சனி, 9 ஆகஸ்ட், 2025

தமிழர் மேலாண்மையியல் (கோட்பாடுகள் - இலக்கிய அணுகுமுறைகள்) - நூல்

 




தமிழர் மேலாண்மையியல்

(கோட்பாடுகள்-இலக்கிய அணுகுமுறைகள்)

ஆசிரியர் –  முனைவர் ஆ.மணவழகன்

          மேலாண்மை என்பது மனித வாழ்வியலின் அனைத்து நிலைகளிலும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. ஒருவர் அல்லது ஒன்றின் வெற்றி என்பது சிறந்த மேலாண்மையியல் செயற்பாடுகளால் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலாண்மைஎன்ற கலைச்சொல்லும் மேலாண்மையை ஒரு முறைப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் அறிவியல் முறையில் தனித்துவமாக அணுகும் மேலாண்மையியல்எனும் துறையும் இந்த நூற்றாண்டுக்கு உரியவை. எனினும், இதன் தொன்மையானது மனித இனத்தின் நாகரிகத் தொன்மையோடு தொடர்புடையதாக உள்ளது.

          மனித இனம், விலங்காண்டி நிலையிலிருந்து காட்டுமிராண்டி நிலைக்கு மாறிய சமூக யுகத்திலேயே அவனின் மேலாண்மையியல் செயல்பாடுகளும் முகிழ்க்கத் தொடங்கின எனலாம். கூடிவாழ்தல், குழுவாக வேட்டையாடுதல், வாழ்விடங்களைத் தெரிவுசெய்தல், நிலைத்த குடியிருப்புகளை உருவாக்குதல், உணவு உற்பத்தி முதலிய தொடக்ககால முன்னெடுப்புகள் யாவும் மனித இனத்தின் மேலாண்மையியல் செயல்பாடுகளே. தேவை மற்றும் இன்றியமையாமையின் விளைவால் மேலாண்மையியல் என்பது இன்று முறைப்படுத்தப்பட்ட ஒரு கல்விமுறையாக  வடிவமைக்கப்பட்டுள்ளது.

          நவீன காலத்தில் மேலாண்மை என்பது நிறுவனம் சார்ந்த ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டு,  கோட்பாடுகளின் வழி முன்னெடுக்கப்படுகிறது. அதனால், ‘நிருவாகத்தின் இதயமே மேலாண்மைதான்என்று சுட்டப்படுகிறது. எனினும், இன்றைய சூழலில் தனியோர், குடும்பம், சமூகம் என்ற அனைத்து நிலைகளிலும் மேலாண்மைச் செயல்நெறி மிக இன்றியமையாததாக உள்ளது. தனியோரின் வெற்றி, குடும்பத்தின் மேன்மை, அரசின் நல்லாட்சி, நிறுவனத்தின் வளர்ச்சி என யாவும் சிறந்த மேலாண்மையின் விளைவே.

        இவ்விதம், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கும் மேலாண்மையியல் குறித்தும் தொல்தமிழரின் மேலாண்மையியல் செயல்பாடுகளையும் இடைக்கால இலக்கியங்கள் வழி அறியலாகும் மேலாண்மையியல் கூறுகளையும் நவீனக் கோட்பாடுகளின் வழி விளக்குவதை நோக்கமாகக் கொண்டு, ‘தமிழர் மேலாண்மையியல் (கோட்பாடுகள்-இலக்கிய அணுகுமுறைகள்)என்ற இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.

      2007ஆம் ஆண்டு வெளிவந்த என்னுடைய சங்க இலக்கியத்தில் மேலாண்மைஎன்ற நூல், சங்க இலக்கியத்தை மேலாண்மையியல் நோக்கில் அணுகிய தமிழின் முதல் நூல் ஆகும். இந்நூலில், சங்க இலக்கியத்தின் அடையாளப்படும் துறைகளுள் சில துறைகள் மட்டும் மேலாண்மையியல் நோக்கில் அணுகப்பட்டிருந்தன. தமிழர் மேலாண்மையியல்எனும் இந்நூல், மேலாண்மையியல் வரலாறு, கோட்பாடுகள், பண்புகள் போன்றவற்றை எளிய முறையில் விளக்குவதோடு, பரந்துபட்ட நோக்கில் தமிழர்தம் மேலாண்மையியல் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விளக்கி உரைக்கிறது. சங்ககாலம் தொடங்கி இடைக்காலம் வரையான தமிழரின் அறிவு மரபை, மேலாண்மையியல் செயல்பாடுகளைத் துறைதோறும் முறைப்படுத்தி வழங்குகிறது.

