியவற்றிலிருந்து அரங்கு பெரிதும் வேறுபடுகிறது. இவ்வரங்குகள் கலை நிகழ்ச்சிகளின் அரங்கேற்றத்திற்காகவே அமைக்கப்பட்டனவாக திகழ்கின்றன. மேலும், இவை நிகழ்ச்சிகளுக்காக உடனுக்குடன் அமைக்கப்படும் ‘தற்காலிக இருப்பிடமாக’ (Temporary Auditorium) இருந்தமை தெரியவருகிறது. சிலப்பதிகாரம் அரங்கு அமைப்பு பற்றி விரிவாக மொழிகிறது. தேர்ந்த சிற்ப நூலாசிரியர் வகுத்த நெறியில் சிறிதும் பிறழாது அரங்கம் அமைத்தற்குப் பழுதற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து, பின் பொதியமலை முதலான புண்ணிய மலைச்சாரலில் ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையில் ஒரு சாண் இடைவெளியுடன் ஓங்கி வளர்ந்த மூங்கில்களை வெட்டிக் கொணர்ந்து, நூல் நெறிப்படி உத்தமனின் கைப்பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட அளவு இருக்குமாறு அம்மூங்கிலைத் துண்டு செய்தனர். அதனையே அரங்கம் அளக்கும் கோலாகக் கொண்டு, ஏழுகோல் அகலம், எட்டுக்கோல் நீளம், ஒருகோல் உயரமாக நடன அரங்கத்தை அமைத்தனர். இவ்வரங்கிற்கு இருவாயில்கள் இருந்தன.  தூண்களின் நிழல் அரங்கிலும் அவையிலும் விழாதபடி நிலை விளக்குகளை ஆங்காங்கே அமைத்தனர்.  உருவு திரையாக ஒரு முக எழினியையும், பொருமுக எழினியையும், கரந்து வரல் எழினியையும் வேலைப்பாடுடன் அமைத்தனர். ஓவியத்துடன் கூடிய மேல் விதானமும் அமைத்தனர். புகழ்மிக்க முத்து மாலைகளான சரியும், தூக்கும், தாமமும் என்னும் இவற்றை எங்கும் அழகுபடத் தொங்க விட்டனர்(சிலம்பு.3:95-112). இவ்வகைத் தொழில்நுட்பமும், புதுமையும் வாய்ந்தவையாக அரங்குகள் அமைகின்றன. இவ்வரங்குகள்  மன்றத்தின் வளர்நிலையாகவே காட்சியளிக்கின்றன. ‘சுடும ணேற்றி யரங்குசூழ் போகி’ (மணி.18:33) என மணிமேகலையும் அரங்கு பற்றி குறிப்பிடுகிறது. இதில் நிலையான அரங்கும், அதன்¢ பெரிய அமைப்பும் தெரியவருகிறது.

2.நீர்நிலைகள்

            நீர்நிலைகளே ஒரு நாட்டின் மூலதனம் என்பதைப் பழந்தமிழர் நன்கு அறிந்திருந்தனர். ‘நீரின்று அமையாது உலகு’(குறள்.20) என்பார் வள்ளுவர். நாடாலும் மன்னர்கள் நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று புலவர்களால் அறிவுறுத்தப்பட்டனர். ’உணவெனப் படுவது நிலத்தோடு நீரே’(புறம்.18:18-21என்றும், ‘நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’ (புறம்.18:22,23) என்றும் வலியுறுத்தப்பட்டன.

அ. பாசனத்திற்கான நீர் நிலைகள்

            அணைகள் / குளம்

ஓடிவரும் மழைநீரினைத் தேக்கிவைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த அறையும், பொறையும் அமைந்த பகுதிகளை இணைத்து, வளைந்த வடிவிலான அணைகள் கட்டப்பட்டன. இந்நுட்பத்தினை,

அறையும் பொறையு மணந்த தலைய

எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரை                         

தெள்நீர்ச் சிறுகுளம் ----------   (புறம்.118:1-3)

என்பதில் அறிய முடிகிறது. இதில், பாறைகளையும், சிறிய குவடுகளையும் இணைத்துக் கட்டப்பட்ட, எட்டாம் நாள் தோன்றும் பிறை நிலவைப் போன்று வளைந்த கரையையுடைய குளம் சுட்டப்படுகிறது. மேலும்,                                             

வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது

படமடைக் கொண்ட குறுந்தா ளுடும்பின் (புறம்.326)

என்பதில், நீர் வெளியேறும் வழிகளுடன் கூடிய அணைக்கட்டுப் பகுதியும், அணையில் காணப்பட்ட இடுக்குகளில் சிறுவர்கள் உடும்பு பிடித்த காட்சியும் விளக்கப்படுகிறது.

            புதவு மற்றும் மடுகு

            அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தேக்கி வைத்த நீர், புதவின் வழியே திறக்கப்பட்டு, கட்டப்பட்ட கால்வாய்களின் வழியாக வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனை,

ஓம்பா ஈகை மாவேள் எவ்வி

புனல் புதவின் மிழலையொடு கழனி (புறம்.24:18-19)

என்ற அடிகள் காட்டுகின்றன. நீர் வெளியேற்றும் வாயில்களில் பாசனத்திற்காக திறந்துவிட்ட நீரின் ஓசையை, ‘இழுமென வொலிக்கும் புனலம் புதவில்’(புறம்.176:5) என்கிறது.  அதேபோல, அணைகளிலிருந்து நீர் வெளியேற்றும் வாயிலில் பூம்பொய்கை அமைந்திருந்ததையும், புனல்வாயிலில் பாசனத்திற்கு நீர் வெளியேற்றப்பட்டதையும் (பதி.13:1-3; 27:9), குளம் முதலியவற்றில் நீர் புகும் வாயில் அமைக்கப்பட்டிருந்ததையும் (மலைபடு.449, அகம்.237:14) இலக்கியங்கள் காட்டுகின்றன. மேலும், நீர்த்தேக்கத்தில் இருந்து மிகுதியான நீர் புதவின் வழி பாசனத்திற்கு வெளியேற்றப்படும் கட்டுமான அமைப்பினையும்(அகம்.326:11), காட்டாற்றின் இடையே ஆங்காங்கே ஆழமான மடுக்கள் கட்டப்பட்டிருந்ததையு‹ (மலைபடு.213), அணைகளில் வழிந்தோட அமைக்கப்பட்ட போக்கு மடையினையும் (புறம்.24:19, புறம். 176:5), மதகில் நீர் நிறைந்திருந்ததால் எப்போதும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்ததையும், அதனைத் தாங்கும் வண்ணம் நீர்நிலைகளை வலுவுடன் அமைந்திருந்த நுட்பத்தினையும்(புறம்.376:19-20) காணமுடிகிறது.

ஆ. குடிநீர்த் தேவைக்கான நீர்நிலைகள்

       வேளாண்மை தவிர்த்த குடிநீர்த் தேவைகளுக்கான தனியான நீர்நிலைகளையும் பழந்தமிழர் அமைத்தனர். இவ்வகை நீர் நிலைகளிலிருந்து பெறப்படும் நீரினைத் தூய்மைப்படுத்தி பயன்படுத்தினர்.

            நீருண்துறை

     உண்துறை என்பதற்கு, ‘உண்ணும் நீர் கொள்ளும் நீர்த்துறை’ என்று பொருள் வழங்குகிறது சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(ப.332). இவ்வகை, உண்துறையை இலக்கியங்கள் பரவலாகக் காட்டுகின்றன. நீரின் பயன்பாடு கருதி, இயற்கை நீர்நிலைகளான அருவி போன்றவற்றிருந்து நீர் பெறும் தொழில்நுட்பத்தோடு இந்நீருண்துறைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தேவைக்கேற்ப நீர் பெறப்பட்டது. இத்துறையில் தௌ¢ளிய நீரினையும், பாசிபடர்ந்த நீரினையும், அருவியின் அடித்துவரப்படும் மலைபடுபொருள்களோடு கூடிய நீரினையும் காணமுடிகிறது. இந்நீருண்துறையால் குடிநீரின் தேவையை நிறைவு செய்தனர்.

            உண்டுறையில் நீர் பருக இறங்கிய மாதர் அஞ்சி ஓடும்மாறு, பொய்கையில் வாளைமீன் பாய்ந்ததையும்(நற்.310:1-4), மலையினின்றும் இறங்கும் அருவி குரங்கு தீண்டியதனால் விழுந்த பலாப்பழத்தினை உண்டுறையின்கண் கொண்டுவந்து சேர்த்ததையும்(குறு.90:3-5), காதலர் தொடுந்தோறும் நீங்கி, பிரியும் தோறும் பரவுதலால் பசலை ஊருண்கேணியின் உண்டுறையில் கூடிய பாசி போன்றுள்ளதையும்(குறு.399:1-3) புலவர் காட்சிப்படுத்துவர். மேலும், உண்துறையில் காவல்  தெய்வம் நிறுவப்பட்டிருந்ததையும் (ஐங்.28), துணைபுணர்ந்த கரிய தும்பி உண்துறையில் அலர்ந்த தாமரைப் பூவை நீர் சாய்க்க, அப்பூவிலிருத்தலை வெறுத்து வேறொரு பொய்கையைத் தனக்கு இருப்பாக ஆராய்ந்திருந்து பழைய பொய்கையை நினைத்து அலமரும் காட்சியும்(கலி.78:1-3), உண்துறையில் பாவையை வைத்து மகளிர் குவரையாடும் காட்சியும்(அகம்.269:18-20), ஆண்நண்டு, நாவல்மரம் உண்துறையில் உதிர்த்த கனியின் அழகு கெடக் கவர்ந்து சென்று, தாழைவேரின் கீழேயுள்ள தன்பெடை நண்டிற்குக் கொடுத்ததையும்(அகம்.380:4-6), உண்துறைக்கு மலையிடத்துப் பூத்த பூக்களைத் தலைநீர் கொண்டுவந்து ஒதுக்குதலையும்(புறம்.390:23,24) காணமுடிகிறது. மகளிர் உண்துறையில் விட்டுச் சென்ற மகரக்குழையினைத் தன் இரை என எடுத்த சிச்சிலிப் பற¬வையினையும்(பெரு.311-316), பகைவரது மனையிடத்திருந்து கொண்டுவரப்பட்ட மகளிர், உண்துறைசென்று நீராடி, அம்பலத்தை மெழுகி, அந்திக் காலத்தில் விளக்கு ஏற்றியதையும்(பட்.246-248) அறியமுடிகிறது.

