வெள்ளி, 22 மார்ச், 2013

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்



தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் ஒலிக்கும் வகையில் தமிழுக்கென்று தனித்ததொரு நிறுவனம் பிரெஞ்சு அகாதெமி போன்று உருவாக்கப்படவேண்டும் என்ற வேணவா தமிழறிஞரிடையே கனன்று கொண்டிருந்தது. இவ்வுணர்வுக்கனல் 1968 இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது அன்றைய தமிழக முதல்வர் பேரறிஞர் சி.என். அண்ணாதுரையவர்கள் வழி கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. அக்கருத்தரங்கில், தக்கணக் கல்லூரி முதுகலை ஆராய்ச்சி நிறுவன (பூனே) இயக்குநர் டாக்டர். கத்ரே, இதற்கான முன் வரைவுத் திட்டத்தினை வழங்கினார். அதன்படி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்' தோன்றி செயல்படுவதற்கான உதவியை யுனெஸ்கோவிடம் தமிழறிஞர் நாடினர்.

                1970 சூலைத் திங்களில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு பாரிஸில் நடைபெற்றது. அம்மாநாட்டைத் தொடங்கி வைத்த, அன்று யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் பொறுப்பிலிருந்த டாக்டர் மால்கம் ஆதிசேஷையா அவர்கள், 1968 நவம்பரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவுவது பற்றி யுனெஸ்கோ நிறைவேற்றிய தீர்மானத்தை எடுத்துவைத்தார். அம்மாநாட்டில், "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கட்டமைப்புப் பற்றிய திட்டமும் அறிவிக்கப்பட்டது.  பதிவு பெற்ற ஒரு சங்கமாக நிறுவுவது பற்றியும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1970 அக்டோபர் 21ஆம் நாள் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பெற்றது. சென்னை, ஸ்டெர்லிங் ரோடு, "தமிழகம்' இல்லத்தில் தற்காலிகமாக இயங்கி, 1972 முதல் சென்னை, மைய பல்தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் உயிர்ப்புப் பெற்று நாளும் தமிழ் மணம் பரப்பிக் கொண்டுள்ளது.

நோக்கம்
       தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு அவரும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன இவ் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

                தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.


                உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோன்றிய பொழுது அது தாய் நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association of Tamil Research - IATR) அரவணைப்பில் அமைந்தது. முனைவர் மு.வரதராசனாரை மதிப்புறு இயக்குநராகவும், முனைவர் கா. மீனாட்சி சுந்தரனாரை முதன்மை ஆட்சி அலுவலராகவும் நியமனம் செய்த பின்பு தனித்து இயங்கத் தொடங்கியது. தமிழ்ப் பணியும் விதைக்கப்பட்டு முளைவிடத் தொடங்கியது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று நாற்றிசையும் புகழ்மணம் பரப்பி வருகிறது.

நிருவாகம் - கல்விப் புலங்கள் - பேராசிரியர்கள்:

     இயக்குநர் (மு.கூ.பொ.)
            முனைவர் கோ.விசயராகவன் 
     
     சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
            முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர்
           முனைவர் கா.காமராஜ், முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் வி.இரா.பவித்ரா, முதுநிலை ஆராய்ச்சியாளர்
 
     தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலம்
           முனைவர் கோ.வியசயராகவன் (இ.பொ.)
            முனைவர் அ.சதீஷ், இணைப் பேராசிரியர்
           முனைவர் கோ.பன்னீர்செல்வம், முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் சு.தாமரைப்பாண்டியன், முதுநிலை ஆராய்ச்சியாளர்

     தமிழ் மொழி (ம) மொழியியல் புலம்
           முனைவர் பெ.செல்வக்குமார், இணைப் பேராசிரியர்
           முனைவர் க.சுசீலா, முதுநிலை ஆராய்ச்சியாளர்
           முனைவர் நா.சுலோசனா, முதுநிலை ஆராய்ச்சியாளர்

     அயல்நாட்டுத் தமிழர் புலம்
             முனைவர் கு.சிதம்பரம், முதுநிலை ஆராய்ச்சியாளர்
            முனைவர் து.ஜானகி, முதுநிலை ஆராய்ச்சியாளர்

முகவரி: 