          தமிழரின் பன்முக மேலாண்மையியல் சிந்தனைகளை முழுமையாக அறிய இந்நூல் வழிவகுக்கும். தமிழியலின் துறைசார் கோட்பாடுகளைப் பிறதுறைக் கோட்பாடுகளோடும் மேலாண்மையியல் சிந்தனைகளோடும் ஒப்பிட்டு அறியவும்  ஆய்வு மேற்கொள்ளவும் இந்நூல் அடிப்படைத் தரவகமாக அமையும். தமிழரின் மேலாண்மையியல் சார்ந்த பல்வேறு புதிய ஆய்வுக் களங்களையும் இதன்வழி அறிந்துகொள்ள முடியும். 

          நூலில் முதல் அலகான மேலாண்மையியல் என்பது, மேலாண்மை அறிமுகம் - மேலாண்மைக்கு வழங்கப்படும் விளக்கங்கள் - மேலாண்மையின் தொன்மை மற்றும் வளர்ச்சி - மேலாண்மை யுகங்கள் - மேலாண்மையின் இன்றியமையாமை - வரையறைகள் - கோட்பாடுகள் - பண்புகள் - மேலாண்மையியலுக்கும் நிருவாகவியலுக்குமான வேறுபாடுகள்- இலக்கியத்தில் மேலாண்மைக் கூறுகளை அணுகும் முறைகள் ஆகியவற்றை இயம்புகிறது. 

          சங்க இலக்கியங்கள் தமிழரின் தனித்துவமான வாழ்வியலைப் பேசுபவை. இயற்கையே அதன் முதன்மைக் களம்.  எளிய மக்களின் வாழ்வியல் முதல், பெருவேந்தர்களின் வாழ்வியல் வரையான அனைத்தும் அதன் பாடுபொருள்கள். தமிழர் நாகரிகத் தொன்மை, பண்பாட்டுத் தொன்மை, அறிவு மரபின் தொன்மை போன்றவற்றிற்கான முதல் மற்றும் முதன்மைச் சான்றுகளாக விளங்குபவையும் சங்க இலக்கியங்களே. அவ்வகையில், தமிழரின் மேலாண்மையியல் சிந்தனைகளுக்கும் இவையே முதன்மைத் தரவுகளாய்த் திகழ்கின்றன. எனவே,  நூலின் இரண்டாவது அலகு, சங்கத் தமிழரின் வேளாண் மேலாண்மை, நெசவுத் தொழில்நுட்ப மேலாண்மை, கட்டடக் கலையியல் மேலாண்மை, மருத்துவவியல் மேலாண்மை, நீர்மேலாண்மை ஆகியவற்றை நவீன மேலாண்மையியல் சிந்தனைகளின் அடிப்படையில் விரிவாகப் பேசுகிறது.

          திட்டமிடத் தவறுபவர்கள் தோல்வி அடைவதற்குத் திட்டமிடுகிறார்கள்என்கிறார் பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.  திட்டமிடுதல் என்பது, ‘கூடி வினைபுரிதல்என்ற நிறுவனம்சார் செயல்பாடு மட்டுமல்ல, அது தனியோரின் நடத்தையியல் சார்ந்ததாகவும் இருக்கிறது; அவரின் வெற்றிக்கும் வழிவகுக்கிறது. அவ்வகையில், நூலின் மூன்றாம் அலகானது திருக்குறளைக் களமாகக்கொண்டு தனிமனித மேலாண்மை, குடும்ப மேலாண்மை, அரசியல் மேலாண்மை, தொழில்துறை மேலாண்மை, கல்வியியல் மேலாண்மை, வாணிக மேலாண்மை, ஆட்சியியல் மேலாண்மை ஆகிய மேலாண்மையியல் கூறுகளை  விளக்கி உரைக்கிறது.

      சங்க இலக்கியங்களை நோக்கின் காப்பிய இலக்கியங்கள் பிற்காலத்தவை. தன்மையிலும் பாடுபொருள்களிலும் சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபடுபவை; இவை, புறச் சமயங்களின் எழுச்சியால் விளைந்தவை. காப்பியங்கள் ஒவ்வொன்றும் தனக்கென ஒவ்வொரு நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஆயினும் இவை, தமிழ்ச் சமூகத்தையும் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் எதிரொலிக்கத் தவறவில்லை. அவ்வகையில், நூலின் நான்காவது அலகு, காப்பியங்களைக் களமாகக் கொண்டு, உணவு உற்பத்தி மேலாண்மை, உடை உற்பத்தி மேலாண்மை, உறைவிட மேலாண்மை, கலையியல் மேலாண்மை ஆகிய கூறுகளை முன்னிறுத்துகிறது. 