3.பாதுகாப்பு அரண்கள்

            ‘பிறர் கொள்ளுதற்கு அரிய உயர்வு, அகழ முடியாத அகலம், அழிக்க இயலாத திண்மை, அணுகுவதற்கு இயலாத அருமை ஆகிய நான்கும் அமைந்ததே அரண் எனப்படும்; நாம் காக்க வேண்டிய இடம் சிறிதாக, நம்மைக் காக்கும் பேரிடத்தை உடையதாகவும், உறுபகையின் ஊக்கம் அழிப்பதாகவும் அமைவது அரண்; புறத்தாரால் கைப்பற்றுதற்கு அரியதாகவும், பலவகை உணவுகளைக் கொண்டதாகவும், புறத்தாரால் அழிவு நேருமிடத்தில் உதவும் நல்லாள் உடையதாகவும் இருப்பது அரண்; அரண் விட்டகலாது முற்றி நிற்பாரை வெல்வது அரண்; போர் முனையில் புறத்தார்கெட, அகத்தோர் வினை வீறு பெற்று  மாட்சியுறல் அரண்’ (குறள்.அதி.75) என அரண்களின் தன்மைகளைச் சுட்டுவார் வள்ளுவர். இவ்வகைச் சிறப்பும் அருமையும் வாய்க்கப்பெற்ற அரண்களை, பலவகைத் தொழில்நுட்பங்களுடன் அமைக்கும் வன்மையைப் பழந்தமிழர்ப் பெற்றிருந்தனர் என்பதை இலக்கியச் சான்றுகள் சுட்டுகின்றன.

அ. இஞ்சி

       இஞ்சு+இ=இஞ்சி என்றாயிற்று; இஞ்சுதல் எனில் இறுகுதல்; இஞ்சியது இஞ்சி; செம்பையுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டின மதில் இஞ்சி என்பர் (பழந்தமிழராட்சி. ப.58). இவ்வகை இஞ்சிகளைப் பாதுகாப்புக் கருதி உறுதியானதாகவும், மிக உயர்வானதாகவும், படைக்கருவிகளைப் பொருத்தும் வகையிலும் கட்டும் நுட்பத்தினைப் பழந்தமிழர்ப் பெற்றிருந்தனர்.

வான் தோய, அரைத்த மண்ணால் ஆக்கப்பட்ட இஞ்சி ‘அரை மண் இஞ்சி’ என்னும் வழக்குப்பெற்றது(புறம்.341:5; பதி.58:6;  மலை.92; அகம்.35:2). இஞ்சிகள் மண் பூசி அழகுபடுத்தப்பட்டதால், ‘மண்புணை இஞ்சி’(பதிற்.58:6), ‘புணைமாண் இஞ்சி’ (அகம்.195:3) எனக் குறிக்கப்பட்டன. உயர்வு, அகலம், திண்மை அருமை என்ற நான்கும் உடைய, மலையென மருளும் மாண்பால் கோடுறழ் இஞ்சி, வரைபோல் இஞ்சி எனவும் குறிக்கப்படுகின்றன(பதிற்.16:1; 62:10). வான்தோய உயர்ந்த இஞ்சியை,

திரை படக் குழிந்த கல் அகழ் கிடங்கின்

வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி  (மலைபடு.90-91)

என்ற அடிகள் சுட்டுகின்றன.   மேலும், நீர் நிறைந்த கிடங்கினைப் புறத்திலே பெற்ற இஞ்சிகள் பல இருந்தன(புறம்.350:1,2; பதிற்.62:10). அவை பகை நோக்க, பகை தாக்க ஏற்ற வளைந்த பார்வை நிலைகளைக்(கண்காணிப்புக் கோபுரங்கள்) கொண்டன (பதிற்.16:1). அஞ்சத்தகும் பெருங்கை வீரர்கள் அவ்விஞ்சிகளைக் காத்து நின்றனர்(பதிற்.62:11). பழந்தமிழகத்தில் செம்பினாலான இஞ்சிகள் ஓரிரு இடங்களில் சிறந்திருந்தன என்பதும் அரைமண் இஞ்சியும், சுடுமண் இஞ்சியும் பெருவழக்காய்ச் சிறப்புற்றிருந்தன என்பதும் புலப்படும்.

ஆ. செம்புப் புரிசை

            பழந்தமிழர் செம்பை உருக்கி ஊற்றி கோட்டை எழுப்பும் தொழில்நுட்பத்தைப் பெற்றிருந்தனர். இந்நுட்பம் அரண்களின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதாகவும், எதிரிபடைகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வன்மை பெறவும் கையாளப்பட்டதாகும். செம்பை உருக்குதற்கும், கட்டுமானத் தொழிலில் அவற்றைப் பயன்படுத்துதற்கும் பலவகையான நுட்பங்களையும், எந்திரங்களையும் பயன்படுத்தியிருத்தல் வேண்டும் என்பது தெளிவு. ‘செம்பு புனைந் தியற்றிய சேணெடும் புரிசை’(புறம்.201:9), ‘செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி’(அகம்.375;13) என்பனவற்றில் செம்பால் செய்யப்பட்ட கோட்டையையும்,

கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்

செம்புறழ் புரிசைச் செம்மல் மூதூர்       (புறம்.37:9-10)

என்பதில், செம்பை இடையிடையே இட்டு எழுப்பப்பட்ட கோட்டையையும் அறிய முடிகிறது.

இ. எந்திரம் பொருத்திய அரண்கள்

   உயர்ந்த மதில்களில் ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்களும், வெளியில் அறியமுடியாவண்ணம் பொருத்தப்பட்ட படைக்கருவிகளும், அவற்றை இயக்கும் எந்திரங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

----------------- பருந்துயிர்த்

திடைமதிற் சேக்கும் புரிசைப்

படைமயங் காரிடை நெடுந லூரே (புறம்.343:15-17)

என்பதில், பருந்துகள் தங்கி இருக்கும் உயர்ந்த மதிலை உடைய, படைக்கருவிகள் பொருத்தப்பட்ட அரண்களைக் காணமுடிகிறது. மேலும், திங்களும் நுழையாத உயர்ந்த, எந்திரப்பொறி பொருந்திய குறுகிய வாயிலையுடைய அரணையும்(புறம்.177:4-6), மூட்டுவாய் அமைந்த சிலம்பொடு அணியாகிய தழை தங்குகின்ற எந்திரம் பொருந்திய கட்டினை உடைய எயிலினையும்(பதி.53:5-7) இலக்கியங்கள் காட்டுகின்றன.

      மேலும், காவற்காடும், அகழியும், வளைந்து தானே எய்யும் விற்பொறிகளும், கருவிரலுடைய கருங்குரங்கு போன்ற பொறிகளும், கல்லினை வீசும் கவணும், மதிலைப் பற்றுவார் மீது சொரிவதற்காக எண்ணெய் கொதிக்கும் மிடாக்களும், செம்பினை உருக்கும் மிடாக்களும், இரும்பினைக் காய்ச்சி உருக்குதற்கு அமைத்த உலைகளும், கல் இடப் பெற்ற கூடைகளும், தூண்டில் வடிவாக அமைந்த கருவிகளும், கழுத்தை முறுக்கும் சங்கிலிகளும், ஆண் தலைப்புள் வடிவமாக அமைக்கப்பட்ட அடுப்புகளும், மதிலைப் பற்றி ஏறும்போது தள்ளுகிற கவறுபட்ட கொம்புகளும், கழுக்கோலும், அம்புக் கட்டுகளும், மறைந்து கொண்டு போரிடும் ஏவறைகளும் நெருங்கினார் தலையைத் திருகும் மரங்களும், மதிலின் உச்சியைப் பற்றுவார் கையைத் துளைத்துத் துன்புறத்தி அப்புறப்படுத்தும் ஊசிப் பொறிகளும், பகைவர் மீது பாய்ந்து தாக்கும் மீன்கொத்திப் பறவை போன்ற பொறிகளும்  மதிலில் ஏறியவரைக் கோட்டால் கிழித்தெறியும் பன்றிப் பொறிகளும், கதவிற்கு வலிமை சேருமாறு கதவின் குறுக்கே உட்பக்கத்தில் அமைக்கப்படும் கணையம் போன்ற பொறிகளும், களிற்றுப்பொறி, புலிப்பொறி முதலான பிறவும் மிகுதியாக நெருங்கிச் சிறப்புற்று விளங்கும் மதுரையின் கோட்டையை இளங்கோவடிகள் படம்பிடிப்பார் (சிலம்பு.15:201-219). இக்காட்சிப்படுத்தலில், பழந்தமிழரின் கட்டுமானத் தொழில்நுட்ப அறிவின் வளர்ச்சியினைக் காணமுடிகிறது.