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
(International Institute of Tamil Studies)
இரண்டாம் முதன்மைச் சாலை
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி, சென்னை - 600 113.
தொ.பே. 044 22542992
இ.தளம்: www.ulakaththamizh.org


       

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஐங்குறுநூறு அறிமுகம்

 ஐங்குறுநூறு - அறிமுகம்

முனைவர் ஆ.மணவழகன்
அக்டோபர் 03, 2011

எட்டுத்தொகை இலக்கியங்களுள் மூன்றாவதாக இடம்பெற்றுள்ள அக இலக்கியம் ஐங்குறுநூறு. இவ்விலக்கியமே எட்டுத்தொகையுள் அடியளவால் மிகவும் சிறிய பாடல்களைக் கொண்டது (3 அடி முதல் 6 அடிவரை). இந்நூலில் ஐந்நூறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன (ஐந்து+குறுகிய+நூறு). இந்த ஐந்நூறு பாடல்களையும் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர் (5X100=500). ஐந்திணை ஒழுக்கங்களை நூறுநூறு பாக்களில் இலக்கிய வளமை குன்றாது எடுத்தியம்புகிறது. ஒவ்வொரு நூறும் பத்து பத்து பாக்களாக, தனித்தனி தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. தலைப்பானது செய்யுளில் பயின்று வரும் சொற்களாலோ அல்லது பொருளாலோ இடப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும். திணையையும் ஒரு பெரும் புலவர் பாடியுள்ளார்.

மருதத் திணை         - ஓரம்போகியார்
நெய்தல் திணை     - அம்மூவனார்
குறிஞ்சித் திணை   - கபிலர்
பாலைத் திணை     - ஓதலாந்தையாரை
முல்லைத் திணை  - பேயனார்

யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் விருப்பத்தால் கூடலூர்கிழார் என்னும் புலவர் ஐங்குறுநூற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நூல், சங்க கால தமிழரின் திணை சார்ந்த வாழ்வியல், காதல் வாழ்க்கை, சமூக நோக்கு, பழக்க வழக்கங்கள், நாகரிகம், ஒழுக்கம், மகளிர் மாண்புகள், அறம், அருள் என அனைத்தையும் எளிய – இனிய வடிவத்தில் பதிவுசெய்துள்ளது.

சிறப்புகள்
சங்க இலக்கியத் தொகை நூல்களுள் பல சிறப்புகளைப் பெற்றது ஐங்குறுநூறு. சங்க இலக்கியங்களுள் மூன்றடியிலும் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல் இது ஒன்றே. இந்நூலைத் தவிர வேறு எந்த நூலிலும் மருதத் திணைப் பாடல்கள் முதலாவதாக வைக்கப்படவில்லை. இந்திராவிழா பற்றிய செய்தியைக் கொண்டுள்ள பழைய இலக்கியம் இதுவே. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிய செய்திகளும், அவற்றின் பெயரால் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. விலங்குகள் போன்றவற்றின் வாழ்வியல் நுட்பங்களும் படம்பிடித்துக்காட்டப்பட்டுள்ளன. குறுந்தொகையைப் போன்றே சிறந்த உவமைகளைக் கொண்டுள்ள நூல் ஐங்குறுநூறு எனலாம்.
        உலகில் அனைத்து தீய செயல்களுக்கும் காரணமாக அமைவது வறுமையே. வறுமையே, பசிக்கும், பிணிக்கும் மூலகாரணமாக அமைகிறது. வறுமையைப் போக்கவே மக்கள் தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆகவே, ஒரு நாடு சிறந்தோங்க பசி, பிணியை இல்லாது செய்யவேண்டும் என்ற சிந்தனையை 

                                        'பசியில் ஆகுக பிணிசே நீங்குக'

என்று வெளிப்படுத்துகிறது ஐங்குறுநூறு. ஐங்குறுநூற்றில் வேளாண் சிந்தனைகள் காணக்கிடைக்கின்றன. வயல் நிறைய விளைய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்குக் காரணம் தானியத்தைச் சேர்த்து வைக்கவேண்டும் என்பதல்ல, இரவலர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதே. இந்த உயர்ந்தச் சிந்தனையை

                                    'விளைக வயலே வருக இரவலர்'
    மற்றும்,

                                 நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க

 என்ற ஐங்குறுநூற்று அடிகளில் அறியலாம்.