     நூலின் ஐந்தாவது அலகானது, பன்முக மேலாண்மையியல் நோக்கில் இடைக்கால இலக்கியங்களை அணுகுகிறது. இப்பகுதியில், பக்தி இலக்கியங்களில் உளவியல் மேலாண்மை, சித்தர் இலக்கியங்களில் உடல்நல மேலாண்மை, சிற்றிலக்கியங்களில் சூழலியல் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் மேலாண்மையியல் கூறுகள் அணுகப்பட்டுள்ளன. நிறைவாக, மேலாண்மையியல் கலைச்சொற்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. 

     2007ஆம் ஆண்டு வெளிவந்த சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ (ஆ.மணவழகன்) என்ற நூல், சங்க இலக்கியத்தை மேலாண்மையியல் நோக்கில் அணுகிய தமிழின் முதல் நூல் ஆகும். இந்நூலில், சங்க இலக்கியத்தின் அடையாளப்படும் துறைகளுள் சில துறைகள் மேலாண்மையியல் நோக்கில் அணுகப்பட்டிருந்தன. தமிழர் மேலாண்மையியல்எனும் இந்நூல், மேலாண்மையியல் வரலாறு, கோட்பாடுகள், பண்புகள் போன்றவற்றை எளிய முறையில் விளக்குவதோடு, பரந்துபட்ட நோக்கில் தமிழர்தம் மேலாண்மையியல் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விளக்கியுரைக்கிறது. சங்ககாலம் தொடங்கி இடைக்காலம் வரையான தமிழரின் அறிவு மரபை, மேலாண்மையியல் செயல்பாடுகளைத் துறைதோறும் முறைப்படுத்தி வழங்குகிறது.

          தமிழரின் பன்முக மேலாண்மையியல் சிந்தனைகளை முழுமையாக அறிய இந்நூல் வழிவகுக்கும். தமிழியலின் துறைசார் கோட்பாடுகளைப் பிறதுறைக் கோட்பாடுகளோடும் மேலாண்மையியல் சிந்தனைகளோடும் ஒப்பிட்டு அறியவும்  ஆய்வு மேற்கொள்ளவும் இந்நூல் அடிப்படைத் தரவகமாக அமையும். தமிழரின் மேலாண்மையியல் சார்ந்த பல்வேறு புதிய ஆய்வுக் களங்களையும் இதன்வழி அறிந்துகொள்ள முடியும். 


பதிப்பகம்:

அய்யனார் பதிப்பகம்

சென்னை, 600 088.

 

நூல் பெற – 9789016815 / 9080986069






 

வியாழன், 29 மே, 2025

அறிஞர்கள் அவையம்

 அறிஞர்கள் அவையம்

 தொடக்கத்தில், தமிழாய்வு என்பது தமிழ் இலக்கிய ஆய்வு, தமிழ் இலக்கண ஆய்வு என்ற இருநிலைகளிலேயே முன்னெடுக்கப்பட்டது. அவற்றோடு, தத்துவ ஆய்வும், அரிதாக வரலாற்றாய்வும் தமிழாய்வு என்று கொள்ளப்பட்டன. அறுபதுகளுக்குப் பிறகு தமிழாய்வுகள் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அமெரிக்கா, இங்கிலாந்து முதலான பிற நாடுகளிலும் புதுப்பொலிவோடு பன்முக வளர்ச்சிபெறத் தொடங்கியது. இதன் விளைவாகத் தமிழாய்வின் எல்லையும் பரப்பும் விரிவு பெற்றது. தமிழாய்வின் விரிவுபெற்ற எல்லா எல்லைகளையும் பொருள்கொள்ளும்  வகையில் இதற்கு ஒரு புதிய சொல்லாக்கமும் எழுபதுகளில் உருவாயிற்று. #தமிழியல் என்ற பெயரால் தமிழாய்வு எல்லைகள் எல்லாவற்றையும் ஆய்வாளர்கள் குறிக்கத் தொடங்கினர். 

