திங்கள், 27 ஜனவரி, 2025

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளித் தொடக்கம்

 

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளியை முனைவர் ஆ.மணவழகன் தொடங்கி வைத்தார்

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளித் தொடக்கம்

          உலகத் தமிழ்ச் சிறகத்தின் இரண்டாமாண்டு கலை இலக்கிய வரலாற்று விழா இந்தோனேசியாவில் மேடான் நகரில் ஆகத்து 9,10,11 ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்றது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, புரூணை, இலங்கை, நார்வே, நெதர்லாந்து, அமேரிக்கா, பிரான்சு முதலான பல்வேறு நாடுகளில் வாழும் தமிழன்பர்களும் இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களும் திரளாக கலந்துகொண்டனர்.



          நிகழ்வின் முதல் நாளான ஆகஸ்ட் 9ஆம் நாள் இந்தோனேசியாவின் மேடான் நகரில் கிட்டத்தட்ட 60 வருடங்கள் பள்ளியாக இயங்கிவந்த குருபக்தி மையத்தில் உலகத் தமிழ்ச் சிறகத்தின் சார்பில் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இப்பயிற்சிப் பள்ளியை முனைவர் ஆ. மணவழகன் (இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பொறுப்பாளர் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம், சென்னை) அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்றைய தலைமுறை தமிழ் குழந்தைகள் கலந்து கொண்டனர். இனி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து தமிழ் வகுப்புகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் உலகத் தமிழ்ச் சிறகம் அமைப்பின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும்.

         இந்த விழாவிற்குப் புதுவைப் பொதுப்பணித் துறை அமைச்சர் மாண்புமிகு க.இலட்சுமி நாராயணன் அவர்களும், இந்திய மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்களும், இந்திய மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் அவர்களும், தமிழ் நாடு காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் திருமிகு இராம. சுகந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

\

   இந்தோனேசியத் தமிழர்களான மேனாள் தூதரக அதிகாரியான திரு.சிவாஜிராஜா, மருத்துவர் அசோகன், திரு. சுபேந்திரன், திரு. மதியழகன், திரு. செல்வராஜா போன்றோர் உலகத் தமிழ்ச் சிறகத்தின் செயல்பாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

மொழியியல் கண்காட்சி தொடக்கவிழா

 



சென்னை, பெரும்பூரில் உள்ள கே.ஆர்.எம் பொதுப்பள்ளியில் மாணவர்கள் ஏற்பாடு செய்த மொழியியல் கண்காட்சி 12.07.2024 அன்று நடைபெற்றது. மொழியியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும் குறித்து சிறப்புரை வழங்கினார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் பேராசிரியரும் நிறுவனத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடப் பொறுப்பாளருமான முனைவர் ஆ.மணவழகன் அவர்கள். முன்னதாக மொழிசார்ந்த பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன. 



பேராசிரியர் ஆ.மணவழகன் அவர்களுக்கு அறிவுக் களஞ்சியம் விருது


அறிவுக் களஞ்சியம் விருதுபெறும் முனைவர் ஆ.மணவழகன்

அறிவுக் களஞ்சியம் விருது - 2025

சென்னைப் பல்கலைக்கழகம், துவாரகதாஸ் கோவர்த்தனதாஸ் வைணவக் கல்லூரி, மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து
64ஆம் முப்பெரும் விழாவினை 24.01.2025 அன்று நடத்தின.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தப் பெருவிழாவில், பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கான வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்குதல், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான
18ஆம் அறிவு களஞ்சியம் விருதுப் போட்டிகளின் பரிசளிப்பு, 64ஆம் அறிவியல் பூங்கா இதழ் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன‌.
விழாவில், பன்முகத் தன்மைகளோடு கூடிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் பொறுப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான #முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு "அறிவுக் களஞ்சியம் விருது" வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
இந்த விருதினை மாண்புமிகு நீதியரசர் முனைவர் வள்ளிநாயகம், (நீதிபதி லோக் அதாலத் , உயர்நீதிமன்றம், சென்னை) அவர்களும், மாண்புமிகு நீதியரசர் முனைவர் தமிழ்வாணன் (தலைவர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்) அவர்களும் வழங்கினர்.
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் கலைமாமணி முனைவர் சேயோன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூட்டுநர் குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ். ஆம்ஸ்ட்ராங், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ஏழுமலை, டிஜி வைணவக் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்தோஷ் பாபு, மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் முனைவர் முத்துவேலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் சங்கப் பலகை துறைத் தலைவர் முனைவர் சங்கரநாராயணன் நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தார்.