இயற்கையிலிருந்து விலகாமலும், அதேவேளையில், நவீனத்துவத்தைப் பயன்படுத்தியும் பயன் கண்டனர் நம் முன்னோர். வேளாண்துறையிலும் கூட நவீன கருவிகளைப் பயன்படுத்திய உண்மையைக் கீழ்க்கண்ட அடிகள் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
     
             'கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்'

கரும்பைப் பிழிந்து சாறு எடுப்பதற்கு நவீன கருவிகளைப் பயன்படுத்திய உண்மையை இவ்வடி உணர்த்துகிறது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு பகைமைபாராட்டுதலிலோ, அல்லது போர் புரிவதிலோ இல்லை.  பகைமையை மறத்தலிலும், நட்பை பாராட்டுதலிலுமே உள்ளது. போர்கள் போற்றப்பட்ட சூழலில் வேந்தர்கள் பகைகொள்ள வேண்டாம் என்கிறது ஐங்குறுநூறு.

                                வேந்து பகை தணிக யாண்டுபல நந்துக

புறத்திற்கென்று தனியே இலக்கியம் படைத்து, விழுப்புண் படுதலே வீரம் என்ற மரபை வளர்த்து, வாழ்ந்து வந்த சமுதாயச் சூழலில், பகையே வேண்டாம் என்று ஒருவர் சிந்தித்திருப்பது எண்ணி வியக்கத்தக்க ஒன்றல்லவா?

ஒரு நாட்டின் வாழ்விற்கும், வளர்ச்சிக்கும், வளமைக்கும் உற்ற துணையாக விளங்குவது அந்நாட்டின் அரசாங்கம் என்பது துணிவு. அந்த அரசாங்கம் முறைசெய்து மக்களை காப்பாற்ற வேண்டும். நாட்டில் களவு இல்லாது ஒழிய வேண்டும். இச்செயல்பாடுடைய அரசே நல்லரசாக விளங்கமுடியும். இதை,

                                அரசுமுறை செய்க களவில் லாகுக’-22

 என்ற ஐங்குறுநாற்றின் அடி நமக்கு தெளிவாக்குகிறது.

        அன்பும், அறனும், பண்பும் மிகுந்த ஒரு காலகட்டத்தில், இயற்கையோடு மனிதன் இயைந்து வாழ்ந்த ஒரு காலகட்டத்தில், அறச்சிந்தனைகள் நாட்டில் தலைத்தோங்க வேண்டும் என்று சிந்திப்பதும் அச்சிந்தனை உலகெங்கும் சிறந்தோங்க வேண்டும் என்று ஆசை கொள்வதும்  நாம் பெருமைப்பட கூடிய ஒன்றே. இவ்வகைச் சிந்தனை.

                                        அறநனி சிறக்க வல்லது கெடுக

என்று வெளிப்படுத்துகிறது ஐங்குறுநூறு.

        அறச்சிந்தனை எங்களுக்கு வாய்க்கப்பெற்றது போல, உலகம் அனைத்தும் பரவி தழைத்தோங்க வேண்டும், அதன் மூலம் தீய செயல்கள் அழிந்துபட வேண்டும் என்ற இத்தொலைநோக்குச் சிந்தனை இன்றும், என்றும் ஏற்புடையதுதானே! அறச்சிந்தனை வலுப்பெற்றால் என்ன நடக்கும்? தீமைகள் எல்லாம் விலகியோடும், எங்கும் நன்றே, தீமை இல்லை, எவ்வுயிரும் துன்பமின்றி இன்பம் பெறும். இந்த உண்மையைத் தானே ஐங்குறுநூற்றின்,
                              ‘நன்று பெரிது சிறக்க தீதில் ஆகுக

என்ற அடி நமக்கு வலியுறுத்துகிறது.

        உயிரியல் அறிவும் ஐங்குறுநூற்றில் காணக்கிடைக்கின்றன. நண்டுகள் பிறக்கும் போதே அதன் தாய் இறந்துவிடுகிறது என்பதையும், முதலைகள் தம் குட்டிகளையே தின்னும் என்பதையும் ஐங்குறுநூறு கீழ்க்கண்டவாறு பதிவுசெய்கிறது.