தொடர்ச்சியாக, எண்பதுகளில், தமிழில் நிகழ்ந்த ஆய்வுகள் இலக்கணம், இலக்கியம், தத்துவம், வரலாறு என்பதோடு நில்லாமல் பண்பாடு, நாட்டுப்புறவியல் முதலான பல்வேறு எல்லைகளில் பரந்து, விரிந்து வளரத் தொடங்கியன. புதுப்புதுத் ஆய்வுத் துறைகளும் தமிழுக்கு அறிமுகம் ஆகின. இத்தகைய துறைகள் எல்லாவற்றையும் தழுவிக் கொள்ளுகிற ஒன்று #தமிழியல் _ஆய்வு என்று கொள்ளப்பெற்றது. இன்றைய நிலையில் தமிழியலில் ஆய்வு என்பது இலக்கியவியல், இலக்கணவியல், மொழியியல், பண்பாட்டியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், தொல்லியல் முதலான பல்வேறு துறைகளையும் பொருண்மைகளையும் உள்ளக்கிய பெரும் பரப்பாக விளங்குகிறது.  

இச்சூழலில், தமிழியல் ஆய்வுக் துறைகளைப் பொருண்மைகளின் அடிப்படையில் தோற்றம் – வளர்ச்சி - ஆய்வுக் களங்கள் – செல்நெறிகள் – ஆய்வு இடைவெளி - ஆய்வு நீட்சி - எதிர்காலத் தேவை என்ற அடிப்படையில் முழுமையாக நோக்கவேண்டிய தேவையும், எதிர்கால ஆய்வுக் களங்களை, முன்னெடுக்கவேண்டிய  தமிழாய்வுப் பணிகளை வரையறை செய்யவேண்டிய தேவையும் உள்ளது. 

தமிழாய்வில், நேற்றைய புரிதலையும் இன்றைய செல்நெறியையும் நாளையத் தேவையையும் வழங்கவேண்டியது தமிழாய்வு நிறுவனங்களின் தலையாய கடமையாகும். இத்தேவையை நிறைவேற்றும் பொருட்டு, சென்னை, #உலகத்_தமிழாராய்ச்சி _நிறுவனத்தில் ’அறிஞர்கள்_அவையம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று #தமிழ்நாடு_அரசு அறிவித்துள்ளது. இதன்வழி, துறைசார் அறிஞர்கள், தகைசால் பேராசிரியர்கள், வல்லுநர்களைக் கொண்டு திங்கள்தோறும் கலந்தாய்வுகள் நிகழ்த்தப்பெறும். இதற்கான விதையை நிறுவனத்தின் தலைவர் திரு ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ப.நி.) அவர்கள்  விதைத்துள்ளார். 

அறிஞர்கள் அவையத்தின் வழி திங்கள்தோறும் நிகழ்த்தப்பெற வேண்டிய முதன்மைப் பொருண்மைகளாக இலக்கியவியல், இலக்கணவியல், அகராதியியல், திருக்குறள், மொழியியல், மானிடவியல்-பண்பாட்டியல், தொல்லியல்-நாணயவியல்-குறியீட்டியல், சமூகவியல்-வரலாற்றியல், நாட்டுப்புறவியல், சுவடியியல்-கல்வெட்டியல்-பதிப்பியல், ஒப்பிலக்கியவியல்-திறனாய்வியல்-ஆய்வியல் அணுகுமுறைகள், பயன்பாட்டுத் தமிழியில் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேவைக்கேற்ப மாற்றங்கள் இருக்கலாம். 

அறிஞர்கள் அவையம் நிகழ்வில் துறைசார்ந்த சான்றோர்கள், வல்லுநர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்று கருத்துகளை வழங்குவர்.  இதன்வழி தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியேயும், உலகெங்கிலும் நடைபெற்ற / நடைபெறும் தமிழாய்வுப் பணிகளை ஒருங்கிணைக்கவும் அதன்வழி எதிர்காலத் தேவையை வரையறுக்கவும் முடியும்.

அறிஞர்கள் அவையம் #நிகழ்வு-ஒன்று நாளை (29.05.2025) நடைபெறவுள்ளது. நிகழ்வில், #அகராதியியல் – நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்’ குறித்த உரைகளைத் துறைசார்ந்த சான்றோர்கள் வழங்க இருகின்றனர். 

நிகழிடம்: மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை. 