4. பிற கட்டுமானங்கள்

          கலங்கரை விளக்கம்

            பழந்தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியரிடம் பல்வேறு வகையான நீர்ப்போக்குவரத்துக் கலன்கள் இருந்ததோடு, தனித் தனித் துறைமுகங்களும் இருந்தன. அத்துறைமுகங்களை அடையாளப்படுத்தும் கலங்கரை விளக்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கடலில் திசையறியாது செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்ட, கலங்களை அழைக்க (கலம்+கரையும்), இக்கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட்டன. இதற்கான கோபுரங்கள் உயரமாகவும், கடலலைகள், உப்புக்காற்று போன்றவற்றால் பாதிப்படையா தொழில்நுட்பத்துடனும் அமைக்கப்பட்டன.

            புகார்த் துறைமுகத்திற்கு அருகில், பூம்புகார் நகர் இதுதான் என்று உள்நாட்டு வெளிநாட்டுக் கப்பல்களை வரவேற்கும் முறையிலும், கப்பல்கள் வழிதறாமல் இருக்கவும் கலங்கரை விளக்கு உயர்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்ததை, ‘கங்குன் மாட்டிய கனைகதி ரொண் சுடர்’(நற்.219) என்பதில் காணமுடிகிறது. மேலும், சிலப்பதிகாரத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் கப்பல்களுக்கு வழிகாட்டும் பொருட்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெரிய கலங்கரை விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்ததை, ‘இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்’  என்று காட்டுகிறார் இளங்கோ. விண்முட்ட உயர்ந்து ஒளிரும் விளக்குகள் இரவில் பெரிய வெளிச்சம் வீசிக் கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டி வந்தன. அவை ஏணியின் உதவியாலும் ஏறமுடியாதவாறு உயர்ந்து நின்றன. இதனை,

வான மூன்றிய மதலை போல

வேணி சாத்திய வேற்றருஞ் சென்னி

விண் பெற நிவந்த வேயா மாடத்

திரவின் மாட்டிய விலங்கு சுடர் நெகிழி

உரவு நீ ரழுவத்தோடு கலங்கரையும்(பெரும்பா. 346-350)

என்ற அடிகள் குறிப்பிடுகின்றன.

5. கட்டுமானப் பொருள்கள்

கட்டடங்களின் உறுதிப்பாட்டிற்கும், நிலைப்புத்தன்மைக்கும் தொலைநோக்கோடு சிந்தித்து, அதற்கான கட்டுமானப் பொருள்களை இயற்கையாகப் பெற்றும், செயற்கை முறையில் உண்டாக்கியும் பயன்படுத்தினர். இயற்கையில், திணைசார் பொருள்களைக் கொண்டு (மூங்கில், கருப்பந்தட்டை, வௌ¢ளிய மரக்கொம்பு, நாணற்புல், தாழை, தென்னங்கீற்று, பனைஓலை, ஈந்தின் இலை, தினை மற்றும் வரகின் தாள்) உருவாக்கப்பட்ட குடியிருப்புகளைத் தவிர்த்து, தொழில்நுட்பத்தால் செயற்கையாக உண்டாக்கிய கட்டுமானப் பொருள்கள் என்பதில், அரைமண்,   சுடுமண் (செங்கல், ஓடு), செம்புக் கூழ், அறுத்து எடுக்கப்பட்ட கருங்கல், பளிங்குக் கல், பூச்சு மண், பொன் தகடு, பவளம் போன்றவை சிறப்பிடம் பெறுகின்றன.

அ. அரைமண்

மண்ணை அரைத்து, அதனைக்கொண்டு வலுவானதாக உருவாக்கப்பட்ட கோட்டையை, ‘அரைமண் இஞ்சி’ என்று பழந்தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.

அரைம ணிஞ்சி நாட்கொடி நுடங்கும்(புறம். 341:5)

என்பதில் அரைத்த மண்ணால்(சிமெண்ட்) கட்டப்பட்ட கோட்டையில் கொடி பறந்துகொண்டிருந்ததை அறிய முடிகிறது. மேலும், அரைத்த மண்ணால் இஞ்சி – மதில் அமைக்கப்பட்டதை பதிற்றுப்பத்து (58:60: 68:16) காட்டுகிறது.

ஆ. பூச்சுமண் மற்றும் சுண்ணம்

            கட்டடங்களின் உறுதிப்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட அரைமண் போலல்லாது, சுவர்களின் வெளிப்புறம் பூசி அழகுபடுத்தற்கும் மண் பயன்படுத்தப்பட்டது. இம்மண் குழம்பாக்கப்பட்டு கட்டடங்களின் மேற்பூச்சாகப் பூசப்பட்டது. இஞ்சிகள் இவ்வகைப் பூச்சு மண்ணால் அழகுபடுத்தப்பட்டதால், ‘மண்புணை இஞ்சி’, ‘புணைமாண் இஞ்சி’ எனக் குறிக்கப்பட்டன. இதனை, ‘மண்புனை இஞ்சி மதில்கடந்தல்லது’(பதிற்.58:7) என்பதிலும், ‘புனைமாண் இஞ்சி பூவல் பூட்டி’(அகம்.195:3) என்பதிலும் அறிய முடிகிறது. உடன்போக்கு சென்ற தன் மகள் தலைவனுடன் திரும்பி வருவாள்என்று தாய் அழகுடைய இஞ்சி (புறச்சுவர்) மீது செம்மண் பூசி மனையை அழகு செய்ததைக் காணமுடிகிறது (அகம்.195:1-5). மேலும், சுவற்றிற்கு பூச்சாக வெள்ளிய சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டது. இதனை ‘வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ’ (நெடுநல்.108) என்பதில் காணலாம்.

இ. இட்டிகை/செங்கல்

            செங்கற்களை வடிவமைத்து அதனைக் கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தும்  நுட்பத்தினையும் பழந்தமிழர் அறிந்திருந்தனர். ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’ (பெரும்பாண்.405) மற்றும் ‘நெடுமண் இஞ்சி நீள் நகர் வரைப்பு’(பதிற்.68:16); என்பதில்  செங்கல் மதிலால் ஆன எல்லை, வரைப்பு எனப்பட்டது தெரியவருகிறது. அதேபோல, சுட்ட செங்கல்லால் இல்லங்களின் நெடிய சுவர் எழுப்பப்பட்டதை, ‘இட்டிகை நெடுஞ்சுவர்’ (அகம்.167;13) என்பதில் காணலாம்.  சுடுமண்ணால் செய்யப்பட்டு, உயர்ந்த, புறப்படை வீட்டை சூழ்ந்த மதிலினையுடைய மூதூரையும் இலக்கியங்கள் சுட்டுகின்றன(பெரும்.405, 411). செங்கல் சுடுமண், இட்டிகை என வழங்கப்பட்டமை தெரியவருகிறது.

ஈ. ஓடுகள் மற்றும் உலோகத் தகடுகள்

            மனையின் சுவர்கள் சுட்ட செங்கற்களால் அமைக்கப்பட்டதுபோல, மேற்கூரை சுட்ட ஓடுகளால் உறுதியாக அமைக்கப்பட்டன. இவ்விரு பொருள்களின் உற்பத்திக்கும் வேறுவேறு தொழில்நுட்பத்தினைக் கையாண்டுள்ளனர் என்பது தெளிவு. ஓடுகளால் வேயப்பட்ட நெடிய நிலையையுடைய மனையை, ‘சுடும ணோங்கிய நெடுநிலை மனை’(மணி. 3:127) என்பதில் காணலாம்.  அதே வேளையில், பொருளாதாரத்தில் வளம் பெற்ற இல்லங்கள் சுட்ட மண்ணால் வேயப்படாது பொன்தகடுகளால் வேயப்பட்டிருந்தன. இதனை,

சுடும ணேறா வடுநீங்கு சிறப்பின்

முடியரசு ஒடுங்கும் கடிமனை   (சிலப்.14:146-7)

என்பதில் அறியமுடிகிறது. சுடும ணேறா என்பதற்கு உலோகத் தகடுகளாலான மேற்கூரை என்று விளக்கமளிக்கப்படுகிறது.

உ. கருங்கல்

            கருங்கல்லை சமச்சீரான வடிவில் அறுத்தெடுத்து, அவற்றைக் கொண்டு கிணறுகளின் சுற்றுச்சுவற்றை எழுப்பி, இயற்கை அழிவினின்று காக்க பயன்படுத்தினர். இந்நுட்பத்தினை, ‘கல்லுறுத் தியற்றிய வல்லுவர்க் கூவல்’ (புறம்.331:1) என்றும், ‘கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்’(அகம்.79:4) என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

ஊ. பளிங்குக் கற்கள்

     பளிங்குக் கற்களைக் கண்டறிந்து அறுத்தெடுத்து, அவற்றைப் பயன்படுத்தி மாளிகைகள், மண்டபங்கள் எழுப்பப்பட்டன. ‘மை இல் பளிங்கின் அன்ன’(அகம்.399:14) என்ற அடி பளிங்கை உவமையாக்குகிறது. பளிங்கு மண்டபம் கட்டப்பட்டிருந்ததும், அம்மண்டபத்தின் உள்ளிருப்போர் வெளியிருப்போருக்குத் தெரிந்தும், உள் நுழையும் வாயில் எதுவென அறிய முடியாத தொழில்நுட்பத்துடன் கூடிய, கட்டட வடிவமைப்பு நுட்பத்தினை, ‘பளிக்கரை மண்டபம்  பாவையைப் புகுகென’ (மணி.4:87) என்பதிலும், ‘தாழொளி மண்டபந் தன்கையிற் றடைஇ’(மணி.5:9) என்பதிலும் அறியமுடிகிறுது.