                        ‘தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
                        பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்’

                        ‘தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலை’

 ஐங்குறுநூறு  பதிப்புகள்

                    உ. வே. சா, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு), பொ.வே. சோமசுந்தரனார் (கழக உரை) போன்றவையும்  புலியூர் கேசிகன் உரை,   வர்த்தமானன் பதிப்பக வெளியீடு போன்றவையும் பிறவும் வெளிவந்துள்ளன.

திங்கள், 10 அக்டோபர், 2011

குறுந்தொகை - நூல் அறிமுகம்



குறுந்தொகை - நூல் அறிமுகம்
முனைவர் ஆ.மணவழகன்
செப்டம்பர் 20, 2011

எட்டுத்தொகை நூல் வைப்பு முறையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள நூல் குறுந்தொகை. இது அக இலக்கிய வகையைச் சார்ந்தது. இதற்கு உரை எழுதியவர் பேராசிரியர் என்றும், அவர் எழுதாமல் விட்ட இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதினார் என்றும் கூறப்படுகிறது.  ஆனால், அவர்களுடைய உரைகள் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல, மூலநூலே கி.பி.1915 வரை தமிழுலகிற்குக் கிடைக்காமல்தான் இருந்தது. குறுந்தொகை மூலமும், திருக்கண்ணபுரந்தலத்தான் திருமாளிகைச் சௌரிப் பெருமாள் அரங்கன் (தி.சௌ. அரங்கசாமி ஐயங்கார்) இயற்றிய புத்துரையும் 1915இல், வித்யாரத்னாகர அச்சுகூடத்தாற் பதிப்பிக்கப்பட்டு முதன்முதலாக வெளிவந்தது.  
               
நூல் அமைப்பு

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள மொத்தப் பாடல்கள்– 401(உ.வே.சா.வின் கூற்றுப்படி). இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ; தொகுப்பித்தவர் தெரியவில்லை. இந்நூலிலுள்ள பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். பலருடைய இயற்பெயர் தெரியவில்லை. மீனெறி தூண்டிலார், செம்புலப் பெயல்நீரால், கயமனார், நெடுவெண்ணிலவினார், விட்ட குதிரையார், ஓரேருழவரனார் போன்றோர் பாடலடிகளால் பெயற்பெற்றுள்ளனர். பாடல்களின் அடி அளவு நான்கடி முதல் எட்டடிவரை. கி.மு. 1ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.   

சிறப்புகள்

எட்டுத்தொகையை அறிமுகப்படுத்தும் பழம் பாடல் குறுந்தொகையை ‘நல்ல குறுந்தொகைஎன்று குறிப்பிடுகிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள 401 பாடல்களில் சுமார் 250 பாடல்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பெற்றுள்ளன. 29 உரையாசிரியர்கள் தத்தம் உரைகளிலே சுமார் 716 இடங்களில் குறுந்தொகைப் பாடல்களை எடுத்துக்காட்டியுள்ளனர். நச்சினார்க்கினியர் மட்டுமே 208 இடங்களில் குறுந்தொகைப் பாடல்களை எடுத்துக்காட்டியுள்ளதன் மூலம் இதன் சிறப்பை அறிய முடிகிறது.

உள்ளம் இனிக்கும் உவமைகள் சில

      சமூகச் சூழலை உணர்த்தும் உவமைகள், தொழில்முறைகளோடு தொடர்புடைய உவமைகள், சுற்றுச் சூழலை மையமாகக் கொண்ட உவமைகள், பண்பாட்டை வெளிப்படுத்தும் உவமைகள் என பல எளிய இனிய உவமைகள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.

 அவற்றுள் சில:

1.             செம்புலப் பெயர்நீர் போல
2.             குப்பைக் கோழித் தனிப்போர் போல
3.             கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
                     நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கு
4.             ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
                     ஓரேர் உழவன் போல
5.             'உலைவாங்கு மிதிதோல் போல'
6.             '-----------------------------  கள்வர்தம்
                     பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
                     உகிர்நுதி புரட்டும் மோசை போல'
7.             கையில் ஊமன் கண்ணில் காக்கும்
                     வெண்ணெ யுணங்கல் போலப் 
8.             பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
                     நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல

குறுந்தொகை காட்டும் பண்பாடு

       குறுந்தொகைப் பாடல்களில் அக்காலத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு புதைந்துகிடைப்பதைக் காணலாம். குறுந்தொகையில் சிறந்த உவமைகள் இடம்பெற்றுள்ளதைப் போலவே, சமூக நலன் நாடும் சிறந்த தொடர்களும் இடம்பெற்றுள்ளன. இத்தொடர்கள் அக்கால மக்களின் வாழ்வியல் உயர் பண்புகளை, சமூகச் சூழல்களை வெளிப்படுத்துவதாக உள்ளன. குறிப்பாக,

                       ‘உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்

                       ‘வினையே ஆடவர்க்கு உயிரே

                       ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்

                       ‘ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்

              ‘இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு

போன்ற தொடர்களைக் குறிப்பிடலாம். இத்தொடர்கள் செல்வத்தின் பயனையும், முன்னோர் சேர்த்து வைத்த செல்வத்தை முறையாக செலவு செய்யாமல் வீணடிப்பவர் விரைவில் கெட்டழிவர் என்பதையும், ஆண்களுக்கு வினை என்பது உயிரைப் போன்றது என்பதையும், பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்ந்த வாழ்க்கை நிலையையும், பொருளில்லாரின் வாழ்க்கையில் இன்பம் என்பதற்கு இடமில்லை என்பதையும் வலியுறுத்துகின்றன.
       குறுந்தொகை, அக இலக்கியம் என்றாலும், புறச் செய்திகளையும், சமூக உயர் பண்பு நெறிகளையும், விழுமியங்களையும் பல இடங்களில் சுட்டுகின்றது. சான்றோர் என்பவர் யார் என்பதையும், அவர்களின் தன்மையையும் பற்றிக் குறிப்பிடுமிடத்து,

சான்றோர், புகழு முன்னர் நாணுப
                            பழியாங் கொல்பவோ காணுங் காலே;(குறு.252)

என்று மிக அழகாக அடையாளப்படுத்துகிறது. மேடையமைத்து தங்களுக்குத் தாங்களே விழா எடுத்துக்கொள்ளும் இன்றைய சமூக நிலையில், குறுந்தொகை, சான்றோர் என்பவர் தங்களைப் புகழும் முன்பாகவே நாணம் கொள்வர்; புகழ்ச்சியையே தாங்கிக் கொள்ளாதவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் பழியை எப்படி ஏற்பர். அவற்றைப் பொருத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறது.  மேலும், பல பாடல்கள் விருந்தோம்பலின் சிறப்பினை வலியுறுத்துகின்றன.

பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
                            வருவீ ருளீரோ வெனவும் (குறு.11;3-4)

என்பதில் மாலையில் ஊரின் எல்லையை அடைக்கும் வாயில் காவலர்கள், உள்ளே வருவதற்கு விருந்தினர் எவரேனும் இருக்கிறீர்களா என்று கேட்டு வாயிலை அடைக்கும் விருந்தோம்பல் பண்பு காட்டப்படுகிறது. அதே போல இல்லத்திற்கு இரவலர்கள் வராத நாள் துன்ப நாளாக கருதபட்டது.

சுவை மிக்க பாடல்களில் சில
குக்கூ என்றது கோழி

       தம் உள்ளத்தின் உணர்வுகளை இம்மியும் தப்பாமல் பிறருக்கும் உணர்த்த முடியுமேயானால் அவனே சிறந்த எழுத்தாளனாகிறான். அந்த எழுத்தே அழியா காவியமாகிறது. குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் ஒரு காதல் காவியமாக உள்ளதைக் காணமுடிகிறது. காட்டாக ஒரு பாடல், இரவில் கணவனோடு சேர்ந்திருக்கிறாள் ஒரு தலைவி. இரவு முடிகிற விடியற்காலையில் கோழி கூவுகிறது. கோழி கூவுவதைக் கேட்டதும் ஏற்பட்ட  அவளின் மன நிலையை பின்வருமாறு உரைக்கிறது பாடல்.
 