நேரம்: முற்பகல் 10 மணி முதல்…  


-ஆ.மணவழகன்

28.05.2025

திங்கள், 27 ஜனவரி, 2025

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளித் தொடக்கம்

 

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளியை முனைவர் ஆ.மணவழகன் தொடங்கி வைத்தார்

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளித் தொடக்கம்

          உலகத் தமிழ்ச் சிறகத்தின் இரண்டாமாண்டு கலை இலக்கிய வரலாற்று விழா இந்தோனேசியாவில் மேடான் நகரில் ஆகத்து 9,10,11 ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்றது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, புரூணை, இலங்கை, நார்வே, நெதர்லாந்து, அமேரிக்கா, பிரான்சு முதலான பல்வேறு நாடுகளில் வாழும் தமிழன்பர்களும் இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களும் திரளாக கலந்துகொண்டனர்.



          நிகழ்வின் முதல் நாளான ஆகஸ்ட் 9ஆம் நாள் இந்தோனேசியாவின் மேடான் நகரில் கிட்டத்தட்ட 60 வருடங்கள் பள்ளியாக இயங்கிவந்த குருபக்தி மையத்தில் உலகத் தமிழ்ச் சிறகத்தின் சார்பில் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இப்பயிற்சிப் பள்ளியை முனைவர் ஆ. மணவழகன் (இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பொறுப்பாளர் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம், சென்னை) அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்றைய தலைமுறை தமிழ் குழந்தைகள் கலந்து கொண்டனர். இனி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து தமிழ் வகுப்புகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் உலகத் தமிழ்ச் சிறகம் அமைப்பின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும்.

         இந்த விழாவிற்குப் புதுவைப் பொதுப்பணித் துறை அமைச்சர் மாண்புமிகு க.இலட்சுமி நாராயணன் அவர்களும், இந்திய மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்களும், இந்திய மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் அவர்களும், தமிழ் நாடு காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் திருமிகு இராம. சுகந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

\

   இந்தோனேசியத் தமிழர்களான மேனாள் தூதரக அதிகாரியான திரு.சிவாஜிராஜா, மருத்துவர் அசோகன், திரு. சுபேந்திரன், திரு. மதியழகன், திரு. செல்வராஜா போன்றோர் உலகத் தமிழ்ச் சிறகத்தின் செயல்பாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

மொழியியல் கண்காட்சி தொடக்கவிழா

 



சென்னை, பெரும்பூரில் உள்ள கே.ஆர்.எம் பொதுப்பள்ளியில் மாணவர்கள் ஏற்பாடு செய்த மொழியியல் கண்காட்சி 12.07.2024 அன்று நடைபெற்றது. மொழியியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும் குறித்து சிறப்புரை வழங்கினார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் பேராசிரியரும் நிறுவனத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடப் பொறுப்பாளருமான முனைவர் ஆ.மணவழகன் அவர்கள். முன்னதாக மொழிசார்ந்த பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன. 



பேராசிரியர் ஆ.மணவழகன் அவர்களுக்கு அறிவுக் களஞ்சியம் விருது


அறிவுக் களஞ்சியம் விருதுபெறும் முனைவர் ஆ.மணவழகன்

அறிவுக் களஞ்சியம் விருது - 2025

சென்னைப் பல்கலைக்கழகம், துவாரகதாஸ் கோவர்த்தனதாஸ் வைணவக் கல்லூரி, மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து
64ஆம் முப்பெரும் விழாவினை 24.01.2025 அன்று நடத்தின.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தப் பெருவிழாவில், பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கான வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்குதல், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான
18ஆம் அறிவு களஞ்சியம் விருதுப் போட்டிகளின் பரிசளிப்பு, 64ஆம் அறிவியல் பூங்கா இதழ் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன‌.
விழாவில், பன்முகத் தன்மைகளோடு கூடிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் பொறுப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான #முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு "அறிவுக் களஞ்சியம் விருது" வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
இந்த விருதினை மாண்புமிகு நீதியரசர் முனைவர் வள்ளிநாயகம், (நீதிபதி லோக் அதாலத் , உயர்நீதிமன்றம், சென்னை) அவர்களும், மாண்புமிகு நீதியரசர் முனைவர் தமிழ்வாணன் (தலைவர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்) அவர்களும் வழங்கினர்.
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் கலைமாமணி முனைவர் சேயோன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூட்டுநர் குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ். ஆம்ஸ்ட்ராங், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ஏழுமலை, டிஜி வைணவக் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்தோஷ் பாபு, மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் முனைவர் முத்துவேலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் சங்கப் பலகை துறைத் தலைவர் முனைவர் சங்கரநாராயணன் நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தார்.