            இவையல்லாமல், பவளத்தாலான தூணையும், பொன்னாலான சுவரையும்,  சித்திரங்கள் தீட்டப்பட்டதுமான மேற்கூரையையும் உடைய,  ஒளி வீசும் பளிங்கு மண்டபத்தை,

பவழத் தூணத்துப் பசும்பொற் செஞ்சுவர்த்

திகழொளி நித்திலச் சித்திர விதானத்து

விளங்கொளி பரந்த பளிங்குசெய் மண்டபத்து (மணி.18:45-47)

என்ற அடிகள் சுட்டுகின்றன.

 முடிவு

            இயற்கையாக அமையப்பெற்ற மலைக்குகைகள் மற்றும் மரப்பொந்துகளில் மனிதன் ஒளிந்து வாழ்ந்த நிலையிலிருந்து, செயற்கையாக, குடியிருப்பு வசதியினை ஏற்படுத்திக்கொள்ள முனையும் நிலையில் அவனின் கட்டுமானத் தொழில்நுட்ப அறிவு  வெளிப்பட்டு நிற்கிறது. அவ்வாறு, இருப்பிட வசதியை ஏற்படுத்திக்கொள்ளும்போது, மண்ணின் தன்மை, சுற்றுச்சூழல், கூட்டமாக வாழ்வதற்கான வாய்ப்புகள், இருப்பிடங்களை ஒட்டியுள்ள தொழில்சார்ந்த நிலங்களின் தன்மை, இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாப்பு போன்ற பலவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வகையான முன்யோசனை  நிறைந்த, திட்டமிடுதலுக்குப் பின்னரே பழந்தமிழகத்தில் சிற்றூர்களும், பேரூர்களும் தோன்றியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இவ்வகையான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதிலும், கட்டடக்கலையில் தொழில் நுட்பங்களைக் கையாளுவதிலும் கைதேர்ந்தவர்களாகப் பழந்தமிழர் விளங்கியுள்ளனர் என்பதை மேற்கண்ட பழந்தமிழ் நூல்கள் காட்டும் சான்றுகள் வழி அறியமுடிகிறது.

            பழந்தமிழ்ச் சிற்றூர்ப் பகுதிகளில் காணப்பட்ட இல்லங்களுக்கும் நகரில் வீதிகளினூடே அமைக்கப்பட்ட இல்லங்களுக்கும் வேறுபாடுகள் மிகுந்துள்ளதைக் காணமுடிகிறது. சிற்றூர்ப் பகுதிகளில் திணை சார் பொருள்களால் உருவாக்கப்பட்ட இல்லங்கள் மிகுந்துள்ளன. இவை உறையுளின் தேவையை நிறைவு செய்தனவேயன்றி தொழில்நுட்பச் சிறப்பு வாய்ந்தவை அல்ல. அதேவேளை, நகர இல்லங்கள் கட்டடக்கலையின் உச்சமாகவும், நாகரிகத்தின் வெளிப்பாடாகவும், ஆடம்பரத்தின் ஆணிவேராகவும் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. அதேபோல,  பலவகைப்பட்ட நீர் நிலைகளின் உருவாக்கத்திலும், பல்வேறு நுட்பங்களுடன் கூடிய பாதுகாப்பு அரண்களின் அமைப்பிலும் கலங்கரை விளக்கம் போன்றவற்றாலும் பழந்தமிழரின் கட்டுமான நுட்பத்தினை அறியமுடிகிறது.

            கட்டுமானத்தின் உறுதிக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்ப, பலவகைக் கட்டுமானப் பொருள்களை பயன்படுத்தப்பட்டதும் மேற்கண்ட சான்றுகள் வழி அறியமுடிகிறது.

 *****

இணையத் தமிழும் எதிர்காலவியலும்

 ஆ. மணவழகன், விரிவுரையாளர், எஸ்.ஆர்.எம். கலை-அறிவியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603 203.

(பன்னாட்டுக் கருத்தரங்கம், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி, சென்னை, ஆக.19,20, 2006)

             எதிர்காலவியல் என்பதற்கு ‘எதிர்காலத்தைப் பற்றிக் கணித்துரைப்பது’ என்றும்,  எதிர்காலவியல் என்ற கலைச் சொல்லுக்கு ‘முன்னறிதலுக்கான புதிய அறிவியல்’ (தமிழ் இலக்கியத்தில் எதிர்காலவியல், அணிந்துரை) என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும்,  ‘மனிதன் சென்ற காலத்தில் கிடைத்த பட்டறிவால் நிகழ்காலத்தை எண்ணி நாளைய எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்று சிந்தித்தல் எதிர்காலவியல்’ (தமிழ் இலக்கியத்தில் எதிர்காலவியல், ப.iv) என்றும், ‘இன்றைய செயற்பாடுகளின் நாளைய விளைவுகளைக் கணித்துரைப்பது; நாளைய எதிர்பார்ப்பிற்கேற்ப இன்றைய செயல்களைத் திட்டமிடுவது எதிர்காலவியல்’ (தமிழ் இலக்கியத்தில் எதிர்காலவியல், ப.4) என்றும் இதனை விளக்குவர். இவ்வடிப்படையில், அறிவியல் அடிப்படையிலான மனிதகுல வளர்ச்சியின் மைல் கல்லாக விளங்கும் கணினியியல் துறையில், உலகையே இணைக்கும் உயர் வரவான இணையத்தில் தமிழின் இன்றைய நிலை குறித்தும், எதிர்காலவியல் குறித்தும் இக்கட்டுரை பேசுகிறது.

கணினித் தமிழ்

            ஒவ்வொரு காலகட்டத்திலும்  ஒவ்வொரு ஊடகத்தின்/பொருண்மையின்  வழி, தமிழ் தன் பயணத்தை இனிதே மேற்கொண்டுவந்துள்ளது. தமிழின் ‘பொற்காலம்’ என்று போற்றப்படக்கூடிய சங்ககாலம் தவிர்த்த ஏனைய எக்காலத்திற்கும் இத்தன்மை பொருந்துவதாகும். தர்க்கத்தின் தோளேறியும், சமயத்தின் தோளேறியும் காலத்தைப் புறந்தள்ளி வந்துள்ளது தமிழ். அவ்வகையில், நடப்பு நூற்றாண்டோ, ‘நாளும் இன்னிசையால் நல்ல தமிழ் வளர்ப்போம்’ என்ற நிலையை மாற்றி, ‘நாளும் இணையத்தால் இனிதே தமிழ் வளர்ப்போம்’ என்ற நிலையை அடைந்துள்ளது எனலாம்.

ஒரு சமூகத்தின் பண்பாட்டு மேன்மையை, நாகரிக வளர்ச்சியைக் காட்டுவது அச்சமூகத்தின் மொழி என்றால், அம்மொழியின் பண்பாட்டை, நாகரிகத்தைக் காட்டுவது, அதன் மரபுக்கட்டும், புதுமையை ஏற்கும் நெகிழ்வுமாகும். இத்தகைய தன்மைகளே தமிழை இன்று நவீன ஊடகத்தின் மொழியாக உயர்த்தியுள்ளது.  ஊடகம் என்பதைக் கணினி என்று கொண்டால், இன்று தமிழின் பயணம்  இணையத்தில் எனலாம்.

            ஊரகத்தே உலாவி வந்த தமிழ் இன்று தகவல் நெடுஞ்சாலையில் பயணித்து உலகமெலாம் பரவி வருகிறது. ‘வேறு எந்த இந்திய மொழியையும்விட தமிழ் கணினியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது’(மின்-தமிழ், ப.63). ‘நம் இன்தமிழ் மின்-தமிழாக மாற வேண்டியது காலக் கட்டாயம். ஏற்றுக்கொள்ள வேண்டியதும் ஏற்படுத்த வேண்டியதும் நம் கடன்’ (மின்-தமிழ், ப.62) என்ற கருத்து இன்று ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவே உள்ளது.

இணையத் தமிழ்

            இணையம் என்பதற்கு ‘கணினிகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது (பால்ஸ் தமிழ் மின் அகராதி).  தகவல்தொடர்புப் புரட்சியின் தொடக்கம் கணினி, தொடர்வது இணையம் ஆகும். ‘1969இல் தோன்றிய தகவல் தொடர்புப் புரட்சியால் (Information Revolution) உலகம் தகவல் சமுதாயமாக (Information Society) மாற கால் நூற்றாண்டே போதுமானதாகிவிட்டது. இதனால் உலகின் எல்லாப் பகுதிகளோடும் உடனடித் தொடர்பு கொள்ள முடிகிறது. (மின்-தமிழ், ப.68). (1969ஆம் ஆண்டு இணையம் தோன்றிய ஆண்டாக அறியப்படுகிறது). இன்று உலகையே சிறு கிராமமாக்கி தகவல் பரிமாற்றத்தில் பெரும் புரட்சிக்கு வித்திட்டுள்ளது இணையம் (Internet).