                              குக்கூ என்றது கோழி அதனெதிர்
                            துட்கென்றன் என் தூய நெஞ்சம்
                            தோடாய் காதலர்ப் பிரிக்கும்
                            வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே (குறுந்.157)

தலைவனோடு சேர்ந்திருக்கும் பொழுது கோழி ‘குக்கூ என்று கூவியது, அதைக்கேட்ட என் நெஞ்சம் ‘துட்கென்றது என்கிறாள். இதில் உள்ள அழகான ஓசை நயம் உணரத்தக்கது. துன்பச் செய்தியைக் கேட்டதும் ‘திக்குனு ஆகிவிட்டது என்று இன்று நாம் சொல்லும் இந்த உணர்ச்சிநிலையை இங்கு இலக்கியம் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் வைகறை(விடியல்) வருகிறது. ஆனால் அன்று வந்த விடியல் காதலரைப் பிரிக்கும் வாள்போல் வந்தது என்கிறாள். சூழலை வார்த்தைகளில் காட்டும் வண்ணத்தை இங்குக் காணமுடிகிறது.

கண்ணால் காண்பதே இன்பம்

       காதலர்கள் சேர்ந்து இன்ப வாழ்க்கை வாழாவிடினும், ஒருவரை ஒருவர் அவ்வப்போது காண்பது மனதிற்கு மகிழ்வையும் நிம்மதியையும் தருகிறது.  சேர்ந்து வாழ முடியாத சூழலில் தன் காதலனைக் காண்பதே தற்போது இன்பமாக இருக்கிறது என்கிறார் ஒருத்தி. இதனை அழகான உவமையால் விளக்குகிறாள்.

                              குறுந்தாள் கூதளி ராடிய நெடுவரைப்
                            பெருந்தேன் கண்ட இருகை முடவன்
                            உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
                            சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
                            நல்கார் நயவார் ஆயினும்
                            பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே (60)

உயர்ந்த மலை. அம்மலை மீது உள்ள பெரிய மரத்தின் உச்சியில் பெரிய தேன்கூடு ஒன்று உள்ளது. அதனைக் கண்ட இரு கைகளும் இல்லாத முடவன் ஒருவன் மரத்தின் கீழ் நின்றுகொண்டு, தேன் கூட்டை நோக்கி கையை நீட்டி நீட்டி நக்குகிறான். தேன் கையில் வரவில்லை என்றாலும் வருவதுபோல எண்ணி இன்பம் அடைகிறான். அதைப்போல, காதலர் தன்மீது இரக்கம் கொண்டு தம்மைச் சேர வரவில்லை என்றாலும் அவரைக் கண்களால் காண்பதே உள்ளத்திற்கு இனிமை தருவதாக உள்ளது என்கிறாள் தலைவி.

       இதே மனநிலையில் இருக்கும் தலைவன் ஒருவனின் சூழலை விளக்கும் மற்றொரு பாடல் பின்வருமாறு உவமையை அமைத்துள்ளது.
             
                              தச்சன் செய்த சிறுமா வையம்
                            ஊர்ந்து இன்புறார் ஆயினும் கையின்
                            ஈர்ந்து இன்புறும் இளையோர் போல (61)

அதாவது, தச்சன் செய்து கொடுத்த அழகிய சிறிய தேரினை இழுத்துச் செல்லும் சிறுவர்கள், அத்தேரில் ஏறி அமர்ந்து அதனை ஓட்டி இன்புற வாய்ப்பு இல்லை என்றாலும், அதன் மீது அமர்ந்து செல்வதைப் போல எண்ணி, அதனை இழுத்து விளையாடி இன்பம் அடைகின்றனர். அதேபோல, காதலியோடு சேர வாய்ப்பு இல்லை என்றாலும் அவளோடு வாழ்வதுபோல  எண்ணி வாழ்ந்திருத்தலே இன்பம் தருகிறது என்கிறான் தலைவன்.



உயிர்ச் சிறிது காதலோ பெரிது
     
காதல் என்றால் எக்காலத்திலும் இடையூறுகள் இருக்கத்தானே செய்கின்றன. காதலித்ததால் வீட்டில் கண்டிக்கப்பட்ட ஒரு தலைவி தன் வீட்டு முற்றத்தில் இருக்கும் பலா மரத்தினை நோக்கி தன்னிலையோடு ஒப்பிடுகிறாள்.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசி னோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே! (18)

