புதன், 28 டிசம்பர், 2016
ஏறு தழுவுதல் – தமிழர்ப் பண்பாடு
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் - Ancient Tamil's Art Gallery
இணையம்
www.pvkk.org
பொறுப்பாளர்
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-600113.
புதன், 3 ஆகஸ்ட், 2016
பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபுநுட்பங்களும்
அணிந்துரை
முனைவர் கோ.விசயராகவன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
சங்க இலக்கியங்கள், தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, வாழ்வியல் போன்றவற்றை உலகிற்கு உணர்த்துகின்றன. தமிழ்ச் சமூகம் அறிந்து வைத்திருந்த பல்வேறு அறிவு நுட்பங்களுக்கும் இவ்விலக்கியங்களே முதன்மைச் சான்றுகளாகவும் விளங்குகின்றன. இவ்வுண்மைகளை, இலக்கியங்கள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன.
அவ்வகையில், சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ள கீழ்க்கணக்கு தொடர்பான ஆய்வு நூலாக ‘பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ என்ற இந்நூல் அமைந்துள்ளது. உலகப் பொதுமறையாம் திருக்குறள் தவிர்த்து, ஏனைய கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் அறக்கோட்பாட்டு நோக்கிலேயே அணுகப்பட்டுள்ளன. இச்சூழலில் இந்நூல், சங்கம் மருவிய கால நூல்களில் காணப்படுகிற பழந்தமிழரின் மரபு அறிவுப் பதிவுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.
இந்நூலில், வேளாண் அறிவும் மரபு நுட்பங்களும், மருத்துவ நுட்பங்களும் உடல்நல மேலாண்மையும், வானியல் அறிவும் நீர் மேலாண்மையும், கட்டடக்கலை நுட்பங்களும் பயன்பாட்டுப் பொருள்களும், உயிரியல் அறிவும் சூழலியல் மேலாண்மையும், உலோகவியல் நுட்பங்களும் கருவிகளும், அரசியல் மேலாண்மையும் ஆளுமைப் பண்பும், சட்டவியல் அணுகுமுறைகள் என்ற பெருந்தலைப்புகளில் தமிழர் அறிந்திருந்த பல்வேறு துறைகளும் மரபு நுட்பங்களும் தக்க சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன. இதன்வழி, சங்கம் மருவிய காலத்தில் பல்வேறு அறிவுத் துறைகள் சிறந்திருந்ததையும், அத்துறைகளில் பல்வேறு நுட்பங்கள் கையாளப்பட்டதையும் நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் வெளிப்படுத்தியுள்ளார். தமிழர்களின் மரபு நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்ய சிறந்த தரவு நூலாக இது அமைவதோடு, ‘சங்கம் மருவிய காலம் இருண்ட காலம்’ என்ற பொதுவான கூற்றையும் உடைக்கிறது.
முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் அணுகுவதோடு, அக்காலச் சமூகத்தின் மரபு நுட்பங்களையும் மேலாண்மைச் சிந்தனைகளையும் வெளிக்கொண்டுவரும் அரிய முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். அந்த வகையில், ‘பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ எனும் தலைப்பில் ஆய்வுத் திட்டம் மேற்கொண்டு, அதனை நூலாக வடித்துள்ள நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
தமிழ்நாடும் தமிழ் மொழியும் தழைத்திடப் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிற மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் வளர்ச்சிக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளர்ச்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதோடு, தம் தனிப்பட்ட அக்கறையைக் காட்டிவரும்பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமாகிய மாண்புமிகு கே.சி. வீரமணி அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சியில் எங்களை வழிநடத்திவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்களுக்கும் எம் இனிய நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
நூல் வடிவமைப்பு செய்த திருமதி சௌசல்யா அவர்களுக்கும் நூலினை அச்சிட்டுத் தந்த ஏ.கே.எல். அச்சகத்தாருக்கும் எனது பாராட்டுகள்.
*****
நூலறிமுகம்
சனி, 21 நவம்பர், 2015
தமிழறிஞர் - முனைவர் ஆ.மணவழகன் (DR. A.MANAVAZHAHAN)
பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தம்முடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுவரும் தமிழறிஞர் வரிசை இடுகையிலிருந்து...
முனைவர் ஆ.மணவழகன் (Dr.A.Manavazhahan) இளந்தலைமுறை தமிழாய்வாளர். சமூக உணர்வாளர். தமிழர் வாழ்வு, தமிழ் இலக்கியம், கணினித்தமிழ் ஆகிய துறைகளில் சிறந்த ஆய்வுகளோடு, படைப்பிலக்கியத்திலும் திறன் படைத்தவர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்டமும் பெற்றார் . உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னையில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். கணினித்தமிழிலும் ஆர்வம் உள்ள இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ் ஆய்வாளராகவும் பணியாற்றினார். தற்போது சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்குள்ள பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார். ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை (2005)’, ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை (2007)’, ‘தொலைநோக்கு (2008)’, ‘பழந்தமிழர் தொழில்நுட்பம் (2010)’, ‘தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம் (2013)’ போன்ற தமிழ்ச் சமுதாயம்பற்றி ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார். ‘கூடாகும் சுள்ளிகள் (2010)’ என்ற ஒரு மிகச் சிறந்த கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகள் பலவற்றில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். ‘உயிரோவியம் (சங்க இலக்கியக் காட்சிகள்)’, ‘காந்தள் (தமிழ் மொழிக் கையேடு)’, ‘ சொல்லோவியம் (படவிளக்க அகராதி)’ போன்ற கணினித்தமிழ்த் தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார். சங்க கால இலக்கியங்கள் பற்றி ஆய்வுகளில் இவரது சிறப்பான பங்களிப்பிற்காக 2007-2008 ஆம் ஆண்டிற்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘இளம் அறிஞர் விருது’ (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன விருது) இவருக்கு வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் மூலம் ‘இளம் படைப்பாளி’யாகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய ‘தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்’ என்ற நூல், தமிழக அரசின் 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசினைப் பெற்றுள்ளது.