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும் 

என்ற பாரதியின் மொழிக்கேற்ப, உலகெங்கும் வாழும் தமிழர்களால், தமிழ் இணையத்தில் பயணித்து, உலகத்தமிழர் இதயங்களை இணைக்கிறது. இவ்வகையில், ‘இணையத்தில் இணைந்த தமிழ் இதயங்கள் பல. பற்பல தகவல் தளங்களை(Websits) தரணிக்குத் தந்து, தமிழ் கூறு நல்லுலகினை வேறு நாட்டவரும் வணக்கம் செய்யும் வகை செய்துள்ளனர்’ (மின் தமிழ், ப.60,61) என்பதை அறிகிறோம்.     

            ‘இணையத்தில் நுழைந்த முதல் இந்திய மொழி என்ற பெருமை தமிழுக்கு உண்டு.  தமிழ் 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இணையத்தில் ஏறியதாக அறியப்படுகிறது (இன்டெர்நெட் உலகில் தமிழ் தமிழன் தமிழ்நாடு, ப.8). மேலை நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் பலரிடம் கணினி வசதியுடன் தமிழார்வமும் ஒன்றுசேர, அவர்கள் தன்னார்வமாகப் பல முயற்சிகள் செய்து இணையத்தில் தமிழ் விரிவாக, விரைவாகப் பரவ வகை செய்து வருகின்றனர். 

            ‘இணையத்தில் தமிழை வெளிநாட்டுத் தமிழர்கள் முதலில் பயன்படுத்தத் தொடங்கினர். முதல் கட்டத்தில் தாங்கள் கண்டுபிடித்த தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பித் தங்களுக்குள் உறவை வளர்த்து வந்தனர். 1992-93 ஆம் ஆண்டுகளில் எஸ்.சி. தமிழ் இலக்கிய மன்றம், ‘அ’ என்று ஒரு தமிழ் இலக்கிய மின்னிதழை நடத்தியது. (ஆசிரியர் குழுவில் இருந்தவர்கள்: அருள் சுரேஷ், வைத்தியநாதன் ரமேஷ், எம்.சுந்தரமூர்த்தி, சுந்தரபாண்டியன், விக்னேஸ்வரன்). இதுதான் முதல் தமிழ் மின்னிதழாக இருக்கவேண்டும் என்றும் (தமிழில் இணைய இதழ்கள், ப.23), இணையத்தில் முதல் மின் இதழ் எனும் பெயர் பெற்றது ‘தேனி’ (www.tamil.net/theni) என்றும்(மின்-தமிழ், ப.68), இரண்டு விதமாக அறியப்படுகிறது. தொடக்கம் எதுவாக இருப்பினும், இன்று இதன் சிறப்பான வளர்ச்சியினைக் காண முடிகிறது. 2003ஆம் ஆண்டிற்கு முன்பாகவே ஏறக்குறைய பதினேழு லட்சத்துக்கும் அதிகமான இணையப் பக்கங்கள் தமிழுக்கு  இருப்பதாக ‘தமிழ் இணைய மாநாட்டு அறிக்கை’ (திசம்பர் 2003, சென்னை) குறிப்பிடுவது இங்குச் சுட்டத்தக்கது. உலக மொழிகளில் ஆங்கிலத்திற்கு அடுத்து தமிழில்தான் அதிக இணையப் பக்கங்கள் உள்ளன. இதில் வலைப் பதிவுகள் எனப்படும் தனியார் பக்கங்களின் எண்ணிக்கையே அதிகம்.

            தமிழகத்தில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்த கடந்த 1997ஆம் ஆண்டு தனிக்கொள்கை உருவாக்கப்பட்டது. இதன்வழி, ‘தமிழ் இணையம்’(Tamil Internet) மாநாடு நடத்தப்பட்டு, தமிழில் மென்பொருள் வளர்ச்சி ஏற்பட விசைப்பலகை வடிவமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தப்பட்டு கணினி-தமிழ் பயன்பாட்டில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டும், ஆராய்ச்சியின் முடிவுகள் விளக்கப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இணையப் பக்கங்கள்

            தமிழில் உள்ள வலைத்தளங்களை, இணைய இதழ்கள்(e-magazine or e-zine), இணையப் பக்கங்கள் (web site ), வலைப் பதிவுகள்/தனியார் இணையப் பதிவுகள்(blogs ) என வகைப்படுத்தலாம்.

            பொதுவாக இணைய இதழ்களை,

(i)         தினச் செய்திகளுக்கானவை

(ii)        செய்திகளோடு  பிறவற்றையும் வெளியிடுபவை

(iii)       இலக்கிய இதழ்கள்

அ.  ஏதாவது ஒரு படைப்பிலக்கியத்தைக் களமாகக் கொண்டவை

ஆ.   ஒன்றிற்கு மேற்பட்ட படைப்பிலக்கியத்தைக் களமாகக் கொண்டவை.

இ.    முழுமையான இலக்கிய இதழாக இயங்குபவை 

        (இலக்கியம், அரசியல், சமூகம், திரைப்படம்,..)    

(iv)   அறிவியல் இதழ்கள் (மருத்துவம், கணினி என  துறைசார் இதழ்கள்)

என்ற பகுப்பிற்குள் கொண்டுவரலாம். மேலும், இவற்றை, அச்சு வடிவத்தை ஏற்றம் செய்பவை/அச்சு இணையம் இரண்டிலும் இயங்குபவை (தினமணி, தினத்தந்தி, தினகரன் போன்ற செய்தி இதழ்கள், விகடன், குமுதம் போன்ற வார இதழ்கள்), நேரடியாக இணையத்தில் இயங்குபவை (திண்ணை, திசைகள், வார்ப்பு, பதிவுகள்,...) என்றும்  பகுத்துக் காணலாம்.

            இவையல்லாமல், இணைய குழுக்களும் (web groups), தமிழ் மின் நூலகங்களும் (e-library), எண்ணிலடங்கா ‘தனியார் வலைப்பதிவுகளும்’  இணையத் தமிழ் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கவையாகச் செயல்படுகின்றன.

தமிழ் இணைய இதழ்கள் (e-zines)

            அச்சு வடிவத்திலிருந்து இணைய இதழாக மாறியவற்றைத் தவிர்த்து, இணையத்தில் நேரடியாக தொடங்கப்பட்ட  தமிழ் இணைய இதழ்கள் பல. தற்போது பயன்பாட்டில் உள்ள மின் இதழ்களில் ‘தமிழில் முதல் மின் இதழ்’ என்ற அறிமுகத்தோடு வெளிவருவது ‘தினபூமி.காம்’ ஆகும். இவ்விதழ் தினச் செய்திகளுக்கான இதழாக விளங்குகிறது. இதற்கு அடுத்து 1.5.1996இல் தமிழ்சினிமா.காம் என்ற இதழ் இணையம் ஏறியது. ஆனால், www.tamilcinema.com என்ற உலகின் முதல் தமிழ் இணைய பத்திரிகையை முதன்முதலில் துவக்கியவர் மா.ஆண்டோ பீட்டர்’ (மல்டிமீடியா வேலைவாய்ப்புச் செய்திகள், மே.-ஜூன் 2006, ப.4) என தமிழ் சினிமா.காமே முதலில் வலையேறியது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு தொடங்கிய இணைய இதழ்களின் வலை ஏற்றம்,  ஏறக்குறைய பத்தாண்டுகளில் 125க்கும் மேலாக அதிகரித்துள்ளதை அறியமுடிகிறது. இவற்றில், வணிகநோக்கிலான இதழ்களும் வணிகநோக்கில்லாத இதழ்களும் அடங்கும்.

வணிக நோக்கிலான இணைய இதழ்கள்

            சிஃபி (sify.com) நிறுவனத்தின் தமிழ் வலையகம் :http:tamil.sify.com. அதே நிறுவனம் நடத்தும், தினசரிகளிலிருந்து செய்திகளைச் சேகரித்து www.samachar.com/tamil/index.php. என்ற பக்கத்தில் வழங்குகிறது. இதேபோல தெட்ஸ்தமிழ் (http://thatstamil.oneindia.in), ஆறாம் திணை (www.aaraamthinai.com), வெப் உலகம் (www. webulagam.com) போன்றவையும் வணிக நோக்கில் இயங்குகின்றன.

வணிக நோக்கில்லாத இணைய இதழ்கள்

            வணிக நோக்கில்லாத இணைய இதழ்கள் என்பவற்றில், ‘திண்ணை’ (www.thinnai.com), ‘திசைகள்’ (www.thisaigal.com), ‘வார்ப்பு’ (www. vaarppu.com), ‘தமிழோவியம்’ (www.tamiloviam.com), ‘பதிவுகள்’ (www.pathivukal.com), ‘நிலாச்சாரல்’ (www.nilacharal.com), ‘தமிழருவி’ (www.tamilaruvi.com), ‘கீற்று’ (www.keetru.com), ‘இன்தாம்’ (இணைய இதழ்களின் குழுமம்), ‘தமிழ்மணம்’ (www.tamilmanam.com), ‘தமிழ்க்குடில்’ (www.thamizhkudil.com), ‘வெப்தமிழன்’ (www.webtamilan.com), ‘மரத்தடி’ (www.maraththati.com), ‘அந்திமழை’ (www.andhimazhai.com), ‘எழில்நிலா’ (www.ezhilnila.com) ‘தமிழமுதம்’ (www.thamizhamutham.com), ‘சாளரம்’ (www.saalaram.com)  போன்றவை செயலாற்றி வருகின்றன. இவை, இலக்கியம், அரசியல், சமூகம், சினிமா என பலவற்றையும் பேசுகின்றன. இவற்றுள், வார்ப்பு என்ற இதழ் கவிதை இலக்கியத்தை மட்டுமே களமாகக் கொண்டு இயங்குகிறது.