உயர்ந்த பலா மரத்தில் இருக்கும் பெரிய பலா பழமானது சிறிய காம்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது. பலா பழம் நாளுக்குநாள் பெரியதாவதால், பழத்தின் எடை தாங்காது எந்த நேரத்திலும் காம்பு உடைந்த பழம் விழலாம். அதுபோல, என் உள்ளத்தின் காதலானது நாளுக்கு நாள் மிகுந்துகொண்டே செல்கிறது. ஆனால், என் உயிரோ பலா பழத்தின் காம்பைப் போல மிகச் சிறிது. பலா பழம் எந்த நேரத்திலும் அறுந்து விழுந்துவிடுவதைப் போல, தலைவன் மீது கொண்ட காதல் நாளுக்குநான் பெருகுவதால் என் உயிரும் எந்த நேரத்திலும் பிரிந்துவிடலாம் என்கிறாள்.

இல்வாழ்க்கை

      உடன் போக்கு சென்று (வீட்டை விட்டு வெளியேறுதல்) தனிக்குடித்தனம் மேற்கொள்ளும் புதுமணத் தம்பதிகளின் இல்லற வாழ்க்கையைக் குறுந்தொகைப் பாடலொன்று மிக அழகாகப் படம்பிடிக்கிறது.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.(167)

முதல் முதலாக தன் கணவனுக்காகச் சமைக்கும் பெண் ஒருத்தியின் செயல்பாடுகளும், கணவனுக்குத் தான் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பமும் இங்குக் காட்டப்படுகின்றன.. கட்டித் தயிரினை அழகான விரல்களால் பிசைகிறாள்; தயிர் பிசைந்த கையினை தன் ஆடையில் துடைத்துக்கொள்கிறாள்; முதல் முதலாக சமைப்பதால் அடுப்பை சரியாக எரியூட்டத் தெரியவில்லை. அதனால் புகை கண்களில் பட்டு கண்கள் கலங்குகின்றன.  அதனையும் துடைத்துக்கொள்கிறாள். கண்களில் எல்லாம் கரி ஒட்டியிருக்கிறது. எப்படையே சமைத்து முடித்துவிட்ட உணவினை தன் கணவனுக்குப் பரிமாறுகிறாள். கணவன் இனிது என உண்கிறான். அந்த சொற்களைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறாள். கணவனை மகிழ்விக்க எண்ணும் மனைவியும், சுவை எப்படி இருந்தாலும் இனிது என உண்டு மனைவியை மகிழ்விக்கும் கணவனும் இன்ப இல்லறத்திற்கும் இங்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளனர்.  

காமம் என்றால் என்ன?

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
     
என்று, காதல் என்றால் என்ன என்பதற்கு அழகாக விளக்கம் சொன்ன குறுந்தொகை, காமம் என்றால் என்ன என்பதற்கும் விளக்கம் சொல்கிறது. இதனைக் கீழ்வரும் பாடலில் காணலாம்.

காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலு மின்றே யானை
குளகுமென் றாண்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுனர் பெறினே(136)

காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; அக் காமம் புதியதாகத் தோன்றும் வருத்தமும் அன்று; உடலில் தோன்றும் நோயும் அன்று. கடுத்தலும்(மிகுதலும்),தணிதலும் இன்று; யானை குளகு என்ற தழையுணவை மென்று தின்று அதனால் கொண்ட மதத்தைப் போல மனதிற்கு ஏற்ற பொருத்தமானவரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும் சிறப்பினை உடையது என்கிறது. காமம் என்பது இன்று தவறான பொருளின் வழங்கப்படுவது உணரத்தக்கது.

குறிப்பிடத்தக்க குறுந்தொகைப் பதிப்புகள்

1.திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கன் (உரையும் மூலமும்-அச்சில் ஏற்றிய முதல்வர்-           1915
2.   உ.வே.சா – 1937
3. பேரா. இராகவையங்கார்- 1946 
4. பொ.வே. சோமசுந்தரனார்   - 1955

ஆங்கில மொழிபெயர்ப்பு

                மு. சண்முகம்பிள்ளை மற்றும் டேவிட் இ.லூ

குறுந்தொகை எளிய வடிவம்

            குறுந்தொகை வசனம், 
     கொங்குதேர் வாழ்க்கை
     குறுந்தொகை விருந்து
     குறுந்தொகைச் செல்வம் - மு.வ, 
     குறுந்தொகைச் சொற்பொழிவுகள் - கழகம்