சனி, 19 செப்டம்பர், 2015
பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும் - Dr.A.Manavazhahan
தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம் - அறிவியல் - சமூகம்
(தமிழ்நாடு
அரசின் சிறந்த ஆய்வு நூலுக்கான பரிசு பெற்றது)
நூலறிமுகம்
பழந்தமிழ் இலக்கியங்கள் பரந்து விரிந்த ஆழ்கடலாக நம்முன் காட்சியளிக்கின்றன. அக்கடல் சிலரை அன்போடு அரவணைக்கிறது; சிலரைப் பயமுறுத்துகிறது. அது எப்போதும் வியப்பிற்குரியதாகவே இருக்கிறது.
அந்த ஆழ்கடலுள் விலைமதிப்பற்ற பலவித நன்மணிகள் புதைந்து கிடக்கின்றன. ஆர்வமும் விருப்பமும் கொண்டோர் அவற்றைத் தேடி காலந்தோறும் அக்கடலில் நீந்திக்கொண்டே இருக்கின்றனர்; மூழ்கிமூழ்கி முயற்சித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களின் முயற்சிக்கேற்ப அறிவுச் செல்வங்களோடு கரை சேர்க்கிறது அலை. ஆழம் கண்டு அஞ்சுவோர் சிலர், ‘என்ன இருக்கிறது இதில்’? என்று குறைகூறி, கடலையும் நீந்துபவரையும் வெறுப்போடு பார்த்துச் செல்கின்றனர். இலக்கியக் கடல், அவர்களுக்கும் சேர்த்தே கருத்து மணிகளை விதைத்து வைத்திருக்கிறது.
கடலில் நீந்தவில்லை என்றாலும் கால்களை நனைத்துப் பார்த்தவன் என்கிற மகிழ்ச்சி எனக்குள் எப்போதும் உண்டு. கடலையும் அதன் அருமையையும் எனக்கு அறிமுகப் படுத்தியவர்களே அந்தப் பெருமையை எனக்கு வழங்கியோர். அவர்கள் எப்போதும் என் நன்றிக்கு உரியோர்.
பழந்தமிழ் இலக்கியத்தில் இது எனது நான்காவது நூல். இந்நூல், செவ்வியல் இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பழந்தமிழ் நூல்களை ஆய்வுக் களமாகக் கொண்ட பத்து ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்புநூல். அறம், அறிவியல், சமூகம், சமயம், மருத்துவம், மனிதவளம், ஆளுமைத் திறன் எனப் பலவித நுண்பொருண்மைகளைக் கொண்டது. இக் கட்டுரைகள் முடிவைச் சுட்டுவன அல்ல. மேலும் ஆய்விற்கு வித்திடுவன.
சிலரால்தான் சில நற்செயல்கள் நடந்தேறும். அந்தவகையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அண்மைகாலச் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள். ஆராய்ச்சிப் பணி, அலுவலகப் பணி, மேம்பாட்டுப் பணி என அனைத்திலும் ஒருங்கே கவனம் செலுத்துகிற பன்முக ஆளுமைக்குச் சொந்தக்காரர். இந்நூல் அவரால்தான் வெளிவருகிறது. அவருக்கு என் நன்றியை நவில்கிறேன்.
‘மாதத்திற்கு ஓர் ஆய்வுக் கட்டுரை; ஆண்டிற்கு ஓர் ஆய்வு நூல். இதனை எப்போதும் மனத்தில் வைத்து ஆய்வு செய்யவேண்டும்’ என்று காணுந்தோறும் அறிவுரை கூறுவார் முதுபெரும் தமிழறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள். அவரின் சிந்தனையை முறையாகச் செயல்படுத்த முடியவில்லை என்றாலும், என் நூல்கள் வெளிவருகிற போதெல்லாம் அவரின் அறிவுறுத்தலை எண்ணுகிறேன். அதேபோல், பேசுகிற போதெல்லாம் என் ஆய்வுப் பணிகள் குறித்து கேட்டறிந்து, விரைந்து செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தி வருகிற என்னுடைய பேராசிரியர் முனைவர் அன்னிதாமசு அவர்களையும் நன்றியோடு நினைக்கிறேன்.
அன்புடன்,
ஆ. மணவழகன், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113.