             ‘கீற்று’ இணைய இதழும், சிஃபி தமிழ்ப் பகுதியும் (tamilsify.com)அச்சு வடிவில் வெளியாகும் சிற்றிதழ்கள் பலவற்றை வெளியிட்டும் ஆவணப்படுத்தியும் வருகின்றன. சிஃபி.காமில், காலச்சுவடு, உயிர்மை, அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி, தலித், பெண்ணே நீ ஆகிய இதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. கீற்று இணைய இதழில், தலித் முரசு, புதிய காற்று, புது விசை, கூட்டாஞ்சோறு, அநிச்சம், புரட்சி பெரியார் முழக்கம், விழிப்புணர்வு, தாகம், தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல் ஆகியவை கிடைக்கின்றன. கீற்று இணைய இதழ், யுனிகோட் எழுத்துருவில் அமைந்திருப்பதால் தேடுபொறியிலும் இவ்விதழ்களைத் தேடிப் பெறும் வாய்ப்பினைப் பெற்றுள்ளன.  மற்ற பகுதிகளுக்கு இவ்வாய்ப்பு இல்லை. தேடுபொறிகளில் அவை அகப்படா. அதேவேளை, இயங்கு தளம் 2000க்கு  பிறகே யுனிகோட் எழுத்துரு பயனிக்கிறது என்பதும் இங்குச் சுட்டத்தக்கது.

இவற்றில் வார   இதழ்கள், மாத இதழ்கள், இருமாத இதழ்கள், எப்போதாவது வலையேற்றம் பெறும் இதழ்கள் என்ற பகுப்பும் உண்டு. ‘சாளரம்’ அண்மையில் தமிழ்ப் பேராசிரியர்களை ஆசிரியக் குழுவாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள முழுமையான இணைய இதழாகும். இப்போக்கு இணைய இதழின் தரத்தை உயர்த்த வழிவகுப்பதாக அமையும் எனலாம். இவற்றில் கவிதைகளுக்காக மட்டும் (வார்ப்பு), கவிதை சிறுகதைக்காக மட்டும் இயங்கும் இதழ்களும் அடங்கும். சோதனை  முயற்சியாக, சில பக்கங்கள் நாவல்களையும் (பா.ராகவன்- அலகிலா விளையாட்டு) வெளியிட்டன. இப்போக்கு,  தமிழ் இணைய பக்கங்களின் படிநிலை வளர்ச்சியினையும், பன்முக நீட்சியினையும் காட்டுவதாக அமைகிறது. குமுதம் குழுமத்தின் ஒரு பகுதியான தீராநதி சிற்றிதழ், இணைய இதழாகத் தொடங்கப்பட்டு, பிறகு அச்சு வடிவத்தையும் பெற்ற இதழாக விளங்குகிறது.

            மின் நூலகங்களில் குறிப்பிடத்தக்கவை மதுரை மின் திட்டம்(Project madurai) மற்றும் தமிழ் இணையப்  பல்கலைக்கழகத்தின்  நூலகமாகும். முனைவர் க. கல்யாணசுந்தரம் சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் ஒரு வேதியியல் அறிஞர். ‘மதுரைத் திட்டம்’ என்ற பெயரில் 1998ஆம் ஆண்டு தைப்பொங்கல் அன்று இணைய பக்கத்தினைத் தொடங்கினார். இதுவரை 200 க்கும் மேற்பட்ட நூல்கள் வலை ஏற்றப்பட்டுவிட்டன. இவற்றில் பழந்தமிழ் நூல்கள் முதல்  இக்கால இலக்கியங்கள் வரை அடங்கும்.

தனியர் பக்கங்கள் (blogs)

            இணைய வலைத்தளங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படுபவை தனியர் பக்கங்களே ஆகும். பெரும்பாலும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தங்களைப் பற்றிய செய்திகளையும் தங்கள் படைப்புகளையும் வலையேற்றம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  இவ்வகைப் பக்கங்களில் தங்களைப் பற்றிய குறிப்பேட்டினோடு, பெரும்பாலும் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சிலர், பல இணைய பக்கங்களில் தாங்கள் எழுதி, வெளிவந்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றைத் தொகுத்து, தங்களுக்கென்று தனி பக்கத்தினை உருவாக்கியுள்ளனர்(ஹரிமொழி.காம், அன்புடன் இதயம்.காம், கவிமலர்.காம், தமிழம்.காம்,..). ‘கவிமலர்’ என்பது முழுமையாக ஹைக்கூ கவிதைகளுக்கான தனியார் பக்கமாக (இரா.இரவி) அறியப்படுகிறது. அதேபோல, கனடா நாட்டில் வாழும் தமிழ்க் கவிஞர் புகாரி ‘அன்புடன் இதயம்’ என்ற தம் இணைய பக்கத்தில், தம் கவிதைத் தொகுப்புகளை வலையேற்றம் செய்திருப்பதோடு, புதிதாக தாம் எழுதும் கவிதைகளையும் வலையேற்றி வருகிறார். இவ்வாறு தாம் இணையத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, நூலாகவும் வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல, கவிஞர் சேவியர் இணையத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, ‘சேவியர் கவிதைகள்’ என்ற பெயரில் ‘உலகத் திருக்குறள் மையம்’ வெளியிட்டுள்ளதும் இங்குச் சுட்டத்தக்கதாகும். அதேபோல, பொள்ளாச்சி நசன் அவர்கள், தமிழம்.காம்  என்ற தம் இணைய பக்கத்தைத் தானே வடிவமைத்து இயக்கி வருகிறார். சிற்றிதழ்களின் அறிமுகம், இதழ்களில் வெளியான முக்கிய செய்திகள், தமிழர் பண்பாட்டு ஆவணங்கள், நூல் அறிமுகம், சங்கப் பாக்கள், இலக்கியப் பாடல்களின் ஒலி வடிவம் எனப் பல்வேறு தகவல்களோடு ஒரு இதழுக்கு உண்டான தன்மைகளோடு இவ்வலைப் பதிவு மிளிர்கிறது. இப்பதிவில், தகவல்கள் வலையேற்றம் பெற்ற நாள், அடுத்து வலையேற்றம் பெறவிருக்கும் நாள் (upload) ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார். 

            வலைப்பதிவுகள் (blogs) எனப்படும் தனியார் இணையக் குறிப்பேடுகள் இன்று மிகவும் பிரபலமாக உள்ளன. இவற்றை இணைய இதழ்களோடு நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும், வரும் வருடங்களில் இவை இணைய இதழ்களை விட அதிகமாக மிளிர வாய்ப்புகள் நிறைய உள்ளன என்பது கணிப்பாக உள்ளது.  

வெளிப்பாட்டு உத்திமுறை

            இணைய பக்கங்களின் இலக்கியப்பகுதிகளில் பெரும்பான்மையானவை, வெளிப்பாட்டு உத்திமுறைகளைப் பெரிதும் கையாள்வதில்லை என்பது தெரியவருகிறது. இணையம் என்பது மிகச்சிறந்த ஊடகம், பத்திரிகைகளின் வெளிப்பாட்டு உத்திமுறைகளைவிட இணையத்தில் வெளிப்பாட்டு உத்திமுறை மேம்பாடுடையதாக அமைதல் வேண்டும். அதற்கான வாய்ப்புகளும் இணையத்தில் அதிகம். ஆனால், தமது அச்சு இதழ்களில் கவனம் செலுத்தும் அனைத்து நிறுவனங்களும் மின்னிதழ்களுக்கு அதே அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதன் காரணம், ‘இதுநாள்வரை இந்த மின்னிதழ்கள் மூலம் வருமானம் பெறச் சரியான, நிலையான வழிகள் இல்லாமையே’ என்ற கருத்து இங்குச் சுட்டத்தக்கது.

            வெளிப்பாட்டு உத்திமுறைகள் என்பதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று உட்பொருள் உருவாக்கம் (Content) மற்றொன்று, வெளிப்பாட்டு  வடிவம்,  இந்த இரண்டிலும் கையாளப்படும் உத்தி முறைகளைக் கொண்டே இணையத்தில் இலக்கியப் பகுதிகளின் பயன் பயனின்மை சீர்தூக்கப்படுகிறது. ஆனால், இவ்விருவகை உத்திகளும் இணைந்திருப்பது அரிதிற் காணக்கூடிய ஒன்றாகவே உள்ளது. காரணம், இணையபக்கங்களின் வடிவமைப்பாளர்கள் கணினி வல்லுநர்களாக இருந்தும், உட்பொருள் உருவாக்கத்தில்(Content Creation)  தமிழரிஞர்களின் பங்கு அவ்வளவாக இல்லாமையே.  தற்போதைய நிலையில், உட்பொருள் உருவாக்கத்தில் முனைந்திருப்போர் பெரும்பாலும் தமிழ் ஆர்வலர்களும், கணினியோடு தொடர்புடையவர்களுமே அன்றி, தமிழரிஞர்கள் இல்லை என்பதே உண்மை. மேலும், இணையத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள், இலக்கியப்பகுதிகள் பெரும்பாலும்  அச்சு இதழ்களுக்காக எழுதப்பட்டும் வெளியிடப்பட்டும் வந்தவையே. அவற்றை அப்படியே எடுத்தாளும் நிலை உள்ளதேயன்றி, பல்லூடகத் தன்மைகளோடு கூடியவையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கணினி மொழிநடை

            எழுத்தாளர்கள் என்று அடையாளம் காணப்படாத,  எழுதும் திறமையைப் பெற்ற  பலரும் இணையத்தின் வரவால், வரவேற்பால், தங்கள் படைப்புகளை, சிந்தனைகளை, அனுபவங்களை, தடையின்றிப் பிறரோடு பங்கிட்டுக்கொள்ளும் நிலை இன்று உருவாகியுள்ளது. இந்நிலை வரவேற்கத்தக்க  ஒன்றேயாகும். அதே வேளையில், இணைய பக்கங்களில் எழுத, பக்கத்தை நடத்த எந்தவொரு கட்டுப்பாடும்¢ இல்லாதிருப்பதாலும், யாரும் எதையும் எழுதலாம் என்ற கட்டற்ற நிலையாலும், மொழி அமைப்பிலும், கருத்திலும் ஆரோக்கிய சீர்கேட்டை உண்டாக்கும்  சூழல் இன்று உருவாகியிருக்கிறது என்பதையும் நாம் மறுத்தல் கூடாது.

       இங்கு, ‘இணையம் என்பதை கட்டற்ற சுதந்திரம் உள்ள ஒரு பிராந்தியமாகப் பார்க்கிறார்கள். அதுவும் அபாயம்தான். சுதந்திரம் என்பதே நமக்கான வேலிகளை வேண்டிய தூரத்தில் தள்ளி வைத்துக்கொள்வதுதான். ஆனால் வேலியென்று ஒன்று இருந்தே தீரவேண்டும்.(பா.ராகவன். தெட்ஸ்தமிழ்.காம்) என்ற கருத்தை இன்று வலியுறுத்த வேண்டியுள்ளது. 

            ஒரு பக்கத்தில் தமிழ்க் கணினி அமோகமான வளர்ச்சியடைய, இன்னொரு பக்கத்தில் சில பாதகமான விளைவுகளும் ஏற்பட்டன. தமிழில் சொற்கூட்டலையோ இலக்கணத்தையோ கவனிப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. (அ. முத்துலிங்கம், tamil.sify.com/kalachuvadu). இக்குறையைப் போக்க  ‘சொற்பிழை திருத்தி’ தமிழில் வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால், வணிக நோக்கில் சிலர் தனித்தனியாக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மென்பொருள்கள் உருவாக்குதற்கு, மைய அரசால் பலகோடி ரூபாய் செலவில் திட்டம் தீட்டப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் உருவாக்கப்பட்ட சொற்பிழை திருத்திகள் உள்ளிட்ட பிற மென்பொருள்களின் இன்றைய நிலையும் பயன்பாடும் எந்த அளவில் உள்ளதென்பது தெரியவில்லை. மேலும், மைய அரசால் வெளியிடப்பட்ட சொற்பிழை திருத்தி போன்றவை தாம்(tam), தாப்(tab) எழுத்துருவிற்கானவை என்பதால், அதன் பயன்பாட்டு எல்லை குறைவாகவே உள்ளது.  

பயன்பாட்டு நிறைவு - நிறைவின்மை

            இணையத்தில் தமிழின் புழக்கம் பரவலாகி வரும் இன்றைய சூழலில், அதன் பயன், பயனின்மையைச்  சீர்தூக்கிப் பார்த்தல் இன்றியமையாததாகிறது. இணையத்தில் தமிழை இயக்க எவருடைய முன்னனுமதியும் தேவையில்லை. அதனாலேயே நாளும் புற்றீசல்போல் இணையத்தில் தமிழ்ப் பக்கங்கள் தோன்றியவண்ணம் உள்ளன.  இந்நிலை, தமிழின் எதிர்காலத்திற்கு வளம் சேர்க்கும் என்றாலும், கணினி மொழிநடை, மொழி பயன்பாட்டுத் தன்மை, பயன்பாட்டு நிறைவு - நிறைவின்மை, ஆவணமாக்கலின் தேவை ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. காரணம், இணையபக்கங்களை உருவாக்க எந்தவொரு கட்டுப்பாடோ, விதிமுறையோ இதுவரை இல்லாமையே! இந்நிலையில்,   தமிழ் இணைய பக்கங்களைத் தணிக்கை செய்வதும், இணைய பக்கங்களை ஒரு வரம்பிற்குள் கொண்டுவருவதும் மொழி வளத்தினைப் பாதுகாக்க மேற்கொள்ளவேண்டிய இன்றியமையாத செயல்களாகின்றன.

அண்மை காலமாக, தமிழ்ப் பேராசிரியர்களும், அறிஞர்களும் இணையத்தோடு நேரடி தொடர்பு கொண்டுவருகின்றனர் என்றாலும், இச்செயல்பாடு இன்னும் பரவலாகவில்லை என்பதே உண்மை.  இத்தடை களையப்படுதல் இணையத் தமிழ் வளர்ச்சியில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்த வழி வகுக்கும்.  அதே போல, கணினித் தொழில்நுட்பம் என்பதும் தமிழறிஞர்களின் பார்வையில் ஒத்துவராத ஒன்று என்ற மனநிலை மாறவேண்டியதும், தொழில்நுட்பத்தினைக் கைகொள்வதும் இணையத்தமிழ் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டுவதாக அமையும்.

            இணையமானது அரசியல், ஆன்மீகம், கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், இலக்கியம் என்ற எல்லா நிகழ்வுகளையும் தன்னுள் பதிவு செய்கிறது. இப்பதிவு, உலகில் எந்த மூலையில் இருப்போரும் எளிதில் பயன்பெறுதற்கு உரியதாக அமைகிறது. அதேவேளையில், இணையத்தின் இப்பயன்பாடு சென்று சேர வேண்டிய அனையவருக்கும் சேர்கிறதா? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். தமிழ் இணையபக்கங்களின் பயனை இரு வகைகளில் சுட்டலாம். ஒன்று, பயனாளரைச் சார்ந்தது. மற்றொன்று, இணையத்தில் இருக்கும் தகவலைச் சார்ந்தது. அன்றாட நிகழ்ச்சி முதல், அபூர்வ நிகழ்ச்சி  வரை அனைத்தையும் அலசும் இணையமானது அதைப் பயன்படுத்தும் ஒரு பகுதியினர்க்கு மட்டுமே அதன் பயனைத் தருகிறது .  உண்மையில் இப்பயனை அடையவேண்டிய ஒருபகுதியினர் இணையத்தின் இத்தகைய செயல்பாட்டினையே உணராமல் இருப்பது சிந்திக்கத்தக்கது. இணையத்தை வடிவமைப்போர் பெரும்பாலும் கணினி வல்லுநர்களே. இணையத்தைப் பயன்படுத்துவர் பெரும்பாலும் வெளிநாட்டு வாழ் தமிழர்களே. ஆக, இலக்கியப் பகுதிகளின் பயன், தமிழ் ஆர்வலர்களில் ஒரு பகுதியினர்க்கும், கணினியைக் கையாளும் வாய்ப்புள்ளவர்களுக்குமே சென்று சேர்கிறது என்பது சிந்தனையில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

            மற்றொன்று கணினிமொழிநடை. தேவையான தணிக்கை இல்லாமலும், சுயக்கட்டுப்பாடு இல்லாமலும், எண்ணியதைத் தனக்குள்ளே மறுபரிசீலனை செய்யாமலும் வெளியிடப்படும் பல உள்ளீடுகள், குப்பைகளாகச் சேமிக்கப்பட்டு, இணையத்தில் இடத்தை மட்டுமே நிரப்புகின்றன. இவை பயனாளரின் நேரத்தை வீணடிக்கின்றனவே அல்லாமல் வேறொரு பயனையும் கொடுத்தல் இல்லை.

            பயன்பாட்டின் நிறைவின்மைக்கு மற்றொரு காரணமாக காணக்கிடைப்பது, இணையப்பக்கங்களின் முகவரி அறியப்படாமையும், எந்த இணைய பக்கத்தில் எவ்வகைத் தகவல்கள் கிடைக்கின்றன என்பனவற்றை அறிய தேவையான வழிமுறைகள் இல்லாமையுமாகும். இவ்வகைக் குறைபாடுகள் நீக்கப்படும் வேளையில், இணைய பக்கங்களின் பயன்பாடும் மிகவும் சிறப்பானதொன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை.

            தமிழ் எழுத்துருவைக் கண்டுபிடித்ததன் நோக்கமே ஒருவருடன் ஒருவர் தமிழில் தொடர்பு கொள்வது. ஆனால், அந்த நோக்கத்துக்கு எதிர்த்திசையில் காரியங்கள் நடந்தன. நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் உண்டானதும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பிடித்துக்கொண்டார்கள். ஒருவருடன் ஒருவர்  தொடர்புகொள்வது  சாத்தியமில்லாமல்  போனது (அ. முத்துலிங்கம், tamil.sify.com/kalachuvadu) என்பதும் சுட்டத்தக்கது.

            அதேவேளையில், ஒருங்கு குறியின் (யூனிகோடு) வருகையால் தமிழில் தேடுபொறி கிடைத்திருக்கிறது. உலக மொழிகள், இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒரேயொரு குறியாக்க முறைதான் இந்த யுனிகோட். இந்த முறையில், தமிழுக்கு என்று தனி இடம் இருக்கிறது. அது சரியாகவும் சிறப்பாகவும் இயங்குவதாகக் கணினி அறிஞர்களால் சுட்டப்படுகிறது. யூனிகோட்டில் எழுதி, இணையத்தில் பதிவான கட்டுரைகளைக் கூகிள் தேடுதளங்களில் தேடலாம். இது முதன்முறையாகத் தமிழில் சாத்தியமாகியிருக்கிறது.  திசைகள் (யுனிகோடில் அமைந்த முதல் தமிழ் இதழ்), எழில் நிலா, அப்பால் தமிழ், மரத்தடி, கீற்று, ..  போன்றவை யுனிகோடில் இயங்கும் இணைய இதழ்களாகும்.

            ஆனால், மாநில அரசால் உறுதிபடுத்தப்பட்ட எழுத்துருக்களாக, தாம் (tam) மற்றும் தாப்(tab) ஆகியவைகளே உள்ளன. மேலும், மைய அரசால் அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ் மென்பொருளுக்கான இலவச குறுந்தகட்டிலும் 92 யூனிகோட் எழுத்துருக்களோடு, 46 தாப் எழுத்துருக்களும், 65 தாம் (tam) எழுத்துருக்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், அதில் இடம்பெற்றுள்ள சொற்பிழை திருத்தியும், தமிழகராதியும் தாப் (tab) எழுத்துருவிலேயே இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 1000 வீடுகளுக்கு 7 வீடுகளில் மட்டுமே கணினி உள்ளது. ‘தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில அறிவு உள்ளவர்கள்தான் கணினியைப் பயன்படுத்த முடியும் என பலரும் நினைப்பதே இதற்குக் காரணம் (தினகரன், 16.6.06). இக்குறைபாடு வருங்காலத்தில் தவிர்க்கப்படும் எனலாம். காரணம், தமிழில் இயங்கும் கணினியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதே. (மைக்கோசாப்ட் நிறுவனம் , விண்டோஸ் எக்ஸ்.பி ஸ்டார்ட்டர் எடிஷன் என்ற பெயரில் தமிழ் (ஆங்கிலம், இந்தி) உட்பட மூன்று மொழிகளில் இயங்கக் கூடிய கணினியை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது (தினகரன், 16.06.06).

ஆவணமாக்கலின் தேவை

            அன்றாட நிகழ்ச்சிகள் முதல் அரசியல், கலை, இலக்கியம், விமர்சனம், உலகம் என அத்துனையும் தம்முள் கொண்டு விளங்குகிறது இணையம். இவைபோன்ற பயன்தரு தகவல்களை இணையத்திலிருந்து இறக்குமதி செய்து அவற்றை நூலாக்கி ஆவணப்படுத்துதல் காலத்தின் தேவையாகிறது. இணையத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லாதவர்களுக்கும் இச்செயல் மிகுந்த பயனளிப்பதாக அமையும்.

            மேலும், இணையத்தில் மட்டும் இயங்கக்கூடிய இளம் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்களை இனங்கண்டு ஊக்குவிப்பது தமிழின் வேருக்கு நீரூற்றுவது போன்றதாகும். அதேபோல, ஓலைச் சுவடியிலிருந்த இலக்கியங்கள் தாளில் அச்சேறியதைப் போல, அச்சிலிருப்பவை அழிந்துபோகாமலிருக்க கணினியில் உள்ளீடு செய்வதும், உலகெங்கிலும் உள்ள தமிழர் பயன்பெறும் வகையிலும் இணையத்தில் ஏற்றி உலகை வலம்வர வைப்பதும், தமிழின் எதிர்காலவியலைத் தீர்மானிக்கும் தொலைநோக்குச் செயல்பாடுகள் என்பதில் ஐயமில்லை.

தடைகள்

  இணையத் தமிழின் வளர்ச்சியில்  தடைகளாகக் கீழ்க்கண்டவற்றை இனங்காண முடிகிறது.

 

·          இணையப் பயன்பாடு தமிழ்நாட்டிலுள்ள பயனாளர்களிடமிருந்து விலகி இருத்தல். இதற்கு, பொருளாதாரம், தொழில்நுட்பம், இணையத் தமிழின் அறிமுகமின்மை ஆகியவை காரணங்களாக அமைகின்றன.

·     தமிழ்ப் பேராசிரியர், ஆசிரியர், படைப்பாளர்களின் நேரடித்தொடர்பையும், பங்களிப்பையும் இணையம் இன்னும் பரவலாக்கப் பெறாமை.

·  கணினியில் தமிழ் ஏறிய காலத்திலிருந்து தொடரும் எழுத்துரு இடர்பாடுகள். ஒவ்வொரு இணைய பக்கமும், இதழும், தனியார் பக்கங்களும் தங்களுக்கென்று வடிவமைத்துக்கொண்ட ஏதாவதொரு எழுத்துருவைப் பயன்படுத்துதல். இப்போது சில தளங்கள் ‘யுனிகோட்’ என்று அழைக்கப்படும் நிலையான எழுத்துருவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இவற்றை, பெரும்பாலும் விண்டோஸ் 2000 இயங்கு தளத்திற்குப் பிறகு வந்தவற்றிலேயே பயன்படுத்த முடியும் என்பதும், எல்லா இணைய இயக்க மையங்களிலும் (browsing center) இவ்வசதி இருக்குமா என்பதும் தீர்வை நாடும் கேள்விகளாகின்றன.

·  முறைப்படுத்தப்படாத கணினிக் கலைச்சொற்கள் (வலைப்பூக்கள், வலைப்பின்னல்கள், வலைப்பக்கங்கள், வலைப்பதிவுகள், ..)

·  தமிழ்த் தளங்களுக்கானத் தேடுபொறிகள் இருந்தும், தேடுதற்கான தள முகவரிகள் அறியப்படாமை (அ) எழுத்துரு சிக்கலால் தேடுபொறிகள் தளமுகவரிகளை தேடித் தராமை. (யுனிகோட் எழுத்துருவைக் கொண்ட தளங்களை மட்டுமே தேடுபொறிகள் காட்டுகின்றன)

தீர்வுகள்

      இணைய தமிழின் எதிர்காலவியல் குறித்து எழுத்தப்பட்ட இக்கட்ரையானது கணினித் தமிழின் பயன்பாட்டு நிறைவிற்கும், இணையத் தமிழின் எதிர்காலவியலுக்கும் கீழ்க்கண்ட  சிலத்  திட்ட வரைவுகளை   முன்னிறுத்துகிறது.

  • தமிழ் இணைய பக்கத்தின் ஆக்கத்திலும் செயல்பாட்டிலும்  தமிழறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்களின் இணைவை/ கூட்டு முயற்சியை வலியுறுத்துதல்.
  • இணைய பக்கங்களில் வெளியிடப்படும் குறிப்பிட்ட தகவல்களைத்  தணிக்கைக்கு உட்படுத்துதல்.
  • கணினி மொழிநடை, மொழியின் சீர்மையைப் பாதிக்காதவகையில் கையாள வலியுறுத்துதல். இணைய இதழ்கள், தங்களுக்கென்று பதிப்பாளரை நியமித்தல்.
  • ‘இணையவலை ஒருங்கிணைப்புத் தளத்தினை’ ஏற்படுத்துதல். அதில், இணையதளம் தொடங்குமுன் பதிவு செய்தல்,  தமிழ் இணைய பக்கங்கள் பற்றிய அகரவரிசை பட்டியலை உள்ளீடுசெய்தல், பட்டியலிலுள்ள இணைய பக்கங்களின் உள்ளீட்டுத் தகவல்களின் (content)  குறிப்புகளைக் கொடுத்தல்.
  • அச்சு ஊடகத்திலிருந்து மாறுபட்ட வெளிப்பாட்டு உத்திமுறையினையும், சிறப்பான தள வடிவமைப்பினையும் கையாளுதல். உட்பொருள்களுக்கான தெளிவான இணைப்பினைப் பயனாளருக்குக் கொடுத்தல்.
  • பயன்பாட்டு நோக்கில் சில குறிப்பிட்ட தகவல்களை இணையத்திலிருந்து இறக்குமதி செய்து அவற்றை நூலாக்க வழிவகை செய்தல்.
  • தரப்படுத்தப்பட்ட, ஒரே வகையான எழுத்துருவின் பயன்பாட்டையும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகையின் பயன்பாட்டையும் மேற்கொள்ளுதல். கணினி வல்லுநர்கள் கருத்துகள் அடிப்படையில், யுனிகோட் எழுத்துருவையே பயன்படுத்துவது சிறந்த பயனைத் தரும் ஒன்றாக அறியப்படுகிறது.
  • அரசாலும், தனியாராலும் மேற்கொள்ளப்படும் தமிழ்-கணினி தொடர்பான ஆய்வுகளின் ஒருங்கிணைப்பு மையத்தை / தளத்தைத் தொடங்குதல். தமிழ்-கணினி குறித்து உருவாக்கப்பட்ட புதிய மென்பொருள்களைப் பற்றிய தகவல்களை இத்தளத்தில் வழங்குதல்.

 ஆனால், ‘எவ்வளவுதான் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் பாடுபட்டாலும் ஏழு கோடி தமிழ் மக்களைக் கொண்ட மாநில அரசு ஆதரவு இல்லாமல் தமிழைக் கணினித் துறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது’ என்ற கருத்து இங்கு எண்ணத்தக்கது. தமிழின் பெருமை தொன்மையில் இருந்தாலும், அதன் மேன்மை இணையம் போன்ற இன்றைய தொடர்ச்சியில் இருக்கிறது என்பதை நாம் அறிதல் வேண்டும்.

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்!  -பாரதி.